முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதர்ஷன்

 


சுதர்ஷனின் மரணச் செய்தி கேட்டு என் மனம் உடைந்து விட்டது. அவனை என் பயணக் குறிப்புகளில் அங்கங்கே குறிப்பிட்டிருக்கிறேன். என்னை விரிவாக நேர்முகம் செய்து தன் செல்பேசியில் வைத்திருந்தான். எடிட் செய்து யுடியூபில் போடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் அதைக் கடைசி வரைச் செய்யவே இல்லை. எனக்கு அதைக் குறித்து எந்த ஒரு வருத்தமும் இருக்கவில்லை. அது ஒரு நல்ல உரையாடல் அனுபவம் அவ்வளவுதான். அவனுக்கு சரியான கேள்வி கேட்டு பேச வைக்கத் தெரியும். அவனுடைய பேச்சில் எப்போதும் ஒரு களங்கமின்மை இருக்கும். நான் களைக்காமல் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்.
சுதர்ஷனை நான் ஆங்கில முதுகலை வகுப்பில்தான் சந்தித்தேன். நான் அவன் வகுப்புக்கு இலக்கியக் கோட்பாடு கற்பிக்கச் சென்றேன். கடைசி இருக்கையில் இருந்துகொண்டு அவ்வப்போது கைதூக்கி "இந்த இலக்கியத்தால் என்ன பயன்? இந்த கோட்பாடுகள் ஏன் இல்லாத ஒன்றைப் பற்றி இடைவிடாமல் பேசுகின்றன?" எனும் தொனியில் கேள்விகள் கேட்பான். எனக்குத்தான் கேள்வி கேட்பவர்களைப் பிடிக்குமே, சளைக்காமல் பதில் சொல்வேன். ஒருநாள் வகுப்பில் உள்மதிப்பீட்டுக்காக மாணவர்களை சாக்ரடீஸ் குறித்துப் பேசக் கேட்டிருந்தேன். சுதர்ஷன் அங்கு என்னைப் பகடி செய்து என் குரலையும் உடல்மொழியையும் மிமிக் செய்து பேசினான். மாணவர்களில் சிலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிலர் அமைதியாக இருந்து என்னை கவனித்தார்கள். நான் அவன் நன்றாக மிமிக் செய்ததாகச் சொல்லிவிட்டு அடுத்தடுத்த மாணவர்களைப் பேச வைத்தேன். அதன் பிறகு அவன் மிகுந்த சங்கடத்துடன் என்னை வகுப்பில் எதிர்கொண்டு பேச நான் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. கிடைக்கும் அவகாசத்தில் எல்லாம் என்னுடன் சுற்றிக் கொண்டிருப்பான். எதையும் சீரியஸாகப் பேச மாட்டோம். சும்மா எதாவது ஒன்றைப் பற்றி அரட்டை. தேநீர் அருந்துவது. அவனுடைய நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். அவனுக்கு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டே நல்ல டைமிங்குடன் பேசி எல்லாரையும் சிரிக்க வைக்கும் பண்பு இருந்தது. பார்க்க ஒடிசலாக இருந்தாலும் அவன் ஒரு பஜ்ஜி பிரியன். பஜ்ஜியாகவே தின்று கொண்டிருப்பான். உடல்நலம் கெட்டதும் அதை நிறுத்திக் கொண்டான். நான் தினமும் வேலை முடிந்ததும் இரண்டு மணிநேரங்கள் எழுதுவேன். தேநீர்க் கடை, நூலகம் எங்காவது இருந்து மடிக்கணினியில் டைப் அடித்துக் கொண்டிருப்பேன். அதன்பிற்கு வீட்டுக்குக் கிளம்பும்போது அவனை அவன் நண்பர் குழாமுடன் வழியில் பார்ப்பேன். ஒரு சிறிய கொள்ளையர் கூட்டம் போல என்னைச் சூழ்ந்து கொள்வார்கள். என் சக்கரநாற்காலியிலே தேநீர்க் கடைக்குப் போவோம். அவன் பிறரைக் கலாய்ப்பதை தேநீர் அருந்திக் கொண்டே பார்த்துச் சிரிப்பேன். இது ஒரு வழக்கமாக இருந்தது.
என் பிறந்த நாளை மாணவர்கள் தாமாகவே பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துக் கொண்டாடியது சுதர்ஷனால்தான். அன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடனே சுற்றிவிட்டு என்னிடம் சொல்லாமல் அவன் நண்பர்களுடன் ஆச்சரியப்படுத்தினான்.
அவனுக்கும் எனக்கும் ஒரு பொதுப்பண்பு இருந்தது - அடுத்தவர் அந்தரங்கத்தை நோண்ட மாட்டோம், புறம் பேச மாட்டோம், மனிதர்களைப் பற்றி எதிர்மறையாகப் புலம்பக் கூட மாட்டோம். ஜாலியான உரையாடல் மட்டும்தான். ஆனால் அவன் முதுகலை இரண்டாம் வருடத்தை எட்டியபோது முகத்தில் ஒரு வாட்டம் தென்பட்டது. படிப்பு சார்ந்த வேலைகள் மிகுந்துவிட்டது, அந்த அழுத்தம் என்றான். நான் அதைச் சந்தேகிக்கவில்லை. அது இயல்புதானே அங்கு என்றுவிட்டேன். அவன் தன் நண்பர்களுடன் முன்பைப் போலச் சுற்றாமல் தனிமையில் இருப்பதைக் கண்டதும் கவலை கொண்டேன். திரும்பவும் இணைந்து கொள், தனிமை நல்லதல்ல என்று எவ்வளவோ சொன்னேன். அவன் சிரித்துவிட்டு கடந்தான். எனக்கு அடுத்தவர்களின் தனிபட்ட விவகாரங்களை விசாரிப்பதில் நம்பிக்கை இல்லை என்பதால் தவிர்த்துவிட்டேன்.
