Skip to main content

தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்?



 

முதலில் தேசிய விருதுகள். இவை தொடர்ந்து அரசியல் சாய்வாலோ செல்வாக்காலோ மதிப்பிழந்து வந்தாலும் சாகித்ய அகாடெமி போன்றவற்றின் மதிப்பு அடிப்படையில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சில நல்ல படைப்பாளிகளுக்கு அது விருதளித்துள்ளது, அதை நமது தேசியம் அங்கீகரிக்கிறது என்பதாலே உருவாகிறது. ஒவ்வொருமுறை மோசமான படைப்பாளிகள் தேர்வு செய்யப்படும்போதும் அது மதிப்புக் குறைவதைக் காண்கிறோம். தேர்வு சரியானதும் மதிப்பும் கூடுகிறது. அகாடெமியின் தேர்வுகள் மீதுள்ள புகார்கள், பரிந்துரைகள் நியாயமானவை. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த நாம் சரியான நபர்களை அரசியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நபர்கள் அகாடெமிக்குள் சென்று நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். இந்தியர்களின் முக்கியமான பிரச்சினை நாம் நேர்வழியை ஏனோ நம்புவதில்லை. தொடர்ந்து நாம் புறக்கணிப்பட்டதாக, நாம் அதிக மதிப்புக்குத் தகுதியானவர்கள் என நம்புகிறோம். நமது வாசகச் சூழலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். இயல்பாகவே வாய்ப்புக் கிடைத்து உள்ளே போகும் சிலர் குறுக்குவழியில் தமக்கும் தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வாங்கிக் கொடுக்க விழைகிறார்கள். சிலநேரங்களில் கட்சிக் குறுக்கீடுகளும் சாதியச் சாய்வுகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இப்படி, இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான்.

இவ்வளவு போதாமைகளுக்கு மத்தியிலும் கூட, ஒட்டுமொத்தமாக பல்வேறு மொழிகளிலுள்ள தேர்வுகளைக் காண்கையில் அகாடெமியின் செயல்பாடுகள் நியாயமாகவே உள்ளது எனச் முடியும். ஒப்பீட்டுக்கு நாம் உள்ளூர் தனியார் விருதுகளைப் பார்ப்போம் - அவற்றில் தேர்வுக்குழு, தேர்வு முறைமை என ஒன்றுமே கிடையாது. யாராவது பரிந்துரைக்கிறார்கள், யாரோ முடிவெடுக்கிறார்கள், அறிவிக்கிறார்கள், கொடுக்கிறார்கள். இதனாலே இத்தகைய தனியார் விருதுகள் வாசகர்கள் மத்தியில் பொருட்படுத்தப்படுவதில்லை. விளைவாக நன்கு அறியப்பட்டவர்களுக்குக் கொடுப்பதன் வழியாக அம்மதிப்பைப் பெருக்க விருது அமைப்புகள் முயல்கின்றன. இந்த சுழற்சி மாறுவதில்லை. பரிந்துரைப்பவர்களுக்கு எந்த எழுத்தாளர்களிடத்து நட்பும் நன்மதிப்பும் உள்ளதோ அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கிறது. இதை ஒரு மறைமுக சமூக நீதித் திட்டம் எனலாம்.

ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" விருதுதான் இருப்பதிலேயே விஷமத்தனமானது - அவர் எந்த முறைமையையும் பின்பற்றுவதில்லை என்பதுடன் எதையும் நம்புவதோ பொருட்படுத்துவதோ இல்லை. அவர் தன் சக-எழுத்தாளர்களின் மதிப்பீடுகளையும் ஏற்பதில்லை. அவர் மனத்தில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு விருதாளர்களின் வயதைப் பொறுத்து அறிவிப்பதாகச் சொல்கிறார். அவரது விருப்பவெறுப்புகளோ விருதைத் தீர்மானிக்கின்றன. இதையொட்டி அவர் எழுதும் விசயங்கள் இந்தப் படைப்பாளிகளைச் சமமாக மதித்துப் பாராட்டுவதாக இருக்காது. இந்த விருதோ அவர் தன் சக-எழுத்தாளர்களுக்குத் தரும் பரிசிலாகச் சித்தரிக்கப்படுகிறது. ரமேஷ் தான் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் தனக்கு அதற்கு முன் விருது தர வேண்டும் எனக் கோரியதாக ஜெயமோகன் எழுதியதை சான்றாகக் குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் ஒருவர் வேடிக்கையாகவோ அல்லது உணர்வுரீதியான வெளிப்பாடாகவோ கொள்ளாமல் அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்யக் கூடாது, அது அவரை அவமதிப்பதாகும் என்பதுகூட இவருக்குப் புரிவதில்ல. ஜெயமோகனின் குறுக்கீடும் விஷமத்தனமும் காரணமாகவே இவ்விருது மதிக்கத்தக்கதாக இல்லை. என்னதான் ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும், பிரபலங்களைப் பேச வைத்தாலும் இது ஒரு குழு விருதாக மாறிவிட்டது. அவர்களுக்குள்ளாகக் கொடுத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டு முடித்து விடுகிறார்கள்.

