முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜேஷ் குமார்

 


"சாய் வித் சித்ராவில்" வணிக நாவலாசிரியர் ராஜேஷ் குமாரின் நேர்முகத்தைப் பார்த்தேன். எனக்கு அவரது நாவல்கள் பிடிக்காது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். அவை வணிகப் படைப்புகள் எனபதால் அல்ல. லாஜிக் கன்னாபின்னாவென்று இருக்கும். அதைப் பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்காதபடி கதையை வேகமாக நகர்த்துவார் என்பதால். ஆனால் இந்த நேர்முகத்தைப் பார்த்தபோது அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. அவரிடம் ஒருவிதமான குழந்தைமை உள்ளது. எதையும் மிக மிக நேரடியாகப் புரிந்துகொள்கிறார். குழந்தைகளிடம் சாமியிடம் வேண்டினால் எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று சொன்னதும் நம்புமே ராஜேஷ் குமாரும் அம்மாதிரி யோசிக்கிறவரே. ஒரு கருத்தை, உணர்வு வெளிப்பாட்டை அதன் மறைமுகமான சாத்தியங்களைப் பரிசீலிப்பவரோ நேரடியாக வெளிப்படாவற்றைத் (unmanifested) தேடுகிறவரோ அல்லர் அவர். மொழி விளையாட்டுகளும் அவரிடம் அதிகம் இருக்காது. அதேநேரம் ரொம்பத் தீவிரமான உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கிறவரோ எழுதுகிறவரோ அல்லர். எளிய நேரடியான விதிமுறைகளின் படி ஆடப்படும் விளையாட்டுதான் அவரது நாவல்கள். அவ்விளையாட்டுதான் அவரது வாழ்க்கையும் என்று அவரது பதில்களைக் கேட்டபோது தோன்றியது.

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்கள் வட்டமேஜை விவாதத்தில் பேசிய வணிக எழுத்தாளர்கள் இப்படியானவர்கள் அல்லர் - அவர்களிடம் பேச்சு சாதுர்யமும் கருத்துக்களின் பின்வாசலைத் திறந்து பார்க்கும் உத்தேசமும் இருந்தது. ராஜேஷ் குமாருக்கு பின்வாசல் இருப்பது தெரிந்தாலும் முன்வாசலில் மட்டும்தான் நுழைவார்.

