Skip to main content

புக்காவஸ்கியின் ‘பல்ப்’

 


‘பல்ப்’ என்றால் வணிகக் குப்பையாக உள்ள புனைவு. அதாவது வணிகப் புனைவு. ராஜேஷ் குமார் ஆயிரம் நாவல்களை எழுதியிருக்கிறார் என்று கேள்விப்படுகிறோம். ஆனால் அவை பார்முலாக் கதைகள், நாவல்கள் அல்ல என்று அவரே சொல்வார். அவற்றுக்குக் கலைப்படைப்பாகவோ கதையாகவோ மதிப்பில்லை. அவை எழுதப்பட்டபோது கூட வாசகர்களுடைய கற்பனையை வளர்க்கவோ அவர்களைச் சிந்திக்க வைக்கவோ தம் ஆன்மாவை ஆழமாக உணர வைக்கவோ இல்லை. அப்படியெல்லாம் சொன்னால் ராஜேஷ் குமாரே அதிர்ந்து விடுவார். இப்படியான லட்சக்கணக்கான நாவல்கள் உலகில் எழுதப்பட்டுள்ளன. போரில் காலாட்படைகள் மடிவதைப் போல அவை மடிந்துவிட்டன. பின்நவீனத்துவப் புனைவு இந்த வடிவம் தரும் பார்முலாத்தனமான சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறது. அதாவது, வாசகர்கள் இக்கதை வடிவத்தைக் கையில் எடுக்கும்போதே சற்று லகுவான, ஜாலியான மனநிலையில்தான் இருப்பர். ஆகையால் அவர்களை கண்ணைக் கட்டிக் கூட்டிச் சென்று ஒரு விளையாட்டை நிகழ்த்துவது சாத்தியமாகும். அவர்கள் இது நிஜக்கதை மாந்தர் என நினைக்கும்போது இல்லை இது ஒரு கற்பனை எனக் கூற முடியும்; அவர்கள் இது கதையின் திருப்புமுனை என நம்பும்போது அதை ஒரு கவித்துவ தருணமாக்க முடியும். இவ்வகை எழுத்தை மீ-வணிகப் புனைவு (மெட்டா பல்ப்) என்கிறார்கள். அதாவது பல்ப்பின் வடிவத்தைக் கொண்டே அதை மீறிச் செல்வது - எதார்த்தமும் அல்லாத பல்ப்பும் அல்லாத ஒரு இடத்தைச் சென்றடைவது. புக்காவஸ்கியின் ‘பல்ப்’ அத்தகைய ஒரு அபாரமான நாவல்.
நாவலை எழுதுவது மட்டுமல்ல, அதை வாசிப்பதும் கூட ஒரு கலைச் செயல்பாடுதான். அதாவது வாசகரின் கற்பனை, புத்திசாலித்தனம், விளையாட்டுப் புத்தி, யோசனை எல்லாமே நாவல் வாசிப்பின்போது செயல்பட்டாலே நாவலை அது திறக்கும். அப்போது மகத்தான அகத்திறப்பு வாய்க்கும். எனக்கு அத்தகைய அனுபவம் இந்நாவலின் கடைசி அத்தியாயத்தைப் படிக்கையில் கிடைத்தது. ஆனால் இந்நாவலைப் பற்றி வாசகர்களின் பொதுவான கருத்துக்களைப் பாருங்கள் - எதோ பொறுப்பில்லாமல் எழுதப்பட்டது, புக்காவஸ்கியின் மரணம் குறித்தச் சிந்தனைக்காக, அவரது வாழ்க்கையுடன் உள்ள அதன் தொடர்புக்காகப் படிக்கலாம் என்கிறார்கள். நியுயார்க்கர் விமர்சனமே அப்படித்தான் உள்ளது. நாவல் நம்மை நேரடியாக மகிழ்விக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால் வரும் ஏமாற்றம் இது. நாவல் ஒரு நடனம். நாம் அதன் கரங்களைப் பற்றிக் கொண்டு கூடவே ஆட வேண்டும். அதனால் நாம் கோமாளியாவோம் என்று அஞ்சக் கூடாது. தொடர்ந்து அதை மதிப்பிட்டுக் கொண்டே இருக்கலாகாது. எழுத்தாளரின் கற்பனைக்குப் பக்கத்தில் போய் அங்கிருந்து கதையை உணரவும் அர்த்தப்படுத்தவும் தெரிய வேண்டும். சில நேரங்களில் எழுத்தாளரைக் கடந்து செல்லவும் முடிய வேண்டும். அதனால்தான் வாசிப்பு சினிமா பார்ப்பது அல்ல என்று வலியுறுத்த வேண்டியுள்ளது. புக்காவஸ்கியின் இந்நாவலை தமிழ் வாசகர்கள் நேரடியாகவோ நாளை மொழியாக்கத்திலோ படித்தால் இந்த அவலம் நேரக் கூடும் எனத் தோன்றுவதாலே இவ்வளவு விளக்கங்கள்.
