முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாய் மட்டும் இல்லாவிட்டால்...


 

நேற்று பிரதமர் உரையாற்றும்போது ஜி.எஸ்.டியில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாகவும், அதனால் விலைவாசி குறைந்து மக்களால் அதிகமாகச் செலவழிக்க முடிந்து, பொருளாதாரம் வளரப் போகிறது (அதாவது, பொருளாதார வீக்கம் குறையப்போகிறது) என்றார். அதைக் கேட்கையில் அடடா என்றிருந்தாலும் ஐயய்யோ என்றும் இருந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் செய்வது இன்னொன்றாக இருக்குமென்பதே நம் அனுபவம். இன்று செய்தியில் ஜி.எஸ்.டி மாறுதலால் எந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறையும் என்று போட்டிருந்தார்கள். டி.வி. ஏஸி போன்ற மின்னணு சாதனங்கள், சைக்கிள், பேக்கரி ஐட்டங்கள், சேவ் போன்ற நொறுக்குத்தீனிகள், கண்ணாடி, மருந்துகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா போன்ற கல்விக்கான பயன்பாட்டுப் பொருட்கள். இதை அவர் இந்திய மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று அறிவித்திருக்கிறார். ஆனால் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு அவர் வரியைக் குறைக்கவில்லை. அதாவது அன்றாட உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. முக்கியமாக பெட்ரோல், டீஸல் மீதான ஜி.எஸ்.டியை வெகுவாக குறைத்து அதன்வழியாக அதன் விலையைக் குறைக்கவில்லை. சும்மா ஏ.ஸி, டிவி விலையைக் குறைப்பதால் மக்களின் அன்றாடத் தேவைகள் தீரவோ பிரச்சினைகள் தணியவோ போவதில்லை.

ஒருவர் இன்று மாதம் 10,000 சம்பாதித்தால் வாழவே முடியாது. நகரங்களில் 20,000 கூட ஒரு குடும்பத்துக்குப் போதவில்லை. காய்கறி, மளிகை சாமான்கள் விலையெல்லாம் எக்குத்தப்பாய் எகிறிக் கிடக்கின்றன. வீட்டு வாடகை லாக் டவுனுக்குப் பிறகு பெருமளவு அதிகரித்துவிட்டது. சம்பளம் பெரும்பாலும் உணவு, உறைவிடத்துக்கே போய்விடுவதாலே மக்களால் நுகர்வுப் பொருட்களை வாங்க முடியவில்லை. பெட்ரோல், டீஸல் விலையில் 30-40 ரூபாய் குறைந்தாலே மிகப்பெரிய மாற்றம் வரும். உணவுப் பொருட்களின் விலை குறையும். பொருளாதார வீக்கம் குறையும். இன்று 20% மேல் பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கிறது. அதனால் நியாயமாகவே விலையை 80 ரூபாயாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. கூடுதலாக ஜி.எஸ்.டியையும் குறைத்தால் 50 ரூபாய்க்கே கூட கொடுக்கலாம். அரசு தன் வருமானத்தையும் அம்பானிகளின் வருமானத்தையுமே பிரதானமாகக் கருதுவதாலே நம் பொருளாதாரம் வீங்கிவீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கிறது.
அடுத்து, நோட்டுப் புத்தகம், பேனாவின் ஜி.எஸ்.டியைக் குறைக்காமல் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மத்திய வர்க்க குடும்பங்களின் வருமானத்தில் பெரும்பகுதி கல்விக் கட்டணம் செலுத்துவதிலேயே போகிறது. அடுத்து, நிலத்தில் முதலீடு செய்வதிலும், வாடகையிலும் கட்டுப்பாடு அவசியம் - மக்கள் பணத்தை பங்குகளிலும் தங்கத்திலும் முதலீடு பண்ணுவதைத் தடுக்கும் நோக்கில் வரியை அதிகரித்த அரசு ரியல் ஏஸ்டேட்டைத்தான் நிஜத்தில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நிலத்தின் விலையை அரசே நிர்ணயிக்கும் என அறிவித்து, வங்கிகளும் தாம் அளித்த பணத்தின் வட்டியை சரிபாதியாகக் குறைக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். நிலத்தை, வீட்டை வாங்கி விற்பதில் ஒரு லாக் இன் பீரியட் கொண்டு வரலாம். பணம் நிலத்தில் முடங்காமல் இருந்தாலே வணிகம் வளரும். அதுவே வீடு வாங்குவதற்கான கடனில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றும். இதைச் செய்ய விருப்பம் இல்லாவிடில் அரசே மக்களுக்கான மலிவு விலை வீடுகளைப் பரவலாக எல்லா நகரங்களிலும் கட்டி விற்கலாம் (பழைய சோவிய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல).
பிரதமருக்கு இதைக் குறித்தெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜி.எஸ்.டியைக் குறைக்கும்படி பெருவணிகர்களின் லாபி போடும் அழுத்தத்திற்கு ஏற்ப சில பொருட்களுக்கு மட்டும் குறைத்திருக்கிறார்கள். (மருந்துகளின் ஜி.எஸ்.டியைக் குறைத்தது மட்டுமே பாராட்டத்தக்கது.) ஆகையால் இதைப் பெருவணிகர்களுக்கான தீபாவளிப் பரிசென்றே கூறலாம். இதனால் மக்களின் பாக்கெட்டில் பணமும் மிஞ்சாது, நுகர்வும் அதிகரிக்காது. அமித் ஷா கூட எடையைக் குறைத்துவிட்டார். ஆனால் பொருளாதாரத்தின் தொப்பை வீக்கம் குறையாது.
இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பார்கள். அது நம் பிரதமருக்குப் பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...