முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (அ)

 1)


பைக் - அதாவது கியர் பைக் - ஓட்ட வேண்டும் எனும் ஆசை ஏன் தோன்றியது எனத் தெரியவில்லை. பெங்களூரின் யுத்தக் களம் போன்ற சாலைகளாலா? பைக்கின் சப்தத்தினாலா? தோற்றமா? எப்போது என்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

 இருபதாண்டுகளுக்கு மேலாக ஸ்கூட்டர் ஓட்டுகிறேன். அது கிட்டத்தட்ட என் உடலின் நீட்சி. அரைத்தூக்கத்திலும் சுலபமாக ஓட்டலாம். என் இப்போதைய ஸ்கூட்டர் வாங்கி ஒன்பதாண்டுகள் தாண்டிவிட்டன. இன்னும் சில ஆண்டுகள் ஓட்டலாம் என்றாலும் அதை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி பை சொல்ல வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது. அடுத்து மின்-ஸ்கூட்டரா அல்லது அதிக சிசி கொண்ட பெட்ரோல் ஸ்கூட்டரா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் மீண்டும் ஸ்கூட்டரா என்று அலுப்பாக இருந்தது. புதிதாக எதையாவது செய்யலாம். கியர் பைக் ஓட்டத் தெரியாது. அதை வாங்கி ரெட்ரோ பிட் செய்து கற்றுக்கொள்ள வேண்டும் - கல்யாணம் பண்ணி பேசிப் புரிந்து அதன்பிறகு காதலிக்க வேண்டும் என்பதைப் போல. விவாகரத்து எனும் கொட்டடி வதையில் இருந்து தப்பிக்க எடுத்த வங்கிக் கடன் வேறு சாலை முனையில் கட்டிப் போடப்பட்டு வாகன நெரிசலை ஏற்படுத்தி நிற்கும் யானையோ போல என்னைப் பார்த்து முழுக்கிறது. அதை மெல்லமெல்ல இளைக்க வைத்துவிட்டேன் என்றாலும் வட்டி குறையாத தொப்பையாக இருக்கிறது. நான் சம்பாதித்துச் சேமிப்பது, உபரி வேலைகளில் ஈட்டுவது எல்லாவற்றையும் சாப்பிட்டுஎனக்கொண்ணும் தெரியாதுஎன வட்டியும் முதலும் பருத்த மலைப்பாம்புகளாகப் பின் தொடர்கின்றன. இப்போது போய் ஒரு புதிய முதலீடா, அவசியமா? அப்படியே குழப்பத்தில் முடிவைத் தள்ளிப் போட்டபடி இருந்தேன். இன்னொரு பக்கம் பைக் சம்மந்தமான காணொளிகளைப் பார்ப்பது, கியர் மாற்றச் சொல்லித் தரும் யுடியூபர்களைப் பின் தொடர்வது, நண்பர்களிட்ம் அதைப் பற்றிக் கேட்பது என இருந்தேன். இப்போதைய ஸ்கூட்டர் நன்கு காய்த்த புளியமரத்தை தோட்டையுடன் அணுகும் உரிமையாளரைப் போல என்னை உலுக்கி எடுப்பதால் அதில் நான் என்றுமே நீண்ட தூரம் அதில் பயணித்ததில்லை. ஒருநாள் ஒசூருக்குத் தற்செயலாக அதில் போக நேர்ந்தது - அதுதான் திருப்புமுனை: அப்பயணத்தை மிகவும் ரசித்தேன். நெடுஞ்சாலையில் இப்படிப் பறப்பது இவ்வளவு ஜாலியாக இருக்குமா? அப்போதுதான் ஸ்கூட்டர் மீது எனக்கு காதலே வந்தது. அதை சர்வீஸ் செய்து பாகங்களை மாற்றி பிக் அப்பையும் சரியாக்கினேன். விபத்தில் இருந்து மீண்டு ஆட வந்த ரிஷப் பண்ட் போலாகிவிட்டது. அதன்பிறகு அதில் சில முறைகள் ஒசூரும், ஒருமுறை மைசூரும் போனேன். வேகமாக ஓட்டும்போது - எதிர்க்காற்றில் கொசு பறப்பதைப் போலத்தான் இருக்கும் என்றாலும் - ரொம்ப உற்சாகமாக உணர்ந்தேன். நெடுஞ்சாலையைப் பார்த்தால் என் கை ஆக்ஸிலேட்டரை முறுக்கத் தொடங்கும். அப்படியே கிழித்துக்கொண்டு போவதில் தப்பித்து ஓடும் கைதிக்கு பிடிபடுமுன் வரும் ஒரு சந்தோஷம். ஆனால் இப்படியே போனால் ஸ்கூட்டர் தாங்காது. இருக்கிற பணத்தைத் திரட்டி பைக் வாங்கலாம் என முடிவெடுத்தேன். அவெஞ்சர்தான் என் மனத்தில் முதலில் வந்தது. அதன்பிறகு வெவ்வேறு பைக்குகள் குறித்து நிறைய ஆய்வு செய்து யோசித்துக் குழப்பி அலைந்து திரிந்து விசாரித்து அவெஞ்சர் தான் சரி எனும் முடிவுக்கு வந்தேன்


