
இளம் வாசகர்கள் ஏன் இலக்கிய நாவல்களை வாங்குவதில்லை எனக் விசாரிக்கிற கட்டுரை ஒன்றை நேற்றுப் படித்தேன் (கிரீஷ் ஷுக்ளா எழுதிய Why Literary Fiction Feels Increasingly Irrelevant to Younger Readers). (டைம்ஸ் நவ் இதழில் வந்திருந்தது. நேற்று இலவசமாகப் படித்தேன். இன்று அது சந்தா செலுத்திப் படிக்க வேண்டியதாகி விட்டது.) இவ்விசயம் உண்மைதானா?
தமிழில் இந்நிலை இல்லை. வெகுஜனப் புனைவெழுத்தாளர்கள் தம் விற்பனைத் தளத்தை இழந்துவிட்டார்கள். இங்கு 'இளம் வாசகர்களே' இல்லை. அவர்கள் பெரும்பாலும் இன்ஸ்டா, யுடியூப் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். செய்தித்தாள் கூடப் படிப்பதில்லை. அரிதாக இலக்கிய வாசிப்புக்குள் வருகிறார்கள். இது உண்மையிலே அவலமானது. ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் பள்ளி மாணவர்கள் ஆங்கிலப் புனைவுகளை வாசிக்க முயல்கிறார்கள். கல்லூரியிலும் நான் இதைப் பார்த்திருக்கிறேன். எண்பது பேர்கள் உள்ள வகுப்பில் எட்டு பேராவது ஆங்கில நாவலொன்றைப் பையில் வைத்திருப்பார்கள். அவர்களுக்குத் தாய்மொழியில் எந்த வாசிப்பும் இருக்காது.
சரி ஆங்கிலத்திலாவது வாசிக்கிறார்களே என ஆறுதல்படலாம் என்றால் அங்கும் ஒரு நிபந்தனை வருகிறது - அவர்கள் மிக மிகக் குறைவாகவே இலக்கிய நாவல்களைப் படிக்கிறார்கள். பெரும்பாலும் மிகுபுனைவு (Harrypotter, Circe, The Wheel of Time) மற்றும் பதின் வயது காதல் நாவல்கள் (The Fault in our Stars, The Summer I Turned Pretty, Check & Mate) வண்டி வண்டியாக வெளியாகின்றன. இப்படைப்புகளிலேயே கொஞ்சம் தரமாக நேர்த்தியாக எழுதப்பட்டவையும் உண்டு, ரொம்பக் குப்பையும் உண்டு. இம்மாதிரி நாவல்களின் ஒரு போக்கு அவை கதைத்தன்மை மிக்கவை, உணர்வுகளைத் தூண்டி ரசிக்க வைப்பவை, மறைமுகமாக எதையும் சொல்ல முனையாதவை என்பது. நேரடித்தன்மையே இந்நாவல்களின் அடிப்படையான பலம்.
ஒரு காதல் நாவலில் ஒரு இளம்பெண் ஒரு ஆணிடம் ஈர்க்கப்படுகிறாள் என்றால் அவளுடைய வாழ்க்கை எப்படியானது, பலம் பலவீனம் என்ன, அவளுக்கு என்னதான் அடிப்படையாக வேண்டும் என நிறுவிட்டு கதைக்குள் போக மாட்டார்கள். முதல் காட்சியிலே கதை ஆரம்பித்துவிடும். அவள் அவனைப் பார்த்ததும் மயங்கிவிட்டாள் எனும் கணக்கில் ஆரம்பித்துவிடும். அவளுக்கு அவனைப் பார்த்ததும் எரிச்சலாகியது, இன்னொருவனைப் பார்த்ததும் பிடித்தது, ஆனால் இருவரில் யார் தனக்குச் சரியானவர் எனப் புரியவில்லை எனும் ஜேன் ஆஸ்டின்-தனமான குழப்பங்கள் இராது. நாயகன் / நாயகிக்கு ஒரு பொம்மை (காதல்) வேண்டும், அப்பொம்மை எப்படிச் சுலபத்தில் கிடைக்கவில்லை, அதற்கான முயற்சிகள் எப்படி வெற்றியடையவில்லை, அல்லது வெற்றியடைந்த பின்னர் என்னவெல்லாம் சறுக்கியது என்று கதை போகும். சினிமாத்தனமான காட்சிபூர்வ மொழி இருக்கும். அகவயமான வர்ணனைகள் இருக்காது. இது கதையை முழுக்க புறவயமாக்கி உணர்வுகளையும் 'உணர்ச்சிகளாக்கி' விடும். கதை வேகமாகப் போகும். பெரிய கவனம் இன்றி, யோசனையின்றி படித்துவிடலாம். படிக்கையில் கிடைக்கும் திகைப்பும், மகிழ்ச்சியுமே வாசகரின் பெறுமதி.
