முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (இ)

 6) நான் அடுத்த நாளே அவெஞ்சரை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போனேன். ஸ்டால் ஆகவில்லை என்றாலும் எந்த கியரில் எப்போது ஓட்டுவது என்பதில் குழப்பம் இருந்தது. எதற்கு ரிஸ்க் என்று இரண்டாவது கியருடனே நின்றுகொண்டேன். ஸ்கூட்டரைப் போல ஆக்ஸிலேட்டரைத் திருகவேண்டாம், கியர் மாற்றி தொட்டதும் வண்டி ஏதோ அலையில் விட்ட படகைப் போலப் பாய்கிறது என்பது பிடித்திருந்தது. பள்ளங்களோ வேகத்தடைகளோ எனக்குப் பொருட்டில்லை என்பதைப் போல அது மிதந்து போவதை ரசித்தேன். பிரேக்கை எந்த வேகத்தில் பிடித்தாலும் கிராமத்து எளிய மனைவியைப் போல நின்றது


7) வண்டியின் அகலமும் நீளமும் அதிகம் என்பதால் நம் பிரதமர் குறள் ஒப்பிப்பதைப் போல ஆகிவிடக் கூடாதே எனப் பிரார்த்தித்தபடி முதல் சில நாட்கள் ஓட்டினேன். ஆனால் என் மனம் எவ்வளவு சீக்கிரம் அந்த வண்டியின் ஆகிருதிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விட்டது. சாலையில் என் எதிரிலும் பக்கவாட்டிலும் உள்ள வாகனங்களை சுலபத்தில் கணிக்க முடிந்தது. கவனம் இழக்கும்போது மட்டுமே ஓரிரு முறைகள் உரிமையாளரற்று தேமேவென நின்றுகொண்டிருக்கும் சில பைக்குகளைஅவ்வை சண்முகியில்சண்முகி முதலியாரை இடுப்பால் இடிப்பதைப் போலஉரசினேன்.’ நல்லவேளை எந்த விபத்தோ புகாரோ இல்லை.


8) பயிற்சியாளர் சொன்ன தினத்துக்கு வரவில்லை. தனக்கு வேலையிருப்பதால் இன்னொரு நாளுக்கு ஒத்திப் போட்டார். நான்நினைச்சா ராக்கெட்டையே ஓட்டலாம், இதென்ன பிரமாதம்என அவர் சொல்லித் தந்த வித்தைகளை மனத்தில் வைத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் ஓட்டினேன். உண்மையிலே தெரியாத மொழியில் தன்னம்பிக்கையுடன் கதைப்பதைப் போல சுலபமாகத் தான் இருந்தது. புராணக் கதைகளில் ஆற்றில் இறங்கியதும் நீர் பிளந்து வழிவிடுமே அப்படி என் வண்டி ஜம்மென்று சென்றது. ஐந்தாவது நாளே ஒசூர் போனேன். அது மட்டும் ஒரு வக்கீல்களிடம் கட்டண பேரம் பேசுவதைப் போல அதிரிபுதிரியாக இருந்தது.


9) ஒரு நீண்ட போக்குவரத்து தடை. வாகனங்கள் ஊர்ந்து செல்ல நான் கியரைப் பிடித்து பின்னாலே ஊர்ந்தேன். 15-20 நிமிடங்கள் இப்படியே ஊர்ந்தால் பைக் எந்திரம் சூடானது. கை வலித்தது. சில நேரங்களில் வாகனங்கள் நின்று நின்று நகர்ந்தன என்பதால் கிளட்சைப் பிடித்துவிடுவது, அரை கிளட்சியில் ஓட்டுவது சிரமாக இருந்தது. மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொள்ள உறுமியும் இருமியும் வெளியேற்றுவதைப் போல வண்டி திணறியது. முக்கால் மணிநேரத்தில் போக வேண்டிய இடத்துக்கு நான் போய்ச் சேர ரெண்டரை மணிநேரம் ஆனது. வார இறுதி நாட்களில் மாலையில் இப்படியான பயணங்கள் வதையாகிவிடும் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் இதற்கு அடுத்த நாளே பயன் கிடைத்தது.


