முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்லவிக்குப் பிறந்தநாள்

 இன்று பல்லவியின் பிறந்தநாள் - அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.


பல்லவி என் வாழ்வுக்குள் வந்தது ஒரு வரம் - என் வாழ்வின் கடும் அந்தகார இருளான பர்வத்தில் அவள் மிதக்கும் சுடராக வந்து சேர்ந்தாள். மெல்லமெல்ல வாழ்வு மீது எனக்கு பிடிப்பு அவர் அவளது அண்மை உதவியது. அதற்கு அவளது ஆளுமை ஒரு காரணம் - எனக்கு நேரெதிரான அணுகுமுறையைக் கொண்டவள். நான் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்தால் அவள் எல்லாவற்றிலும் தனக்குப் பிடித்ததை மட்டும் காண்பவள். நான் சோர்வடையும்போது சின்னச்சின்ன விசயங்களில் உற்சாகமாகக் கூடியவள்.

எனக்கு தனிப்பட்ட ரகசியங்கள் ஏதுமில்லை - எல்லாமே வெளிப்படைதான். இப்போது என் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைக் கூட பக்கத்தில் உள்ளவரிடம், என் எழுத்தைப் படிப்பவரிடம் சொல்லிவிடுவேன். ஆனாலும் என்னைக் கண்காணிப்பவர்களைப் பிடிக்காது. பல்லவியிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது அவள் என்னை முழுமையாக நம்புவாள் என்பது. நான் அவளிடம் இருட்டில் துலங்கும் மரத்தைக் காட்டி பார் யானை என்றால் அடுத்த கணம் நம்பிவிடுவாள். அதன்பிறகே அது யானையில்லை என்பதை வியப்புடன் ஏற்பாள். ஆகையால் பல்லவியிடம் நான் காட்டுவதுதான் அவளுக்கு 'நான்'. இந்த தேடித்துருவாத மனநிலை ஒரு கொடுப்பினை. எனக்கும் இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்பதால் இதில் ஒரு தனி ருசி உண்டு.

பல்லவியை நான் பேஸ்புக்கில் கண்டதற்கும் நேரில் பழகியதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அந்த ரௌடித்தனங்கள், அதிரடி, முரட்டுத்தனம் எல்லாம் ஒரு பாவனை என்று தெரிந்தபோது மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். இப்போதும் அவள் வாட்ஸாப்பில் அரசை விமர்சித்து எழுதும்போது அந்த முரட்டுத்தனம் எட்டிப்பார்க்கும் - நான் அவளை பயமுறுத்திப் பார்ப்பேன். ஜெயில், கும்பல் தாக்குதல் என எச்சரிப்பேன். அவளுக்கு அது புரியாது என்பதால் ஏற்கவே மாட்டாள். எப்படியாவது அவளை பயமுறுத்திப் பார்க்க வேண்டும் என்பது எனக்கு எப்போதும் ஒரு விளையாட்டுதான். நான் அதில் ஜெயித்ததே இல்லை. சிலநேரங்களில் நான் சொல்வது நிஜமாகவே பலித்துவிடுமோ எனப் பயந்திருக்கிறேன்.

பேஸ்புக் தன்னை அடிமைப்படுத்துவதால் அவள் தானாகவே அதிலிருந்து விலகி பல வருடங்களாக வாட்ஸாப்பில் மட்டும் ராஜ்ஜியம் ஆண்டுகொண்டிருக்கிறாள். ஆனால் அவள் பேஸ்புக்கில் இருந்து விலகிய ஆரம்ப நாட்களில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும்போது பல்லவியின் பல விசிறிகளைக் கண்டு "என்னடா இது உலகம், இவ்வளவு எழுதுறோம், ஆனால் என்னைவிட இவளுக்குத்தான் அதிக விசிறிகள் இருக்கிறார்களே" என தலையில் அடித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாள் தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சியைப் பார்த்தேன். அவர் பல்லவியைப் பார்த்ததும் "பல்லவி தானே? ஹலோ. ஜீனோவைப் பற்றி நீங்க எழுதுவதை ரசித்துப் படிக்கிறேன்" என்றார். நான் நினைத்துக் கொண்டேன், "நான் இத்தனை ஆண்டுகளாக மாய்ந்து மாய்ந்து எழுதுறேன், அது நல்லா இருக்குன்னு ஒருமுறையாவது சொல்லியிருக்கிறாரா மனிசன்."

