முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விழிப்பின் ஒத்திசைவு


 

நேற்றைக்கு முந்தின தினத்துக்கு முந்தின தினம் ஒரு பத்தியை எழுதினேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் நாயகன் தன் காதலியின் தகப்பனாரைப் பார்க்கப் போகிறான். இருவருக்கும் இடையில் மோதல். அவன் திரும்ப தன் வீட்டுக்கு வந்த பின்னர் அவளைக் குறித்து யோசிக்கிறான். நேற்றைக்கு முந்தின தினமும் நேற்றும் இதற்கு அடுத்தப் பகுதியை, அடுத்தடுத்தக் காட்சிகளைத்தாம் எழுத உத்தேசித்தேன். ஆனால் எழுத உட்கார்ந்ததும் முந்தின தினம் எழுதியதைத் திருத்தத் தோன்றியது. நான் எப்போதும் இதைச் செய்வதில்லை. விட்ட இடத்தில் இருந்து ஒரு பாம்பு சாலையைக் கடப்பதைப் போல எழுதிவிடுவேன். வேறு சில தினங்களிலோ எழுதியதையே மீளமீள திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். இதற்கு ஒரு காரணம் என் உபமனத்தில் ஏனோ அப்பகுதி நிறைவற்ற ஒரு உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதே என நினைக்கிறேன். அதாவது மொழியிலோ உணர்விலோ தொனியிலோ கருத்திலோ ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தி வரவில்லை எனும் உணர்வு. இந்நாவல் கதைசொல்லியின் மனப்போக்கும், அகவுலகமும் சந்திக்கும் நெருக்கடியைக் குறித்தது என்பதால் அவரது தரப்பே முக்கியம். அவன் பார்வையை மட்டுமே நான் முன்வைக்கிறேன். அதேநேரம் நாயகியும் அவளது அப்பாவும் முழுமை பொருந்திய பாத்திரங்களாகவும் இதற்குள் வரவேண்டும். இச்சவாலையும் சமாளித்தாக வேண்டும்.


நேற்று எழுதும்போது இந்த இரு பாத்திரங்களின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு என்னால் சரியாகக் கொண்டு வர முடிந்தது எனத் தோன்றியது. அதுவும் நேற்று என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகம். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் சில வார்த்தைகளை உள்ளிட்டேன். வாக்கியங்களை மாற்றி எழுதினேன்.
மாலை வீட்டுக்குப் போனால் கடும் களைப்பு. தூக்கம் கண்ணைச் சொருகிக் கொண்டு வருகிறது. தூங்கிவிட்டால் இரவுணவு தாமதமாகும். அதன்பிறகு உறங்குவதும் தாமதமாகும் என்பதால் முடிந்தளவுக்கு நேற்று மாலை உறங்குவதைத் தவிர்த்தேன். ஆனாலும் எப்படியோ ஒரு மணிநேரம் என்னை மறந்து உறங்கிவிட்டு எழுந்து இரவுணவை முடித்தேன். ஏனோ தூங்கத் தோன்றவில்லை. ஒருவித நிம்மதியின்மை.

சிறிது நேரம் யுடியூப் பார்த்தேன். அதன்பிறகு நாவலுக்குத் தன்னிச்சையாகச் சென்று ஏற்கனவே மீளெழுதிய பத்தியைத் திருத்தினேன். சில வார்த்தைகளை மாற்றத் தொடங்கி அப்படியே வர்ணனைக்குள் சென்றுவிட்டேன். நான் உருவாக்கி வைத்திருந்த சந்தர்ப்பத்தில் ஒருவித கடுமையான அழுத்தம் நாயகனுக்கு ஏற்படுகிறது. அவன் அப்போது என்ன செய்வான்? இதற்கு எனக்குச் சில புதிய பதில்கள் கிடைத்தன. ஏதோ என் மொழியே சட்டென இறகுகள் விடுபட்டுப் பறந்து எழுகிற உணர்வு. எழுத எழுத என்னால் நாயகனின் மனத்தில் என்ன தோன்றுகிறது எனத் தெளிவாகக் காண முடிந்தது. அவனது முரண்பாடுகளை வெளிக்கொணர முடிந்தது. அதையெல்லாம் சொல்வதற்கான செறிவான மொழியும் தானே தோன்றியது. சில பகுதிகளில் நாவலுக்கு மென்மையான எடையற்ற மொழியும் சில பகுதிகளில் கனத்த அடர்த்தியான மொழியும் அவசியம். அது சரியாக இடத்தில் அவ்வாறு தோன்றுவதும் முக்கியம். இதையெல்லாம் நான் எழுதவில்லை, என் உபமனமே சிந்தித்துச் செய்கிறது என்பதும் நேற்று எனக்குப் புலப்பட்டது. அதனால்தான் அது என்னை அடுத்த கட்டத்துக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது என்பதும் புரிந்தது.
இது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதேநேரம் என் உபமனம் என் நாவலின் கதையையும், அதற்குத் தேவையான கற்பனையையும், தர்க்கத்தையும், மொழியையும் பரிசீலிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது, அதற்கு என்னிடம் பேசுவதற்கான சரியான நேரம், காலமும் அமைய வேண்டிக் காத்திருக்கிறது. எழுதுவது என்பது அதற்கான அவகாசத்தைத் தொடர்ந்து அளித்து அதை ஒரு சிறுதெய்வத்தைப் போல ப்ரீதி பண்ணுவதுதான். தெய்வத்தின் கண்கள் ஏதோ ஒரு கணத்தில் விழிக்கின்றன. அப்போது நம் கண்களும் ஒரே சமயத்தில் விழிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...