முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் சூழலில் அந்நியமாகும் மக்களும் கட்சிகளும்

 தொகுதி மறுசீரமைப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போதே இதன் ஆபத்துக்களைப் பற்றி எழுதினேன். கடந்த ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதினார். அண்மையில் அவர் இந்த சீரமைப்பு மசோதாவை எரித்து முழக்கமிடும் காணொளியைக் கண்டேன். இந்தப் பார்வையுடன் முழுக்க உடன்படுகிறேன். இந்தியா ஒரு வட-இந்திய-சார்பு தேசியமாக அலுவல்ரிதியாக, வெளிப்படையாக மாறப் போகிறது. அதேநேரம் இன்று எதிர்ப்பு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்த்துதலாக மாறுவதால் நேரடியாக மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வருமா எனச் சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இது ஒரு தேர்தல் பிரச்சார வியூகம் மட்டுமே எனத் தோன்றுகிறது. இது எதிர்ப்பின் உண்மைத்தன்மையை கொன்றுவிடும்.



இப்படியான பிரச்சினைகளை மக்கள் தம்மிடம் இருந்தே ஒரு இயக்கமாகத் திரண்டு எதிர்க்கும்போதே (ரயில் மறிப்பு, விமான நிலைய முற்றுகை, மத்திய அரசு அலுவலக முற்றுகை) அதற்கு நல்ல பலனிருக்கும். இன்னும் சொல்லப்போனால் வேளண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். அது வென்றதற்கு முக்கிய காரணம் அதை கட்சிகள் நடத்தவில்லை என்பது. கட்சிகள் எதிர்ப்பை ஒரு நிகழ்த்துதலாக மாற்றுவதால் அதில் தொடர்ச்சியோ தியாகமோ மூர்க்கமோ இருப்பதில்லை. அதை மக்களும் ஒன்றிய அரசும் கடந்து போய்விடுவர். மக்களை ஒருங்கிணைத்து ஒரு தேசியத் தலைவர் நடத்துகிற நடைபயணங்கள் இதைவிட அதிக தாக்கம்த்தை ஏற்படுத்தும்.

அரசியலுக்கு ஊடகமே இன்று பெரிய பாதகமாகிறது - ஏனென்றால் என்னதான் சமூக ஊடகங்களில் மக்கள் பங்கேற்க முடிகிறது என்றாலும் அங்கு அவர்களுக்கு முழுமையான முகமை இல்லை. எதை வைரல் ஆக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உள்கட்டமைப்பு வசதியும் திட்டமிடலும் கட்சிகளிடம் வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு கட்சியும் பல லட்சங்களில் இருந்து கோடிகள் வரை டுரோல்களை, ஐடி விங் ஆட்களை வேலையில் வைத்துள்ளது. கட்சி நிர்வாகத்திடமே இன்று டிவி ஊடகங்களும் பத்திரிகைகளும் உள்ளன. இது மக்களுக்கும் ஊடகங்களுக்குமான அரசியல் இடைவெளியை தோற்றுவித்து விட்டது. விளைவாக மக்கள் (சமூகவலைதள, மரபான) ஊடகங்களைப் பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள். அரசியல் செய்திகளுக்கு இன்றும் தேர்தலைத் தீர்மானிக்கும் ஆற்றல் உண்டு என்றாலும் மக்களை அரசியல்படுத்தும் ஆற்றலை அவை இழந்துவிட்டன. ஒன்றில் இருந்து நாம் அந்நியமாகும்போது அதை கொஞ்சம் விலகி நின்று விளையாட்டாக அணுகுகிறோம். மரையை இழந்த திருகாணி சுழன்றுகொண்டே இருப்பதைப் போல.

தெருவிலும் திடல்களிலும் நடக்கும் அரசியல் போராட்டங்களும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மையாகின்றன. அவையும் மக்களின் அந்நியமாதலை அதிகரிக்கின்றன. கட்சிகளும் தம்மால் மக்களிடம் போய்ச் சேர முடியும் எனும் நம்பிக்கையை இழக்கின்றன. முதல்வர்களும் அமைச்சர்களும் தொடர்ந்து கட்சி அனுதாபிகளைச் சந்திப்பது, அவர்களை நேர்முகமெடுத்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது இதன் விளைவுதான். இப்படி இன்றைய சூழல் மக்களுக்கும் அரசுக்கும் வெவ்வேறு அளவுகளில் பாதகமே.

