முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டமும் அச்சமும்


மிகைல் பக்குனின் இயற்கைச் சட்டங்களைக் குறிப்பிடுகிறார் (“அதிகாரம் என்றால் என்ன?” கட்டுரை)

. 1) புவியீர்ப்பை யாரும் மறுப்பதில்லை. அதை நம்மை ஏற்க வைக்க காவல்துறையும் சிறைக் கொட்டடியும் தேவையில்லை

2) மனிதர்கள் பரஸ்பரம் சார்ந்திருக்கிறோம். நான் தனிமை விரும்பியாக இருந்தாலும் இன்னொரு மனிதரின் உதவியின்றி வாழ்வது கடினம்.

 3) அடிப்படையான தர்க்கவிதிகள் - 1+1 = 2 என்பது மாற்ற முடியாத விதி.

 4) சமூக உறவுகளிலும் வணிகம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளிலும் தேவையுள்ள ஒழுக்கம் - நான் இன்னொருவரை அடித்துத் துன்புறுத்துவது, அழிப்பது என் உரிமை என்று பெரும்பாலானோர் கூற மாட்டார்கள். அப்படி அவர் கூறினால் அவர் விரைவில் அழிந்து போவார். இதுவும் இயற்கை விதிதான். இயற்கையின் சட்டம்தான்.


மனிதர்களுக்கு இந்த இயற்கையான சட்டங்களும் விதிகளும் போதும். இவற்றுக்குள் நமது குடும்ப நல நீதிமன்றச் சட்டங்கள் வருவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். குடும்பத்தை உடைக்கும்போது அதை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறுவதை எடுத்துக் கொள்வோம் - கணவரின் சொத்தின், வருமானத்தின் சரி பாதியையோ ஒரு கணிசமான பகுதியையோ மனைவிக்கு கொடுத்துவிட வேண்டும். இதில் எந்த தர்க்கமும் இல்லை. திருமணத்திற்கு முன்பு சுயமாக உழைத்து வாழ்ந்த பெண்ணால் ஏன் அதையே திருமணத்திற்குப் பின்பு செய்ய முடியாது என்பதே இயற்கைச் சட்டம், அதன் தர்க்கம். ஆகையால் மக்கள் இதைச் சுலபத்தில் ஏற்பதில்லை. அவர்களைத் தண்டனையையும் காவல்துறையையும் காட்டி மிரட்டியே நீதிமன்றம் தன் தீர்ப்புக்குப் பணிய வைக்கிறது. குழந்தை இருவர் சேர்ந்து பெற்றுக் கொள்வது, ஆகையால் அது இருவருக்குமானது என்பது இயற்கைச் சட்டம், தர்க்கம். ‘ஆனால்அம்மாவாலே அதைச் சரியாக வளர்க்க முடியும், ஆகையால் அப்பாவிடம் வளரக் கூடாது என்பது இயற்கைக்கு மாறானச் சட்டம். இதையும் நீதிமன்றம் உருட்டியும் மிரட்டியுமே நடைமுறைப்படுத்துகிறது. இயற்கைச் சட்டங்களை மக்கள் எதிர்ப்பதோ அஞ்சுவதோ இல்லை. பசித்தால் சாப்பிட வேண்டும் என்பதை யாரும் எதிர்ப்பதோ அஞ்சுவதோ இல்லை. சமூகத்தில் பெரும்பாலானவர்கள் பரஸ்பரம் இணங்கியும் பொதுவிதிகளை ஏற்றுக்கொண்டுமே போகிறார்கள். அதை அவர்கள் அஞ்சுவதோ எதிர்ப்பதோ இல்லை. இது மனிதர்களுக்கு என்றில்லை, விலங்குகளுக்கும் பொருந்தும். நீதிமன்றம் உள்ளே வந்து இதைச் செய்யலாம், இது கூடாது எனும்போது மக்கள் இயற்கையாக உடன்பட மறுக்கிறார்கள் - அதனாலே எந்த தீர்ப்பையும் பொதுச்சமூக வாக்கெடுப்புக்கு விடுவதோ விவாதத்துக்கு உட்படுத்துவதோ இல்லை. அது மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் அப்பாலான ஆண்டவன் கட்டளை ஆகிறது. ஏனெனில் அது கடும் மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் உட்படத்தக்கதாக இயல்பிலேயே இருக்கிறது. சட்டம் அதனாலே தன் மீதான எதிர்ப்பை அது எழும் முன்பே தடுக்கிறது. மிகத்தூய்மையான முற்றதிகாரமாக அது இருக்கிறது. ஒரு அரசியல் கூட்டம் சேர்ந்து அப்பாவி மக்களைக் கொல்லுகிறது. அரசு அமைப்புகளாலும் நீதிமன்றத்தாலும் அக்கூட்டம் காப்பாற்றப்படுகிறது - ஆதாரம் போதவில்லை, சரியாக வழக்கு விசாரணை நடக்கவில்லை எனும் என்னென்னவோ காரணங்களால். இது மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சட்டம் எனும் தோரணை இதை ஏற்க வைக்கிறது. இது நீதி பிழைப்பதல்ல, இதுதான் சட்டத்தின் நீதி. கொலை என ஒன்றை சட்டம் வரையறுக்கும்போதே யாரைக் கொல்லலாம், கொல்லக் கூடாது, யாரெல்லாம் விசாரணைக்கு அப்பாலானவர்கள் என்பதையும் வரையறுக்கிறது, சில நேரடியானவை, சில மறைமுகமானவை, அத்துடன் அது கொலையை கொலையல்லாமல் மாற்றுகிறது. அது எதைக் குற்றமென்றாலும் அது குற்றமல்லாமலும் ஆகிறது. இது சமூகத்தின் பிரச்சினையோ நீதிபதியின், விசாரணை அமைப்பின் போதாமையோ குறையோ அல்ல. இதுவே அதன் இயல்பு


