திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களைப் பற்றி யாராவது புலம்புவது கேட்கும்போது எனக்கு அதில் தேநீர்க் கோப்பையில் நுரையளவுக்கே உண்மையிருக்கும் எனத் தோன்றும். நடிகர்கள், பொழுதுபோக்காளர்களுக்குத் தம் திறமையைக் காட்ட ஏராளமான தளங்கள் வந்துவிட்டன. ஆனால் எழுத்தாளர்களுக்கு மிகவும் குறைவும். அவர்கள் சிலநேரங்கள் வெளிச்சம் பெற வெகுஜன இதழ்களை எதிர்பார்த்திருப்பதாகத் தோன்றும். அது உண்மையல்ல - நான் இதுவரை வெகுஜன இதழ்களில் அதிகம் எழுதியதில்லை. இந்த வாய்ப்பின்மையால் நான் எதையும் இழக்கவும் இல்லை. சில ஆயிரங்கள் விற்கும் நடுநிலை இதழ்கள், இணைய இதழ்களிலேயே எழுதி நான் நிலைப்பெற்றேன். சமூக வலைதள கவனிப்புக்காக நான் என் எழுத்தில் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. துளிகூட சமரசம் பண்ணவில்லை. அதனால் என் வாசகர்கள் அமையாமல் போகவில்லை. நான் இவ்விசயத்தில் உதிரியும் அல்லன். பலர் என்னைப் போலவும் என்னைவிட பரவலாகவும் வெகுஜன தளங்களுக்குப் போகாமலே வாசகர்களைப் பெற்றிருக்கிறார்கள்.
வாசகர்களிடம் எப்போதுமே ஒருவித முட்டாள்தனமும் புத்திசாலித்தனமும் ஒருசேர இருக்கும். ரொம்பச் சாதாரணமான விசயங்களை மாய்ந்து மாய்ந்து ரசிப்பார்கள். ரொம்ப முக்கியமான விசயங்கள் மறைந்திருந்தாலும் கண்டறிந்து குறிப்பிடுவார்கள். ஆகையால் எழுத்தாளராக ஒருவர் 'உயிருடன்' இருக்கும்வரைக்கும் ஒரு படைப்பின் தீவிரத்தையும் சாத்தியத்தையும் பொறுத்து அதற்கான வாசகர்கள் தேடி வருவார்கள் என நம்புகிறேன். ஒன்று வேறெங்கும் இல்லாதபோது, அதற்கு ஒப்பாக மற்றொன்று இல்லாதபோது அதற்கென ஒரு தனி மதிப்பு உருவாகத்தான் செய்யும். இதைச் சாத்தியமாக்கும்படி தொடர்ந்து உழைப்பதும் செயல்படுவதுமே வாய்ப்புகளைப் பெறுவதைவிடக் கடினம் எனத் தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஒரு வணிக இதழில் அதற்கே உரிய அழகியலையும் டெம்பிளேட் தேவைகளையும் பொறுத்து கதையொன்றை எழுதிக் கொடுத்தால் பிரசுரிப்பார்கள். அதன்பிறகு அந்த டெம்பிளேட் எழுத்துக்கென்றே டெம்பிளேட் வாசகர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அங்குலம் கூடப் பிசகாத எந்திரத்தனமான வாசிப்பாக அது இருக்கும். அடுத்தடுத்து இம்மாதிரி பத்திரிகைகளுக்கு ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கலாம், அது ஒருவித உற்பத்தி என்பதால் பெரிய சவால்கள் இருக்காது. இதை நான் படைப்பூக்கமான எழுத்தென்று அழைக்க மாட்டேன். இது திட்டமிட்டுச் செய்யும் குறைந்த சவால் கொண்ட ஒரு உற்பத்திதான். கதை ஆரம்பிக்கும்போதே இப்படித்தான் எழுத முடியும், இப்படித்தான் முடியப் போகிறது என எழுத்தாளருக்குத் தெரிந்திருக்கும்.