2) அவெஞ்சரில் நகரச் சாலைகளில் ஓட்டுவதற்கும் நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கும் என்று இரு மாடல்களை வைத்திருக்கிறார்கள் (160-220 ஸிஸி). இரண்டிலும் உட்கார்ந்து பார்த்தபோது 220யின் உட்காரும் நிலைதான் பிடித்திருந்தது. 160யில் சற்று முதுகை வளைக்க வேண்டும். ஹேண்டில் பார் நேராக இருந்ததால் 220 அளவுக்கு அவ்வளவு வசதியாக இல்லை.  


3) வண்டியை ரெட்ரோ பிட் செய்ய இடத்தைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. ஹைதராபாதில்தான் சூப்பராகச் செய்கிறார்கள். அடுத்து மும்பை. அங்கெல்லாம் கொண்டு போக முடியாது. நான் சென்னையில் என் ஸ்கூட்டரை ரெட்ரோ பிட் செய்தபோது இருந்ததைப்போல இப்போது இல்லை. விலை இரட்டிப்பாகிவிட்டது, சக்கரங்களைப் பொருத்தும் சட்டகமும் விரிவாகிவிட்டது. என் ஸ்கூட்டர் பழைய மாடல் ரெட்ரோ பிட்டிங். அதை ஓரளவுக்கு இடமுள்ள டிராபிக்கில் நுழைக்கலாம், ஆனால் ஏற்றத்தாழ்வான இடத்தில் சட்டெனக் கவிழ்ந்துவிடும்; இப்போதைய ரெட்ரோ பிட் ஸ்கூட்டர்களையோ நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணைப் போலத்தான் போக்குவரத்து நெரிசலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலு அவை மிகுந்த சமநிலையைக் கொண்டிருக்கும், சுலபத்தில் சரியாது. பெங்களூரில் பனேர்கெட்டா விலங்குகள் காட்சியகத்தின் அருகே ஒருவர் இதற்கென்றே ஒரு பட்டறையை வைத்திருக்கிறார். (கடைக்கு சைத்ர ஶ்ரீ என்ஜினியரிங் எனப் பெயர்). வயதான மனிதர். முப்பதாண்டு அனுபவம். நல்ல வேலைக்காரர். குழந்தை மனதுக்காரர். எதாவது கேள்வி கேட்டு அவரை நாம் சந்தேகிக்கிறோம் என்று பட்டால் கோபித்துக் கொள்வார். அப்படித்தான் பல்லவிக்கும் அவருக்கும் இரண்டாவது நாளே மோதல் ஏற்பட்டது. “நீங்கள் வண்டியை ஸ்கிராட்ச் போட்டுவிடுவீர்களா?” என்று கேட்டாள். அடுத்து வண்டியை நாங்கள் விடும்போது அவள் காணொளிப் பதிவு பண்ணினாள். “என்ன நம்ப மாட்டீங்களா?” என்று கன்னடமும் தமிழும் கலந்து பொரிந்தார். நான் அவரைச் சமாதானப்படுத்தினேன். அவர் கொதித்தபடியே இருந்தார். (வயதானவர்களை வளர்ந்தவர்களாக நடத்தக் கூடாது, அவர்களைக் குழந்தையைப் போல நடத்தினாலே காரியம் நடக்கும் என்பது என் அனுபவம்.) நான் அங்கு போய் அவர் ரெட்ரோ பிட் பண்ணி வைத்திருக்கிற வண்டிகளைப் பார்த்தேன். ஒன்றை எடுத்து ஓட்டினேன். அதன் சமநிலை எனக்குப் பிடித்துவிட அதைச் சொன்னேன். அவரது ரெட்ரோ பிட்டிங் எவ்வளவு திறமையாக, கச்சிதமாக உள்ளது என்று வியந்தேன். உற்சாகமான அவர் பல்லவியிடம் தான் கோபத்தில் பேசியதற்கு மன்னிப்பெல்லாம் கேட்டார். அவரிடம் முன்பணம் கொடுத்து பணியை ஒப்படைத்தேன். பைக்கை வாங்கியபின் அங்கு ஷோரூமில் இருந்து ஒருவர் எடுத்து வந்துவிட்டார்.


(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...