முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்வுக் குழுவுக்குத் தேவை ஒரு தகுதித் தேர்வு

//தேசிய செயற்குழு, நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, முறையாக அமைக்கப்பட்ட அந்தந்த மொழிவாரியான நடுவர் குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. பல தசாப்தங்களாக, இந்த செயல்முறைதான் இலக்கிய உலகில் அகாதமியின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்து வருகிறது. இந்தப் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதற்கும், நடுவர் குழுவின் செயல்முறையை ஒரு "தணிக்கைக்கு" (Audit) உட்படுத்துவதற்கும் அமைச்சகம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் தேவையற்றது மற்றும் முன்னுதாரணமற்றது.


சாகித்ய அகாதமி வரலாற்றில் இதுவரை எந்தவொரு காலக்கட்டத்திலும், நிபுணர் குழுக்களால் எடுக்கப்பட்ட இலக்கியத் தீர்ப்புகள் நிர்வாகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை அல்ல; அது நிபுணத்துவம், சக படைப்பாளிகளின் மதிப்பீடு மற்றும் கல்விசார் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அறிவுசார் பயிற்சியாகும். இதனை அதிகாரத்துவ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும், அகாதமியின் நோக்கத்தைச் சிதைப்பதற்கும் சமமாகும். - நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன்///

எனக்கு சு. வெங்கடேசனின் கருத்துடன் உடன்பாடுண்டு. சாகித்ய அகாடெமியின் தன்னாட்சியில் குறுக்கிடக் கூடாது. அதேநேரம் அகாடெமி முழுமையான தன்னாட்சியுடன் இருக்கிறதா? அதன் நிர்வாக அளவில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ளும் அனுபவம் எனக்கில்லை. நான் இங்கே சொல்வது கேள்விப்பட்டவை. நம் ஊரில் அதிகாரபூர்வமாக சொல்லப்படுகிறவற்றை விட கேள்விப்படுபவற்றிலே உண்மை அதிகம் என்பதால் அதை இங்கே பதிவு பண்ணுவது உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாக அகாடெமியின் விருதைத் தீர்மானிப்பது இறுதிக்கட்ட விருதுக்குழு. இவர்களுக்குத் தேவையான படைப்பாளரை முன்தீர்மானித்து அவரது நூலை எப்படியாவது இறுதிப் பட்டியலில் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதன்பிறகு வாதிட்டு மற்ற உறுப்பினர்களை ஏற்கச் செய்வது இவர்களின் திறமை. இத்திறமை எடுபட்டால் அவர் முன்வைக்கும் படைப்பாளிக்கு கிடைக்கிறது. இச்சூழலை இன்னும் மோசமாக்குவது ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே விருது பெற்ற ஒரு படைப்பாளி இந்த இறுதி விருதுக்குழுவுக்குள் வர வேண்டும் என விதிமுறை உள்ளது என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் (அல்லது பல நேரங்களில்) விருது பெற்ற படைப்பாளி தான் யாருக்கு மனதளவில் கடன்பட்டிருக்கிறோமோ அல்லது யாரால் பயன்பெற வேண்டுமோ அவருடைய பெயரை அடுத்த ஆண்டு பலமாகப் பரிந்துரைப்பார். சில நேரங்களில் அகாடெமியில் ஏற்கனவே அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவரை இறுதிப் பட்டியலில் கொண்டு வந்து விருது பெற வைத்துவிட்டால் அடுத்த முறை விருதுபெற்றவர் தனக்கு வாங்கித் தந்தவரின் நூலை இறுதிப் பட்டியலுக்குக் கொண்டு வந்து அதற்கு விருதளிக்க வலுவாகப் பரிந்துரைப்பார். இப்படி இது ஒரு விஷச்சூழலாக மாறுகிறது. ஊர்க்காரர்கள், சாதிக்காரர்கள், தன்னைப் பரிந்துரைத்தவர்கள், தனக்காக வேலை பார்த்தவர்கள், தனக்காக எதிர்காலத்தில் வேலை பார்க்கப் போகிறவர்கள், தன் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் என விருதை வாங்கிக் கொடுக்கிறார்கள். அவர்கள் வந்ததும் இதே சேவையைத் தொடர்கிறார்கள். இயல்பாகவே இதனால் விருதின் மீதான மக்களின் நம்பிக்கை காலியாகிறது. எழுத்தாளர்களும் முந்தின ஆண்டு விருது பெற்றவர்களுக்கு தாம் நெருக்கமாக இருந்தால் மட்டுமே தம் வாய்ப்புப் பிரகாசமாகும் எனக் கருதுகிறார்கள். இது விருது பெற்றவர்களை ஒரு அதிகார வளையமாக்குகிறது. ஒரு ரகசியக் குழுமமாக அவர்கள் செயல்பட்டு ஒரு 'குடும்ப விருதாக' சாகித்ய அகாடெமியை மாற்றிவிடுகிறார்கள். இதனிடையே கட்சி செல்வாக்கும் செயல்படுகிறது என்கிறார்கள்.

