முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரிக்கெட்டும் போரும்

 சர்வதேச கிரிக்கெட் அடிப்படையில் தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக நடத்தப்படுவது என்பதில் மறுப்பில்லை. ஆனாலும் கிரிக்கெட் ரசனையைக் கொண்டு நாம் கடந்த அரைநூற்றாண்டு காலமாகவே தேசவெறியைக் கடந்து செல்ல முயன்றுள்ளோம். சென்னையில் வசீம் அக்ரமின் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் முறியடித்தபோது இந்திய ரசிகர்கள் கைத்தட்டி பாகிஸ்தானைப் பாராட்டியது ஒரு முக்கியமான நிகழ்வாக அதனாலே பார்க்கப்பட்டது. எதிரணியினர் பயணம் வரும்போது அவர்களை அதிகப்படியாக பார்வையாளர்கள் பரிகசிப்பதோ எதிர்ப்பதோ இனவாதமாகவும் விளையாட்டின் கௌரவத்துக்கு இழுக்காகப் பார்க்கப்படுவதும் அதனாலே. அதேநேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிராகப் போர் நடந்து முடிவுக்கு வந்தபின்னர் அவர்கள் மோதிக்கொள்ளும்போது அதை அப்போரின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டுமா? அது சரியா?

அது நிச்சயமாக அருவருப்பானது. போரே ஒரு அருவருப்பான நிகழ்வுதான். அது கொலைப்பாதகச் செயல்தான். நாம் போரில் எப்போதுமே நம் நாட்டவர் கொல்லப்படும்போது அதை இரங்கத்தக்கதாகவும் எதிர்நாட்டவர் கொல்லப்படும்போது அதைப் பாராட்டுக்குரியதாகவும் நினைக்கிறோம், ஆனால் எல்லையில் வாழும் நம் நாட்டவரின் மரணமே கூட நம் தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் குற்றம்தான் எனப் புரிந்துகொள்வதில்லை. இம்முறை ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா முறியடித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் - அதாவது பாஜகவின், அமித் ஷா மற்றும் அவரது மகனின் - அறிவுறுத்தலின்படி இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகாவுடன் கைக்குலுக்கவில்லை. இதை பாகிஸ்தான் பயிற்சியாளரும் கிரிக்கெட் வாரியமும் கண்டித்துள்ளது. இதை சாத்தியமாக்கிய ஆட்ட மேற்பார்வையாளரான (match referee) ஆன்டி பைக்கிராப்டை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. சூரியகுமார் கைகுலுக்காதததுடன் கிரிக்கெட்டின் நல்லுணர்வை விட தேசநலன் முக்கியமானது என்று கூறியிருக்கிறார். ஆட்டத்தின் வெற்றியை பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் அர்பணித்திருக்கிறார். எனக்கு அப்போது ஒரு கேள்வி ஏற்பட்டது: நாட்டுக்கான ஒரு மறைமுகக் கலாச்சார 'தாக்குதலாக', குறியீட்டு யுத்தமாக, இப்போட்டி மாறுகிறது என அவர் தெரிவிக்கிறார். எனில் இப்போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்? இந்தியா இப்போரில் வென்றதாகப் பெருமைப்பட்டது. போட்டியில் தோற்றிருந்தால் நாம் பாகிஸ்தானிடம் குறியீட்டு யுத்தத்தில் அடிபணிந்ததாக ஆகிவிடுமா? நாம் தேசப்பற்று இல்லாமல் நடந்துகொண்டோம் என்றாகுமா? (மும்பை கிரிக்கெட் முன்னாள் அணித்தலைவரும், டிரிப்யூன் பத்தியாளருமான ஷிஷிர் ஹத்தங்காடியும் இதையேதான் கேட்கிறார்.) எனில் அதைச் சரிசெய்ய நாம் மீண்டும் அவர்களுடன் மோதியிருப்போமா? அடுத்து, பாகிஸ்தான் வென்று இதே போல குண்டு வீசப்பட்டு இந்தியாவால் கொல்லப்பட்ட எல்லையோர பாகிஸ்தானியருக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறோம் எனச் சொல்லியிருந்தால் இந்தியா அதைத் தாங்கியிருக்குமா? அது எந்தளவுக்கு அழுத்தத்தை, நெருக்கடியை வீரர்களுக்குக் கொண்டு வந்திருக்கும்? ஒருவேளை இதைக் கொண்டு நாம் மீண்டும் போர் தொடுத்திருப்போமா? இதிலெல்லாம் எதாவது லாஜிக் உள்ளதா?
அடுத்து இது விதிமுறை மீறல் ஆகாதா? என்னதான் இத்தொடரை ஐ.சி.சி நடத்தவில்லை என்றாலும் - ஐ.சி.சியின் நடுவர்களும் ஆட்ட மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்ட நிலையில் - இதை ஏற்க முடியுமா? இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வீரர் உஸ்மான் குவாஜா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு சொல்லை ஒரு போட்டியில் புலப்படுத்திட ஐ.சி.சி அவரைத் தண்டித்தது. 2014இல் இங்கிலாந்தின் மொயின் அலியும் இவ்வாறு தண்டிக்கப்பட்டார். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு விதிமுறையா? இஸ்லாமியர் செய்தால் குற்றம், இந்து மதத்தவர் செய்தால் நியாயமா?
கிரிக்கெட்டை முன்பு அயலுறவு அமைச்சகத்தின், உள்துறை அமைச்சகத்தின் முடிவுப்படி நிறுத்திவைத்தார்கள். மோடியின் அரசியல் அதைவிட மோசமானது - அவர் இப்போட்டிகள் நடப்பதையும் அதைக்கொண்டு அரசியல் செய்தியைப் பிரகடனம் செய்வதையும் விரும்புகிறார். இவ்வாறு மதவெறுப்பை, கசப்பை கிரிக்கெட்டில் கலக்கிறார். அமெரிக்கா நல்லவேளை சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடர்களில் பரவலாக ஆடவில்லை. இல்லாவிட்டில் டிரம்பின் பைத்தியக்காரத்தனங்களையும் கிரிக்கெட்டில் பார்க்க வேண்டியிருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...