Skip to main content

ஏன் 'சோம்பேறியாக' இருப்பது அவசியம்?


 

உடல் ஆரோக்கியம் என்பது காலையில் பூங்காவில் நடப்பதோ ஜிம்மில் எடை தூக்குவதோ டயட் இருப்பதோ அல்ல என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது. இளமையிலேயே மோசமாக உடல் பாதிக்கப்படுவோர், மரணமடைவோரைப் பார்க்கையில் இந்த எண்ணம் வலுப்படுகிறது. மன அழுத்தம், நெருக்கடியை, பதற்றத்தை மற்றொரு காரணமாக முன்வைக்கிறார்கள். ஆனால் இவை எங்கிருந்து வருகின்றன என யாரும் கேட்பதில்லை. வேலையில் இருந்து. ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட தரவொன்று இப்படிச் சொல்கிறது - ஒரு நாளை எட்டு மணிநேரம் உழைக்க வேண்டும் என்பது விதிமுறை. அதைத்தாண்டி நாம் போடும் ஒவ்வொரு மணிநேர உழைப்பும் (அவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் குவிவதால்) நம் வாழ்வில் இரண்டு ஆண்டுகளைக் காவு வாங்குகின்றன. உடல் உழைப்புக்கு ஒரு வரம்பு உண்டு. 10-16 மணிநேரங்கள் உடலுழைப்பில் ஈடுபட்டால் அதன் எதிர் விளைவு உடனடியாகத் தெரியும் என்பதால் யாரையும் அவ்வாறு வலியுறுத்த முடியாது. அத்தகைய உழைப்பாளிகளுக்கு சங்கமும் சட்டப்பாதுகாப்பும் உண்டு. ஆனால் மூளையுழைப்பிற்கு அத்தகைய வரைமுறைகள் இல்லை. இன்று 12-14 மணிநேரம் உழைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. வீட்டுக்காக, காருக்காக, குழந்தைகளின் படிப்புக்காக, வாடகை கொடுப்பதற்காக, சேமிப்புக்காக, வீட்டுச் செலவுகளை நடத்துவதற்காக, சமூக மதிப்பிற்காக, உயிர்வாழ்வதற்காக. நிறுவனங்களில் பணியாற்றுவோர் மட்டுமல்ல சுயதொழில் செய்வோருக்கும் இன்று இப்பிரச்சினை உண்டு. எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்குப் போதவில்லை. எனில் இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான்.

