முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி20 உலகக்கோப்பை 2026 - கம்பீரை வைத்துக் கொண்டு வெல்வது


 

நேற்றைய போட்டியில் இந்தியாவை ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் கல்யாணம் முடிந்து பெண் வீட்டுக்கு வருகை தரும் மாப்பிள்ளையைப் போல நடத்தினார்கள். சஞ்சுவுக்கு பந்தை உள்ளே (middle to leg) போடாமல் நிறைய வைடாகப் போட்டார்கள். அபிஷேக்குக்கும் அவர்கள் வீசிய நீளமும் திசையும் தவறு. ஆடுதளமும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இருந்தது. ஆகையால் பந்தியில் அமர்ந்து ஆற அமர சாப்பிடுவதைப் போல மட்டையாடினார்கள். அப்போட்டியைப் பார்க்க எனக்கு நிஜத்திலேயே திருமண வைபவம் போலவே இருந்தது. ஆனால் சிறந்த அணிகள் இவர்களை அவ்வளவு சுலபத்தில் ரன் அடிக்க விட மாட்டார்கள். அபிஷேக் திரும்ப தம் பழைய ஆட்டநிலைக்கு வரவில்லை என்றாலும் கூட இந்த அரைசதம் அடித்த நிம்மதி அவருக்கு மே.இ தீவுகளுக்கு எதிராக ஆடும்போது உதவும்.