இப்போது நாவலின் வடிவத்துக்கும் கதைக்கும் வருகிறேன். இது புக்காவஸ்கியின் கடைசி நாவல். அவரது மரணத்துக்கு முன்பு எழுதப்பட்டதால் அவரது மரணம் குறித்த சாசனம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு வாசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். வடிவத்தின்படி இது ஒரு துப்பறியும் நாவல். பெலினோ எனும் வயதான தனியார் துப்பறிவாளர். சோம்பேறி. சாதாரணச் சோம்பேறி அல்ல - உழைப்பு என்பது அடிமைகளின் கொள்கை என நம்புகிற புக்காவஸ்கியச் சோம்பேறி. நல்ல வாழ்க்கை என்பது நான்கைந்து பெண்களுடன் நேரத்தைச் செலழிப்பது, குடிப்பது, சூதாடுவது என நினைப்பது - அதாவது செல்வந்தர்களின் வாழ்க்கை வாழ்வது. மத்திய வர்க்கத்தினர் கடும் ஒழுக்கவாதம், பிடிவாதமான உழைப்பு, சாகும்வரை இன்பமின்றி இருப்பது என வறட்டுத்தனமாக வாழக்கூடியவர்கள். இன்னும் சொல்லப்போனால் மத்திய வர்க்கத்தினர் கல்யாணம் பண்ணின சாமியார்கள். புக்காவஸ்கியின் நாயகர்கள் இதற்கு நேரெதிராக வாழ முயன்று அதனாலே பணமோ அங்கீகாரமோ இன்றி துன்பப்படுபவர்கள். அவரது கதைகளின் அடிநாதம் இதுதான். இன்னொரு முக்கியமான கருப்பொருள் வாழ்க்கை அடிப்படையில் அபத்தமானது, அதில் ஒன்றையுமே அடைய முனையாமல் மகிழ்ந்திருப்பதே நல்லது என்பது. இருத்தலியத்தையும் லோகாயதச் சிந்தனையையும் கலந்த பார்வை. பெலினோ இப்படியான ஒருவர். இப்படி இருந்திருந்தே வயதாகி நொடிந்து போனவர். அவருக்கு மரண தேவதையிடம் (Lady Death) இருந்து ஒரு வேலை வருகிறது. ஆமாம், மரண தேவதையேதான். இந்த இடத்தில்தான் இதன் மீ-புனைவுத்தன்மை துவங்குகிறது. இது எதார்த்தக் கதையல்ல. அதற்காக இது மாந்திரிக எதார்த்தமும் அல்ல, மிகுகற்பனையும் அல்ல. கவிதையின் தர்க்கத்தை எதார்த்தக் கதைக்குள் கொண்டு வருவது. மரண தேவதை செலின் எனப்படும் ஒரு இறந்து போன பிரெஞ்சு படைப்பாளியைப் பற்றிச் சொல்லி அவர் இறந்துவிட்டாரா என்று நிச்சயப்படுத்த வேண்டும் எனக் கேட்கிறாள். செலின் புக்காவஸ்கிக்குப் பிடித்த நாவலாசிரியர். அவர்தான் செத்துவிட்டாரே என பெலினோ கேட்க தேவதை இல்லை, அவர் உயிருடன் உள்ளாரோ எனக் குழப்பமாக இருக்கிறது என்கிறாள். இது சாஸ்வதம் குறித்த விசாரணையாகிறது. அதாவது தத்துவ, இலக்கிய விசாரணை அல்ல. ஒருவித பகடி. இந்த செலின் நிஜத்தில் ஒரு மருத்துவர், எழுத்தாளர். ஆனால் இப்போது அவர் ஒரு பணக்காரரின் மனைவிக்கு காப்பீடு விற்கிறார், புத்தகக் கடை ஒன்றுக்கு வந்து எதாவது நூல்களை எடுத்துப் பார்த்து முணுமுணுக்கிறார். அவரைக் கடைக்காரர் துரத்திக் கொண்டே இருக்கிறார். அவரைத் துரத்திப் போவதிலேயே பெலினோவின் பாதி நேரம் கழிகிறது. கடைசியில் ஒருவழியாக செலின் இறந்து போக மரண தேவதை நிம்மதியாகிறாள். இதில் என்ன வேடிக்கையென்றால் தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை செவ்வனே முடிக்க பெலினோ எந்த தெளிவான முயற்சியும் எடுப்பதில்லை, அவரிடம் எப்பிரச்சினைக்கும் எந்த தீர்வும் இல்லை. அவர் பாட்டுக்கு பாருக்குப் போய் சரக்கடிக்கிறார், சந்தேகத்துக்குரியவர்களைச் சிறிது தூரம் துரத்திச் செல்கிறார். அதற்கு மேல் வேலை செய்வதில்லை.