இந்த கார்டியன் இதழ் கட்டுரையைப் படியுங்கள் - அதிகமாக உழைக்காமல் மெத்தனமான வாழ்க்கையில் இருப்போரே அதிக ஆயுளுடன் இருக்கிறார்கள் எனச் சொல்கிறது (https://www.theguardian.com/.../live-long-lazy-britain...). 2007இல் 23,000 மேலான கிரேக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மதியத் தூக்கம் தூங்குவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 37% குறைவு எனத் தெரிய வந்தது.
நாம் அதிகமாக உழைக்கும்போது நம்மையே அறியாமல் நமது உடலும் மூளையும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. உடலைப் பொறுத்தமட்டில் அதிகமான உழைப்பு ஒருவித நெருக்கடியில் நிகழும்போது அது புத்துணர்வு ஊட்டப்படுவதில்லை, மாறாக ஒரு எதிரியிடம் இருந்து தப்பித்து ஓடுகிற உணர்வு அதற்கு ஏற்படுகிறது. தொடர்சசியாக தினமும் பல மணிநேரங்கள் எதிரியிடம் இருந்து ஓடிக்கொண்டிருக்கையில் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிற மனவுளைச்சல் வளர்வூக்கிகள் (ஸ்டிரெஸ் ஹார்மோன்கள்) தூண்டப்படுகின்றன. இதெல்லாம் நமக்கு நடப்பதை உணராமல் நாம் எந்திரத்தனமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் உடலுக்கும் ஒரு மனம் உண்டு (இது நம் 'மனம்' அல்ல). உடலின் மனதை உடலின் அணுக்களின் மனம் எனலாம். அவை நமக்குள் இருப்பது நாம் அவற்றை நன்றாக வைத்துக் கொள்வோம் என்றுதான். நீங்கள் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறீர்கள். அது ஒரு போர் நடக்கும் பகுதியில் இருக்கிறது. சதா இரவெல்லாம் குண்டு வெடிக்கும் சத்தம். நீங்கள் என்ன செய்வீர்கள். வேறு வீட்டுக்குப் பெயர்வீர்கள். தப்பித்து ஓடுவீர்கள். உடல் அணுக்களுக்கு தன்னழித்தல் பாங்கு உண்டு. அது தன்னை அழித்துவிட்டு மாய்ந்திட முயலும்போதே பல்வேறு வளர்சிதை மாற்ற உபாதைகளும் புற்றுநோயும் வருகின்றன என்பது என் புரிதல்.
உடலுக்குத் தேவை உழைப்பல்ல - உடல் தன்னியல்பில் ஓய்வையே அதிகமாக நாடுகிறது. உணவையும் பாதுகாப்பையும் தேடும் சூழல் மட்டுமே உடலை உழைக்கத் தூண்டும். நீங்கள் விலங்குகளை, பறவைகளைப் பாருங்கள். அவை இப்படி மணிக்கணக்காய் உழைப்பதில்லை. சிலமணிநேர உழைப்புக்குப் பின் பல மணிநேரங்கள் ஓய்வுதான். நான் என் வீட்டின் அருகிலுள்ள கட்டிடங்களின் கூரையிலும் மரக்கிளைகளிலும் தினமும் வருகிற குரங்குகளை கவனிக்கிறேன். அவை தூங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றன. ஏன் என்றால் அதிகமாக உழைக்க அதிகமான ஆற்றல் வேண்டும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தினால் அதனால் தசை வளரும் என நாம் நினைக்கலாம். அதற்கும் ஒரு வரையறை உண்டு. மன ஆற்றலுக்கும் அப்படித்தான். உழைப்புக்கு ஈடாக நம் உடலிலும் மூளையிலும் ஏற்படும் சேதாரங்களைச் சரி செய்ய நிறைய ஓய்வு அவசியம். அது 6-8 மணிநேர தூக்கத்தினால் மட்டுமே கிடைக்காது. முன்பு மனிதர்கள் இதைவிட அதிகமாக ஓய்வெடுத்தார்கள் என்பதே என் நம்பிக்கை. Witold Rybczynski எனும் பண்பாட்டு ஆய்வாளர் மத்திய கால ஐரோப்பாவில் மக்கள் மூன்றில் ஒரு மடங்கு காலத்தை ஓய்வில் செலவிட்டார்கள் என்கிறார். அன்று அதிகமான திருவிழாக்கள் இருந்தன. ஊரில் இருந்து நான் நகரத்திற்கு வந்ததும் கண்ட முதல் மாற்றமே அதிகமான உழைப்புதான். கிராமத்தில் உடலுழைப்பாளர்கள் கூட காலையில் சில மணிநேரங்கள், மதியத்திற்கு மேல் சில மணிநேரங்கள் என்றே வேலை செய்வார்கள். அதுவும் வாரத்திற்கு 6 நாட்களும் அல்ல. வேலையில்லாத நாட்கள் அதிகமாக இருக்கும். வேலையில்லாமல் வீட்டில் இருப்பது ஒரு அவமானமாக அங்கு இருந்ததில்லை. நகரத்தில்தான் வேலை நேரம் தன்மானமாக மாற்றப்படுகிறது - வேலையே பணம், பணமே சுயமரியாதை, சுயமரியாதையே சுதந்திரம் என்று ஆகிறது. ஆனால் நான் ஊரில் பார்த்த வாழ்க்கையில் பலரிடமும் நேரமும் தன் நேரத்தை தன் விருப்பப்படி செலவழிக்கும் சுதந்திரமும் இருந்தது. இவ்வளவு விலாவரியாக நான் அவர்கள் சமைத்துப் பார்த்ததில்லை - முன்னிரவு உணவில் காலைக்காக நீரை ஊற்றி வைப்பார்கள். இரவு மிக எளிய உணவு. மதியம் மட்டுமே எதாவது காய்கறிகளைச் சமைப்பார்கள். காலையிலும் மதியமும் உறங்குவார்கள். மாலையில் மட்டுமே அரட்டையடிப்பது, காலாற நடப்பது. இவ்விசயங்கள் தொண்ணூறுகளில் மாறத் தொடங்குவதைக் கண்டேன். இன்று கிராமமோ நகரமோ எங்கெல்லாம் நவீனம் புகுந்ததோ அங்கெல்லாம் நேரம் இருந்தாலும் நேரமில்லை. அரசு ஓய்வூதியம் பெறுகிற ஒரு சிறு சதவீதத்தினர் மட்டுமே இன்று ஓய்வின் மகத்துவத்தை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாழ்க்கை ஒரு கருத்தமைவாகவே உருவாக்கப்பட்டு விட்டது. அவர்களும் ஓய்வூதியம் போதவில்லை எனக் கருதும்போது தன்னழிவு வாழ்க்கைக்குள் வந்துவிடுவார்கள்.
