விவாகரத்து, ஜீவனாம்சம் என வந்துவிட்டால் சில பெண்ணியவாதிகளும், போலி முற்போக்காளர்களும் சொல்லும் வாதம் "அப்பெண் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதால்தான் உங்களால் இத்தனைக் காலமும் வேலை பார்த்துச் சம்பாதிக்க முடிந்தது, அதனால் உன் சம்பளத்தில், சேமிப்பில் பாதி அவளுக்கு உரியதே." இது நம் காலத்தின் மிகப்பெரிய தொன்மம்.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
சமையலும் வீட்டுப் பணிகளும்:
இன்று நகரங்களில் வாழும் பெரும்பாலான மத்திய வர்க்க, மேல்மத்திய வர்க்க, மேல்வர்க்க மக்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை. ஓட்டல் உணவுதான். ஆணும் பெண்ணும் வேலை பார்க்கும்பட்சத்தில் அவர்கள் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் கூடத்தான் வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். இதற்கும் அப்பால் உள்ள வீட்டு வேலைகளை அவர்கள் செய்வதில் நியாயம் உண்டு - வீட்டுக்கான வாடகை, கார் இ.எம்.ஐ, வீட்டுச் செலவுகள் அத்தனைக்கும் கணவன் தனியாக உழைக்கிறான். இந்த சௌகர்யங்களை அனுபவிக்கும் பெண் தன் பங்குக்கு சில வேலைகளைச் செய்வது எப்படிக் குற்றமாகும்? தான் வேலைக்குப் போக மாட்டேன், வீட்டில் சும்மா எந்த வேலையும் செய்யாமல் கணவனாக இருக்கிறேன் என்றால் எந்த மனைவியாவது ஒப்புக் கொள்வாரா? ஆக, இது ஒரு ஒப்பந்தம் - இன்றுள்ள பெரும்பாலான பெண்களுக்குப் படிப்பு உண்டு. இல்லாதவர்கள் படிக்க நிறைய வசதிகள் உள்ளன. அதையும் தாண்டி ஏழைப் பெண்கள் சுயதொழில் செய்ய அரசு நிறைய கடன் தருகிறது. இந்த ஒப்பந்தத்தில் அவர்கள் இருப்பதற்கு எந்தக் கட்டாயமும் இல்லை.
இந்நிலையில் வீட்டைக் கவனிப்பது எப்படி ஒரு திணிக்கப்பட்ட தனி வேலையாகிறது? அதற்கு மறைமுகமான 'ஊதியம்' இல்லையா? உண்டு. மேலும் நான் ஏற்கனவே சொன்னதைப் போல இதை ஒற்றைப் பரிமாணத்திலும் பார்க்க இயலாது. உறவை முறிக்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஏதோ சில அனுகூலங்களுக்காக ஒட்டி இருப்பவர்கள், வீட்டு வேலைக்கு ஆள் வைக்க வசதி இல்லாதவர்கள் எனப் பலரும் இருப்பார்கள். இது ஒரு நடைமுறைச் சிக்கல் - இது ஒரு ஆணாதிக்கப் பிரச்சினை அல்ல. ஏனென்றால் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருப்பது ஆண் மட்டுமல்லன். யாரும் யாரும் யாரையும் ஏமாற்றி, வற்புறுத்தி வீட்டுப் பணிகளைச் செய்ய வைப்பதில்லை. எந்த வீட்டு வேலையிலும் சில பெண்கள் ஈடுபடாமல் சோம்பேறியாக இருந்து வீட்டை அலங்கோலமாக்கும்போது குடும்பம் அதன்பாட்டுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. இல்லையென்று சொல்ல முடியுமா?
