முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் ஆதரவு வைரமுத்துவிற்குத்தான்



 வைரமுத்துவிற்கு ஞானபீடம் வழங்குவதை விமர்சிக்கும் தகுதியை இன்று நவீன இலக்கியவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் இழந்துவிட்டோம். ஏனென்றால் நவீனப் படைப்பாளிகளே ஒரு பக்கம் இலக்கிய லாபி ஊழலில் ஈடுபடுகிறார்கள். இன்னொரு பக்கம் (ஒன்றிய / மாநில) ஆளும் அரசின் நிலைய வித்துவான்களாக மாறுகிறார்கள். சரி நேரடியாக இப்படி இலக்கிய, அரசியல் லாபியிங் செய்யாதவர்களாகத் தேடி எடுத்து ஆதரிக்கலாம் என நினைத்தால் அவர்களும் இரவோடு இரவாக தலையில் துண்டு போட்டுக்கொண்டு மறைமுகமாக இத்தகைய குழுக்களில் போய் இணைந்து கொள்கிறார்கள். தமிழில் தலைசிறந்த படைப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஞானபீடம் கொடுங்களேன் எனப் பட்டியலிடலாம் எனப் பார்த்தால் அவர்கள் தமக்கான மறைமுக முகவர்களாக, விளம்பர மாடல்களாக நம்மை மாற்றி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. மனிதர்கள் பரஸ்பரம் பயன்படுத்தலாம், ஆனால் அதையே ஒரு தொழிலாக்கி, கம்பெனியாக்கி, பிராஞ்சைஸ் அளவுக்குக் கொண்டு போகக் கூடாது. இலக்கியத்தைப் "பயன்படுத்துவது" தப்பு. இலக்கியத்தை எழுதவும் பேசவும் நேசிக்கவும் அதன் மகத்துவத்தைப் பரப்பவும் வேண்டும். ஆனால் அதை எப்படிச் செய்வது என்ற தெரிய முடியாத அளவுக்கு இலக்கியத்தை ஆசிரமமாக்கி ஜக்கிவாசுதேவ் லெவலுக்கு எடுத்துப் போகிறோம். வைரமுத்துவை விட இவர்களால்தான் இலக்கியத்துக்கு ஆபத்து.

இலக்கியத்தை வைத்து ஊழல் செய்தால் என்ன நல்ல இலக்கியம் வளருமே என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தை வைத்து ஊழல் செய்தால் யாராலுமே நல்ல இலக்கியம் எழுத முடியாமல், சுதந்திரமாக எழுத முடியாமல் போகும் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் இன்னொருவர் கழுத்தின் மீது கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலே இருப்பவர்கள் "என் தயவு உனக்குத் தேவைப்படும்" எனச் சொல்லாமலே உணர்த்துகிறார்கள். டிரம்பின் ஏவுகணைகள், டுரோன் தாக்குதல்களைப் போல நம் இலக்கிய அமைப்புகளை உருவாக்குவோர் விருது, பயணம் ஆகிய அனுகூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். இலக்கியம் எழுதுகிற நிம்மதியான சூழல் போய் எல்லாருமே பொய் சொல்லவும், ஜால்ரா போடவும், அரசுக்கு சதா இணங்கிப் போகவும், அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருக்கவும் முயல்கிற சூழல் இன்று ஏற்பட்டிருக்கிறது. சிலர் தம் கொள்கைக்கு இணக்கமான எம்.எல்.ஏ, எம்பிக்களின் கறுப்புப் பணத்தை இத்தகைய இலக்கிய அமைப்புகளின் பெயரில் நிலமாக வாங்கி முதலீடு செய்வதாகவும், அதன் மீது கேள்வி எழாதபடிக்கு நிகழ்ச்சி நடத்தி விருதுகள் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டேன். நம்மூரில் பிரசுரிக்கப்படுவனற்றை விட கேள்விப்படுபவையே உண்மையாக இருப்பதால் நம்பவே தோன்றுகிறது. ஒரு எழுத்தாளர் எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுக்க பணம் வாங்கும் வேலையைச் செய்கிறார் என்றும் செய்தி பார்த்தேன். இத்தகையவர்கள் தாம் எழுத்தாளர்கள் எனும் பெயரில் நம் மத்தியில் இருக்கிறார்கள். நமக்கு என்ன தகுதி உள்ளது?
ஒரு எழுத்தாளரின் முன்னேற்றம் என்பது பணம், விருது, வெளிநாட்டுப் பயணம், நடிகர்களின் இலக்கியப் பரிந்துரை, அமைச்சர், முதல்வர் போன்றவர்களுடனான நெருக்கம், இளைஞர்களை மதத்தையும் இலக்கியத்தையும் கலந்து பேசி மூளைச்சலவை செய்து தம் அடிமையாக வைத்துக் கொள்வது, எல்லா இடங்களிலும் தனக்குக் கைகள் இருப்பதாகக் காட்டிக் கொள்வது அல்ல. இத்தகையோரின் தளபதிகளாக தம்மை மற்றவர்கள் காட்டிக் கொள்வதும் அல்ல.