விருதாளர்கள் மற்றும் விருதுக் குழுவினர் விவகாரமும் இங்கு சுவாரஸ்யமானது - சாகித்ய அகாடெமியோ தனியார் விருதுகளோ ஒரு சரியான விருதாளரைத் தேர்வு செய்வது கடினமல்ல. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் பெயர்களைத் திரட்டுவது சுலபம். சிக்கல் சரியான புத்தகங்களைத் தேர்வு பண்ணுவது - அதற்கு நிறைய மெனெக்கெட்டு பரவலான விருதுக்குழு ஒன்றின் கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும். மாறாக, அறியப்பட்ட படைப்பாளிகளின் பங்களிப்புக்கு ஒட்டுமொத்தமாக விருதளிப்பது சுலபம். இதனால் இதுவே இன்று அதிகமாக நடக்கிறது. இதுவும் விருதுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை என்னால் இணையத்தில் தேடியே பெற முடியும் எனும்போது விருதின் பயன்தான் என்ன?

விருதுக் குழுவினரும் தமக்குள் பேசி வைத்து award fixing செய்யும் அவலத்தை சிலர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். இதைச் சரிசெய்யவே இரண்டு மூன்று நிலைகளில் பரிசீலிக்க விருதுக்குழுவினரை உருவாக்கிப் பார்க்கலாம். சரியான நபர்களை இக்குழுக்களில் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு சன்மானமும் கொடுக்கலாம். விருதளிப்பின் போது இறுதிக் குழுவினரைத் தம் விளக்கங்களைத் தரக் கோரலாம்.

அடுத்து, நாம் தேசிய விருதுகள், உள்ளூர் விருதுகளைத் தாண்டிச் சென்று ஒருசில சர்வதேச விருதுகளை எடுத்துக் கொள்வோம்.

முதலில் நோபல் பரிசு.
இதைக் குறித்து wired.in இல் ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது (https://www.wired.com/2014/10/whats-nobel-prize-become-biggest-award-planet/). நோபல் பரிசு 1888இல் நடந்த ஒரு பெயர்க் குழப்பத்தாலே தோன்றுகிறது. ஆல்பிரட் நோபல் டயனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்த பெரும் தொழிலதிபர். இவரது சகோதரர் இறந்துவிட அதை இவரது மரணம் என நினைத்து ஒரு பிரஞ்சுப் பத்திரிகையில் "மரண வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்" என அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார்கள். நோபல் நம்மாட்களைப் போல் அல்லாது சொரணை மிக்கவர். ஆகையால் அவர் இதைப் படித்து நொந்து போகிறார். தன் காலத்திற்குப் பிறகு தான் மரண வியாபாரி என அறியப்படக் கூடாது என்று அவர் தன் மொத்தச் சொத்தில் கணிசமான பகுதியை ஒரு சர்வதேச விருதை உருவாக்கி தன் பெயரில் அளிக்கச் செலவிட வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டுப் போகிறார். இதற்காக ஒரு விருது நிர்வாகக் குழு உருவாக்கப்படுகிறது. 1897இல் இருந்தே அவர்கள் உலகில் சிறந்த விஞ்ஞானிகளைக் கண்டறிய உலகம் முழுவதிலும் இருந்து பரிந்துரைகளைப் பெற்று ஆய்வு செய்கிறார்கள். தம் ஆய்வு முடிவை, தேர்வை அவர்கள் Swedish Royal Society of Sciences (வேதியலுக்கும் இயல்பியலுக்கும்) மற்றும் the Karolinska Institute (மருத்துவத்துக்கு) ஆகிய நிறுவனங்களிடம் கொடுத்து அவர்களை இறுதி முடிவை எடுக்கக் கேட்கிறார்கள். தம் தேர்வு குறித்து தேர்வுக் குழுவினர் எழுதும் பரிந்துரைகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் விருதுப் பணமே உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுத் தந்தாலும் போகப் போகம் பணம் அல்ல நோபல் விருதுக் குழுவின் தேர்வு முறைமையும் அவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து ஒருவரது பங்களிப்பின் தாக்கத்தை அவதானித்து அங்கீகரிக்கும் பாங்குமே அவ்விருதை உலக முக்கியத்துவம் கொண்டதாக்குகிறது. சில நேரங்களில் அவர்கள் அதிகமாக அறியப்படாத விஞ்ஞானிகளை, எழுத்தாளர்களைக் கண்டறிந்து அங்கீகரிக்கிறார்கள். இதுவும் அவர்கள் மீதான மதிப்பைப் பெருக்குகிறது. இந்த பாரம்பரியம்தான் நோபல் பரிசின் மதிப்பு, அதன் பணம் அல்ல என்று ஸக்கர்மேனும் கார்ல்ஸ்டெராண்டும் வைர்ட் கட்டுரையில் சொல்வது கவனிக்கத்தக்கது.