எல்லா வெளிகளையும் அரசு கட்டுப்படுத்தும்போது மக்கள் தமக்கும் மக்களாட்சிக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளதாகவே, தாம் அதிகாரம் இழந்துவிட்டதாகவே என்றே உணர்வர். குறிப்பாக போராட்டத்திற்கென தனி வெளிகளை அரசு வரையறுக்கும்போது அது நாடக நிகழ்த்தல் அரங்க வெளியாகி விடுகிறது. கட்சிகள் முதற்படியாக கட்சித்தன்மையை, நிகழ்வு மேலாண்மைப் போக்குகளைக் கைவிடுவதும், அடுத்ததாக, தற்செயல்களை ஊக்குவிப்பதும் தற்செயலாக நிபந்தனையற்றுப் பொதுவெளிகளில் திரள்வதற்கு மக்களை அனுமதிப்பதுமே இனி வெற்றிகரமான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். இது தமக்கெதிராகவே திரும்பக் கூடும் என ஆளும் மாநிலக் கட்சிகள் அஞ்சாமல் பொதுவெளிகளை ஒன்றியத்துக்கு எதிராகப் பயன்படுத்தவும் தம்மையே சிலநேரங்களில் விமர்சிக்கவும் அனுமதிக்க வேண்டும். அதாவது எதிர்ப்பரசியலுக்கு மீண்டும் மக்களைப் பழக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் 'ஊடுருவினாலும்' கவலைப்படக் கூடாது. அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு கிளர்ச்சியின்போது நடந்ததைப் போல கால நிபந்தனைக்கு உட்பட்டு மக்கள் திரளவும் கலையவும் செய்யக்கூடாது. மக்கள் அதிகாரம் கட்டறுத்து விடப்பட்டால் அதை எதிர்க்கட்சியால் திசைதிருப்ப இயலாது. அதற்கு முதலில் ஆளும் அரசுகள் மக்களை அஞ்சாமல் இருக்க வேண்டும். பொது அமைதிக்கு ஊறு, சட்டம் ஒழுங்கு ஆகிய சொல்லாடல்களைக் கைவிட வேண்டும். காவலர்கள் மக்கள் கண்காணிப்பு, தலைவர்கள் பாதுகாப்பு ஆகிய (சோ கால்ட் சட்டம் ஒழுங்கு காவல்) பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு போதை மருந்து விற்பனையைத் தடுக்கும் பணிகளிலும் மக்கள் நன்மைக்கு நேரடியாகப் பயன்படும் பணிகளிலும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அல்லாவிடில் அந்நியமாதலின் விளைவாக மக்களாட்சி கருத்தியலே காணாமல் போய்விடும்.

தொகுதி மறுசீரமைப்பு எதிராக தென்னிந்தியா முழுக்க அத்தகைய 'தற்செயல் போராட்டங்களே' அவசியம். சில நேரங்களில் வேலையில்லாத கோபம், வாய்ப்புகள் இல்லாத கோபம், வறுமை, பொதுவான பல பிரச்சினைகள் மீதான கசப்பும் கூட ஒற்றைப் பிரச்சினைப் புள்ளி மீது திரளும். சில நேரங்களில் பெரும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவும் இதற்குக் கிடைக்கும். ஆனால் இயக்கத்தின் மையத்தில் உழைக்கும் மக்களும் இளைஞர்களுமே இருப்பார்கள். (நேப்பாள ஜென் ஸி போராட்டங்களின் போது நடந்ததைப் போல.) அப்போதே வலுவான மக்களாட்சி தோன்றும். போராட்டங்களுக்கும் அரசுக்கும் இடையே கட்சிகள் நிற்கக் கூடாது. இத்தகைய போராட்டங்களுக்கு நேரடியான தேர்தல் பலன்கள் ஒரு க்கு உடனடியாக இருக்காவிடினும் மக்களை மீண்டும் ஜனநாயகப்படுத்த அவை உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...