நான் வேலை மாற உத்தேசித்த நாட்களிலும் அவன் கூடவே இருந்தான். பல்கலையில் என் கடைசி நாளன்றும் இருந்தான். நான் எதாவது ஒரு ஆவணத்தில் ஒப்பம் பெறப் போவேன். அவன் கூடவே வந்துவிட்டு வெளியே நின்று கொள்வான். நான் வெளியே வந்ததும் எங்கிருந்தோ தோன்றுவான். உணவருந்துவோம், தேநீர் அருந்துவோம், அன்று இரவு நான் வீடு திரும்பும் வரை கூடவே இருந்தான். என்னுடைய தானியங்கி சக்கரநாற்காலியை அவனாகவே ஓட்டி வீட்டுக்குக் கொண்டு வந்தான். என்னுடன் துணையாக மைசூர் வரைக்கும் என் பைக்கில் வந்தான். அப்போது அவனுக்கு ஒரு இணைய வகுப்பு இருந்தது. அவன் சிலருக்கு ஆங்கிலம் கற்பித்து வந்தான். அதற்காக ஒரு தேநீர் கடையில் நிறுத்தினோம். தன் பாடமெடுக்கும் திறனைக் குறித்த என் எதிர்வினையைக் கேட்டான். பாராட்டினேன். சில அறிவுரைகளைக் கொடுத்தேன். தலையாட்டினான். என்னை சில கேள்விகளைக் கேட்டு நேர்முகம் எடுக்கவும் செய்தான். அதன்பிறகு இருட்டிவிட்டது. அவன் பல பேய்க்கதைகளாகச் சொல்லி என்னை மகிழ்வித்தான். ஒரு கதையை எனக்குச் சிறுகதையாக எழுதும் விருப்பம் கூட ஏற்பட்டது.
அதன்பிறகும் அவனை போனில் அழைத்துப் பேசுவேன். சோர்வாகப் பேசுவான். வேலை கிடைப்பது குறித்த வருத்தம் என நினைத்தேன். அவனால் என்னிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாத இடைவெளி இருந்தது. மனம் தெளிவாகும்போது அவனே சொல்வான் என நினைத்துக் கொண்டேன்.
இன்று அவன் மரணச் செய்தி வந்தபோது அவனது வருத்தங்களை எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொண்டு அவனைச் சரிசெய்திருக்கலாமே எனத் தோன்றியது. ஆனால் விபத்துகளை யாரால் எதிர்பார்க்க முடியும்? கூர்க்கிற்கு நண்பர்களுடன் பயணம் சென்ற அவன் அதிகாலையில் ஏன் ஏரியில் இறங்கிக் குளிக்கப் போனான்? நீச்சல் தெரியாதபோதும் ஏன் அவன் நீந்த முயன்றான்? தற்செயலாக ஒரு ஆர்வம் தோன்றி நீரின் ஆழத்தை நோக்கிச் சென்றானா? தெரியவில்லை. அப்போது அவன் மனநிலை மாறி அவன் திரும்ப கரைக்கு வந்திருக்கக் கூடாதா? நான் அங்கு இருந்திருந்தால் அவனிடம் புதிய ஊரில் ஏரியிலோ குளத்திலோ குளிப்பதன் ஆபத்தை எடுத்துரைத்திருப்பேனே. நான் ஏன் அங்கு இருக்கவில்லை என அபத்தமாக மனம் யோசித்தது. அவன் வேறெங்காவது படிக்கச் சென்றிருந்தால் இந்த விபத்து நடந்திராமல் இருந்திருக்குமா?
இன்று என் நண்பர்கள் பலரிடமும் பேசியபோது அவனைக் குறித்த பிரியமான நினைவுகளையே பகிர்ந்துகொண்டனர். எல்லாரிடமும் தன் மகிழ்ச்சியை, பிரியத்தை, வேடிக்கையான சுபாவத்தை, களங்கமற்ற கேள்விகளைக் கொண்டு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறான். அந்த வெளிச்சத்தை மட்டுமே அவர்களால் தம் நினைவில் மீட்டெடுக்க முடிகிறது. பேசி முடிந்ததும் அது இருளாகி விடுகிறது. அவன் இருந்திருந்தால் அந்த வெளிச்சம் தொடர்ந்திருக்கும், பலரிடமும் பரவியிருக்கும். என்னால் அதைத்தான் தாங்க முடியவில்லை.
அஞ்சலி என்ற சொல்லை அவன் விசயத்தில் பயன்படுத்த எனக்குத் துணிச்சல் இல்லை. அதனால் இது அஞ்சலிக் கட்டுரையும் இல்லை. எதாவது ஒரு ரூபத்தில் என்னிடம் திரும்ப வா என்று அவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...