சென்னையைப் போன்ற ஆடுதளங்கள் கிடைத்தால் இந்தியாவால் தென்னாப்பிரிக்கா / இங்கிலாந்துக்கு எதிராகக் கூட 220-250 அடிக்க முடியும். இதுதான் இந்தியாவின் பேட்டை. அரை-இறுதியிலும் இறுதிப் போட்டியிலும் கள அமைப்பாளர்கள் மனநலம் பிறழ்ந்து அஹமதாபாத் பாணி ஆடுதளங்களை அமைத்தால் மீண்டும் 'வண்டியில மாமன் பொண்ணு' போல மட்டையாளர்கள் மாட்டு வண்டியில் ஏறித்தான் ஓட வேண்டி இருக்கும். பந்தைத் திருகி வீசும் வேக வீச்சாளர்கள், சுழலர்கள் நம்மை மூச்சுத்திணற வைப்பார்கள். ஆடுதளத் தயாரிப்பு விசயத்தில் ஐ.ஸி.ஸி நிர்வாகிகள் தலையிட்டு கர்நாடகக்காரர்களின் இனிப்பு சாம்பார் போல ஆடுதளங்களை மாற்றிவிட்டதில் இந்த ஆட்டத்தொடரே சமச்சீரற்றதாகி விட்டது. ஜிம்பாப்வே அணியை எடுத்துக் கொள்ளுங்கள் - ஆடுதளங்கள் தட்டையாக இருந்திருந்தால் அவர்கள் காலிறுதிக்கே வந்திருக்க மாட்டார்கள். இங்கு வந்தால் அவர்களுக்கும் நல்ல அணிகளுக்குமான இடைவெளி அவ்வளவு அதிகமாக இருக்கிறது. மெத்தனமான ஆடுதளங்கள் இந்த இடைவெளியைக் குறைத்து விடுவதுதான் பிரச்சினை. இதற்குப் பதிலாக பெங்களூர், சென்னை, மும்பை போன்ற நகரங்களில் எல்லா போட்டிகளையும் நடத்திவிட வேண்டும். தில்லியை எல்லாம் அறவே தவிர்த்துவிட வேண்டும். அஹமதாபாத் ஆடுதளத் தயாரிப்பாளரை யாராவது தூக்கி கடலில் போட்டுவிட வேண்டும். பந்து இப்போது விழுந்தால் அது எழுந்து மட்டையாளரை அடையும் முன்பு நாம் போய் ஒரு டீ குடித்துவிட்டு வந்துவிடலாம். வந்து விட்ட பின்னரும் கூட அது சுலபத்தில் நம்மை வந்தடையாது. அரை இறுதி, இறுதிப் போட்டியாவது ஒழுங்காக இருக்கும் என நம்புவோம்.
இந்தியா எந்தளவுக்குத் தயாராக உள்ளது? தென்னாப்பிரிக்கா மே.இ தீவுகளை முறியடித்தது பெரிய உற்சாகத்தை இந்திய அணிக்கு கொடுத்திருக்கும். இப்போது கரடுமுரடான குறுகின சாலையைப் போன்ற மே.இ தீவுகளைத் தாண்டி விட்டால் ஹைவேயான அரை-இறுதியை அடைந்து விடலாம். ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அளவுக்கு நாம் முழுமையான, பன்முகமான தயார் நிலையில் இல்லை. குறிப்பாக சுழலர்களின் தன்னம்பிக்கை தரைமட்டத்தில் உள்ளது. ஹர்த்திக் ஓரளவுக்குத் சமாளித்தாலும் மூன்றாவது வேகவீச்சாளராக அவர் தயார் நிலையில் இல்லை. அவரது உடற்தகுதியில் ஏதோ ஒரு சின்ன பிரச்சினை உள்ளதாகத் தோன்றுகிறது. அல்லது வேறு ஏதாவது பிரச்சினையாகவும் இருக்கலாம். ஆகையால் ஓவர்கள் 5-12 வரை சுழலர்களுடன் வீசுவதற்கு இன்னொரு வேகவீச்சாளரை அவர்கள் அணிக்குள் கொண்டு வந்தால் நல்லது. ஒருவேளை சுழலர்களில் ஒருவரை எதிரணி மட்டையாளர்கள் சிக்ஸர்கள் அடிக்கத் தொடங்கினால் அவரை அப்புறப்படுத்தி ரன்களைக் கட்டுப்படுத்தவும் விக்கெட் எடுக்கவும் இது உதவும். பும்ராவையும் 13, 18, 20 ஓவர்களில் வீச வைக்க முடியும். ஹர்த்திக் பவர் பிளேயில் இரண்டு ஓவர்களையும் 14/15வது ஓவரையும் வீசலாம். ஒருவேளை பந்து அதிகமாகச் சுழன்றாலோ மட்டையாளர்கள் திணறினாலோ ஹர்த்திக்கை ஒரு ஓவருக்கு மேல் வீச வைக்க வேண்டியதில்லை. அவரது மட்டையாட்டமும் களத்தடுப்பும் இதனால் சிறப்பாக அமையும். அணியிலும் சமநிலை இருக்கும். தவளை தேசிய நெடுஞ்சாலையில் குதிப்பதைப் போன்ற துபேயின் ஓவர்களைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்காது.
ஆறாவது வீச்சாளர் யார் இடத்தில் வருவது? திலக் வர்மா அல்லது துபேவின் இடத்தில். மெத்தனமான ஆடுதளத்தில் ஒருவேளை துபேயின் பந்து வீச்சு எடுபடக் கூடும். அதில் அவரை ஆட வைக்கலாம். தட்டையான ஆடுதளத்தில் அவர் மட்டையாடவே தேவையிருக்காது. ஆகையால் அவரால் பயனிருக்காது. அவரை விட திலக் நல்ல களத்தடுப்பாளர். அதில் துபேவை நீக்கி விடலாம். 20 ஓவர்கள் ஆட 7 மட்டையாளர்களே தாராளம். 8வது எண்னில் வரக் கூடிய மட்டையாளர் மிக அரிதாகத்தான் 8 விக்கெட்டுகளை இழந்து இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை எனும் நிலையில் உதவுவார். அதற்கு பந்து ஸ்விங் ஆவது, சுழல்வது ஆகிய பயங்கரங்கள் நடக்க வேண்டும். ஆனால் இந்த உலகக்கோப்பையில் அப்படியான ஆடுதளங்கள் இதுவரைக்கும் இல்லை. ஆகையால் 8வது எண்ணில் வரும் மட்டையாளர் லேப்ரடார் நாய் வீட்டைப் பாதுகாப்பதைப் போலத்தான், நிஜத்தில் அவரால் பயனில்லை.
கடைசியாக, இறுதிப் போட்டிக்குப் போவதுதான் உண்மையான சாதனை. நாம் எவ்வளவு சிறந்த அணி என்பதல்ல. அங்கு யார் நீதானமாகவும் நேர்மறையாகவும் ஆடுகிறார்களோ, சரியான அணித்தேர்வு, உத்திகளை முன்னெடுக்கிறார்களோ அவர்களே வெல்வர். கம்பீர் இந்த விசயத்தில் இந்திய அணிக்கு ஒரு பலவீனம்தான். கம்பீரையும் மீறி உலககோப்பையை அடிப்பது ஆகப்பெரிய சாதனையாக இருக்கும். அது இரு கோப்பைகளை அடிப்பதற்குச் சமம். அவருடன் இறுதிப் போட்டியில் தோற்பது வெல்வதற்குச் சமம். இதை நினைத்து இந்திய அணி ஆறுதல் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...