முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவமானப்படுத்தும் உரிமை

இன்று ஒரு செய்தி பார்த்தேன். உயர்நீதிமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.


கணவர் ஆண்மையற்றவர் என்று நீதிமன்றத்தில் மனைவி சொல்வது மானநஷ்டத்தை ஏற்படுத்தாதா?”


மும்பை உச்சநீதிமன்றம்: கணவர் ஆண்மையற்றவர் என்று நீதிமன்றத்தில் வெளியே சொன்னார் அதைக் குற்றமாகும். நீதிமன்றத்துக்குள் வழக்கை முன்னெடுக்கும் நோக்கில் தாராளமாகச் சொல்லலாம்


வாழ்க்கையே இப்படி வேடிக்கை விளையாட்டாகிவிட்டது. 2018இல் நாக்பூரில் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டால்தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக கணவர் தொடுத்த மானநட்ட வழக்கில் நீதிபதி எஸ்.எம் மொடாக்கி தீர்ப்பு இது.


சில கணவர்கள் இதே நீதிமன்றத்தில் தம் மனைவியரை நடத்தை கெட்டவர் எனக் கூறுகிறார்கள். நீதிமன்றத்துக்குள் நடப்பதால் இப்படியான உளவியல் வதைகளை புனிதமான விளையாட்டாக நீதிமன்றம் பார்க்கிறது


ஒரு மனைவி ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? மூன்று காரணங்கள்

  1. சீக்கிரமாக விவாகரத்து வாங்க இப்படியான பகீர் குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டும். இதுதான் பிரதான பிரச்சினை - ஒத்துப்போகவில்லை என்றால் அக்காரணத்தைக் கொண்டே ஒரு கட்சி விண்ணப்பித்து விவாகரத்து பெறும்படி வழிமுறை எளிதாக இருக்க வேண்டும். நமது நடைமுறை அதை அனுமதிப்பதில்லை. ஆகையால்என் கணவர் பயங்கரமான கொடூர மனம் படைத்தவர், கேவலமானவர்என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதி தாக்கல் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதிதான் ஆண்மையற்றவர் என்பது. மிகச்சாதாரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது இது. வக்கீல்களே தம் எதிர்க்கட்சி மீது சுமத்துவதற்கு இப்படியான பழிகளின் பட்டியல் ஒன்றை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்
  2. எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தி மிரட்டிப் பின்வாங்க வைக்க சொல்ல ஆண்மையற்றவன், ஸ்திரிலோலன், பொம்பளைப் பொறுக்கி என்றெல்லாம் சொல்ல வேண்டும் (டொனால்ட் டிரம்ப் தன் டீலுக்கு ஒத்துவராத நாடுகளை மிரட்டுவதைப் போல).
  3. கணவரிடம் இருந்து ஜீவனாம்சமாக ஒரு பெரிய தொகையை வாங்குவதற்கு அவர் மீது பொய் வழக்குகள் போட வேண்டும். வரதட்சிணைக் கேட்டுத் துன்புறுத்துகிறார், உளவியல் வதை பண்ணுகிறார் என்பதெல்லாம் இதற்குள் வரும்


கணவர்கள் ஏன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்?

பொதுவாக விவாகரத்தை நாடுவோரில் பெண்களே மிகவும் அதிகம் என்பது புள்ளிவிபரம். ஆனால் ஆண்களும் நல்லவர்கள் அல்லர். ஆண்களும் விவாகரத்தை நாடும்போது தம் மனைவியரை மிக மோசமாகப் பாதிக்கும் குற்றச்சாட்டுகளையே வைப்பார்கள். அவர்களது மானத்தை, கற்பை குறிவைக்கும் பழிச்சொற்கள். இதற்கும் நம் சட்டங்களும், நீதிமன்ற நடைமுறையுமே காரணம்

