முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழியாக்கத்தை மதிப்பிடுவது - ஆர். அபிலாஷ்

 பொதுவாக தமிழாக்கம் குறித்து தமிழில் கடந்த பத்தாண்டுகளாகவே ஒரு கருத்து நிலவுகிறது; அதைக் குறித்தே இங்கு சில கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன் - புத்தகத்தைத் தமிழில் படிக்கையில் அது கரடுமுரடாக இருந்தால் உடனே மோசமான மொழியாக்கம் என்று கடிகிறோம். மொழிபெயர்ப்பாளரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறோம். நான் எம்.டி.எம்மின் மொழிபெயர்ப்பை (“ரோஜாவின் பெயர்” நாவல்) இன்னும் படிக்கவில்லை. ஆகையால் இக்குறிப்பு அதைக் குறித்ததல்ல. ஆனால் விமலாதித்த மாமல்லன் பகிர்ந்திருந்த ஒப்பீட்டைப் பார்த்தேன். எம்.டி.எம் செய்யறிவைப் பயன்படுத்தி மொழியாக்கினாரா இல்லையா என்பது வேறொரு பிரச்சினை (அப்படிச் செய்தாலும் தப்பில்லை, கிரெடிட் கொடுத்தால் போதும் என்பது என் பார்வை; மேலும் அதை நிரூபிப்பதும் கடினம் என்பதால் இப்போது விவாதிக்க அவசியமில்லை.) அய்யனார் விஸ்வனாத் எழுதிய குறிப்பையும் படித்தேன்; குறிப்பாக அவர் ஜி. குப்புசாமியைக் குறித்து முன்பு எழுதியது. இந்த இரு பார்வைகளுடனும் எனக்கு உடன்பாடில்லை.


முதலில் வி.மா ஒப்பிட எடுத்துள்ள பத்திகளில் ஒரு வரியை மட்டும் எடுத்துக் காட்டி என் கருத்தைச் சொல்கிறேன்:
ஆங்கில வடிவம்: “An acute reply, Adso. In fact, I have worked out this proposition: equal thickness corresponds necessarily to equal power of vision.”
தமிழ் வடிவம்: “ஒரு கூரிய பதில், அட்ஸோ. உண்மையில், நான் இந்தக் கூற்றை உருவாக்கியிருக்கிறேன்: சமமான தடிமன் அவசியமாக சமமான பார்வை சக்திக்கு ஒத்திருக்கிறது.”

“ரோஜாவின் பெயர்” நாவலில் அட்ஸோவின் பார்வையில் காட்சிகள் விரிகின்றன. அட்ஸோ பேஸ்கர்வில்லைச் சேர்ந்த (துறவியான) சகோதரர் வில்லியமின் உதவியாளர். பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலிய மடாயலம் ஒன்றில் நிகழும் மரணங்களை வில்லியம் துப்பறிய அதைக் குறித்து அவர் அட்ஸோவிடம் நடத்தும் தத்துவ உரையாடலின் பகுதி இது (என் நினைவில் இருந்து கூறுகிறேன்.). வி-மாவே மொத்த ஆங்கிலப் பத்தியையும் தந்துள்ளார். அதைப் படிப்பவர்களுக்குப் புரியும் - ஆங்கிலத்திலேயே அது கடினமானதுதான். ஏனென்றால் விவாதம் கல்விப்புல தத்துவ மொழியில் உள்ளது. உலகைக் கடவுள் படைத்தார் எனில், அதற்குத் தூய்மையான, மாறாத தர்க்கம் உண்டெனில் அது என்னவெனத் தெரிந்து கொள்ளும் ஒருவரால் அதை வைத்து உலகின் போக்குகளை, உண்மையின் விதிகளை அறிந்துகொள்ளலாம், ஆனால் கடவுள் தன் எண்ணப்படி, அகவிழைவுபடி நம்மைப் படைத்திருக்கிறார் எனில் முடியாது. அதாவது முன்னறிக் கருத்துக்கள் உண்டா இல்லையா என்பதே விவாதத்தின் மையம். முன்னறிக் கருத்து இல்லையெனில் (இருட்டு ஆபத்தானது, அச்சமூட்டுவது என்பதை ஒருவர் யாரும் சொல்லாமலே எப்படி அறிகிறார்? குழந்தை எப்படி தாயின் முலைகளை அடையாளம் கண்டு பாலருந்துகிறது?) உயிர்களால் இவ்வுலகில் வாழவே இயலாது தானே? முன்னறி ஞானம் அறிவுக்கு முன்பே தோன்றியதா, அதற்கு ஒரு பொதுப்படையான தன்மை உண்டா இல்லையா? அது கடவுளால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது அதை நம்மால் கணிக்கவோ தெரிந்துகொள்ளவோ முடியாதா (இமானுவல் காண்ட் சொன்னதைப் போல)? இந்த விவாதங்களின் பின்னணியும் தத்துவப் பார்வையும் இன்றி நீங்கள் வில்லியம் வீவரின் ஆங்கில மொழியாக்கத்துக்குள்ளே பயணிக்க இயலாது. ஆங்கிலத்திலேயே இவ்வளவு அடர்த்தியுள்ளபோது எப்படிச் சுலபமாகத் தமிழாக்க இயலும்?