அடுத்து, பெண்கள் செய்யும் இந்த வீட்டு வேலைதான் ஆண் சம்பாதிக்கவும் தொழிலில் முன்னேறவும் உதவுகிறது எனும் வாதத்திற்கு வருவோம் - செக்ஸைத் தாண்டி நடைமுறையில் தன் மனைவியால் இன்றைய ஆணுக்கு என்ன லாபம்? பெரும்பாலான வீடுகளில் மனைவியர் செக்ஸுக்கும் ஒத்துழைப்பதில்லை என்றே ஆண்கள் இன்று புலம்புகிறார்கள். அவர்களுக்குச் சமைக்கத் தெரியவில்லை, சமைக்கவும் வரவில்லை, வீட்டையும் சரிவரப் பார்த்துக் கொள்ளவில்லை, அதற்கும் இரண்டுக்கு மேற்பட்ட வேலையாட்கள் தேவைப்படுகிறார்கள் எனில் அவள் இல்லாமலே அவனால் வேலையாட்கள் வைத்து இப்பணிகளைச் செய்ய முடியாதா? மாதம் 25,000 கொடுத்து இத்தகைய விடுதிகளில் பெங்களூரில் ஆண்கள் வசதியாக வாழ்வதைக் காண்கிறேன். அவர்கள் உண்மையில் செக்ஸைத் தவிர எதையும் மிஸ் பண்ணுவதில்லை. அதிலும் திருமண வாழ்க்கையில் உத்தரவாதம் இல்லையெனும் போது அவரக்ள் எதையுமே மிஸ் பண்ணுவதில்லை. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் - குடும்பம் என்பது இன்று பெருமளவு மாறிவிட்டது; அது இன்று ஒரு அறைகலன்கள் விற்கும் கடையைப் போல உள்ளது. அங்கு சோபாவும் படுக்கையும், அவற்றைப் பார்க்க வந்துள்ள ஆண்களும் பெண்களும் இருப்பதால் அது ஒரு வீடாகி விடாது. அது குடும்பம் எனத் தோன்றும் ஒரு தோற்ற அமைவு. குடும்பமும் இன்று ஒரு 'செட் அப்'தான். பெரும்பாலான ஆண்களுக்கு குடும்பம் நிம்மதியைத் தருவதில்லை என்பதால் அவர்களுடைய வேலையிலோ தொழிலிலோ முன்னேற விடாமல் அது தடுக்கவே செய்கிறது. இதுவே எதார்த்தம் - எந்த முட்டாளோ ஆண்களின் முன்னேற்றத்திற்குப் பின்னால் இருப்பது பெண் எனச் சொல்லி வைத்து விட்டான் (பெண்களை ஐஸ் வைக்கச் சொன்னது). அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். நிஜத்தில் ஆண்களின் முன்னேற்றத்திற்கு தடையே மனைவியர்தாம். அவர்கள் இல்லாவிட்டால் இவரக்ள் இன்னும் நிம்மதியாக சிறப்பாக முன்னேறி இருப்பார்கள்.
அடுத்த தடை குழந்தைகள். குழந்தைகள் ஒரு இலவசக் கடனாகத்தான் நம் வாழ்க்கைக்குள் வருகிறார்கள். அதாவது கடனைத் தராமல் தவணையை மட்டும் வசூலுக்கும் முறைக்குப் பெயர்தான் குழந்தை வளர்ப்பு. அது நம் காலத்தின் மிகப்பெரிய மோசடியாகும். 'குழந்தையைப் பெற்று வளர்க்கிறாள் பெண்' என நாம் மகத்துவப்படுத்துகிறோம். ஆனால் அவர்களை வளர்த்து படிக்க வைப்பதற்காக ஆண் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வீணடிக்கிறான். அதற்கு எந்தவித பற்றுறுதியையும் இன்றைய குழந்தைகள் காட்டுவதில்லை. அவர்கள் தம் தந்தையரை வெறுக்கிறார்கள். பல ஆயிரம் பதின்வயதினருடன் உரையாடியவன் எனும் முறையில் இதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். இந்தப் பிள்ளைகள் வளர்ந்த பின்னர் தம் பெற்றோரைப் பார்த்துக் கொள்வார்களா என்றால் மரபார்ந்த முறையில் சிறந்த பாசத்துடன் வளரும் பிள்ளைகளைத் தவிர பெரும்பாலானோர் தம் பெற்றோரை கவனிக்க மாட்டார்கள். முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. இதனாலே நான் ஆண்களைப் பொறுத்த மட்டில் 'இலவசக் கடன்' என்று சொல்கிறேன். ஆனால் பெண்களுக்குப் பிள்ளைகள் என்றுமே நேரடி முதலீடு இல்லாத சொத்துதான். அவர்கள் விவாகரத்தின் போது பேரம் பேச குழந்தைகள் உதவுகிறார்கள். அவர்கள் தம் அன்னையரிடத்தே பாசமாக இருக்கிறார்கள். ஆண் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய பொருளாதார மற்றும் உணர்ச்சிச் சுரண்டல் பிள்ளைகள்தாம்.