நீதிமன்றம் முதலில்இன்னும் நல்லா கட்டிப்புடிச்சு அடிச்சு கடிச்சு சண்டை போடுங்கஎனத் தூண்டும். அதற்கான அத்தனை நடைமுறைகளையும் நம் குடும்பநல நீதிமன்றங்கள் வைத்துள்ளன. “இன்னும் இன்னும்எனத் தூண்டிக்கொண்டே இருப்பார்கள். ரொம்ப பயங்கரமாக அடித்துக் கொள்ளாவிடில் வழக்கை முடிக்கவிடாத வண்ணம் நிலைமை உள்ளது - நீங்கள் சுமூகமாக முடித்தால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தைவிட அண்டர்டேக்கர் போல சண்டையிட்டால் கிடைக்கும் பணமே அதிகம் எனும்போது மக்கள் ஏன் செய்ய மாட்டார்கள்?


உலகின் மிகமோசமான கட்டப்பஞ்சாயத்து செட் அப் நம் குடும்பநல நீதிமன்றங்களே. ஆண்மையற்றவன் என்பதென்ன அவர் மனிதரே இல்லை, அவர் மனித வேடமணிந்த கரடி, முகமூடியும் சட்டைப் பேண்டும் அணிந்த கொரில்லா, காட்டில் இருந்துகொண்டு வந்து வேடமிட்டு எனக்கு கட்டிகொடுத்து ஏமாற்றிவிட்டார் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஆண்மையற்றவர் என்று அழைக்கப்படும் ஆணுக்கு அது மிகப்பெரிய அவமானம். நீதிமன்ற செய்தி என்பது சட்டரீதியான ஆவணம். நீதிமன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையிலே ஆண்மையின்மை விவாதம் நடக்கும். அந்த மனிதர் எந்தளவுக்கு கூனிக் குறுகிப் போவார். வாழ்நாளெல்லாம் அந்த அவமானத்தை சுமந்து திரிவார். கேவலம் ஒரு விவாகரத்துக்காக ஏன் ஒருவரை அவமதித்து ஒடுக்க வேண்டும்

 ஒரு ஐயம் - ஆண்மைக் குறைவு என்பதென்ன ஒரு சின்ன மருத்துவக் குறைபாடு. பெண்களுக்கு உறுப்பில் உலர்வு ஏற்படுவதைப் போல, கர்ப்பப் பையில் கட்டி வருவதைப் போல. இதைச் சரிபண்ண முடியும். என்னென்னமோ சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இதை ஒருகுறையாகக்காண்பதே மிகப் பிற்போக்கான அபத்தமான பழமையான சிந்தனையின் வெளிப்பாடுதான். தன் இணையருக்கு அவர் இது நேர்ந்தால் தனக்கு இழைக்கப்படும் அநீதி இது என நினைப்பது இன்னும் கொடூரமானது. சரிபண்ணவே முடியாவிடில் அது வேறு பிரச்சினை. எனக்குத் தெரிந்து அதிகமான உடல் எடை, ரத்தத் தமனிகளில் கொழுப்பு அதிகாவது, ரத்த சர்க்கரை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளால் நரம்பணுக்கள் பலவீமாகி ஆண்களுக்குப் பரவலாக இப்பிரச்சினை வருகிறது. பெண்களுக்கு இது கருவுற முடியாமை, ஹார்மோனால் பிரச்சினை, மாதவிடாய் தாமதமாவது, வறட்சி, ஆர்வமின்மை என வெளிப்படுகிறது. இது ஒரு போதாமை அல்ல, உடல்நலப் பிரச்சினைதான். சிகிச்சையோ உணவுப் பழக்க மாற்றமோ இதைச் சரிபண்ணிவிடும். Erectile dysfunction கர்ப்பம் அடைய முடியாமல் போவதோ இவற்றை வைத்து விவாகரத்து கோருவது தலைவலிக்காகத் தூக்குமாட்டிக் கொள்வதைப் போன்றது.