இரண்டு சாத்தியங்கள்: 1) வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்குவது. 2) சுதந்திரமாகவோ படைப்பூக்கமாகவோ மொழியாக்குவது (free or creative translation) (இன்னும் பல வகைமைகள் உண்டெனினும் ஒரு வசதிக்காக இருகூறாகப் பிரித்திருக்கிறேன்.)
தமிழில் ஐரோப்பிய, ஆங்கில மூலங்களில் இருந்து மொழியாக்கிய பு.பி, க.நா.சு போன்றவர்களும் வங்க, மலையாளத்தில் இருந்து மொழியாக்கியவர்களும் இரண்டாவது வகையைப் பின்பற்றினார்கள். அதாவது அவர்கள் வாசிப்புச் சரளத்தையும், தம் இலக்கியக் கொள்கைகளையும் முன்னிலைப்படுத்தினார்கள். ஆனால் தொழில்பூர்வ மொழிபெயர்ப்பாளர்கள் இதை ஏற்பதில்லை. அவர்கள் முதல் வகையையே பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே சிரமான நடையில் எழுதப்பட்ட படைப்பை இவ்வாறு மொழியாக்கினால் அதே நடையைத்தான் தமிழிலும் தர முடியும். அதாவது பாகற்காயை சமைத்தால் கசக்கத்தான் செய்யும். மாம்பழத்தை தயிருடன் சேர்த்து சமைத்தால் இனிக்கும். மொழியின், வாக்கிய அமைப்பின் அடிப்படையான குணத்தை, தொனியை நேர்மையான மொழியாக்கத்தில் மாற்ற முடியாது, கூடாது. வாசிப்பின் சுவை, வேகம், எளிமையை விட நேர்மையும், கூர்மையுமே மொழியாக்கத்தில் முக்கியம்.

