Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாசிக்காதவர்கள் எதை இழக்கிறார்கள்?


 

நாம் வாசித்துத் தெரிந்துகொள்கிற ஒன்றை ஏன் செய்யறிவைக் கொண்டு சுருக்கிப் படித்தோ காணொளியாகப் பார்த்துத் தெரிந்துகொண்டால் என்ன, அல்லது அதை ஒரு உரையாகக் கேட்டால் போதாதா எனும் கேள்வி இன்று அதிகம் வாசிக்காதவர்களிடம் உள்ளது. அது ஒரு சல்ஜாப்புதான் - வாசிப்பினால் என்ன பயன் என்பதே அடிப்படையான கேள்வி. வாசிப்பு வெறும் தகவலைத் தெரிந்து கொள்ளத்தான் என்றால் இன்று வாசிப்பே அவசியம் இல்லை. வாசிப்பு ரசனைக்காகத்தான் என்றால் இன்று வேறு ஊடகங்கள் வந்துவிட்டன; குறிப்பாக திறன்பேசிகள் பரவலாகிவிட்ட பின்னர் யுடியூபில் கதை கேட்பது, படம் பார்ப்பது, சமூகவலைதளங்களில் ரீல்கள் பார்ப்பது, மொபைல் விளையாட்டு என ரசனைக்கும் பொழுதுபோக்குக்கும் காட்சிப் பனுல்களே அதிகம் பயன்படுகின்றன. ஒருவர் ஒரு கதையைப் படிப்பதைவிட தரமான ஒரு படத்தைப் பார்ப்பதோ தகவல் செறிவான ஆவணத் தொகுப்பைப் பார்ப்பதோ பயனுள்ளதுதானே, அல்லது அதற்கு இது சமமானதுதானே என நினைக்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல - இங்குதான் அவர் முக்கியமான ஒரு வேறுபாட்டைக் காணத் தவறுகிறார். அதைப் பற்றியே இங்கு பேசப் போகிறேன்.
நீங்கள் ஒன்றைப் படிக்கையில் (அது இந்தக் குறிப்பாகக் கூட இருக்கலாம்) வெறுமனே தகவல்களை, கருத்துக்களை உள்வாங்குவதில்லை. நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, ஆற்றலைச் செலுத்தி கருத்துக்களை, உணர்வுகளைத் தொகுத்தபடியே படிக்கிறீர்கள். எழுத்தாளரின் கருத்துடன், பார்வையுடன் சம்வாதம் செய்கிறீர்கள். மறுக்கிறீர்கள், ஏற்கிறீர்கள், அல்லது நிபந்தனைக்குட்பட்டு இரண்டையும் செய்கிறீர்கள்; எழுத்தில் ஒரு அனுபவத்தை அல்லது உணர்வைப் பற்றிப் படிக்கையில் அதை உங்கள் கற்பனையால் பெருக்குகிறீர்கள். அதை உங்களுடையதாக்கி மற்றொருவருடையதாகவும் தக்க வைத்தே அதனுடன் உறவாடுகிறீர்கள். ஒரு கூட்டைச் செப்பனிடும் பறவை கூட்டுக்குள்ளும் வெளியேவுமாகப் பறந்து காற்றில் மிதந்தபடி பணி செயவதைப் போல நீங்கள் படிக்கிறீர்கள் (இந்த உவமையைக் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கற்பனைப் பண்ணுவார்கள்.) ஆனால் காட்சி ஊடகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை - ஒரு கருத்தோ அல்லது உணர்வோ உங்கள் மீது திணிக்கப்படுகிறது; சிந்தனையோ பார்வையோ உங்கள் முன்வைக்கப்படும்போது உங்களுக்கு அதைக் குறித்துச் சிந்திக்கும், பரிசீலிக்கும் அவகாசம் அளிக்கப்படுவதில்லை; காட்சிகளும் இசையும் ஒலிகளும் உங்களை வேகமாகக் கடந்தபடியே உள்ளன. நீங்கள் அவற்றை ஒரு வெற்று மனத்துடன் பின் தொடர்ந்தாலே அக்காணொளியை ஏற்கவும் ரசிக்கவும் முடியும். அல்லது நீங்கள் ரிமோட்டைக் கொண்டு காட்சிகளை