முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் டி20 உலக்கோப்பை வெற்றி 2026 - சில எண்ணங்கள்





ஒருதலைப்பட்சமாக இப்போட்டி மாறியதற்கு ஆடுதளம் முக்கியமான காரணம். கடந்த 12 ஆண்டுகளாகவே அகமதாபாத் மைதானத்தின் ஆடுதளத்தில் டி20 இன்னிங்ஸின் ம்ட்டையாட்ட சராசரி 165-175தான். கறுப்பு மண்ணால் ஆன ஆடுதளம் சற்று மெத்தனமாக, பவுன்ஸ் குறைவாக இருக்கும். நியுசிலாந்து அதற்காகவே தயாராகி வந்தார்கள். அதனாலே அது ஒரு இறுதிப் போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என நினைத்தேன். இம்மாதிரி கோரிக்கைகள் ஆடுதளத் தயாரிப்பாளரிடமும் சென்றிருக்கும். ஆகையால் அவர் செம்மண்ணும், கறுப்பு மண்ணும் கலந்த ஒரு ஆடுதளத்தைத் தயாரித்தார். அதில் பந்துக்கு ஓரளவுக்கு வேகமும் பவுன்ஸும் இருந்தது. பந்து பழையதானதும் ரொம்பவே நின்று வந்தது. அதாவது ஆரம்பத்தில் செம்மண்ணும், கடைசிப் பகுதியில் கறுப்பு மண்ணும் தத்தம் வேலைகளைச் செய்தன. இந்தியாவின் ஆரம்பத்திலேயே குண்டு மழை பொழியும் ஆட்டபாணி இதற்குத் தோதாக இருந்தது. கறுப்பு மண் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தபோது நம் ஸ்கோர் 15வது ஓவரில் 203ஆக இருந்தது. இதுவே 120ஆக இருந்திருந்தால் நம்மால் 160-170தான் எடுக்க முடிந்திருக்கும். நியுசிலாந்து பெங்களூர் டிராபிக்கில் நகர்ந்து நகர்ந்து பைக் ஓட்டி சிக்னலை வெறித்துப் பார்த்து, பச்சை விளக்கு விழுந்ததும் பறக்க முயன்று ஒரளவு வேகத்தில் ஓட்டுவதைப் போல ஆடி வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. பெங்களூர் டிராப்பிக்கில் ஓடிப் பழகியவரை ரேஸ் டிராக்கில் இறக்கி விட்டதைப் போலாகிவிட்டது இப்போட்டி. நியுசிலாந்து குழம்பிப் போனது. அவர்களுடைய உலகக்க்கோப்பைத் தொடர் சாதனைகளுக்கு (அதாவது பாவமான அணியை வைத்துக் கொண்டு அரை இறுதி, இறுதி நிலைகளை எட்டுவது) அவர்களுடைய உளவியல் தயார்நிலையால்தான் என்று சில கட்டுரைகளைப் படித்தேன். அவர்களுடைய உள்ளூர் கிரிக்கெட் படிநிலையிலேயே அமைதியாக, நிதானமாக ஆடுவது, பரஸ்பரம் நட்புடன் பழகுவது வலியுறுத்தப்பட்டு, போட்டியால் விளையும் அழுத்தம் தவிர்க்கப்படுகிறது எனப் பேசியிருந்தார்கள். ஆனால் இந்த முறை மட்டும் நியுசிலாந்து அணி சற்று தன் இயல்பில் இருந்து பிறழ்ந்து கடுமையான நெருக்கடியை தன் மீது சுமத்திக் கொண்டது. இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்க வேண்டி வரும் என அவர்களுடைய அணித்தலைவர் சாண்ட்னர் சொன்னபோதே இது ஆரம்பித்தது. அவர் அதற்குப் பதிலாக "நாங்கள் பலவீனமான அணி, இந்தியாவே பலமான அணி. நாங்கள் நன்றாகப் போட்டியிடுவோம். வெற்றி பெற்றேயாக வேண்டிய அழுத்தம் எங்கள் மீது இல்லை" எனச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமக்குப் பழக்கமில்லாத மனநிலையை வரித்துக் கொண்டார்கள்.
ஆட்டத்திலும் கூட ஆப் ஸ்பின்னர் ஒருவரைக் (மெக்கோஞ்சி) குறைத்து வேகவீச்சாளரை எடுத்தது, ஹென்ரிக்கும், பிலிப்ஸுக்கும் தொடர்ச்சியாக ஓவர் கொடுக்காதது எனத் தவறுகள் செய்தார்கள். மெக்கோஞ்சியும் பிலிப்ஸும் மூன்று ஓவர்கள் சேர்ந்தும், ஹென்ரி இரண்டு ஓவர்களும் வீசியிருந்தால் இந்திய அணியின் வேகம் குறைந்திருக்கும். நேராக நல்ல நீளத்தில் வீசி பவுண்டரிகளை, க்ஸர்களைக் கட்டுப்பாட்டி இருந்தாலே அவர்கள் ஆட்டத்தில் இருந்திருக்க முடியும். பந்து பழசானதும் ஆட்டத்துக்குள் வந்திருக்க முடியும்.