ஆச்சரியமாக அந்நேர்முகம் குறித்து அவர் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து பேசும்போதும் அகத்தீமையைக் குறித்துப் பேசவில்லை. சமூகப் பிரச்சினைகள், துயரங்களைப் பேசுவதிலும் ஆர்வமுண்டு என்றாலும் அவை மனித மனத்தின் கீழ்மைகளின் எல்லைகளை எப்படி வெளிச்சமிடுகின்றன என்பதற்குள் அவரது சிந்தனையே போகாது. எழுத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான். அவர் தன் பெற்றோரைப் பற்றிப் பேசுவதிலும் ஒரு எட்டு வயதுக் குழந்தையின் அணுகுமுறையே உள்ளது. அவர் பேஸ்புக்கில் எழுதும் பதிவுகளுக்கு வரும் விருப்பக்குறிகளைக் குறித்து வியப்பாகப் பேசும்போதும் எனக்கு அங்கு ஒரு மிகச்சிறு குழந்தையே தெரிந்தது. குழந்தைகளால் மொழியின் நிழலைப் பார்க்க முடியாது. அவர்கள் மொழியின் நேரடிப் பொருளை மட்டுமே காண்பர்.
இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கையில் எனக்கு அவரது எழுத்து குறித்து இன்னொரு பரிமாணம் தென்பட்டது. அவரால் வேறெப்படியும் இருக்க முடியாது, வேறெப்படியும் எழுதவும் முடியாது. இப்படித்தான் இயலும். இதைப் படித்து ரசிக்கவும் லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் எனும்போது இது ஒரு மனநிலை மட்டுமல்ல பண்பாட்டு நிலையும்தான் எனத் தோன்றியது. அவர் தான் அதிகம் படிக்காத எளிய மக்களுக்காக (உ.தா சுமை தூக்கும் தொழிலாளர்கள்) எழுதுவதாகச் சொல்லும்போதே அண்மையில் ஒரு படித்த இளைஞரும் தன் நாவலை ரயில் பயணத்தின்போது படித்ததைத் தான் பார்த்ததாகவும் சொன்னார். இந்தப் பண்பாடு நம் சமூகத்தின் மையத்தில் எங்கோ இருக்கிறது. பொழுதுபோக்கையும் நம்மால் மிக நேரடியாகவே பார்க்க இயல்கிறது. ஒளியின் பாதையை நேரடியாகக் காண்போம், ஆனால் அது தோற்றுவிக்கும் நிழலை, அதன் மாற்று அர்த்தங்களை, அதன் கற்பனைச் சாத்தியங்களைப் பார்க்க மாட்டோம்.
ராஜேஷ் குமாருக்குத் தன் எழுத்து குறித்து இருந்த பெருமையும் என்னை வெகுவாக ஈர்த்தது. இதையும் நான் வேறெந்த வணிகப் படைப்பாளியிடமும் கண்டதில்லை. பாலகுமாரன் கூட எழுத்தைத் தன் சுயத்தின் வல்லமையாகவேதான் பார்க்கிறார்; அவருக்கு எழுத்தென்பது தான் மட்டும்தான், படைப்பாக்த் தன்னிலை அல்ல. வேறு சிலர் பேசும்போது தம் எழுத்துலச் சாதனைகளைப் பற்றிச் சொல்வார்கள். விருதுகள், பயணம் என்பது. இன்னும் சிலருக்கு எழுத்தென்பது தொழில் மட்டுமே. எவ்வளவு சம்பாதித்தோம், வீடு கட்டினோம், கார் வாங்கினோம் இப்படிப் பேசுவார்கள். இந்த நேர்முகத்தில் ராஜேஷ் குமார் எங்குமே தான் எழுதி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதைக் குறிப்பிடவில்லை. ராஜேஷ் குமாருக்குத் தன் நாவல்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பது, அதை வாசகர்கள் தம்மை மறந்து வாசித்திருப்பதுதான் முக்கியம். அதைக் குறித்தே சிலாகிக்கிறார். இது எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.
இந்நேர்முகத்தில் கலைஞர் ராஜேஷ் குமார் கின்னஸ் சாதனையை நெருங்குவதாக ஒரு செய்திக் கட்டுரையை ஹிந்து ஆங்கில நாளிதழில் படித்துவிட்டு அவருக்கு கலைமாமணி விருதைக் கொடுக்க பரிந்துரைத்ததாக சொல்லும் செய்தி சுவாரஸ்யமானது. கலைஞர் புத்திசாலித்தனமான அரசியல்வாதி. ஒரு கணத்தில் அவர் மனம் கணக்குப் போட்டிருக்கும் - இவருக்கு அரசின் சார்பில் விருது கிடைத்தபின் இவருக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அது அரசுக்கு பெருமை சேர்க்கும் என்று யோசித்திருப்பார். ஆனால் ராஜேஷ் குமார் இப்படியெல்லாம் யோசிக்கக் கூடியவர் அல்ல. அவருக்கு எல்லாமே நேர்ச்சிந்தனைதான். தன் எழுத்தை கலைஞர் அங்கீகரிக்கிறார், நல்ல மனிதர் என்று பெருமைப்படுகிறார். இதிலெல்லாம் ஒருவித க்யூட்னெஸ் உள்ளது.

அவர் தன் வாழ்க்கையின் பாதை எப்படியெல்லாம் மாறியது, அவருக்கு கிடைத்த திருப்புமுனைகளை வர்ணிக்கும் இடங்களை ரசித்தேன். ஒரு அரசு வேலைக்கான நேர்முகத்தின்போது சைக்கிளின் ஸ்டாண்டில் வைத்திருந்த அவரது சான்றிதழ் கோப்பு வரும் வழியில் கீழே விழுந்து தொலைந்து போகிறது. அது பின்னர் கிடைத்தாலும் அவகாசம் கடந்து விட்டதால் அரசு வேலையும் பறிபோகிறது. அப்போதும் அவர் தான் இன்னதெல்லாம் செய்து அந்நிலையைத் தவிர்த்திருக்கலாம் எனக் கணக்குப் போடவில்லை. நடந்துவிட்டது, அவ்வளவுதான் எனக் கடக்கிறார். இன்னொரு முறை அவருக்கு அரசு வேலை கிடைத்து மாறுதலாகி பண்ரூட்டி பக்கத்தில் பாலூர் எனும் குக்கிராமத்துக்குப் போகிறார். அங்கு அவரை தலைமை ஆசிரியர் ஏமாற்றி திரும்ப அனுப்புகிறார். அங்கு மலேரியா கொசு அதிகம் என அவர் சொன்னதை நம்பி இவர் தன் அம்மாவிடம் சொல்ல அம்மா "சீக்கிரம் வந்திருப்பா" என்கிறார். இவரும் வந்து விடுகிறார். தன்னை ஏன் ஏமாற்றினார் என யோசிப்பதில்லை.

மேலும், அவருக்கு சின்னச்சின்ன சம்பவங்களை நம்மை ஈர்க்கும் விதம் வர்ணிக்கத் தெரிகிறது.

நேர்முகத்துக்கு எட்டு பகுதிகள் என நினைக்கிறேன். முகத்தில் நீங்காப் புன்னகையுடன் ஒரேயடியாகப் பார்த்து முடித்தேன். ராஜேஷ் குமார் அவரது நாவல்களை விட சுவாரஸ்யமானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...