இச்சூழலை ஒட்டி ஆங்கில இந்திய இலக்கிய வாசிப்பு இந்தியாவில் சந்தித்துள்ள நெருக்கடியை டைம்ஸ் நவ் எடுத்து விவாதிக்கிறது. இந்தியாவில் இப்போது 30% மேல் வாசகர்கள் இளைஞர்களே. அவர்கள் எந்நூலைக் கூட்டமாக வாங்குகிறார்களோ அதுவே வணிக ரீதியாக வெற்றியடைகிறது. முன்பு இந்திய ஆங்கில இலக்கிய நாவலாசிரியர்களுக்கு இம்மாதிரி இளைஞர்களைக் கவரும் அவசியம் இருக்கவில்லை. ஆனால் இன்று உள்ளது. அவர்கள் வாங்காவிடில் புத்தக விற்பனை சரிகிறது. குறிப்பாக புதிதாக எழுத வருவோருக்கு இது ஒருவிதப் பயத்தையே ஏற்படுத்துகிறது. கட்டுரையாளர் கிரீஷ் ஷுக்ளா இலக்கிய நாவல்களின் நூதனமான, அடர்த்தியான மொழியும் அகவயமான விவரணகளும் நாவலில் கதையே இல்லை எனும் உணர்வை இளம் வாசகர்களுக்கு அளிக்கிறது என்கிறார். இதுவே அவர்கள் அடிக்கடிச் சொல்லும் புகாரும் - கதை எங்கே?
கதை அகவயமாக இருக்க வேண்டுமா அல்லது புறவயமாகவா? கிரீஷ் ஷுக்ளா இத்திசையை நோக்கி கட்டுரையைக் கொண்டு போனாலும் உண்மையான பிரச்சினை அதுவல்ல என்று தோன்றுகிறது. முராகாமியின் கதையுலகம் அகவயமானதே. ஆனால் அவரை வாசிப்பது இளம் வாசகருக்கு ஒரு பிரச்சினை அல்ல. ஏனென்றால் முராகாமி உணர்வுகளைப் பற்றி அதிகமும் பேசுவதில்லை. ஒன்று நேரடியான உடல்சார்ந்த உணர்ச்சிகளை காதலாகச் சித்தரிக்கிறார் ("நார்வேஜிய வனம்") அல்லது அரூபமான உளவியல் சிக்கல்களை வெளிமுகமான தொடர் நிகழ்வுகளைக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்ய்கிறார். நாயகன் தனக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறான் என்பதை அவன் ஒரு கிணற்றுக்குள் சென்று அமர்ந்து கொண்டு ஆறுதல் தேடுகிறான் என மாற்றுகிறார். ஒருவரது அந்தரங்க உலகம் சிதைவதை "பூனை காணாமல் போனது, அடுத்து உடனே மனைவி காணாமல் போனாள், காரணம் தெரியவில்லை, அவன் அதை உடனடியாகக் கண்டு பிடிக்க வேண்டும்" எனச் சித்தரிக்கிறார் (Wound-up Bird Chronicle). அவரது வெகுஜனப் பாணியிலான உலகியல் சித்தரிப்பு, வேகமான மொழி, மெல்லிய நகைச்சுவை, அலட்சியமான விலகலான மொழி, மிகுபுனைவு இளம் வாசகருக்கு நெருக்கமான உள்ளன. இலக்கியப் புனைவு இவ்வாறு வெளிமுகமாக அமைவதில்லை, அது உணர்ச்சிகளின் பால் செல்வதும் இல்லை. இலக்கியப் புனைவில் காமத்தைக் கவித்துவமாக மாற்றி அதன் புலனுணர்ச்சியை வெளியேற்றுகிறார்கள் என்பதை உதாரணம் காட்டலாம் (பார்க்க கவபாட்டாவின் "மரு" சிறுகதை). இன்றைய புனைவு இத்தகைய கவித்துவம் இன்றி நேரடி மொழியில் கதையின் மையப்பொருளுக்கு ஏற்ப உணர்ச்சிகளை விவரிக்கப் பார்க்கிறது.