அடுத்து தற்கொலை - இன்று மனவுளைச்சலால் அதிகமான மக்கள் தற்கொலை பண்ணுகிறார்கள். ஏன்? வலிதாங்காமல் மட்டுமல்ல. தற்கொலை என்பது நம் மனமும் உடலும் தன் 'வலி' பொறுக்காமால் தன்னை அழிக்கிற முயற்சிதானோ எனும் கேள்வி என்னிடம் உண்டு. மன அழுத்தம், மனச்சிதைவுக்கும் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்குமான தொடர்பு குறித்து இன்றுள்ள ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் மகிழ்ச்சியாக உள்ளபோது அவை நாம் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக் கருதுகின்றன. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவை எண்ணிக்கையில் குறைந்து உடலைத் தற்காலிக உறைவிடமாகக் கருதும் நுண்ணுயிர்கள் பெருகும்போதோ பல நோய்கள் தோன்றுகின்றன. உடல் அழியத் தொடங்குகிறது. ஏனென்றால் அவை நம்மை வெகு சீக்கிரம் பயன்படுத்தி அழித்துவிட்டுப் போகவே விரும்புகின்றன. இவை நம்மை அவ்வாறு அழிந்திடத் தூண்டுவதன் ஒரு வழி 'தற்கொலை' - இன்று இந்த கோணத்தில் ஆய்வுகள் ஆரம்பித்துள்ளன (https://www.mdpi.com/2673-5318/6/3/84). என்னதான் நேரடி வாழ்வின் தூண்டுதல்கள் மனிதரை தற்கொலையை நோக்கிச் செலுத்தினாலும் அதற்கு ஒரு தீவிரமான விசையை அளிப்பது இந்த நுண்ணுயிர்களாக இருக்கக் கூடும்.
நாம் என்றால் நமது உடலும் மனமும் - ஆனால் இன்று ஆய்வுகள் நமது அணுக்களுக்கு என்றே தனியான பிரக்ஞை உண்டா, நமது நுண்ணுயிர்கள் நமது வாழ்வை நாம் நடத்துவதற்கான முகமையைக் கட்டுப்படுத்துகின்றனவா எனும் கேள்விகளை எழுப்புகின்றன? ஒருவேளை நாம் உடலெனக் கருதுவது ஒரு வாடகை வீடோ? ஒருவேளை நாம் மனமெனக் கருதுவது பல்வேறு நுண்ணுயிர்களின், அணுக்களின் அக-விழைவுகளின் கூட்டிணைவு மட்டும்தானோ? நாம் அவற்றின் அகவிழைவுகளுடன் நமது அகவிழைவையும் இணைத்து மனமெனச் சிந்திக்கிறோமோ?
எனில் சமூகத்திற்காக, குடும்பத்திற்காக உழைக்காமல், சிந்திக்காமல் நாம் இவற்றுக்காக உழைக்கவும் சிந்திக்கவும் வேண்டுமோ? அவற்றுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்தால் நான் நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனில் ஏன் என்னால் அது இயல்வதில்லை? என் உடலும் மனமும் என்னுடையவை அல்ல, அவை ஒரு கூட்டுச் செயல்பாடு எனில் ஏன் அடுத்தவர்களுக்காக இவ்வளவு உழைக்கிறேன்? என் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் இருந்தும் உறவுகளில் இருந்து வருவதாக நான் நினைப்பது ஒரு தோற்றம் மட்டும்தானோ? அசலான ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உள்ளிருந்து வருவதோ? உலகில் எல்லாரும் என்னை விட்டுப் போகும்போதும் என் உடல் மட்டும்தானே என்னை விட்டுவிடாமல் இருக்கிறது? எனில் நான் ஏன் பிறருக்காக இவ்வளவு கவலைப்படுகிறேன்?
நாம் சோம்பேறித்தனத்தை ஒரு சமூகக் கருத்தாக்கமாக மாற்றியதே பிரச்சினை என நினைக்கிறேன். ஒவ்வொரு தனிமனிதனும் தன் 'உடலுக்கு', தன்னைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு உழைப்பு வேண்டும் எனச் சிந்திப்பதே சரியானது எனத் தோன்றுகிறது. ஆனால் அதை அனுமதிக்காதபடி நம் கலாச்சாரமும் பொருளாதாரமும் நம்மைப் பிடித்தாட்டுகின்றன. நம்மை அவை பயமுறுத்தி ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. சோம்பேறித்தனத்தை நற்பண்பாகப் பார்க்கையிலே மகிழ்ச்சியும் திருப்தியும் தோன்றும்.
குறிப்பு: நான் இங்கு குறிப்பிடுவது தன் விருப்பத்தின் பெயரில் மகிழ்ந்து செய்கிற உழைப்பை அல்ல. பணத்துக்கான, சமூக அங்கீகாரத்துக்கான உழைப்பை மட்டுமே.

Comments

Interesting and thought-provoking article sir.
It definitely makes me feel that being a little lazy once in a while can actually be a good thing.
---
Tirupati Mahesh

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...