வெளியில் இருந்து பார்க்கையில் தேர்வாகும் படைப்பாளிகளை நாம் விமர்சிக்க முடியாதபடிக்கு தேர்வு சரியாகவே இருக்கிறது. ஆனால் உள்ளுக்குள் இப்படியான அதிகார விளையாட்டு, பாகுபாடுகள் உள்ளன.

இதை எப்படிச் சரிசெய்வது?

முதலில் இந்த தேர்வுக் குழு அமைக்கும் முறைமை மாற்றப்பட வேண்டும். ஒருவர் அகாடெமி விருது பெற்று விட்டதாலே அவர் ஒரு சிறந்த தேர்வர் ஆக மாட்டார். அவர் ஒரு நல்ல படைப்பாளியாக இருப்பதாலே சிறந்த இலக்கியத்தைப் படித்தவரோ, உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவரோ, ஒரு படைப்பின் செயல்முறையை அறிவார்ந்து புரிந்துகொண்டவரோ அல்லர். இதையே நான் குழுவின் மீத உறுப்பினர்களான கல்வியாலர்களுக்கும் சொல்வேன். காமாசோமாவென இப்படி தேர்வுக்குழுவை அகாடெமி உருவாக்குவதை முதலில் நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக தேர்வர்களுக்கு ஒரு தகுதித் தேர்வு வைக்க வேண்டும்.
இத்தேர்வில் மாநில மொழி இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், விமர்சனக் கோட்பாடுகளில் இருந்து கேள்விகளைக் கேட்க வேண்டும்.
தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெறுவோர் தேர்வர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தேர்வர்களுக்கு நல்ல ஊதியம் அளிக்க வேண்டும்.
தேர்வு எழுதுவதற்கு அடிப்படைத் தகுதி படைப்பாளியாகவோ கல்வியாளரகவோ இருப்பது என வைக்கலாம்.

இப்படிச் செய்தாலே தேர்வில் ஒரு தொழில்முறைப் பொறுப்பு வரும்.
வாசிப்பும் அறிவும் படைத்த இளைஞர்கள் தேர்வுக்குழுவுக்குள் வருவார்கள்.
விருப்பத்தின், கடமையின் அடிப்படையில் அல்லாமல் ஒரு வேலையாக இதை எடுத்து செய்வார்கள்.

ஆம், அப்போதும் தம் நுண்ணுணர்வின், உள்ளுணர்வின், தர்க்க அறிவின்படி தான் ஒரு தேர்வர் ஒரு நூலைத் தேர்வு பண்ணுவார் என்றாலும் குறைந்தபட்சம் அவருக்கு ஒரு தகுதி இருக்கும் என நாம் நம்பலாம். முக்கியமாக இதன்வழியாக அதிகார வட்டத்துக்குள் இருந்து தொடர்ச்சியாக நபர்களைத் தேர்வுக்குழுவுக்குள் அனுப்புவது முடிவுக்கு வரும்.

இந்த முறைமைக்குள்ளும் ஊழல் தோன்றும். ஆனால் அதற்கு மெனெக்கெட வேண்டும். நம் எழுத்தாளர்கள் அந்தளவுக்குப் போக மாட்டார்கள். தேர்வு புறவயமாக இருக்கும். 20-30 வருடங்களுக்கு முன்பே எழுதுவதை நிறுத்தியவர்களுக்கு ஏதோ ஒரு புத்தகத்தின் பெயரில் வாழ்நாள் பரிசாக விருதளிப்பது, நட்புக்காக, சாதிக்காக, தொடர்புக்காக விருதளிப்பது, அரசும் வாசகர்களும் தொடர்ந்து அதிருப்தியடைவது, விருதை நிறுத்தி வைப்பது, விருது அறிவிப்பு லீக் செய்யப்படுவது எல்லாம் இருக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.