முதலில், என்னுடைய அழகியலுக்கு வருகிறேன்: நான் தனிப்பட்ட முறையில் சற்றே சரளமான எளிமையான மொழியாக்கத்தை விரும்புகிறேன். ஏனென்றால் நான் அடிப்படையில் புனைவெழுத்தாளன். ஆகையால் நான் கதையாக்கத்தைப் பிரதானப்படுத்துகிறேன். எந்த புனைவெழுத்தாளரும் இதையே செய்வர். உ.தா., An acute reply, Adso. In fact, I have worked out this proposition: equal thickness corresponds necessarily to equal power of vision. என்பதை நான் கீழ்வருமாறு மொழிபெயர்ப்பேன்:
“துல்லியமான பதில் உன்னுடையது அட்ஸோ. சொல்லப்போனால், நான் இப்படியான முன்மொழிவுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்: ஒரு கண்ணாடியின் தடிமனும் உன் பார்வையின் துல்லியமும் சமமாக இருக்கும்.”
நான் இங்கே என்னவெல்லாம் மாற்றங்களைச் செய்திருக்கிறேன்? நான் வாக்கிய அமைப்பை, வினைச்சொற்களை மாற்றியிருக்கிறேன். தர்க்க, கல்விப்புல மொழியின் தொனியை நான் உரையாடல் மொழியின் தொனிக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இது ஓரளவுக்கு வாசிப்புத்தன்மையுடன் இருக்கும், ஆனால் இது துல்லியமான மொழியாக்கமாக இருக்காது. இதை ஒரு பதிப்பாளர் ஏற்பாரா, இது தொழில்ரீதியாக ஏற்கத்தக்கதா? பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் பதில் சொல்ல முடியும்.

நான் பல்வேறு தவறுகளை என் மொழியாக்கத்தில் முன்பு செய்திருக்கிறேன். சற்றே சுதந்திரமான மொழியாக்கத்தை நான் விரும்புகிறேன் - நான் மார்க்வெஸை மொழியாக்குகையில் சிக்கலான சொற்றொடரை எளிய தொடர்களாக உடைத்திருக்கிறேன். இன்னொருவர் அதைச் செய்ய மாட்டார். இதுவே அழகியலின் அரசியல். நான் மூலமொழியில் படிக்க வழியில்லாதபோது அல்லது புதியதாக ஒரு படைப்பாளியைப் படிக்கும்போது என் பாணியிலான மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்து வாங்க மாட்டேன். சற்றே கரடுமுரடாக இருந்தாலும் நான் நேர்மையான, கூர்மையான மொழிபெயர்ப்பையே வாங்குவேன். மூலமொழியில் எப்படி இருந்ததோ அதை நான் வாக்கிய அமைப்பு, தொனி, சொற்தேர்வில் உணரவும் அறியவும் விரும்புவேன். (என்னைப் போன்றவர்களின்) சுதந்திர மொழியாக்கம் அதைத் தராது. அதேநேரத்தில், ஏற்கனவே ஆங்கிலத்தில் நன்குப் படித்துப் பழகிய எழுத்தாளரை தமிழில் மொழியாக்கத்தில் படிக்கையில் நான் சுதந்திரமான மொழியாக்கத்தையே விரும்புவேன். ஆகையால், மொழியாக்கம் சரியானதா இல்லையா என்பதை அவரவருக்கான நிபந்தனைகளே தீர்மானிக்கின்றன, வாசிப்பின் ரசனை மட்டுமல்ல. இதற்கு நிரந்தரமான உருக்கில் வார்க்கப்பட்ட அலகுகள் இல்லை.
அதாவது என்னைப் போன்றமொழிபெயர்ப்பாளர்கள் உதிரிகள். (சாருவும் கூடத்தான்.) நாங்கள் எங்கள் ஆசைக்கு மொழிபெயர்ப்பு நூலாக வெளியிடுவோம். பெரும்போக்கு எங்களில் இருந்து வேறானது.