உண்மையான உழைப்பும் சவாலும் நம்மிடம் நாம் நேர்மையாக இருந்து நம்மைத் தொந்தரவு செய்யும் ஒன்றை ஆழமாகப் பேசுவதற்கான உருவகம் / குறீயீட்டை நம் கதைமொழியின் அமைப்பிலோ அணியிலோ கண்டறிவது. காப்காவின் கதையுலகில் அதிகார வர்க்கத்தின் விசாரணை முறைமைகள் ஒருவிதமான ஆன்மீக அலைகழிப்புக்கான, அகப்பயணத்துக்கான குறியீடாக வருகின்றன. அவர் தன் அகவுலகின் இருண்மையைக் கண்டு திகைத்துப்போய் நிற்பதை, தொடர்ந்து தன் இருத்தலின் கனத்தைத் தோளில் சுமப்பதைப் பேச ஒரு குறியீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அதற்காகவே தன் புனைவு மொழியை அவர் ஒரு குதிரையைப் போலச் செலுத்திக் கொண்டே இருக்கிறார். இதுவே உழைப்பு, படைப்பூக்கமான உழைப்பு. இப்படி உழைத்து ஒன்றைக் கண்டறிகிறவர் அவருக்கே உரித்த வாசகரையும் பெற்றுவிடுவார். இது தன்னியக்கமாகவே நடந்துவிடும். அவர் தேடிப் போய் பிடிக்க வேண்டியதில்லை.
இது ஏன் மிக மிகக் கடினம் என்றால் இது ஒருவர் தன் அகத்தின் நிழல்வெளிக்குள் தேடிப் போகிற பின்னோக்கிய பயணம். அது அச்சத்தைக் கொண்டு வருகிறது. மொழியெனும் புரவியின் ஒவ்வொரு குளம்பொலியிலும் நாம் அஞ்சிப் பின்வாங்குகிறோம். நிச்சயமின்மையும் கவலைகளும் நம்மைச் சூழ்கின்றன. மேலும் நாம் அதிக நேரம் செலவழிக்கும் புறவுலகம் நம்மை நமது அகப்பயணங்களில் இருந்து வெளியேற்ற கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. வேலை, வேலைக்கான தயாரிப்புகள், வேலையைக் குறித்த கவலைகள், உறவுகள், பயணம், உடல் பிரச்சினைகள், உடல் வலி, உடற்பசி, வயிற்றுப் பசி, பலவிதமான சமூகப்பசிகள், இல்லாதவை குறித்த எப்போதும் அரற்றுகிற மனம் ஆகியவற்றைக் கடந்தே மொழிக்குள் நாம் பயணிக்க வேண்டி உள்ளது. ஒரு மணற்காற்று சலனமற்றிருக்கும் ஒன்றை சில நாட்களில் மூடி மறைத்து விடுவதைப் போல வெளியுலகம் நம் படைப்பு மனதை, நம் அகப்பயணத்தின் தளவாடங்களை மூடி மறைத்துவிடும். எனக்கு தினமும் நாவலை எழுதும்போது நாம் இந்த உலகுக்குத் தேவையான முக்கியமான பணியை ஆற்றினாலும் அதை நாம் செய்வதை உலகம் விரும்பவில்லை என்று தோன்றும். அதை நோக்கிய பயிற்சிகள், அதற்கான அறிவு, ஆலோசனைகள், வழிகாட்டும் கட்டமைப்புகள் எங்குமே இல்லை. ஆனால் நீங்கள் ஒரு தயிர்சாதம் கிண்ட வேண்டும் என நினைத்தால் அதற்கான உபகரணங்களை உங்கள் கையே கண்டடைந்து விடும். பாத்திரம், கரண்டி, வேகவைத்த சாதம், தயிர், தாளிப்பு, எண்ணெய், அடுப்பு. நம் உடல் இப்பணிக்கு ஈடுகொடுத்தால் பணி தானே நடந்து முடியும். நீங்கள் உங்கள் மீசையைக் கத்தரிக்க நினைத்தால் அதற்கும் தோதான உபகரணங்களும் சூழலும் கிடைக்கும். இதை ஹைடெக்கர் கைக்கு உதவியான சூழல் (“ready-to-hand” (Zuhandenheit)) என்றார். ஆனால் அகவயமான தேடல்களுக்கு எதிரான அசைவுகளும் கட்டமைப்புகளுமே இவ்வுலகில் அதிகம். தோதானவை எங்குமே இல்லை. நீங்கள் எங்கே எப்படிப் போவது எனத் திகைத்து நில்லாமல் அப்பயணத்தை ஆரம்பிக்கவே முடியாது. இதற்கான உழைப்பே உலகில் மிகப்பெரியது. இலக்கியப் புகழ், கவனம், கூட்டம், பயணம் ஆகியவற்றைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்ய முடியும். ஆனால் இதை அவ்வாறு ஒருங்கிணைக்க இயலாது.