அடுத்து, உடற்குறைபாடு எப்படிக் குற்றமாகும்? எதிர்க்கட்சி மீது அதை குற்றமாகச் சுமத்தி, அது தனக்கு நிகழ்ந்த அநீதியாகப் பாவிப்பது எப்படிச் சரியாகும்? அது இரு தரப்பினரையும் மீறி நிகழ்கிற ஒரு விபத்து. அதற்காக ஏன் ஒரு கட்சியைக் கூனிக்குறுகி நிற்க வைக்க வேண்டும்?


சரி அதற்காக விவாகரத்து கோருவதெனில் அதை ஏன் அம்பலப்படுத்த வேண்டும்? ‘எங்களிடையே உறவு சுமூகமாக இல்லைஎன்று சொல்லி விவாகரத்துப் பெறுவதை நீதிமன்றம் அனுமதிப்பதுதானே சரி? வெறும் சட்டரீதியான ஆவணப் பயனைத் தவிர இதனால் வேறென்ன பயனுள்ளது?


இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், இதற்கான விடை புலப்படும்:

 காலங்காலமாக நம் சமூகம் குடும்பத்தையும் தனிமனிதர்களையும் சதா கண்காணித்து விசாரித்து கட்டுப்படுத்தி வந்தது, ஆண், பெண்ணின் உடலையும் நடத்தையையும் மையப்படுத்தி அவர்களை விமர்சித்தும் மதிப்பும் வந்தது, குடும்பம் என்பது அதற்கான சால்ஜாப்பு மட்டும்தான். இன்று சமூகத்தின் இந்த கேடுகெட்ட பணியை நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. குடும்பநல நீதிமன்ற அமைப்பும் அதன் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் தனிநபர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக பிரதானமாக இயங்குவதாகத் தெரிந்தாலும் அவற்றின் அசலான நோக்கம் சமூகத்தில் தனிமனிதர்களை அவமதித்தும் மிரட்டியும் அவர்களது அந்தரங்கத்துக்குள் குறுக்கிட்டு விசாரித்து அரசுக்கும் அமைப்புகளுக்கும் இணங்கியவர்களாக அவர்களை மாற்றுவதே. வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் எந்த அந்தரங்கமும் அங்கு அதற்கு மேல் செல்லுபடியாகாது என நீதிமன்றம் கோருவது இதனாலே. இதே வாக்கியத்தை முன்பு பொதுச்சமூகமும் நம்மிடம் கூறியது: குடும்பச் சண்டைத் தெருவுக்கு வந்தால் யார் வேண்டுமானாலும் பஞ்சாயத்து பண்ணலாம், விசாரிக்கலாம், தலையிடலாம், தீர்ப்பு கூறலாம். நீ யார், இது நியாயமா என்றெல்லாம் கேட்க முடியாது. அங்கு தனிமனிதர் அழிக்கப்பட்டு அவர் பொதுமனிதர் ஆக்கப்படுகிறார். அங்கு நியாயம் என்பது வெளிநபர் குறுக்கிட்டுக் கட்டுப்படுத்துவதற்கான வெற்றுச் சொல் மட்டுமே. நீதிமன்றம் தன் இறுக்கமான கறுப்பு அங்கியிட்ட மொழியில் வெளிப்படுத்துவது பழைய சமூக விழுமியங்களையும் எதேச்சதிகார அக்கறைகளையுமே.


