"இன்செப்ஷன்" படத்தை சும்மா தற்செயலாகப் பார்க்க ஆரம்பித்தேன். செயலியும் அதைத் 'தற்செயலாக' தமிழ் டப்பிங்கில் காட்டியது. ஏதோ மாபியா படக்காட்சி போல துவக்கம் அமைந்தது. அட "இன்செப்ஷன்" இப்படி இருக்காதே எனத் தோன்ற ஆங்கிலத்துக்கு மாற்றினேன். என்னால் ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை - அந்த வசனங்களுக்கும் இந்த வசனங்களுக்கும் சம்மந்தமே இல்லை. இதில் வருவனவற்றை மாற்றி தமிழ் டப்பிங்குக்காக மொழிபெயர்த்தவர்கள் முழுக்க வேறொன்றை எழுதியிருக்கிறார்கள். அதுவும் "கனவை வேட்டையாடுகிறவர்கள்" எனும் சொல்தான் என்னை உறுத்தி மொழியை மாற்ற வைத்தது. அதை ஆங்கிலத்தில் காண முடியாது. ஏனென்றால் அது கதையமைப்பைக் குறிக்கிற வசனம். ஆங்கிலத்தில் படத்தின் தத்துவார்த்தமான மையத்தை உணர்த்தும் வசனமே முதலில் வருகிறது (a man of radical ideas). இவர்கள் அது மக்களுக்குப் புரியாது என்றோ ஏதோ நினைத்து அதை நமது விஜய் பட லெவலுக்கு மாற்றுகிறார்கள். தமிழில் பார்ப்பவர்களுக்கு "இன்செப்ஷன்" வேறொரு பொருளையே தரக் கூடும். இதெல்லாம் நியாயமா? இது ஏமாற்றும் பணி அல்லவா? இந்த குரங்குக் கூட்டத்தை நம்பி எந்தப் படத்தையும் தமிழ் டப்பிங்கில் பார்க்க முடியாது போல.
நல்ல படத்துக்கு டப்பிங் வசனம் எழுதவும் ஒரு கலையுணர்வு, சினிமா அறிவு, தத்துவப் பார்வை வேண்டும்.
Comments