முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வாதிகாரத்தின் குரல் அக்கறையாகவே தென்படும்

 


//வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.
இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும்.// - ஜெயமோகன்"

என்னப் பிரச்சினை என்றால் ஜெயமோகன் அளிக்கும் விருதோ அவரது பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படும் விருதுகளோ எழுத்தாளர்களை நாவற்றவர்களாக மாற்றுகின்றன, ஒருவித கண்காணிப்புப் பிரதேசமாக, போலீஸ் ஸ்டேட்டாக தமிழ் இலக்கியத்தை மாற்றுகிறது. அவரது பாசிசப் போக்கு இங்கு சுதந்திரமான உரையாடலுக்கு பெருத்த அடியாக இருக்கிறது. அவரது கூட்டங்களில் கைகட்டி அமர்ந்து பழகுவோர் பிறகு எங்கும் மனம் திறந்து பேசவோ எழுதவோ முடியாதவர்கள் ஆகிறார்கள். அவர்கள் எதிர்ப்புணர்வை இழந்தால் ஒழிய அவர் 'அளிக்கும்' பரிசுகளை, விருதுகளைப் பெற இயலாது. ஜெயமோகன் ஒவ்வொரு படைப்பாளிக்கு விருது கொடுக்கும்போது பூனையின் நகங்களைப் பிடுங்கிவிட்டு அதைப் பதுமையாக்குவதைப் போலத்தான் அவர்களைத் தன்வயப்படுத்தி மேடையில் முன்வைக்கிறார். ரமேஷ் பிரேதனுக்கு உதவுகிறேன், கௌரவிக்கிறேன் எனும் பெயரில் அவரை இவர் அவமதித்ததை மறக்க முடியாது.
அதைப் பார்ப்பவர்களும் அதன்பிறகு வாயை மூடிக் கொள்வது, ஜெயமோகனைப் பிரதியெடுப்பது, ராணுவ ஒழுங்குடன் பின்தொடர்வதுதான் தம்மை முன்னேற்றும் என உபமனத்தில் நம்பத் தொடங்குகிறார்கள். ஏனென்றால் மற்ற விருதுகள், இலக்கிய இயக்கங்களைப் போல் அல்லாது அவர் வழங்கும் விருதுகளும் நடத்தும் இயக்கமும் அவரை மையமிட்டு அவரைப் புகழ்ந்தே வழங்கப்படுகின்றன, நடத்தப்படுகிறது. அவரது எல்லா கேடுகளும் ஹிட்லர்தனங்களும் அவற்றிலும் கலந்து விடுகிறது.

ஜெயமோகனின் பெரிய பிரச்சினை அவருக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, அடுத்தவர்கள் இடத்தில் தன்னை வைத்துப் புரிந்துகொள்ளும் திறனும் இல்லை என்பது. இயல்பிலேயே ஹிட்லருக்கு இருந்த மிகை தன்மதிப்பு, வெறுப்பின் அடிப்படையில் சதா சிந்திப்பது, இருமையாக உலகைப் பாவிப்பது ஆகிய குணங்கள் இவரிடமும் உண்டு. இந்த வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தையும் பாருங்கள், முழுக்க முழுக்க அவர்கள் vs நாம் எனும் முரணெதிர்வையே கட்டமைக்கிறார். அதோ அங்கே ஓடுகிறவன் துரோகி, நம் மதத்தை வெறுப்பவன் , அவனை நோக்கிக் கல்லெறியுங்கள், நாமெல்லாம் உத்தமர்கள், அவனைப் பிடித்து அடித்துக் கொல்லுங்கள் எனும் இந்த முரணெதிர்வு தர்க்கம் ஆர்.எஸ்.எஸ்ஸின் எல்லா முழக்கங்களிலும் உண்டு. அதை ஜெயமோகன் அதோ ஓடுகிறவன் நம் இலக்கிய மேன்மைக்கு விரோதி, அவனைக் கல்லெறியுங்கள், அவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னிடம் இணையுங்கள், செயல்படுங்கள் என மாற்றுகிறார். இதைத்தான் ஹிட்லரும் பயன்படுத்தினார். இது சுயபரிசீலனையை, சுயவிசாரணையை, கேள்வியை மறுக்கும் போக்கு. இது ஜனநாயக விரோதமான ஒரு உத்தி.

ஆக, ஜெயமோகன் இங்கு முன்வைக்கும் சீர்திருத்த நடவடிக்கை எனக்கு மோடியின் பொருளாதார, கலாச்சார சீர்திருத்தங்களைத்தாம் நினைவுபடுத்துகின்றன. எந்த உரையாடலும், ஜனநாயக நடைமுறைகளும் இல்லாத மேல்-கீழ் படிநிலையை வலியுறுத்துகிற எதேச்சதிகார முயற்சிகள். அதனாலே, வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் செய்வதை விட ஜெயமோகன் செய்வது இன்னும் பல மடங்கு ஆபத்தானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பண்பாட்டுத்தளத்தில் ஜனநாயக விழுமியங்களை ஒழித்து ஒற்றை மைய, எதேச்சதிகாரப் போக்கை நிறுவுவதே ஜெயமோகனின் நோக்கம், அவருக்கான இடுபணி. பாஜக தேசிய அளவில் செய்வதை அவர் இங்கு பண்பாட்டுத் தளத்தில் செய்ய முயல்கிறார்.

"குற்றமும் தண்டனையும்" நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் நாட்டில் உள்ள அத்தனை அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமையின் கொடுமைகளைப் பட்டியலிட்டுவிட்டு இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கொலை செய்யப் போகிறேன் என்பான். எனக்கு ஜெயமோகனின் கொந்தளிப்பான வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தைப் பார்க்கையில் அதுதான் நினைவுக்கு வருகிறது. சர்வாதிகாரத்தின் குரல் ஆரம்பத்தில் அக்கறையாகவே தென்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...