நிறுத்தி நிறுத்திப் பார்த்து யோசித்து உரையாடிபடிப் ‘பார்க்க’ வேண்டும், ஒரு ஊடக / சினிமா வகுப்பில் மாணவர்கள் செய்வதைப் போல. ஆனால் அப்போது அதை ரசிக்கவோ சரளமாக உள்வாங்கவோ முடியாது. ஏனென்றால் காட்சி ஊடகம் வெளிமுகமானது. எழுத்து ஊடகம் உள்முகமானது. காட்சி ஊடகம் சர்வாதிகாரத்தன்மை கொண்டது (என்னதான் ஜனநாயகபூர்மானது, திரள்தன்மை கொண்டது என்று கூறப்பட்டாலும்), எழுத்து ஊடகம் ஜனநாயகபூர்வமானது, உங்கள் பங்கேற்பைக் கோருவது. வாசிக்கும்போது நீங்கள் உள்நபராக இருந்து எழுத்தாளருக்கு ஓரளவுக்கு ஈடாக அப்பனுவலை வளர்த்தெடுக்கிறீர்கள். காட்சி ஊடகத்தில் நீங்கள் ஒரு ‘வெளியாள்’ - தரப்படுவதை நுகரக் கூடியவர். அங்கு ஒரு கிளியைப் பார்க்கையில் அது இன்ன மாதிரி கிளி என்று துல்லியமாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் பார்த்த கிளியாகக் கற்பனை செய்ய முடியாது. அங்கு நீங்கள் கருத்துக்களைத் தொகுத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. நீங்கள் என்ன முடிவுக்கு வர வேண்டும் என்பதை காட்சி ஊடகம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும். அதைப் பார்த்து முடித்தபின்னர் நீங்கள் அதை எதிர்த்தோ மறுத்தோ பேசலாம், ஆனால் அதைப் ‘பார்க்கையில்’ இயலாது.
இதன் விளைவுகள் என்ன?
எழுத்து ஊடகம் உங்கள் தர்க்கத் திறனை, தகவல்களை, கருத்துக்களைத் தொகுத்து வடிவமைக்கும் திறனை, கற்பனை செய்யும் திறனை வளர்க்கிறது.
அது உங்களைச் ‘சமமாக’ பாவிப்பதால் உங்கள் தன்னம்பிக்கை வளர்கிறது.
அது உங்களைத் திரளாக அல்லாமல் தனிமனிதராகப் பாவிப்பதால் உங்கள் சுயமரியாதை மேம்படுகிறது. அது உங்கள் கவனத்தை வளர்க்கிறது.
கற்பனைத் திறன் உங்களைக் கருணை மிக்கவராக்குகிறது. மற்றமையைப் புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் கற்றுத் தருகிறது. வாசிப்புக் குறையக் குறைய எதேச்சதிகாரம் வளர்வது இதனால்தான்.
இத்திறன்கள் உங்களுக்குப் பிறரிடம் உங்கள் மனத்தில் எழும் உணர்வுகளை, கருத்துக்களைத் தொகுத்து துல்லியமாகச் சொல்லவும், அவர்களை உங்கள் பார்வையை ஏற்க வைக்கவும் கற்றுத் தருகின்றன.
கற்பனைத் திறன், தர்க்க அறிவு, தனிமனித இயல்பு உங்களைத் தன்னம்பிக்கையும், ஜனநாயகப் பண்பும் கொண்டராக்குகிறது. நல்ல பிரஜையாக மாற்றுகிறது. சினிமா, டிவி உள்ளிட்ட காட்சி ஊடகம் இதற்கு நேரெதிராகச் செயல்படுகிறது - உங்களைச் சிந்திக்கவோ கற்பனைச் செய்யவோ இயலாதவராக்குகிறது; காட்டப்படுபவற்றை, சொல்லப்படுபவற்றை ஆராயாமல் ஏற்கிறவராக்குகிறது. நினைத்ததைச் சொல்லில் வடிக்கும் திறனற்றவராக்குகிறது. சுருக்கமாக மூளையில்லாத அடிமையாக்குகிறது. இதனால்தான் ஒரு வணிக நாவலைப் படிக்கிறவர் கூட வணிக சினிமா, டிவி தொடர் பார்க்கிறவரை விட அறிவும் கற்பனையும் மொழித்திறனும் மிக்கவராக இருக்கிறார்.