இதைச் சொல்ல எனக்கு இரு தகுதிகள் உள்ளன: 1) நான் தொடர்ச்சியாக மொழியாக்கியதில்லை என்றாலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் கவிதைகளையும் சிறுகதைகளையும் நாவல்களின் அத்தியாயங்களையும் ஓரளவுக்கு மொழியாகியிருக்கிறேன் (மொழியாக்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன, சிறுகதைகள் இன்னும் நூலாகவில்லை.) என் அனுபவத்தில் இருந்து நான் பெற்ற புரிதல் என் மொழியாக்க அழகியலை உருவாக்கியது. 2) மொழியாக்கம் குறித்து ஆய்வு செய்து Bridging Theory and Practice in Translation: Perspectives, Challenges, and Innovations எனும் நூலுக்காக ஒரு அத்தியாயத்தை அண்மையில் எழுதியளித்தேன். அதற்காக சில தமிழ் நாவல்களையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். ஆய்வு மற்றும் கோட்பாட்டுக் கட்டுரைகளைப் படித்தேன். மனித மொழியாக்கத்தை செய்யறிவு மொழியாக்கத்துடன் ஒப்பிட்டேன். அப்போது நான் வந்தடைந்த ‘முன்மொழிவு’ என்னவென்றால் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலச் சந்தைக்கு ஏற்ப தமிழ்ப்புனைவின் சொற்றொடர் அழகியலைச் சிதைக்கிறார்கள், தொனியை மாற்றுகிறார்கள். உ.தா., அனிருத்தன் வாசுதேவனோ, லக்‌ஷ்மி ஹோம்ஸ்டுரோமோ (பெருமாள் முருகனின், அசோகமித்திரனின்) அகவயமான கவித்துவமான தமிழ் மொழிநடையை புறவயமான மினிமலிஸ்டிக்கான ஆங்கில நடைக்கும், தொனிக்கும் மற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய வாசிப்பின் அழகியலும் அரசியலும் சந்தையின் எதிர்பார்ப்பும் அப்படி உள்ளன. இதே தமிழ்ப் பிரதிகளை செய்யறிவைக் கொண்டு மொழியாக்கும்போதும் இதே சிக்கல்கள் வருவதுடன் (அவை மனித மொழியாக்கத்தையே மாடலாகக் கொள்வதால்) கூடுதலான பிழைகளும் தோன்றுகின்றன. அதாவது செய்யறிவு (எந்திர மொழியாக்கம்) மனித மொழியாக்கத்துக்கும் பதிலி அல்ல. இரண்டிலும் பிரச்சினைகள் உள்ளன. மனித மொழியாக்கமே ஒப்பிடுகையில் மேலானது. அதற்கு ஒரு நல்ல உதாரணத்தைத் தருகிறேன்.

ஓரன் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை”. ஜி. குப்புசாமி எவ்வளவு அற்புதமான மொழிபெயர்ப்பாளர் எனப் புரிந்துகொள்ள அந்நாவல் எனக்கு உதவியது. நான் அதைப் படிக்கையில் அதன் மொழிநடை வழக்கமான பாமுக்கின் நடையில் இருந்து வேறுபட்டுள்ளதை உணர்ந்தேன். நான் ஆங்கில நூலை எடுத்து ஆரம்பத்தில் இருந்து படித்தேன். இரண்டு மொழியாக்கங்களையும் ஒப்பிட்டேன். அப்போது ஒன்று விளங்கியது - பாமுக் இந்நாவலுக்கென ஒரு பிரத்யேக தொனியை உருவாக்குகிறார். அது ஏற்படுத்தும் லயம் தனித்துவமானது. குப்புசாமி அதை அப்படியே உள்வாங்கி தமிழில் கொண்டு வருகிறார். இதை ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்திரத்தனமாகச் செய்ய முடியாது. இதை நிச்சயமாகச் செய்யறிவு செய்ய முடியாது. உள்ளுணர்வு இங்கு முக்கியமான செயலாற்றுகிறது. இதைக் கவனித்துப் படித்து உணர்ந்து இதயத்தில் இருந்து மொழியாக்கத்தின் வழியாக கடத்தினாலே சாத்தியம். மொழியாக்கத்திலேயே அதை நான் உணர்ந்து ஒப்பிட்டு சரிபார்த்திருக்கிறேன் என்றால் அவர் எவ்வளவு நன்றாக வேலை பார்த்திருக்கிறார் பாருங்கள். ஜி. குப்புசாமியைப் போன்றவர்களை நாம் கொண்டாட வேண்டும். அவர்கள் கலைஞர்கள். அவர்களைக் காலில் போட்டு மிதிக்கக் கூடாது.