ஒரு காலத்தில் குழந்தைகள் நிச்சயமாக 'சொத்துதான்' - அவர்களே அப்பாக்களின் நிலங்களில் ஊதியமின்றி வேலை செய்தார்கள். சொத்தைப் பெருக்கினார்கள். வளர்ந்ததும் புதிய சொத்துக்களை உருவாக்கியும் அப்பாவின் சொத்தைப் பெற்றும் மேலும் பணக்காரர் ஆனார்கள். தம் பிள்ளைகளையும் ஒவ்வாறு இலவச ஊழியர்களாகப் பாவித்தார்கள். இன்றும் இத்தகைய முறையில் குழந்தைகளைப் பயன்படுத்துவோர் வணிகர்கள் மட்டுமே. அவர்களிடலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் ஏதோ ஒருவிதத்தில் தம் பிள்ளைகளால் வியாபாரம் பின்னாளில் வளரும் என்றே முதலீடு செய்கிறார்கள். ஆனால் வேலைக்குப் போகும் ஆண்கள் இவ்விசயத்தில் பெருமளவுக்குச் சுரண்டப்படுகிறார்கள்.
இன்றைய ஆண்களுக்கு இக்குடும்ப அமைப்பினால் கிடைக்கும் ஒரே பயன் ஒரு மேம்போக்கான தற்காலிக அதிகாரம்தான். இதை ஒரு அறைகலன் விற்கும், கார் விற்கும் கடைக்குச் சென்று சுற்றும்போது கிடைக்கும் மனநிறைவுடன், ஒரு காரை வாங்கும் முன்பான பரிசோதனை ஓட்டத்தில் கிடைக்கும் திளைப்புடன் ஒப்பிடலாம்; - அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது "இதெல்லாம் உன்னுடையதுதான், ஆனால் நிபந்தனைக்கு உட்பட்டு. உன் மனைவி நீதிமன்றம் போனால் உன் வீடு, குழந்தைகள், பாதி சம்பளம் உன்னுடையது இல்லை."
"மேலும் நீ ஏமாற்றபடுகிறாய். உனக்கு நல்ல சுவையான உணவு, வாரத்திற்குச் சில முறைகள் செக்ஸ், அன்பான நிறைவான குடும்ப வாழ்க்கை கிடைக்கும் எனச் சொல்லி உன்னை மாட்டைப் போல வேலை செய்ய வைத்து ஏமாற்றுகிறார்கள்."
"இவர்களுக்கு நீ செய்யும் செலவைச் சேர்த்து வைத்தால் நீ உன் முதுமையில் நல்ல சேமிப்புடன் வசதியாக இருக்கலாம். இல்லாவிட்டால் கையேந்த வேண்டும்."
பெரும்பணக்கார வீடுகளில் மேற்சொன்ன பிரச்சினைகள் கூட இல்லை. அங்கு வீட்டை நிர்வகிக்க, வேலைகளைச் செய்ய ஏகப்பட்ட பேர்கள் இருப்பார்கள். அங்கு பெண் என்பதால் நான் ஒடுக்கப்படுகிறேன் என ஒரு மனைவி கோருவது ஒரு மோசடி. அதை டோக்கனிசம் என்பார்கள். நடிகர் விஜய்யின் தொழில் வளர்ச்சியில் அவரது மனைவி அப்படி என்னதான் பங்காற்றியிருக்க முடியும் சொல்லுங்கள் - அவர் படப்பிடிப்பில்தான் பெரும்பாலும் சாப்பிட்டிருப்பார். அவர் தன் நடிப்புக்காகத் தானாகவே தான் உழைத்திருப்பார். அவரது அப்பாவுக்கும் இயக்குநர்களுக்கும் தாம் அவர் உண்மையில் கடன்பட்டிருக்கிறார். அவரது குடும்பம் நிம்மதியாக இருந்ததாலே அவரால் தொடர்ச்சியாக நடிக்க முடிந்தது என்பதும் அபத்தம்தான் - அது எப்படி உங்களுக்குத் தெரியும்? எந்த குடும்பத்திலும் ஆண் இன்று நிம்மதியாக இல்லாதபோது விஜய் மட்டும் நிம்மதியாக இருந்தாரா? குழந்தையைப் பெற்று வளர்த்தது கூட அவரை விட அவரது மனைவிக்கே லாபம். ஏனென்றால் குழந்தைகள் எப்போதுமே அம்மாவிடமே அணுக்கமாக இருப்பார்கள். குழந்தைகள் அம்மாவுக்கு உரிமையானவர்கள் என்றே சட்டமும் சொல்கிறது. இப்போது அவரது சொத்தில் எந்த நேரடிப் பங்களிப்பும் செய்யாத மனைவிக்கு அவர் 30-40% சொத்துக்களைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இது ஒரு வழிப்பறிக் கொள்ளை அல்லவா? இதை எப்படி 'குடும்பத்தைக் காப்பாற்றினார், நடிப்பு வாழ்க்கையையே காப்பாற்றினார்' எனும் சப்பையான லாஜிக்கை வைத்து நீங்கள் நிரூபிக்க முடியும்? குடும்பத்தை நிம்மதியாக வைத்திருப்பது ஒரு வேலை எனில் நிம்மதியின்மை எங்கிருந்து வர முடியும்? குடும்பத்தில் இருந்துதானே. எனில் குடும்பமே இல்லாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் நிம்மதியாகத்தானே இருந்திருக்க முடியும்? இதுவரை எந்த நடிகரின் சுயசரிதையிலாவது மனைவியால் தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்றோ, பல வாய்ப்புகளைப் பெற்றேன், நடிக்கத் துணிச்சல் பெற்றேன் என்றோ படித்திருக்கிறீர்களா? இதுவும் ஒரு கற்பனைதான்.