நியுசிலாந்தின் தடுமாற்றத்தை இந்திய நன்கு பயன்படுத்திக் கொண்டது.

இப்போட்டித் தொடரில் இந்தியா செய்த உருப்படியான விசயம் ஒரே டெம்பிளேட்டை கடந்த ஒராண்டாகப் பின்பற்றினார்கள், அதை அவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்காக முழுமையாக மாற்றவில்லை என்பது. சற்று சிரமமான ஆடுதளங்களில் கூட பவர் பிளேயில் முரட்டு அடி அடித்தார்கள். மத்திய ஓவர்களிலேயே நிதானமாக ரன்களைச் சேகரித்தார்கள். சாதகமான ஆடுதளங்களில் எல்லா ஓவரிலுமே அடித்தார்கள். அதாவது இந்தியாவுக்கு என்று ஒரு அடையாளம், சந்தைப்படுத்தத்தக்க USP, இருந்தது. இந்தியாவில் சில சிக்ஸர்கள் அடித்தாலே இது எதிரணிகளுக்கு நினைவு வந்து அச்சத்தை விளைவித்தது. இந்தியாவின் மட்டையாட்டம் நல்ல ஆட்டநிலையில் உள்ளபோது இந்த அடையாளமே பாதி போட்டியை வென்றளித்தது. இது இம்முறை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் போன்ற அணிகளுக்கு இருக்கவில்லை. நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பாணி என்னவென்று அவ்வணிகளுக்கே சரியாகத் தெரியவில்லை. நியுசிலாந்தும் இங்கிலாந்தும் ஒவ்வொரு போட்டியிலும் தேவையான அளவுக்கு தம் ஆட்டத்தைத் தகவமைத்து வென்றனர். தென்னாப்பிரிக்கா தன் மட்டையாட்டத் திறனைக் கொண்டு ஆதிக்கம் செய்தது, பந்து வீச்சிலும் சரியான வியூகத்துடன் வந்தது. இதை ஒரு தென்னாப்பிரிக்க பாணியென்றாலும் இதை எல்லா போட்டிகளிலும் ஒரே போலப் பயன்படுத்தினார்களா? இல்லை. நியுசிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் பந்து மட்டைக்கு வரவில்லை என்றதும் அவர்களுடைய மத்திய வரிசை நிதானமாகவும் அதிரடியாகவும் அடித்து அவர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். பிரெவிஸ், மில்ல்லர், யான்ஸன் ஆகியோர் இதை ஒரு டெம்பிளேட்டாகக் கொண்டு வந்து எதிரணியை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இதைத் தம் ஊடகங்களின் வழி அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையே நம்பி ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த உலகக்கோப்பைத் தொடரின் சேதி இதுதான் என நினைக்கிறேன். கம்பீர்-சூர்யகுமாரின் முக்கியமான பங்களிப்பு இந்த ஆட்ட பாணியை முன்னிறுத்தி அதையே கடைசி வரை எல்லாரையும் (அதாவது எதிரணியையும் நம்மையும் சேர்த்து) நம்ப வைத்தது. இந்த டெம்பிளேட் சொதப்பியதும் அவர்கள் இஷான் கிஷனைக் கொண்டு வந்தார்கள். சாம்ஸனைக் கடைசி வரை ஆதரித்தார்கள். திலக்கை கடைசி ஐந்து ஓவர்கள் அடிக்க அனுப்பினார்கள். ஆனால் டெம்பிளேட் மட்டும் மாறவில்லை.

