முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழகும் விசுவாசமும்


 

மிலன் குந்தேராவின் "89 சொற்கள்" (89 Words) எனும் கட்டுரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் தன் தன் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டபோது அனுபவித்த அவஸ்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். மொழிபெயர்ப்பாளர்கள் தம் இஷ்டத்துக்கு வாக்கிய அமைப்பை மாற்றுகிறார்கள். பெரிய வாக்கியங்களை உடைத்து சிறுசிறு வாக்கியங்களாக்குகிறார்கள். இங்கிலாந்தில் வெளியான அவரது நாவலின் மொழிபெயர்ப்பில் (Unbearable Lightness of Being) பாலியல் சொற்களை முடிந்தளவுக்கு மாற்றி இருக்கிறார்கள். Being என்றால் இருத்தல். இதன் தத்துவார்த்த, கல்விப்புல தொனி பிடிக்காமல் ஒருவர் Unbearable Lightness of Living என்று மாற்றுகிறார். இதனால் எப்படி பொருள் தலைகீழாக மாறுகிறது என குந்தேரே விளக்குகிறார்.

சிலர் அழகுப்படுத்தும் நோக்கில் புதிய சொல்லாடல்களைக் கொண்டு வருகிறார்கள் - ஒருவர் "அவள் வாழ்வில் 17 ஆண்டுகள் கடந்தன" என்பதை "அவள் வாழ்வில் 17 வசந்தங்கள் கடந்தன" என மொழியாக்குகிறார். இது அழகாகத்தான் உள்ளது. ஆனால் தொனி மாறுகிறது. வசந்தம் எனும் உருவகத்தைக் கொண்டு வர எழுத்தாளருக்கும் தெரியும்தான். அவர் அதைப் பயன்படுத்தாதது ஒரு எளிய நேரடி மொழியைப் பயன்படுத்தவும், அதன்வழியாகத் தன் வாழ்க்கைப் பார்வையை உணர்த்தவும்தான். மொழிபெயர்ப்பாளர் அதீத உரிமையெடுக்கும்போது அவர் எழுத்தாளரின் நோக்கங்களை உருமாற்றுகிறார். பிரஞ்சு போன்ற மொழிகளில் வெளியான தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் "எனக்கு செக் மொழி தெரியாது, அதனால் என் இதயத்தில் இருந்து மொழிபெயர்த்தேன்" என்று குந்தேராவிடம் சொல்லியிருக்கிறார். மொழியே தெரியாமல் எப்படி உணர்வுரீதியாக மட்டும் மொழிபெயர்ப்பார் என அவர் குழம்பிப் போய் பிறகே இரண்டாம் மொழி வழியான மொழியாக்கமென அறிந்துகொள்கிறார். இப்படியான பல விபத்துக்களைக் குறிப்பிடும் அவர் தான் வாழ்க்கையில் மிக அதிகமாகச் சிரமப்பட்டது மொழிபெயர்ப்புகளைப் படித்துதான் என்கிறார். கடைசியில் அவர் உதிர்க்கும் ஒரு அபிப்ராயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அழகான பெண்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள், விசுவாசமான பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என செக் மொழியில் ஒரு சொலவடை உள்ளது போலும். அதைச் சொல்லிவிட்டு அவர் மூலமொழிக்கு விசுவாசமான மொழிபெயர்ப்பே அழகானது என்று சொல்கிறார்.
என்னுடைய மொழிபெயர்ப்பு நம்பிக்கையும் இதன்பாற்பட்டதே. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் அல்லன். தமிழில் இருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் விருப்பத்தின்பால் மொழிபெயர்த்து வருபவன். எனக்கு இலக்கு மொழியில் ஒரு பனுவலை அழகாக்குவதற்காக வாக்கியங்களையோ சொற்களையோ நடையையோ மாற்றுவதில் உடன்பாடில்லை. அதற்கு நாமே சொந்தமாக அக்கதையையோ கவிதையையோ நம் மொழியில் எழுதிவிடலாமே. மொழிபெயர்ப்பைப் படித்தால் அது மொழிபெயர்ப்பு என்று நிச்சயமாகத் தோன்ற வேண்டும். சரளத்தன்மை மூலமொழியில் இருந்து மொழிபெயர்ப்பு மொழிக்கு வர வேண்டும். மொழிபெயர்ப்பாளரே அதை உருவாக்கக் கூடாது. அதனாலே எனக்கு மூலமொழி மீதான விசுவாசம் அதிகம். உணர்வுரீதியாக மூலமொழியில் சொல்லப்படும் விசயத்துடன் ஒன்றும்போது நாம் நம் மனநிலைக்கு ஏற்ப சொற்களையும் தீவிரத்தையும் சிறிது மாற்றலாம். ஆனால் இது வாக்கியத்தில் தெரியக் கூடாது, தொனியிலும் தாளலயத்திலும் மட்டுமே தென்பட வேண்டும். கடைசியாக, மொழிபெயர்ப்பில் ஒரு அரசியலும் உண்டு - நம்மால் உடன்பட முடியாத படைப்பை மொழிபெயர்க்கக் கூடாது. ஏனென்றால் அதிலுள்ள மொழியே அதன் அரசியல். நம் அரசியலுக்கு ஏற்ப படைப்பாளியின் அரசியலை மாற்றுவது (நம்மால் ஏற்க முடியாத சொற்களை, கருத்துக்களை மாற்றுவது, தவிர்ப்பது) ஒரு மோசடி. உ.தா., உங்களுக்கு ஜார்ஜ் பத்தாயின் பாலியல் பிடிக்காது, ஆனால் அவரது கதை பிடிக்குமென்று கூற முடியாது. அவரை பிடிக்குமென்றால் மொத்தமாகத்தான் பிடிக்கும். மொத்தமாகத்தான் மொழிபெயர்க்கவும் முடியும். இதில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அவமானப்பட ஒன்றுமே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...