(இந்த இடத்தில்தான் நம்மவர்கள் சொதப்புகிறார்கள் - நம்மிடம் நடுநிலையான, புறவயமான நடைமுறைகள், முறைமைகள் இல்லை. நாம் அனைவருக்குமானவர்களாக இருப்பதும் இல்லை. அதாவது தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ யாரையும் மதிப்பிட்டு அங்கீகரிப்பதில்லை.)

அடுத்து புக்கர் பரிசு. 1969இல் இவ்விருது புக்கர்-மெக்கோனெல் எனும் கயானாவில் உள்ள தொழிலதிபரின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய காமென்வெல்த் எனப்படும் காலனிகளில் உள்ள படைப்புகளைப் பிரதானப்படுத்தினாலும் அண்மையில் இது இங்கிலாந்திலும் ஐயர்லாந்திலும் பிரசுரிக்கப்பட்ட ஆங்கிலத்தில் கிடைக்கிற எல்லா நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்கிறது. சர்வதேச புக்கர் பரிசு எனும் பெயரில் மொழிபெயர்ப்புகளுக்கும் விருதளிக்கிறார்கள். இவ்விருதின் சிறப்பும் இதன் சர்வதேசியத்தன்மையும் விருதைத் தேர்வு செய்யும் கறாரான முறைமையும்தான். அடுத்து, இவ்விருதுக்குச் செய்யப்படும் விளம்பரம் இதற்கு ஒருவித தனி கவனத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விருதின் முக்கியத்துவம் அடுத்து தேர்வாகும் படைப்புகள் அடுத்த சில பத்தாண்டுகளாவது கல்வித்துறையிலும் வாசகர்கள், விமர்சகர்கள் இடத்தும் பரவலான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதே.

ஒரு கூடுதல் தகவல்: இவ்விருது பெற்ற நாவல்களை ஆய்வு செய்த ஆடம் நவோமி பொதுவாக அரசியல் பகடி எழுதுகிற, 400 பக்கங்களுக்கு மேலாக உள்ள நாவல்களுக்கே இவ்விருது அதிகமாக அளிக்கப்படுகிறது என்கிறார் (Adam, Naomi. “How to win the Booker prize: is there a formula for ‘the finest in fiction?’” The Conversation, October 14, 2022.). பெண்களை விட ஆண்களே இவ்விருதை அதிகமாக வெல்கிறார்கள் என்பதும் இவரது அவதானிப்பு.

இந்த சர்வதேச விருதுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்வது இவற்றைத்தாம் -
1) புத்தகங்களுக்கு விருதளிக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு அல்ல.
2) புறவயமான நடைமுறைகளை உருவாக்கி, எந்த சார்புநிலையுமற்றுச் செயல்பட வேண்டும். ஒரு நிதியாளரின் பெயரை விருதுடன் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அவர் விருதாளரைத் தேர்வு செய்யக் கூடாது. செல்வாக்கு என ஒன்று வந்தாலே விருது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்குகிறது.
3) விருதுக்குத் தேர்வாகும் ஒரு புத்தகத்தின் நீண்டகாலத் தாக்கம் என்னவென்று பரிசீலிக்க வேண்டும்.
4) தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ பலரையும் இதே நடைமுறையைக் கொண்டு விருளித்து அங்கீகரித்தாலே அவர்களும் அவ்விருதைப் பொருட்படுத்துவார்கள்.

இதையெல்லாம் செய்யாத பட்சத்தில் விருதுகள் கெடாவெட்டு, காதுகுத்து, பூப்பெய்தல் விழா எனும் கணக்கில்தான் மதிக்கப்படும். அவற்றைப் பெறுவதில் எழுத்தாளர்களுக்கு தற்காலிக சந்தோஷம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை இருக்காது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...