இந்த உலகக்கோப்பையில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னர் நடந்தது இந்தியாவுக்கு ஒரு 'பின்னடைவுதான்'. இதுவரை எந்த அணியும் அந்த அழுத்தத்தைக் கடந்து உலகக்கோப்பையை வென்றதில்லை. இந்தியா இதைச் சாதித்தது மெச்சத்தக்கது. சூர்யகுமார் யாதவ் இந்த அழுத்தத்தை ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாகப் பார்க்கும்படி தன் அணியினரிடம் கேட்டதாக ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். நான் கவனித்தபோது அணியிடம் ஒருவித நெர்வஸான ஆற்றல் இருந்தது. தம் மீதான அழுத்தத்தை மிகை உணர்வு வெளிப்பாடாக, ஆவேசமாக அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதற்கு ஆடுதளமும் எதிரணியின் பந்து வீச்சும் உதவிட அவர்கள் அந்த விசையைப் பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்தார்கள். ஜிம்மி நிஷமின் ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தபோதுதான் அவர்கள் கொஞ்சமாவது நின்று யோசித்தார்கள். இது ஒரு விளையாட்டு, இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி என நினைவுகொண்டார்கள். ஆனால் நீஷமின் கடைசி ஓவரில் துபே இருபது ரன்களுக்கு மேல் அடித்ததில் அந்த பின்னடைவும் காணாமல் போனது. நியுசிலாந்து ஒருவேளை கடைசி ஓவரை வென்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் 230க்குள் இருந்திருந்தால் அது அவர்கள் இன்னும் நேர்மறையாக ஆட ஊக்கம் கொடுத்திருக்கும். இலக்கை நெருங்கிக் கூட ஒருவேளை வந்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தக் கட்டத்திலும் நேர்மறையாக மட்டுமே சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானம் உதவியது. இதற்கும் சூர்யகுமார் யாதவையும் கம்பீரையும் பாராட்ட வேண்டும்.

ஆனால் இந்தியா இந்த வெற்றியுடன் திருப்தி அடையாமல் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். எல்லா ஆட்டங்களிலும் 3-4 ஓவர் சுழல் பந்து வீசுவதற்கு ஒரு மட்டையாளர் வேண்டும். துபெ ஒன்று தன் மிதவேகப் பந்து வீச்சை மேம்படுத்த வேண்டும் அல்லது அவரை முழுநேர மட்டையாளராகக் கருதி மற்றொருவரை ஆல்ரவுண்டராக அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஆறாவது, ஏழாவது பந்து வீச்சாளர்கள் அவசியம். அவர்களால் ரன்களைக் கட்டுப்படுத்தவோ விக்கெட் எடுக்கவோ முடிய வேண்டும். அதே போல மட்டையாடும் திறன்பெற்ற ஒரு வேகவீச்சாளரைக் கொண்டு வர வேண்டும். அதாவது ஹர்ஷித் ரானாவுக்கு மாற்றாக. இம்முறை ரானா காயமாகி வெளியேறியதும் சிராஜ் வந்தாலும் சிராஜை நம்மால் சுலபத்தில் ஆட வைக்க முடியவில்லை. அவரை ஒரு மட்டையாளரின் இடத்தில் ஆட வைத்தால் மட்டையாட்டம் பலவீனமாகும். ஆனால் ரானா இருந்திருந்தால் சில போட்டிகளில் சுலபமாக ஆறாவது வீச்சாளரை ஆட வைக்க முடியும். அதேபோல வாஷிங்டன்னின் மட்டையாட்டத்தையும் பந்து வீச்சையும் மேம்படுத்த வேண்டும். அவருக்கு அந்த அறிவுறுத்தல் தெளிவாக வழங்கப்பட வேண்டும். பவர் பிளேயில் மட்டுமல்ல மத்திய ஓவர்களிலும் கட்டுப்படுத்த அவர் கற்க வேண்டும். வந்ததும் சிக்ஸர் அடிக்கப் பழக வேண்டும். இது அக்ஸர் காயம்பட்டால் மாற்று வீரரைப் பெற உதவும் (குல்தீப்பை அங்கு கொண்டு வர முடியாது என்பதால்). இந்திய அணி தன் களத்தடுப்பையும் மேம்படுத்த வேண்டும்.