ஒரு படத்தில் ஜனகராஜ் வேற்றூரில் இருந்து வருவார். வந்த இடத்தில் மழை பெய்தால்என்ன கல்லா கொட்டுது?” என்பார். நாயைப் பார்த்தால்யானை வருதுஎன்பார். கேட்டால் என் ஊரில் இப்படித்தான் சொல்வோம் என்பார். அப்படிச் சொன்ன பின்னர் அவர் அடையாளப்படுத்தும் பொருட்களின், விசயங்களின் கதியை, விளைவை, அர்த்தத்தை அவரே தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவார். அவர் தனக்குச் சோறிடுவோரிடம்விஷத்தைக் கொட்டுங்கஎன்றால் அவர் கோவித்துக் கொள்ள முடியாது. அவர் மொழி, அவர் நியாயம். நீதியமைப்பும் அப்படித்தான் - அது ஒன்றை எடுத்து அதை எப்படிப் பார்க்க வேண்டும், எது சரி தவறு என வரையறுக்கிறது, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கி, அந்த மாயையை நம்பும்படி நம்மை வலியுறுத்துகிறது. அதன்பிறகு நாம் அதன் கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வருகிறோம். அது ஒரு கொலைகாரரை விடுவித்தால் அவர் கொலைகாரர் அல்லாமல் ஆகிறது, அவர் குற்றம் பண்ணியதைப் பார்த்தவர்கள் இருப்பார்கள், அவருக்கு அவர் கொலைகாரர், ஆனால் அவர்களுடைய மொழியில் இனிமேல் அவர் கொலைகாரர் எனக் கூற முடியாது, அந்த உரிமையை நீதிமன்றம் ஒரு கணத்தில் பறித்துவிடும். இது சமூகத்தில் அமைதியையும் நீதியையும் தோற்றுவிக்கிறது, அப்பாவிகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயத்துக்கான பாதையை உருவாக்கித் தருகிறது என சமூகநீதிக் காவலர்கள் சொல்லும்போது நாம் அதை மறுக்க முடியாது போகிறது. அவர்களும் கலாச்சாரரீதியாக அச்சத்தை உண்டாக்கி நம்மைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்பதால் தலையசைத்துக் கடந்து போகிறோம்