உண்மையில் சட்டம் இந்த ஒன் டைம் செட்டில்மென்ட் / ஜீவனாம்சத்தை அனுமதிப்பது ஒரு அபத்தமான தர்க்கத்தின் பொருட்டே - பிடிக்காத உறவுக்குள் ஒரு பெண் அவ்வுறவு தரும் பொருளாதார வசதிக்காக நீடிக்கும் அவலம் நேரக் கூடாது, அதற்காக அவர் கணவருடன் இருக்கையில் கிடைக்கும் வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் எனக் குடும்ப நலச் சட்டம் சொல்கிறது. இதன் பொருள் என்ன? ஒரு பெண் அன்புக்காகவோ லட்சியத்துக்காகவோ அல்ல, பணத்துக்காகத்தான் குடும்பத்தில் நீடிக்கிறாள். அப்போது திருமணம் ஒரு வணிக ஒப்பந்தம் என்றே சட்டம் பாவிக்கிறது. வணிக உறவில் ஒன்றைக் கொடுத்தால் தானே இன்னொன்றைக் கேட்க முடியும்? அதை சட்டம் கண்டு கொள்வதில்லை. ஒரு மிக மோசமான மனைவி என்றாலும், அவர் எந்த உழைப்பையும் குடும்ப வாழ்வில் செலுத்தவில்லை என்றாலும் அவள் வசதியாக ஆயுள் முழுக்க வாழும் பணத்தை ஆண் விவாகரத்துக்குப் பின் செலுத்த வேண்டும். சங்கீதாவை எடுத்துக் கொள்வோம். அவர் ஏழை அல்லர். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா சொர்ணலிங்கம் ஈழத்தமிழர். வணிகர். டைம்ஸ் நவ் செய்தியின் படி அவரது சொத்து மதிப்பு 400 கோடி. விஜய்யிடம் இருந்து விவாகரத்துப் பெற்றால் அவர் ஒருவேளை இச்சொத்து மதிப்பை இரட்டிப்பாக்குவார். யோசித்துப் பாருங்கள் - விஜய்யிடம் பணம் வாங்கித்தான் அவர் வாழ வேண்டுமா? இதில் எதாவது லாஜிக் உண்டா? இவரை ஏதோ தெருவில் நின்று கையேந்தும் அபலைப் பெண் எனும் கணக்கில் பல பெண்ணியவாதிகள் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். நம் நாட்டின் அவல நகைச்சுவை மட்டுமே இது. தாம் ஒரு வழிப்பறிக் கொள்ளையை ஆதரிக்கிறோம் என்பதைக் கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
விஜய்யை எத்தனையோ முறை எச்சரித்தும் அவர் திருந்தாததால் விவாகரத்துக் கோருவதாக சங்கீதா சொல்வதில் எதாவது லாஜிக் உள்ளதா? விஜய் என்ன திடீரென 'கெட்டுப்' போய் விட்டாரா? பெண்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தனித்துப் போகலாம் என முடிவெடுப்பார்கள். அப்போது இத்தகைய முடிவுகளை எடுப்பார்கள். அதை அவர்கள் எப்போது செய்தாலும் தவறில்லை. விஜய் ஒரு விவேகானந்தராக இருந்தாலும் கூடச் செய்யலாம். தவறில்லை. சேர்ந்து வாழ்வது இயற்கை நியதி (law of nature)அல்ல. நம் விவாகரத்துச் சட்டம் திருமணம் மீறிய உறவை மட்டுமே ஒரு வலுவான சான்றாக உடனடியாக அங்கீகரிக்கிறது என்பதால் அவர் இப்போது அதை முன்வைக்கிறார். அது இல்லாவிட்டால் ஆண்மை இல்லாதவர் என ஒரு சான்றை வைத்திருக்கக் கூடும். குழந்தைகள் ஏற்கனவே உள்ளதால் அது ஏற்கப்படாது என்பதால் இதை எடுத்திருக்கிறார். விஜய் விவகாரத்தில் மட்டுமல்ல 