மீண்டும் சொல்கிறேன்: நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் படைப்பாளிகளுக்கு வெகு அருகில் வருபவர்கள். படைப்பு மனநிலையை தம் கற்பனையால் உணர்ந்து அவர்கள் மொழியில் செயல்பட வேண்டும். அது அசாதாரணமான பணி. சிலநேரங்களில் நமது மொழியாக்க அழகியலும் அரசியலும் நம்மை ஒருவிதமாக மொழிபெயர்க்க வைக்கும். அது நம் நிலைப்பாடு. இன்னொருவர் வேறுவிதமாகச் செய்யட்டும். பல மொழியாக்கங்கள் ஒரு படைப்புக்கு வரும்போதே அவ்வித்தியாசம் நமக்கு விளங்கும். சாட்ஜிபிடியும் குரோக்கும் வந்துவிட்டதால் நாம் மொழிபெயர்ப்பாளர்களை மலினப்படுத்தக் கூடாது. இன்று செய்யறிவைக் கொண்டு நடிகர்கள் இல்லாமலே காட்சிகளை உருவாக்குகிறார்கள். அதனால் நடிப்பு தேவையில்லாமல் ஆகுமா? இல்லை. (செய்யறிவே திருடித்தான் மொழியாக்கம் செய்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.)

பாப்லோ நெருடாவை எத்தனை பேர் தமிழாக்கியிருக்கிறார்கள்! திருக்குறளுக்கான மொழியாக்கத்திலும் உரையிலும் எத்தனை மாறுபாடுகள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்கு ஐந்துக்கும் மேட்பட்ட ஆங்கில மொழியாக்கங்கள் வந்துள்ளன. நான் அவரது கவிதைகளை ஆங்கிலமாக்கி நூல் வடிவில் கொண்டு வந்தேன் (“KIsses at Daybreak”). அதை ஒரு ஆங்கிலக் கவிஞர் படித்துவிட்டு மொழிபெயர்ப்பு போலவே இல்லை, உணர்வுபூர்வமாக அசலாக உள்ளது என்றார். ஏனென்றால் நான் சொல்லுக்குச் சொல் மொழியாக்கவில்லை. நான் தொனியையும் உணர்வையும் பிரதானமாக்கி அவரது மொழியின் இசைத்தன்மையை என் மொழியாக்கத்தில் கொண்டு வர முயன்றேன். மொழியாக்கும்போது அதன் தாளம் எனக்குள் முழங்குவதை உணர்ந்தேன். அந்த உணர்வலைகள் என் நெஞ்சில் மோதுவதை அனுபவித்தேன். ஏனெனில் நான் அக்கவிதைகளை எனக்குள் ஆழமாக அனுபவிப்பதற்கான மொழியாக்கினேன். ஆனால் வேறு மொழிபெயர்ப்புகள் அப்படி இருக்காது. அவை நேரடியாகவோ மொழிபெயர்ப்பாளரின் புரிதலையும் அழகியலையும் பொறுத்தே உருவாகியிருக்கும். அவையும் முக்கியமே. ஒவ்வொரு மொழியாக்கமும் ஒரு படைப்பே. அவை பெரும் செல்வம்.

அதனால் நண்பர்களே, “எண்டெர் தெ டிராகனில்” புரூஸ் லீ கோதாவில் இறங்கிச் செய்வதைப் போல மொழிபெயர்ப்பாளர்களை ஹுவாங் ஹொங் எனக் குத்தக் கூடாது. தியானம் செய்யும் துறவிகள் தம் மனதுக்குள் உருத்திரளும் ஒற்றைச் சொல்லை எவ்வளவு கவனத்துடன், மரியாதையுடன் கையிலெடுத்து தொட்டுணர்வார்களோ அவ்வாறு மொழிபெயர்ப்பாளர்களை மதிப்பிட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...