பெரும்பாலான நேரங்களில் இம்முயற்சிகள் மோசமான விளைவுகளையே தருகின்றன. செலின் விசயத்தில் பெலினோவின் இந்த வெட்டியான முயற்சிகளின் விளைவாக காலம் கடப்பதால் மரண தேவதை அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதாவது காலமான ஒரு மகத்தான படைப்பாளியின் சாஸ்வத வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் பெலினோவின் முட்டாள்தனமான முயற்சிகள் அவருக்குக் கொஞ்சம் பணத்தையும் மரணத்தறுவாயில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தருகின்றன.
இதையடுத்து அவருக்கு வெவ்வேறு வழக்குகள் வருகின்றன. வெற்றுகிரக மனிதர்கள் அவரிடம் வருகிறார்கள். இந்த உணர்ச்சிவசப்படாத துப்பறிவாளர் (hard-boiled detective) பிம்பம் இன்றுவரை துப்பறியும் நாவல்களிலும் சினிமாக்களிலும் பிரசித்தம் (ரெய்மண்ட் சாண்ட்லரில் இருந்து, நார்வேஜிய துப்பறியும் நாவல்களில் இருந்து “வேட்டைடையாடு விளையாடு” கமல் வரைக்கும்). எதற்கும் கலங்காமல் முயற்சி பண்ணிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய உறுதியில் உழைப்பும் கடைசியில் ரொம்பக் கசப்பான இருண்மையான சூழலிலும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். இந்தப் பிம்பத்தையும் புக்காவஸ்கி கலாய்க்கிறார்.
நாவலில் சில எதிர்பாராத காட்சிகள் உள்ளன - அவை என்னை விழுந்துவிழுந்து சிரிக்க வைத்தன. ஆனால் மிகச்சிறந்த கதைத்திட்டப் பகுதி சிவப்புச் சிட்டுக் குருவியைக் கண்டுபிடிக்க ஜான் பார்ட்டன் என்பவர் பெலினோவை நியமிக்கிறார் (இது Black Sparrow எனப்படும் புக்காவஸ்கியை அதிகமாகப் பிரசுரித்த பதிப்பகத்தின் மீதான பகடிஎன்கிறார்கள் விமர்சகர்கள். ). சிவப்புச் சிட்டுக் குருவியென்றால் என்றால் குருவியா, மனிதரா, அதை எதற்குக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதெல்லாம் நாவலின் துவக்கத்தில் தெளிவாக இல்லை. பார்ட்டன் தன் நிறுவனத்துக்கான இலச்சினையை அமைப்பதற்கு சிவப்புச் சிட்டுக் குருவி இப்போதும் உள்ளதா என பெலினோ கண்டறிந்துச் சொல்ல வேண்டும் என்று மட்டும் சொல்கிறார். அதை பெலினோ துரத்திப் போவதுதான் இந்நாவலின் சிறந்த பகுதி. இந்த சிட்டுக் குருவியைப் பெற்றுத் தருகிறேன், அதற்கான வழிகாட்டுகிறேன் என்று சிலர் அவரை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள். அப்படியான வட்டிக்குப் பணம் கொடுத்து ஏமாற்றும் ரௌடி கும்பல் ஒன்று அவருக்கு வண்ணமடித்த சாதாரண சிட்டுக் குருவியைத் தந்து ஏமாற்றுகிறார்கள். அதனிடத்து பெலினோ கருணை கொண்டு அதை விட்டுக் கொடுக்க மறுக்கிறார். எனக்கு இந்த சிட்டுக் குருவி புக்காவஸ்கியின் “நீலப் பறவை” எனும் புகழ்பெற்ற கவிதையை நினைவுபடுத்தியது. அதில் இப்பறவை கலைமனத்தின் உருவகம். இந்தக் கோணத்தில் வாசிப்பது இந்நாவலைப் புரிந்துகொள்ள அவசியம்.