இலக்கியம் படைக்க துணிச்சலான, சுதந்திரமான, நேர்மையான மனநிலை வேண்டும். நான் எழுதுவது யாரையாவது புண்படுத்துமா, யாரையாவது இன்புற வைக்குமா, நான் எழுதுவதை வைத்தும், என் நடவடிக்கைகளை வைத்தும் முன்னேற முடியுமா என்று யோசிக்கும்போதே நாம் இலக்கியத்தில் இருந்து விலகிவிடுவோம். அத்தகையோர் கட்சியில் சேர்ந்து வேலை பார்த்து உருப்படியாகத் தம்மை முன்னேற்றலாம். கட்சியில் உள்ள கட்சிக்காரர்களை விட இலக்கியத்தில் உள்ள கட்சிக்காரர்கள் அதிகரித்து விட்டார்கள். நாம் இவ்வளவு சுலபத்தில் விலைபோகக் கூடியவர்கள் எனத் தெரிவதற்கு சில ஆண்டுகளே தேவையிருந்தன. பணம், அதிகாரம், புகழைக் காட்டியதும் அடிபணிந்து விட்டோம்.
அப்பட்டமாகவே ஒரு கட்சிக்காக சிலர் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கையில் இவர்கள் இத்தனைக் காலமும் எங்கு போயிருந்தார்கள் எனும் கேள்வி வருகிறது. கட்சி ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்காரர், வராவிட்டால் அரசியலற்ற தீவிர எழுத்தாளர். எழுத்தாளரையும் எழுத்தையும் பிரிக்கவே முடியாதபடி எழுத்தாளர்கள் தம் உடலை விற்பனைக்கு வைக்கிற காலத்தில் வாழ்கிறோம். ஒரு சக-எழுத்தாளராக எனக்கு இச்சூழல் மீது மிகுந்த கசப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் பணம், ஒரு பயணம், ஒரு விருது, ஒரு நடிகரின் அணுக்கம், அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் இதற்காக ஏன் இவ்வளவு ஏங்குகிறோம்? நமக்கான பணத்தை நாமே சம்பாதித்து நமக்கான பயணத்தை மேற்கொள்ளலாமே, நண்பர்களிடம், வாசகர்களிடம் பணம் வாங்கியும் போகலாம், நாமே வீடு கட்டிக் கொள்ளலாமே, அல்லது நேரடியாகக் கேட்கலாமே நேரடியாக ஒரு கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை வெல்லலாமே... ஏன் அதற்காக இலக்கியத்தைப் பணயம் வைக்க வேண்டும்?
இந்தச் சீரழிவுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் வைரமுத்துவுக்கு ஞானபீடம் கொடுத்தது ஒரு பெரிய சீரழிவாக நான் பார்க்கவில்லை. அவராவது அதை வாங்கி வைத்து விளம்பரம் பண்ணிவிட்டு தன் பாட்டுக்கு இருப்பார். இவர்களோ அதைக் கொண்டு இன்னும் பலரை மிரட்டி ஆள் சேனை அம்பு சேர்த்து ஊழல் செய்வார்கள்; கொஞ்சமாவது எழுதிக் கொண்டிருந்த இலக்கியத்தையும் விட்டுவிடுவார்கள்.
அகாடெமி விருதையும் அரசு ஒரேயடியாக அடுத்த பத்தாண்டுகளுக்கு நிறுத்தி வைத்தால் இலக்கியச் சூழல் மேம்பட்டு விடும் என நினைக்கிறேன். ஒரே ஒரு கனவு இல்லத் திட்டம் வந்ததும் எவ்வளவு லாபியிங், ஊழல், குழப்பங்கள். கட்சித் தலையீடு இருக்கிறது என்று சொல்லித்தானே ஒன்றிய அரசு கடந்த ஆண்டுக்கான அகாடெமி விருது அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறது? புக்கர், நோபல் பரிசுகளால் கூட உலக இலக்கியத்துக்கு பாதிப்பு வந்ததில்லை. ஆனால் நம்மூரில் விருதுகள் ஏற்படுத்திய சாதகங்களை விடப் பாதகங்களே அதிகம்.
ஞானபீடம் இல்லாமல் இருந்தாலே நம் எழுத்தாளர்கள் ஞானிகளாக இருப்பார்கள். பித்தளை பீடம் கிடைத்தாலே போணியாகிறவர்கள் ஞானபீடம் கிடைத்தால் என்னவாவார்கள்? இவர்கள் குடோனில் இருப்பதே நல்லது.
நம் ஆசான்களோடு ஒப்பிடுகையில் வைரமுத்துவால் இலக்கியத்துக்கு எந்த ஆபத்தும் வந்ததில்லை. அவர் பாட்டுக்கு தானுண்டு பாட்டுண்டு மீடூ உண்டு, ஸ்டாலின் விடு தூது, மோடி விடு தூது உண்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். நம் இலக்கியவாதிகள் சின்ன அளவில் செய்வதை அவர் பெரிய அளவில் செய்பவர். அவரால் நமக்கு எந்தப் பாதகமும் இல்லை. அதனால் அவர் 'தீவிர இலக்கியவாதி' ஆகாதவரைக்கும் என் ஆதரவு அவருக்குத்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...