நான் தான் அவளை பேஸ்புக்கில் எழுதவிடாமல் தடுப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள் - அதற்கான ஆற்றல் எல்லாம் என்னிடம் இல்லை. ஒரு பெண் கவிஞர் திடீரென பல்லவியின் பெயர் நினைவுக்கு வந்து "ஏன் அவளை இருட்டில் வைத்திருக்கிறீர்கள்" என்று மெஸெஞ்சரில் தோன்றி என்னை பயங்கரமாகத் திட்டினார். நக்கீரன் கோபாலை வீரப்பன் என்று நினைத்து கைது செய்து விசாரிப்பதைப் போல இருந்தது அச்சம்பவம். நானெல்லாம் அந்தளவுக்கு பயங்கரமானவன் அல்லன் என்று அவருக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை. இப்படி திடீர்திடீரென பல்லவி ரசிகர்கள் என்மீது மெய்க்காவல் படையைப் போல தாக்குதல் தொடுப்பார்கள். இப்போது நான் அதை ரசித்து "ஆமாங்க நான் தாங்க அந்த ஆணாதிக்கவாதி, அந்த கொடுங்கோலன்" என்று ஏற்றுக்கொள்கிறேன். எத்தனையே விசயங்களை மணிக்கணக்காக நான் வற்புறுத்திச் சொல்லியும் கேட்காத அவள் பேஸ்புக்கை எனக்காக விட்டுவிலகியிருப்பாள் என்று நம்புகிறார்கள் பாருங்கள் வேடிக்கைப் பேர்வழிகள். "பேஸ்புக்கில் இருந்து வெளியேறு" என்று நான் அவளிடம் பத்து காரணங்களை அடுக்கி விளக்கினால் அவள் அதில் ஒன்றையும் காதில் வாங்காமல் "முடியாது" என்று சொல்வாள். அதேபோல "பேஸ்புக்கில் இரு" என்று பத்து காரணங்களை வலியுறுத்தினாலும் அதில் ஒன்றைக் கூடக் கேட்காமல் "முடியாது போ" என்று சொல்லிவிடுவாள். நான் இம்மாதிரி விபரீத முயற்சிகளில் இறங்குவதில்லை. எதற்கு? சுதந்திரம்தானே வாழ்க்கையின் அழகு.

எந்தளவுக்கு சுதந்திரமானவள் என்றால் ஊட்டி இலக்கிய விழாவில் மணிரத்னத்தை சந்தித்தபோது "ஏன் உங்கள் படங்களில் சேரி மக்களை எலைட் தன்மையுடன் காட்டுகிறீர்கள்? ஏன் அப்படி, ஏன் இப்படி?" என கடுமையான கேள்விகளை முன்வைத்தாள். அவர் ஆரம்பத்தில் சற்று கடுப்பானாலும் அவளது நேர்மை அவருக்குப் பிடித்துப் போனது. டி.எம் கிருஷ்ணாவிடம் பாடிக் காட்டியதும் இன்னொரு சாகசச் செயல். மோடியைச் சந்தித்திருந்தாலும் "உங்களுக்கு ஏன் ஆளத் தெரியவில்லை, உங்களுக்கு ஏன் இவ்வளவு மதவெறி?" என்று கேட்டிருப்பாள். பைக்கை முழுவேகத்தில் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கொண்டு கண்ணை மூடியயபடி சாலையில் கிளம்பினால் அதுதான் பல்லவியின் நடவடிக்கை. அந்த பைக்கை தடுக்காமல் எதிரே போகாமல் விட்டால் அது பாட்டுக்கு போய்விடும். அடிப்படையில் அவளுக்கு துர்நோக்கம், யாரையும் காயப்படுத்தும் உத்தேசம் இருக்காது என்பதால் யாரையாவது காயப்படுத்தினாலும் ஒன்று அவர்கள் காய்பபட மாட்டார்கள் அல்லது காயப்பட்டதாக அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

பல்லவி ஒரு நடமாடும் பிலிமாலயா, வண்ணத்திரை, பிஹைண்ட்வுட்ஸ். யாராவது ஒரு நடிகரின் பேட்டியைப் பார்த்தால் அவரது தாத்தா, பாட்டி, அவரது முன்னோடியான முதல் புரோட்டோ பாக்டீரியா வரை வரலாற்றுச் சித்திரத்தை வரைந்து காட்டி என்னை வதைப்பாள். படத்தையும் ஒவ்வொரு பத்து நிமிடமும் உறைய வைத்து பல கருத்துக்களைத் தெரிவிப்பாள். "இந்த படத்தில் அந்த காட்சியில் நாற்காலிக்குப் பின்னால் நிற்கிறாரே அவர் யார் தெரியுமா, அவரது தாத்தா தான் மெட்ராஸ் மாகாணத்தில் முதல் ஸ்டுடியோ கட்டியவரின் பேரன், அவருடைய அத்தையின் பாட்டிதான் அந்த படத்தில் ஒரு பாட்டில் துணை நடிகையாக வந்தவர். அவரது மகள் எந்த படத்தில் நடித்தார் தெரியுமா?" இது எந்தளவுக்குப் போகுமென்றால் திரையரங்கில் படம் ஓடும்போதும் அதை "பாஸ்" பண்ணுவதற்காக ரிமோட்டைத் தேடுவாள். அவள் திரைப்படத் தகவல்களால் என்னை வதைத்துவதைத்து நான் திரைப்படம் என்றாலே தலைதெறித்து ஓட ஆரம்பித்துவிட்டேன். உலகின் மிக மட்டமான படத்தைக் கூட அவளைப் போல ரசிக்க இன்னொருவரால் முடியாது.

பல்லவி இதேபோல நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழட்டும் என வாழ்த்துகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.