ஆனால் பெலினோ வட்டியைச் செலுத்தவில்லை என்று அவர்கள் அவரைக் கடைசியில் அழைத்துப் போய் சுட்டுக் கொல்கிறார்கள். அவரது வயிற்றில் குண்டு பாய்ந்து குருதி பிரவாகமாக பெருகுகிறது. அப்போது அந்த குருதிச் சித்திரம் அவரது கற்பனையில் சிவப்புச் சிட்டுக் குருவியாகிறது. மரண தேவதையும் தோன்றி அதுதான் அவரது முடிவு, அவர் இவ்வாறுதான் அந்த இடத்துக்கு நகர்த்தப்பட்டார் என்கிறாள். அந்தக் காட்சியைப் படித்தபோது நான் ‘வாவ்’ என்று அசந்து போனேன். சற்றும் எதிர்பாராத திருப்பம் அது. கிட்டத்தட்ட கவிதைகளில் மட்டுமே நாம் காணும் ஒரு பாய்ச்சல். சட்டென ஒரு பொருளை உருவகமாக்கி நம்மை அசரடிக்கும் உத்தி. இதை ஒருபோதும் எதார்த்தக் கதையில் பண்ண முடியாது. இக்கதையை அவர் கவிதையை நோக்கி நகர்த்துகிறார் என நாவலின் எந்த இடத்திலும் கணிக்க முடியாது. ஆனால் அது நிகழ்ந்ததும் மொத்த நாவலுமே ஒரு உருவகக் கதைதான் எனத் தோன்றியது.
இந்த நாவலின் கரு ஒரு படைப்பாளி இந்த இருண்மையான உலகில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள (அதாவது தன் கலையுணர்வை, ஆன்மாவைக் காப்பாற்ற) என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வினவுகிறது. எதைச் செய்தாலும் அவன் தன் உயிரைக் கொடுப்பதே தன் கலையை அடைவதாகிறது. அல்லது கலையின் இலக்கை அடைவதே மரணமாகவும் உள்ளது. அதாவது மரணம் என்பது சாவதல்ல, அது ஒரு கண்டடைதல். அது ஒரு மகத்தான இன்மை. அதை நோக்கிச் செல்ல எந்த தெளிவான தர்க்கரீதியான அர்த்தபூர்வமான வழிகளும் உத்திகளும் ஒரு படைப்பாளிக்கு இல்லை. எல்லாரும் அவனைத் திசைதிருப்புகிறார்கள், ஏமாற்றுகிறார்கள், ஆனால் தற்செயலாக அவன் தன் கலையின் மார்க்கங்களைக் கண்டுபிடித்தபடியே இருக்கிறான். எவ்வளவு அழகான நாவல் இது, கிட்டத்தட்ட ஒரு கவிதை.
‘பல்ப்’தான் புக்காவஸ்கியின் சிறந்த நாவல் எனத் தோன்றுகிறது. “தபால் நிலையத்தை” விட சிறந்த படைப்பு. ஒரு நாவலை எப்படி மகத்தான தளத்திற்கு நகர்த்துவது என்பதற்கான பாடமும் இதில் உள்ளது. ஆனால் அதைச் செயல்படுத்துவது மிகவும் கடினம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...