திலக்கும் துபேயும் ஆடுவதைப் பார்க்கையில் ரிங்குவுக்கு அணியில் இடமில்லை என்பது தெளிவு. ரிங்கு ஒரு ஆல்ரவுண்டராக அணிக்குள் வர முயல வேண்டும். அவருடைய போட்டி துபேயுடன் தான். துபேயின் போட்டி திலக்குடன்.

ஹர்த்திக் பாண்டியா காயமுற்றால் அவரிடத்தில் யார் ஆடுவார்கள்? இது மற்றொரு தலைவலி. நிதீஷ்குமாரிடம் போகாமல் உள்ளூர் அணிகளில் தேட வேண்டும். தேடி வாய்ப்பளித்தால் புதிய ஆல்ரவுண்டர்கள் தாமே வருவார்கள். ஹர்த்திக்குக்கு போதிய ஓய்வு கொடுத்ததாகவும் இருக்கும்.

இந்த வெற்றியுடன், இந்தக் கோப்பையுடன் இந்திய டி 20 அணி ஒரு சூப்பர் பவராக மாறுகிறது. அயலுறவில் இந்திய அவமானப்பட்டிருக்கும் நிலையில் இந்த வெற்றி ஒரு நல்ல கவனத் திருப்பமாக இருக்கும். கம்பீர் மீதான பல விமர்சனங்களை இது மறக்கடிக்கும். 35 வயதாகிவிட்ட, கடந்த ஓராண்டாகவே ஆட்டநிலையில் தலைகுப்புற விழுந்து வரும் சூர்யகுமார் யாதவின் ஆட்டவாழ்வின் ஆயுளை இரண்டாண்டுகள் கூட்டும். சஞ்சு சாம்ஸனின் மீள்வருகையை, நாயகத் திண்மையை காலம் நினைவில் வைத்திருக்கும். அடித்தாடுவதை, அதிக மட்டையாளர்களை முக்கியத்துவத்துப்படுத்தும் இந்தியாவின் டி20 ஆட்டக் கொள்கையை இக்கோப்பை நியாயப்படுத்தும். இந்த ஆட்டப் பாணியின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு துவக்க மட்டையாளரையோ 3வது, 5வது எண்ணில் ஆடுபவரையோ ஒரு சுழலரையோ மாற்றினாலோ கூட அணி இப்படியே அதிரடியாக ஆடி வெற்றி பெறும். அதேநேரம் ஹர்த்திக்கும் பும்ராவும் இல்லாவிடில் ஐந்து வீச்சாளர்களை வைத்துச் சமாளிப்பது சிரமமாகும்.
வரும் ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் 150 என்பது சராசரி ஸ்கோராகும். 300 இலக்கையும் விரட்டிச் சென்று வெல்வார்கள். இன்னும் பல நாடுகள் சர்வதேச டி20 ஆடுவார்கள். அப்போது இரண்டு மூன்று நாடுகள் ஆதிக்கம் செய்வது சாத்தியப்படாது என நினைக்கிறேன். கிரிக்கெட் யுடியூபைப் போல ஆகும். இன்றைய வெற்றியாளர் நாளை இருக்க மாட்டார். அதனால் இப்போதுள்ள இக்காலம் நிலைக்காது
என்றாலும் கொண்டாடத்தக்கது.

இந்திய அணிக்கு வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...