நான் பொதுவாக யார் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தாலும் போய் விசாரிப்பேன். விந்தி நடப்பவர்கள், கை, தலை உடைந்து கட்டுப்போட்டவர்கள், சக்கர நாற்காலியில் வருவோர் என. இன்று காலை அப்படி ஒரு சக ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு கடந்த ஆண்டு ஒரு விபத்து நடந்திருக்கிறது - அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பட்ட காயங்களுக்கும் அவர் சொன்ன சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏன் இப்படி நடநது, இது எப்படி சாத்தியம், அப்படித்தானே ஆகியிருக்க வேண்டும், இதைக் கேட்டீர்களா, ஏன் கேட்கவில்லை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே டுரோமாவில் இருந்தேன், இதற்கு மேல் மீண்டும் அவதிப்பட வேண்டாம் என விட்டுவிட்டேன் என்றார். ஆனால் என் மனம் அந்த டுரோமாவிடம் ஈர்க்கப்பட்டபடியே இருந்தது. எனக்கு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே மனதில் ஒரு சுவாரஸ்யமான கதை தோன்றியது. சொல்லபோனால் 60% கதையமைப்பும் மனத்தில் சில வினாடிகளில் கோபுரம் போல் எழுந்துவிட்டது. அதில் இன்னொரு அடுக்கைச் சேர்த்தால் சுவாரஸ்யமான ஆழமான கதையாகிவிடும். நான் அதை அடையும் வரை என் உபமனம் அதைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை நான் எழுதாமல் போகலாம், எழுதலாம். ஆனால் எழுத்தாளராக இருப்பதன் அனுகூலம் எல்லா உரையாடல்களிலும் இரு கதையை, புதிய உலகைக் காண்பதுதான். இன்று மாலையில் அவரை மீண்டும் வெளியே எதிர்கொண்டபோது இதோ ஒரு கதாபாத்திரம் என்று தோன்றியது. கதாபாத்திரம் என்னைப் புன்னகையுடன் கடந்து சென்றது.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்