வாசகர்களும் இப்பயணத்தை எதிர்நோக்கியே காத்திருக்கிறார்கள் எனத் தோன்றும். எனக்கு கூட்ஸியின் "பீட்டர்ஸ்பெர்க்கின் நாயகன்" நாவலில் வரும் சில பிரேத உலக நடவடிக்கை வர்ணனைகளை, கனவு போலப் பேசப்படும் சம்பவங்களைப் படிக்கும்போது நான் அதற்காகவே காத்திருந்ததாகத் தோன்றியது. இது என்ன, எதற்காக வருகிறது என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆக வாசகர்களும் எழுத்தாளர்களும் எங்கு சந்திக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி வாசிக்கும் முன்னமே தெரிந்திருக்கிறது எனும் கேள்விகள் எனக்கு எழுந்தன. ஆக வாசகர்கள் என்பவர்கள் புத்தக விற்பனையின் எண்ணோ ராயல்டி தொகையோ அல்லர். அவர்களை நாம் இலக்கியக் கூட்டங்களிலோ நூல்களை ஒப்பமிட்டுக் கொடுக்கும் விற்பனைச் சந்திப்புகளிலோ நாம் பார்ப்பதில்லை. நமது படைப்பு வெளியாகும் இதழின் சர்க்குலேஷனிலும் அவர்கள் இல்லை. அவர்கள் நாம் ஒரு படைப்பை எழுதும் முன்னரே நம்முடன் இருக்கிறார்கள். நாம் ஒரு படைப்பை எழுதும் முன்னரே அது நம் மனதுக்குள் உருப்பெற்று வளர்ந்து நாம் அதை எழுதும் கணத்துக்காகக் காத்திருப்பதைப்போல அவர்களும் தம் மனதுக்குள் அப்படைப்பைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். வாசகர்கள் ஒரு புத்தகத்தைத் தேடுவதில்லை, இன்னதென்றே தெரியாத சில குறியீடுகளையும் தோற்றப்பாடுகளையும் அவற்றின் வழி தம் இருத்தலையுமே தேடுகிறார்கள்.
உண்மையான திறமை ரசிக்கத்தக்க, நிஜமெனத் தோன்றத்தக்க ஒரு கதையை எழுதுவது அல்ல. நம் அகத்தினுள் புலப்படாத பிரதேசங்களில் அச்சமூட்டும் பயணமொன்றை மேற்கொண்டு அப்போது கிடைக்கும் திறப்புகளை மொழியில் குறியீடாகச் சித்தரிப்பதே அது. (அப்படிப் பார்க்கையில் கதைசொல்லி என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான சொல்லாடலாக இருக்கிறது.) சில மொழிகளில் நாம் எழுதும் படைப்பு அதற்கான வாசகர்களைப் பெறாமல் இருக்கக் கூடும். உதாரணமாக, ப்ரூஸ்டின் "தொலைந்த காலத்தைத் தேடி" நாவலை எந்த மொழியிலும் எல்லாரும் படிக்கப் போவதில்லை. மொழிபெயர்ப்புகள் ஒருவேளை நம் மொழிக்கு அப்பால் வாசகர்களைக் கொணரலாம். ஆனால் அது பொருட்டும் அல்ல. ஒரு படைப்பு தோன்றும் முன்பே அதன் வாசகர் தாம் அதைப் படிக்குமுன்னே அதற்காகவே தாம் தோன்றியிருப்பதை அறிவர்.
நான் இதையெல்லாம் எழுதிக் கொண்டு போகும்போது எனக்கு வேடிக்கையாக ஒரு தெலுங்குப் படம் நினைவுக்கு வருகிறது - "மகதீரா": காதலர்கள் கடந்த பிறவியில் இருந்து இப்பிறவி வரையிலும் காதலின் நினைவிலே தோய்ந்திருப்பது, பரஸ்பரம் கண்டதுமே அவர்களுக்குத் தாம் ஏற்கனவே கண்டுள்ளதை உணர்வது, அந்த உணர்வில் இணைவது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. எழுத்தாள-வாசக உறவு அப்படியான ரொமாண்டிக்கான ஒன்றுதான்.
Comments