இதனால்தான் காட்சி ஊடகத்தின் பெருக்கத்திற்குப் பிறகு தோன்றிய மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து, அலசி ஆராய்ந்து அதை மொழியில் வெளிப்படுத்தும் திறனற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். நீங்கள் இத்தகைய மாணவர்கள் எதையும் சில வினாடிகளுக்கு மேல் கவனிக்கும் திறனற்றவர்களாக இருப்பதை, தம் கருத்துக்களைத் துல்லியமாக வெளிப்படுத்தத் தெரியாதவர்களாக இருப்பதை, சிக்கலான கருத்தோட்டங்களில் ஈடுபட முடியாதவர்களாக உள்ளதைக் காணலாம். கல்வித்துறையில் இது மிகப்பெரிய நெருக்கடியாகப் பேசப்படுகிறது. யோசனைத் திறனேயற்ற ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. வளர்ந்தவர்களிடம் கூட இப்பிரச்சினை அதிகமாகி வருவதைப் பார்க்கிறோம். அவர்களைத் தொந்தரவு செய்யும் எதைக் குறிப்பிட்டாலும் கோபம் வருகிறது, ஆனால் பகுத்தறிந்து எதிர்வினையாற்றுவதில்லை - இதுதான் காட்சி ஊடகத்தின் பயிற்சி. அது மனிதர்களை வயதில் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் எளிய உணர்ச்சிகளால் நடத்தப்படுகிற சிறு குழந்தைகளாகி விடுகிறார்கள். இத்தகையோர் ஒரு மந்தை மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இவர்களை மிகப்பெரிய அழிவு சக்தியாக மாற்றவும், கட்டுப்படுத்திச் சுரண்டவும் முடியும்.
இதனால்தான் பாஸிஸ்டுகள் காட்சி ஊடகத்தின் பெரும் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் காட்சி ஊடகத்தின் - சினிமா, சமூகவலைதளம் - எழுச்சிக் காலத்தில் பாசிசம் உச்சத்தில் இருக்கிறது. இக்காலம் வாசிப்பை ஒழிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்கிறது. ஜனநாயகத்துக்கு அவசியம் வாக்கு மட்டுமல்ல புத்தகமும்தான். 'பார்க்கிற', 'கேட்கிற' மக்களைவிட படிக்கிற மக்களையே எதேச்சதிகாரம் அஞ்சுகிறது (இந்தப் பின்னணியில் வால்டர் பெஞ்சமின் எழுதிய “The Work of Art in the Age of Mechanical Reproducibility” எனும் கட்டுரையும் டோனி மோரிஸனின் 1995 சார்டர் டே உரையும் வாசிக்க வேண்டியவை).
வாசிக்காமல் இருப்பது ஒரு தனிமனிதனாகவும், சமூக அங்கத்தினராகவும், அரசியல் உயிரியாகவும் நம்மைச் சீரழிக்கிறது. வாசிப்பு நம்மை மேம்படுத்தி உண்மையையும் அரசியல் முகமையையும் பெற்றுத் தருகிறது.
இதனால்தான் நாம் டிவி பார்க்கிற, சினிமா பார்க்கிற, உரை கேட்கிற, சமூகவலைதளமாடுகிற நேரத்தைக் குறைத்து புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்ட வேண்டும் என்கிறேன். அதுவரை வெறும் ‘எந்திரமாக’, அடிமையாக இருந்த நாம் மனிதராக மாறுவதை அப்போது உணர முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...