இயற்கையின் சட்டங்களுக்கு அப்பால் உலகைத் தோற்றுவிப்பதற்காக அரசும் அதிகார அமைப்புகளும் பிரயத்தனம் பண்ணுகின்றன. அவர்கள் சொல்வதை நாம் மறுப்பதற்கான வெளியை மறுப்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதை நாம் பிரிட்டீஷ்காரர்கள் காலத்துச் சட்டங்களைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் - வனங்களில் மக்கள் வாழ்வதைக் கட்டுப்படுத்துவது அன்றைய காலனிய ஆட்சியாளர்களின் வணிகத் தேவைக்கு அவசியப்பட்டது. அதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவது அவசியப்பட்டது, ஆயுதங்களைத் தயாரிப்பது, தரிப்பது, சண்டைக் கலையைப் பயில்வது இதையெல்லாம் கட்டுப்படுத்த தேவையேற்பட்டது. ஒவ்வொன்றுக்கும் சட்டம் கொண்டு வந்தார்கள். வரியை வசூலிக்கத் தேவையேற்பட்டது. வரி கொடுக்காமல் இருப்பது குற்றமாக்கப்பட்டது. இவை எவையுமே இயற்கைச் சட்டங்கள் அல்ல. இவற்றால்தாம் மக்கள் இன்று அளவுக்கு அதிகமான துன்பங்களை சுதந்திரத்துக்குப் பின்பு அனுபவித்து வருகிறார்கள். ஏனென்றால் இவை மக்களுக்காக உருவாக்கப்படவில்லை - மக்களையும் இந்நாட்டின் வளங்களையும் தமக்கு ஏற்றபடி உருவகித்துக் கட்டுப்படுத்தவே இவை செயற்கையாக உருவாக்கப்பட்டன. இயற்கையான மாற்றங்கள், வளர்ச்சி என இவை நியாயப்படுத்தப்பட்டன. இப்போது தாராவியில் உள்ள மக்களை அங்கிருந்து அகற்றி அந்த இடத்தைக் கையகப்படுத்தி பெரும் விலைக்கு விற்க அதானிக்கும் அதே சட்டமும் அதன் அச்சமுமே பயன்படப் போகிறது. வசிப்பிடம் வசிப்பவர்களுக்கானது - இது இயற்கை விதி. வசிப்பிடம் தனிமனித உரிமையெனிலும் அது அரசுக்கும் உரிமையானது, அரசால் யாருடைய இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பது சட்டம், செயற்கையான விதி. அரசும் சட்டமும் ஆதரவாக இணையும்போது அதானி இயற்கைக்கு அப்பாலான சக்தியாக உருவெடுக்கிறார். எளிமையாக யோசித்துப் பார்த்தால் அங்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் சட்டரீதியாக இதைச் சுலபத்தில் எதிர்க்க முடியாதபடி அரசு இதை ஆவணப்படுத்தினால் மக்களால் சமாளிக்க முடியாது. அரசின் இந்த அதிகாரமும் பலமும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, இயற்கைக்கு மாறான சட்டத்தை இயற்றும், விதிமுறைகளை உருவாக்கும் ஆற்றலில் இருந்து வருகிறது.


இயற்கையில் இருந்து எளிமையும், எளிமையில் இருந்து வாழ்க்கையும் தோன்றுகிறது. செயற்கையில் இருந்து சிக்கலும், சிக்கலில் இருந்து சட்டமும், சட்டத்தில் இருந்து அதிகாரமும் அதில் இருந்து மக்கள் சும்மா வாழமுடியாதபடியான தடைகளும் துயரமும் தோன்றுகின்றன. சட்டத்துக்கு உள்ளிருந்து அதிகாரத்தை எதிர்த்து வாழ்வது போர் செய்து போரை முடிப்பதை, அதற்காக முடிவற்ற போரில் ஈடுபவதைப் போலாகிறது. நீண்ட சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பாருங்கள்: அவர்கள் ஒன்று பொய் வழக்குகளில் சிக்கி கொட்டடிகளில் இறக்கிறார்கள் அல்லது நீண்ட காலம் வாழ்க்கையே வதையாகிட போராடி காலத்தை வீணடிக்கிறார்கள், செல்வத்தை குடும்பத்தை இழக்கிறார்கள். அதனாலே பொதுமக்கள் நீதிமன்றத்துக்குப் போகவே அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை முதலீடாக வைத்தே நீதிமன்றம் நடக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.