விவாகரத்தின் போதே நீதிமன்றமும் சமூகமும் உள்ளே வருகிறது என நாம் நினைக்கிறோம். மாறாக, விவாகரத்தின் நிகழ்-சாத்தியமும் எச்சரிக்கைகளுமே குடும்பத்தைக் கட்டுப்படுத்தி செயல்பட வைக்கின்றன. அதாவது, குடும்பம் தோன்றி பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து நடக்கவில்லை. விவாகரத்து உள்ளதாலே, அதற்கான சாத்தியங்களை அரசும் நீதிமன்றமும் கச்சிதமாக தீட்டி வைத்து வழிமுறைகளைச் சிக்கலாக்கி வைத்துள்ளதாலே நவீன இந்தியக் குடும்பம் எனும் அமைப்பே தோன்றுகிறது. திருமண ஆவணத்தில் கையெழுத்திடும்போதே இன்னொரு கை மாயமாக விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திட்டு நம்மை நோக்கி கண்ணடிக்கிறது, விரல் சுட்டி எச்சரிக்கிறது. இரண்டு கையெழுத்துகளும் மாயமான கயிறால் கட்டப்பட்டுள்ளன. ஒன்று இல்லாவிடில் இன்னொன்றால் நிலைக்க முடியாது. திருமணம் சமூகத்தில் நிகழ்ந்து விவாகரத்து நீதிமன்றத்தில் முடிவதாக நாம் பாவிக்கிறோம். உண்மையில் திருமணமே அந்நீதிமன்றத்தில்தான் மறைமுகமாக துவங்குகிறது. கையெழுத்து, ஆவணம் என ஒவ்வொன்றும் முன்கூறாகத் தயாரிக்கப்படுகின்றது.


குடும்பத்தை இயல்பாக உடைய அனுமதித்தால் அங்குஉண்மையான குடும்பம்இருக்கும், ஆனால் சமூகத்தின் இறுக்கமான கண்ணியான குடும்பம் இருக்காது. குடும்பத்தை ஆவணபூர்வமாகச் சிக்கலாக்கி, விசாரணை மூலம் வதையாக்கி உடைக்கும்போதேஇன்றைய நவீன குடும்பம்ரிவர்ஸில் தோன்றுகிறது. சமூகத்தைச் சிறையாகவும், குடும்பத்தை கைதியின் அறையாகவும், கொட்டடியாகவும் உருவகித்துப் பாருங்கள். வெளியே செல்ல முடியாது எனும் பெரிய மதிற்சுவர் ஒவ்வொரு முறையும் உணர்த்தப்படுவதாலே அது சிறையாகிறது. (அல்லாவிடில் வாழ்விடம்தான்.) உடைந்தால் இத்தனைக் குறுக்கீடுகளும் அவமானங்களும் தண்டனைகளும் கிடைக்கும் எனும் எச்சரிக்கையே குடும்பத்தை அச்சுப்பிசகாத ஒரு எதேச்சதிகார அமைப்பாக உருவாக்கி வைக்கிறது.  


 நம் நீதிபதிகளும் சட்டங்களும் இன்னும் 19ஆம் நூற்றாண்டிலேயே இருக்கிறார்கள். அறிவியல்ரீதியாக எதையும் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் தம் மனதுக்குள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் ஏற்பதோ விரும்புவதோ இல்லை. அவர்கள் ஆளும் அரசின் மறைமுக ஒடுக்கும் கரமாக, சாட்டையாக, குண்டாந்தடியாக செயல்படுகிறார்கள். படிப்பறிவும் ஜனநாயக உணர்வுமற்ற பழைய சமூகத்தின் காவலர்களாக நீடிக்கிறார்கள். அவர்கள் இல்லாவிடில் குடும்பம் நிகழும், உருமாறும், ஒற்றை அடையாளமற்ற ஒன்றாக மாறும். அது சமூகத்தை, அரசை, மக்களின் மனநிலையை பாதிக்கும். அரசின் மீது கேள்விகள் எழுப்பப்படும், அதிகார மையங்கள் நெருக்கடிக்குள்ளாகும் (மிகைல் பக்குனின் சொல்வதைப் போல). அதை அனுமதிக்காமல் குடும்பத்தை சிறைக்கூடமாக நிலைக்க வைக்கவே குடும்பநல நீதிமன்றங்கள் அவசியமாகின்றன. ஆண்மையிழப்பு, சோரம் போதல், அவமதிப்பு எல்லாம் இதன் ஒரு பகுதியே.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...