முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுதுவது பற்றின குறிப்புகள் - 9


எழுதும் கலையும் (உத்தி) படைக்கும் கலையும் (அகத்தூண்டுதல்) வேறுவேறு. எழுதும் கலை புறவயமானது. புறவயமான உத்தி எந்தளவுக்கு நமக்கு உதவும்? நேற்று என் நாவலில் வேலை செய்து முடித்துவிட்டுப் படுக்கையில் இக்கேள்வி எனக்குள் எழுந்தது.  இன்று காலையிலும் இது என்னை அலைகழிக்கிறது. உத்திக்கும் படைப்பூக்கத்துக்குமான எல்லைக் கோட்டை எங்கு தீர்மானிக்கிறோம்? ஒருவேளை உத்தியும் ஒருவித படைப்பாக்கச் செயல்தானோ? நாம்தான் தேவையில்லாமல் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துப் பாவிக்கிறோமா? இதைக் குறித்த என் சிந்தனைகள் கீழ்வருமாறு: 


நான் ஒரு நாவலில் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது எனக்குள் இருந்து நினைவுகள், உணர்வுகள், நுண்தகவல்கள் புறப்பட்டு வருகின்றன. என் கற்பனை இவற்றை இணைத்து பூரணமான வடிவை அளிக்கிறது. என் தன்னிலை இச்செயலைச் செலுத்துகிறது. இத்தன்னிலை ஒரு எழுத்தாளராக என் தன்னிலை. இத்தன்னிலையும் அன்றாட உலகில் செயல்படும் தன்னிலையும் வேறுவேறானவை. எழுத்தாளத் தன்னிலையில் ஒருவித தூய்மை உள்ளது. பரிசுத்தமான, களங்கமற்ற நெருப்பைப் போன்ற தன்மை உள்ளது. இதில் நாம் இருக்கையில் எந்த மனச்சாய்வும், கருத்தியலும் நம்மைப் பாதிப்பதில்லை. இதை ஒரு விளையாட்டு மனநிலை என்று கூறலாம். 

இங்கு நான் விளையாட்டு என்று சொல்வது மொழி விளையாட்டோ கற்பனை விளையாட்டோ தீவிரமற்ற, பொறுப்பற்ற மனநிலையோ அல்ல. விளையாட்டை play எனும் ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாக இலக்கிய விமர்சனக் கலைச்சொல் ‘விளையாட்டு’ இருக்கிறது. ஆங்கிலத்தில் இச்சொல்லுக்கு பொருத்தமற்று நடுங்கிக் கொண்டே, அசைந்தபடியே இருப்பது எனப் பொருள் தெரிதாவின் கோட்பாட்டில் உள்ளது. அதாவது ஒரு சொல் அதன் அர்த்தத்தில் சரிவரப் பொருந்தாமல் ஒரு ஆணி தனது மரையில் முறுகாமல் சுற்றிக் கொண்டே இருப்பதைப் போல உள்ளது என இது பொருள்படுகிறது. நாவலிலும் இத்தகைய விளையாட்டு மனநிலை உள்ளது. நான் கதைசொல்லியாகவோ கதையைச் சொல்லும் ஒரு பாத்திரமாகவோ மாறி அவரது கோணத்தில் இருந்து தன் வாழ்க்கையை, நினைவுகளை, அனுபவங்களைப் பார்த்து அதில் இருந்து புறப்பட்டு வரும் சொற்களை அப்படியே எழுதுவது. இங்கு நான் எழுதவில்லை, இன்னொரு பாத்திரமே எழுதுகிறார். (சொல்லப்போனால் இப்படியான புனைவில் நான் என் பெயரை எழுத்தாளராகப் போட்டுக் கொள்வது ஒருவித அநீதிதான்.) 


இதைச் செய்துவிட்டு நான் எழுதியதைக் குறித்து மனதுக்குள் அசைபோடுகிறேன். அப்போது எனக்கு சில வரிகளை நீக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இப்படி யோசித்து தீர்மானம் எடுக்கிற நபர் யார்? அவரே உத்தியைப் பயில்கிறவர். ஆனால் நான் அதைத் திருத்துவதற்காக மீண்டும் அதில் அமரும்போது என்னுடைய படைப்பு மனம் மேலெழுந்து வருகிறது. அது சில முடிவுகளை எடுக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுத்து புதிதாக ஒன்றை உருவாக்குகிறது. இங்கு உத்தி அறிவினாலா படைப்பு மனத்தாலா செயல்படுத்தப்படுகிறது? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. 


எழுதும் கலை குறித்தப் புத்தகங்கள், உரைகள், பயிலரங்குகளும் கூட நேரடியாகப் படைப்பில் குறுக்கிட முடிவதில்லை. அவை பேசும் பல்வேறு அறிவுரைகள், சாத்தியங்கள் அறிவினால் மட்டுமே தீர்மானித்து நடைமுறைப்படுத்த முடியக் கூடியவை அல்ல. சொல்லப்போனால் நாம் எழுதும்போது அறிவு மனமென்றோ படைப்பு மனமென்றோ தனியாகப் பிரிக்க முடியாத ஒரு தன்னிலை / அகக்குரல் தோன்றுகிறது. அக்குரல் எங்கிருந்து தோன்றுகிறது? அது எது? 


தெரியவில்லை.



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...