10) அடுத்த நாள் நான் பெங்களூர் சாலையில் ஓட்டும்போது இதேபோல தவ்வித்தவ்விப் போகும் வாத்து பொம்மையைப் போல நகரும் போக்குவரத்தை எதிர்கொண்டேன். அப்போது எனக்குத் தன்னியல்பாகவே கிளட்சைப் பிடித்துப்பிடித்து விட வருவதும், கிளட்சை விடுவதற்கு முன்பானஉரசல் புள்ளியைத்’ (friction point) என் உடல் தெரிந்துகொண்டதையும் உணர்ந்தேன். நான் அவெஞ்சரை ஓட்ட ஆரம்பித்து ஆறாவது நாள் அது


11) எட்டாவது நாள் அவெஞ்சரில் மைசூருக்குப் போனேன். போய் வர 330 கிலோமீட்டர் தூரம். முதன்முறை ஸ்கூட்டரிலும் இப்போது அவெஞ்சரிலும். முதன்முறை தேசிய நெடுஞ்சாலை 275இல் போனேன். அப்போது அதில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை எனத் தெரியாது. ரொம்ப நேரமாக நமக்குப் பக்கமாக ஏன் பைக்கோ ஸ்கூட்டரோ வரவில்லை என்று சந்தேகம் ஏற்பட்டபோது நான் பாதி வழியைக் கடந்திருந்தேன். சுங்கச் சாவடியில் எச்சரித்தார்கள். அதனால் திரும்ப வரும்போது பக்கச் சாலையை எடுத்துக் கொண்டேன். சுங்கச் சாலையில் போவது சுலபம் என்றாலும் வேகத்தை உணர முடியவில்லை. 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும்கூட ஏதோ வழுக்கிச் செல்வதைப் போலிருந்தது. ஆனால் திரும்ப வரும்போது பக்கச் சாலையில் பத்தடிக்கு ஒரு வேகத்தடையை வைத்திருந்தார்கள். டிராக்டர், பை, மாடுகள் எனக் குறுக்கே வந்தபடியே இருந்தன. மேம்பாலத்தின் கீழே திறப்புள்ள பகுதியில் எப்போது யார் புகுந்து எம்.ஜி.ஆர் தன் நாயகியை இடுப்பை வளைப்பதைப் போல வளைந்து வருவார்கள் எனத் தெரியாது. பிரேக்கைப் பிடித்து வேகத்தைக் குறைத்து வேகத்தடையில் ஏறி இறங்கி மீண்டும் வேகமெடுத்து மீண்டும் இடுப்பை வளைக்க வரும் வாகனக் கரங்களைச் சமாளித்து நழுவி முன்னே சென்று வேகத்தடை எனும் வழிமறிச்சான் சாமிகளை எதிர்கொண்டு அலுத்துவிட்டது. திரும்ப பெங்களூரில் நுழையும்போதும் போக்குவரத்து ஜெயலலிதா காலில் அடிக்கடி தலைவர்கள் விழுந்துகொண்டிருக்கும் பழைய அதிமுக பொதுக்கூட்ட மேடையில் புகுந்துவிட்டாற் போல இருந்தது. பெங்களூர் நகரத்தின் வினோதங்களில் ஒன்று நகராட்சி மிகவும் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்த நினைக்கிறது, இரவானால் பெரும்பாலான சாலைகளில் தெருவிளக்கை அணைத்துவிடுகிறது என்பது. இருட்டில் வாகனம் ஓட்டும்போது பவேரியா கொள்ளைக்காரர்களின் கிராமத்தில் கார்த்தியும் போலிசாரும் புகுந்து மாட்டிக்கொள்வார்களே அப்படியொரு திகில் உணர்வு வருகிறது. நல்ல குற்றிருட்டில் வாகனமோட்டினால் பதற்றம் குறைந்து அமைதியுண்டாகும் என பெங்களூர் நகராட்சி நம்புவதாக பெங்களூர்வாசி நண்பர் ஒருவர் சொன்னார். ஆனால் பயங்கர சத்தமும் வாகன ஓட்டிகளில் மரணக் கிணறு சாகசங்களையும் பார்த்துப் பழகிய எங்களுக்கு இருட்டையும் அமைதியையும் பார்த்தால் பயமாகிறது என்றேன். மேலும் பள்ளங்களையும் திடீரென வளைத்து சாலைக்கு வரும் வாகனங்களையும் ஹெட்லைட் ஒளியில் பார்க்க முடியவில்லை. அதனால் இம்முறை கனகபுரா-மலவள்ளி-பன்னூர்-மைசூர் சாலையில் பயணித்தேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...