மேற்சொன்ன கட்டுரையில் கிரீஷ் ஷுக்ளா இன்னொரு குறிப்பான சிக்கலையும் முன்வைக்கிறார் - இலக்கிய நாவல்களுக்கான பின்னட்டை அறிமுகக் குறிப்புகளைப் படிக்கையில் அவை வாசகருக்கு கதையைக் குறித்து 'ஒன்றுமே' சொல்வதில்லை. கதை நமக்கு அளிக்கும் அனுபவம், கதைமொழியின் அழகைப் பற்றியே அவை பேசுகின்றன. ஆக இலக்கிய நாவல்களை நாம் விமர்சனப் பரிந்துரையின் அடிப்படையிலே வாங்க நேர்கிறது. விமர்சனமே படிக்காத தலைமுறை இளைஞர்கள் இந்நாவல்களில் கதையே இல்லை போலும் என வெகுஜனப் புனைவுகளின் பக்கம் செல்கிறார்கள். இலக்கிய நாவல்களைச் சந்தைப்படுத்தும் விதம் மாற வேண்டும் என்கிறார் கிரீஷ் ஷுக்ளா. தமிழிலும் இச்சிக்கல் நிச்சயமாக உள்ளது. அடிப்படையில் ஒரு நாவலின் கதை முடிச்சு என்னவென்று அதைப் படித்தால் மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதை ஏன் ரகசியமாக வைக்கிறோம் என்றால் நாவல் என்பது "கதையல்ல" என்று நாம் ஆழமாக நம்புவதால்தான். ஆனால் நிஜத்தில் நாவலின் சுவாரஸ்யம் அதன் கதையும்தானே?
ஒரு இலக்கிய நாவலின் கதைக்குள் பல குறியீட்டுத்தளங்கள் இருக்கலாம், மொழியே பாத்திரத்தின் பிரக்ஞையின் அகப்போக்குகளை நுட்பமாகச் சித்தரிக்கலாம், அதில் தத்துவ விசாரம் இருக்கலாம். ஆனால் கதையைக் கோட்டை விட்டு இதையெல்லாம் செய்தால் அவை வெறும் சொற்களாகிவிடும். மிலன் குந்தேரா தன் நாவலின் அத்தியாயங்களுக்குள் திடீரென கட்டுரை மொழியில் நாயகியின் மன அமைப்பு, இளவயது வாழ்வனுபவம், அவரது தாயின் இயல்பு ஆகியவற்றை உளவியல் ஆய்வுகள், தத்துவ விசாரணையைச் செய்வார் (The Unbearable Lightness of Being ). இப்படியாக புனைவு, அபுனைவு மொழி என்று அவரது புனைவே சிதறலாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்து என்ன சொல்லப் போகிறார் எனும் ஆர்வம் அதைப் படிப்போருக்கு இருக்கும். அவர் போதிப்பதாகவோ வெறும் தகவல்களைச் சொல்வதாகவோ தோன்றது. கதையின் சுவாரஸ்யம் ஏதோ ஒரு சூட்சுமக் கயிற்றால் சம்பவங்களும் விபரங்களும் கருத்துக்களும் கட்டப்படும்போதே தோன்றுகின்றன. அக்கயிறு அறுந்துவிட்டால் நாவல் கோழிக்கோடு கலர் அல்வா போலாகிவிடும்.
இலக்கிய நாவலாசிரியர்கள் படித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டுரை அது.
Comments