ஐ.பி.எல் போட்டிகளைத் தீர்மானிப்பது சிக்ஸர்களின் எண்ணிக்கையே. எல்லா போட்டிகளிலும் 10-18 சிக்ஸர்களை அடிக்க ஒவ்வொரு அணியும் உத்தேசிக்க வேண்டும். கூடுதலாக 8-10 பவுண்டரிகளும் வந்துவிடும். அதாவது 3.2 ஓவர்களில் 100 ஓட்டங்கள். மீத 16.4 ஓவர்களில் ஒரு அணி 100 ஓட்டங்கள் ஓடியே எடுத்தாலும் 200 ஓட்டங்கள் கிடைத்துவிடும். இதைக் கேட்க மலைப்பாக இருக்கும். ஆனால் 3.2 ஓவர்களை 20 ஓவர்களாகப் பரப்பினால் இரண்டு ஓவர்களுக்கு ஒரு சிக்ஸர்தான் தேவை. சில போட்டிகளில் கூடுதலாக 4-5 சிக்ஸர்க்ள் அடித்தாலே அந்த அணி சுலபமாக தகுதிப் போட்டிக்குச் சென்றுவிடும். ஓட்ட விகிதம் (நெட் ரன் ரேட்) மற்றும் சில வெற்றிகள் அதற்கு உதவும். இதைச் செய்யாத அணிகள் - பவுண்டரி அடிப்பது, ஒற்றை ஓட்டம் எடுக்கிற, கடைசி 5 ஓவர்களில் சிக்ஸர் அடிக்க உத்தேசிக்கிற அணிகள் - சில வெற்றிகளை ஈட்டினாலும் சராசரி ஓட்ட விகிதம் காரணமாக வெளியேறி விடும்.
இதுதான் நவீன டி20 போட்டியின் பார்முலா. இந்த சூட்சுமத்தை உணர்ந்த அணிகள் நல்ல பந்து வீச்சையும் கொண்டிருந்தால் நிச்சயமாகக் கோப்பையை அடிக்கும்.
ஒரு பார்வையாளராகவும் ஒரு அணி வெல்லுமா எனப் பார்க்க சிறந்த வழி அது எவ்வளவு சிக்ஸர்களை அன்று அடிக்கிறது என்பதை கவனிப்பதுதான். முதல் பத்து ஓவர்களில் 10 சிக்ஸர்களை அடித்துவிட்டால் அந்த அணி வெற்றியை நோக்கிப் போகிறது. அடுத்த பத்து ஓவர்களில் அதன் பிறகு 5 சிக்ஸர்களாவது கிடைத்தால் 240 நிச்சயம். வெற்றி மடியில் விழும். அல்லாவிட்டால் விரட்டி ஆடும் அணி எத்தனை சிக்ஸர்களை பவர் பிளேயில் அடிக்கிறது, முதல் 15 ஓவர்களில் எவ்வளவு சிக்ஸர்கள் அடிக்கிறது எனப் பார்த்தாலே போதும். நான் இன்னிங்ஸில் எவ்வளவு ஓட்டங்கள் எனப் பார்க்கவே மாட்டேன். அது ஒரு பழைய அணுகுமுறை.
Comments