99% குடும்ப நல நீதிமன்ற வழக்குகளிலும் இதே காரணத்தைத்தான் வைப்பார்கள். இது ஒரு டெம்பிளேட். வக்கீல்கள் எதையும் கேட்காமல் கூட இதைத்தான் எழுதிக் கொடுப்பார்கள். இந்தியாவில் என்றில்லை - உலகம் முழுக்கத்தான். கணவர் குசு விட்டால் அதைக் காட்டி மட்டும் விவாகரத்துக் கேட்கலாம் என்று நீதிமன்றம் நாளைக் கூறினால் உலகம் முழுக்க குசு குற்றச்சாட்டுகள் பெருகி விடும். கணவர் என் சம்மதத்தையும் மீறி செக்ஸை நாடினார் எனச் சொன்னால் உடனடியாக விவாகரத்துக் கொடுப்பார்கள் என்றால் உலகம் முழுக்க மெரைட்டல் ரேப் வழக்குகளாகக் குவியும். பணக்காரப் பெண்களுக்கு, சொந்தமாக உழைத்து வசதியாக வாழ சாத்தியம் உள்ள பெண்களுக்கு செட்டில்மெண்ட் / ஜீவனாம்சம் கிடையாது எனப் புதுச்சட்டம் வந்தால் 80% வழக்குக்ள் காணாமல் போய்விடும். அவை ம்யூச்சுவல் ஆகிவிடும். விவாகரத்தின் பின் எந்த உணர்ச்சிகரமான காரணமும் நிஜத்தில் இல்லை.
இதுவே விஜய் விசயத்திலும் இருக்கும் என நான் என் சொந்த விவகாரத்தை வைத்துச் சொல்லவில்லை. நான் நீதிமன்றத்தில் சந்தித்த நூற்றுக்கானோரிடம் பேசியதையும் உலகம் முழுக்க நடைபெறும் வழக்குககளைப் படித்துமே சொல்கிறேன். இந்த டெம்பிளேட் எங்குமே மாறுவதில்லை. ஏழைப் பெண்களைத் தவிர பிறர் இந்தச் சட்டத்தை வைத்துச் சுரண்டுகிறார்கள். முழுக்க முழுக்கப் பண விவகாரம்தான், ஆனால் அப்பெண் ஒரு உணர்ச்சிகரமான காரணத்தைச் சொன்னதும் அதைப் பிடித்துக் கொண்டு பலர் கொந்தளிப்பதைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ரஹ்மான் விசயத்திலும் கொந்தளித்தீர்கள். என்ன ஆயிற்று? இப்போது கொந்தளிக்கிறவர்கள் கள்ள உறவின் பொருட்டு ஒரு பெண் தன் கணவரைக் கொன்றாலோ, கடுமையான மனவதைக்கு ஆட்படுத்தி கணவரை தற்கொலை செய்ய வைத்தாலோ இப்போது கொந்தளிப்பவர்கள் அமைதியாகப் போய்விடுவார்கள். அவர்கள் அறவுணர்வே அப்போது செயல்படாது.
பின்குறிப்பு: "Sangeetha Sornalingam was born on June 22, 1974, in Madras (now Chennai). A Sri Lankan Tamil by origin, she was raised in the United Kingdom. Her father is a well-known Tamil industrialist originally from Sri Lanka and settled in the UK.
According to a 2025 Filmibeat report, Sangeetha’s reported net worth is approximately Rs 400 crore. However, details about her sources of income remain largely private, as she has maintained a low public profile over the years." - "Thalapathy Vijay vs Sangeetha Sornalingam net worth: A look at TVK chief’s MASSIVE wealth amid infidelity allegations and divorce", Z News
Comments