முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா. கண்மணியின் “வீனஸ்”



பா. கண்மணியின் மொழி அழகானது. அவர் தான் வர்ணிக்கும் வீனஸ் அழகு நிலையத்தின் முடிதிருத்த நிபுணர்களின் லாவகத்துடன் தன் காட்சிகளை வர்ணிக்கிறார், இழையிழையாக சொற்களை எடுத்து நறுக்குகிறார், வடிவமைக்கிறார், வண்ணம் பூசுகிறார், ரொம்ப கற்பனாவாதமான ரசனையான சொற்றொடர்களுடன் நம்மைச் சொக்க வைக்கிறார். நுட்பமான புறவிவரணைகளாலும் நம் மனதை ஆட்கொள்கிறார். இந்நாவலின் கதைகூறல் முழுக்க புறவயமாக இருப்பதாலும், இதிலுள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் நேர்கோட்டில், முரணின்றி செயல்படுகிறவர்களாக இருப்பதாலும் நம்மால் இதை வேகமாக ரசித்துப் படித்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, கண்மணியின் மொழி எண்பதுகளில் பிரபலமாக விளங்கிய வணிக நாவலாசிரியர்களின் மொழியை நினைவுபடுத்துகிறது; சில இடங்களில் பாலகுமாரனைப் படிப்பதைப் போல இருக்கிறது; ஆனாலும் இன்னாரின் மொழியைத்தான் அவர் போலச்செய்கிறார் எனச் சொல்ல முடியவில்லை. அதேநேரம் ஏதோ ஒரு நிழல் நாம் படிக்கும்தோறும் பின்னாலே வருகிறது. ஆண்களிடம் இருந்து தனித்து நின்று சாதிக்க விரும்புகிற, அது சாத்தியப்படாதபோது சோர்வடையாமல் போராடுகிற இப்பெண் பாத்திரங்களும் ஏற்கனவே நாம் இத்தகைய வணிக நாவல்களில் சந்தித்தவர்களே. எனக்கு சிவசங்கரியின் பாத்திரங்கள் நினைவு வந்தார்கள். ஆனால் இவர்கள் முற்றிலும் வேறொரு வர்க்க நிலையில் சூழலில் இருப்பவர்கள். அதேநேரத்தில் இவர்கள் பல்வேறு தந்திரங்களையும் குழப்பங்களையும் கொண்ட முதிர்ச்சிக்கும் குழந்தைமைக்கும் நடுவில் நிற்கிற இன்றைய இளம்பெண்கள் அல்லர். மத்திய வயதினர். இன்றைய மனநிலைக்கும் பழைய மனநிலைக்கும் நடுவில் இருப்பவர்கள். கனவு காண்கிறவர்கள், உத்வேகத்துடன் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடுகிறவர்கள். தடுமாறும்போதும் ஒரு விசை அவர்களைச் செலுத்துகிறது. எந்தக் காரணம் கொண்டும் குடும்பத்துக்குள் நிம்மதியை நாடாதவர்கள். சிவசங்கரியின் நிழல் இருந்தாலும் அதன் மீது புதிய உடலொன்று பொருந்திக் கொள்கிறது. 


வீனஸின்கதைக்களம் எளிமையானது - “வீனஸ்அழகுநிலையத்தை நடத்தும் ரஞ்சனி, அவரது நிலையத்திற்கு வாடிக்கையாளராக வரும் நிஷா எனும் மாடல், சந்தியா எனும் மத்திய வயது, மணமான மேற்தட்டுப் பெண், திலோத்தமா எனும் டயட்டீஷியன், ப்ருத்வி எனும் உடற்பயிற்சியாளரின் தனிக்கதைகள் சற்றே பெரிய அத்தியாயங்களாக அவர்களுடைய பெயரையே தலைப்பாக வைத்து வருகின்றன. இவர்கள்வீனஸுடன்நேரடியாகவே தொடர்பு கொண்டவர்கள் என்பதாலே நாவலுக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது; ஆனால் இக்கதைகள் தனித்தனி சிக்கல்களாலத் தோன்றி வளர்ந்து கதையின் மையச்சிக்கலுடன் வந்து பொருந்துவதில்லை.  இந்த தனி அத்தியாயங்களிலும் கூட அரிதாகத்தான் ஒரு நெருக்கடியான சூழல் தோன்றி வருகிறது. கடைசி அத்தியாயத்தில் ரஞ்சனிக்கு முக்கியமான உதவியொன்றைப் பண்ணின வயதான உளவியல் டாக்டர் அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவளுடன் உடலுறவு கொள்ள சூழலை வியர்த்தமாக முயல்கிற இடத்தைச் சொல்லலாம். ஆனால் அங்கும் ரஞ்சனி சட்டென நெருக்கடியில் இருந்து விலகிக் கொள்கிறார். மற்ற அத்தியாயங்களில் சந்தியாவும் ப்ருத்வியும் வரும் இடங்களில் மீண்டும் இத்தகைய சூழல்கள் வருகையிலும் கதைசொல்லி அதற்கான இடத்தை உருவாக அனுமதிப்பதில்லை. நெருப்பு பற்றிக் கொண்டது ஊதி அணைத்து விடுகிறார். இது இந்நாவலின் முக்கியமான ஒரு பலவீனம்.


பாத்திரங்களை ஒரு கண்மூடித்தனமான முடிவெடுத்து சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்க விடும்போதே நாம் கதையின் கருப்பொருளைக் கண்டடைகிறோம். ஒரு விசாரணையை ஆரம்பிக்கிறோம். அத்தகையை விசாரணை இந்நாவலில் அழகைக் குறித்தும், வாழ்வின் எடையின்மையைக் குறித்தும் நிகழ்த்தியிருக்க இயலும். பா. கண்மணி ஏனோ அதைத் தவிர்த்து விடுகிறார். 


இந்நாவலின் வேறு இரு பிரச்சினைகள் இதில் பாத்திரங்களின் அகவுலகம் பெரிதாகக் காட்டப்படுவதில்லை என்பது. சில இடங்களில் அவர் நமக்கு இந்த அகவுலகைக் காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் - திலோத்தமாவுக்கும் அவளது அப்பாவுக்குமான உறவில் கசப்பு தோன்றி அது கனிவாக மாறும் பத்திகள், சந்தியாவின் கணவரின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களான தம்பதியரில் கணவர் சந்தியாவைக் காமுற்று நெருங்கும்போது அவள் அதை உள்ளூர ரசித்து இணங்க முன்வருவதும், பின்வாங்குவதுமான இடங்களைச் சொல்லலாம். நாவலின் ஓட்டத்தில் திடீரெனத் தோன்றும் இரு பத்திகளில் அகவுலகம் பற்றின விவரணையும் வருகிறது. ஆனால் அதை நோக்கி கண்மணி இன்னும் தீவிரமாகப் போயிருந்தால் நவீன அழகு உற்பத்தி குறித்து ஒரு விவாதத்தைத் திறந்திருக்க முடியும். 


திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதைப் போல கதையின் முடிவையும் எட்டாமல் அவர் பாதியிலே முடித்துவிடுகிறார். அதற்கும் நான் மேலே குறிப்பிட்டதைப் போல அவர் நெருக்கடியான இடங்களை நோக்கி கதையை நகர்த்தி உச்சத்தை நோக்கிக் கொண்டு போகாதது காரணமாக இருக்கலாம். 

இந்த சில குறைகளையும் மீறி இதன் தகவல் செறிவு, தளுக்கான மொழி நம்மை சுண்டி இழுக்கிறது. ஒரு இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...