முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளிநாட்டுக்குப் போவது


 

வெளிநாட்டுக்குப் போவது முன்பு சாகசமாக, ஆபத்தான பயணமாகக் கருதப்பட்டது. ஒரு படத்தில் வெளிநாட்டுக்குப் போகும் செந்திலை கவுண்டமணி ஒரு குரங்காக மாற்றி விடுவார். அது மேற்சொன்ன நிலையின் குறியீடுதான்.

இப்போதோ வெளிநாட்டுக்குப் போவதும் உள்நாட்டு நகரங்களில் சுற்றுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இலக்கிய அமைப்புகளின் கதையும் நிலையும் நம் அமைப்புகளின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவர்களும் நம்மைப் போல அன்றாடப் பணிகளின் நடுவே இலக்கியம் வளர்க்க முயல்கிறவர்கள். அவர்கள் அயல்நாட்டில் வாழ்வதாலும் அவர்கள் டாலர்களில் சம்பாதிப்பதாலும் அவர்கள் மீது நமக்கு ஒரு மயக்கம். நம்முடைய செயல்பாடுகளைக் கண்டு அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு. இதில் பெரிய சிக்கல் நம்மவர்கள் அயல் வாசகர்களை அவர்களால் பயண வாய்ப்பு, நிதியுதவி கிடைக்கும் எனும் உத்தேசத்தில் சற்று அதிக மதிப்பளிக்கிறோம் என்பது. ஆனால் உண்மையில் அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம். நாமும் எதாவது வேலை கிடைத்து அந்த நாட்டுக்குப் போனால் அவர்களைப் போலாகி விடுவோம். இன்றைய சூழலில் இது ஒரு தனித்தகுதி அல்ல. இந்த வாசகர்களுடன் நமக்கு ஏதோ ஒரு நட்புறவு ஏற்படும்போது விமானக் கட்டணத்தை ஏற்பாடு பண்ணி நம்மை அங்கு பேச அழைப்பார்கள். இது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அங்கு போய் உரையாடுகையில் ஒரு சர்வதேசத் தன்மை கிடைப்பதாக நமக்கு ஒரு பெருமித உணர்வு வரும். அது உண்மையல்ல. அவர்கள் மார்த்தாண்டம் வாசகர் வட்டத்தினரைப் போலத்தான் இருப்பார்கள். அதில் எந்த சாகசமும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு கிணற்றில் இருந்து தாவித்தாவி தவளை பக்கத்துக்குக் கிணற்றுக்குப் போவதைப் போலத்தான்.
உண்மையான சாகசமென்பது நம் சென்னைப் பூங்கா அல்லது மெரினா கடற்கரையில் நான்கு பேர்களாக சுற்றி அமர்ந்து இலக்கிய கூட்டம் நடத்துவதுதான். உடனே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நம்மை எச்சரித்து கலைத்து விடுவார்கள். எனக்கே இந்த அனுபவம் பல முறை நடந்ததுண்டு. "யார் சார் நீங்க? எதுக்காக ஒண்ணு சேர்ந்திருக்கீங்க? எந்த அமைப்பு நீங்க?" என்று சீரியஸாகக் கேட்பார்கள். நாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்போதெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொதுவிடங்களில் யாரும் திரளக்கூடாது என்று சென்னை மாநில காவல் ஆணையர் சொல்வதால் எல்லாரும் அங்கு கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு விரைந்து நடக்கின்றனர். கடற்கரைக்கு காரில் கட்சிக் கொடி வைத்துக்கொண்டு வந்தால் கூட காவலர்கள் "திஸ் இஸ் எமெர்ஜென்ஸி டைம்" என்று துரத்திவிடுகிறார்கள். கடந்த முறை புத்தகக் கண்காட்சியின்போது பார்த்தேன் - ஒரு போலீஸ்காரர் இரண்டு வாடிக்கையாளர்களிடம் "என்னது கைல, புத்தகமா? இதையெல்லாம் சுமந்திட்டு இங்க நிக்கக் கூடாது. போங்க போங்க" என்று மிரட்டினார். பெங்களூரில் நேர் எதிர் - நீங்கள் நள்ளிரவு ரெண்டு மணிக்கும் நின்று டீ குடிக்கலாம். இலக்கியம் பேசலாம், படிக்கலாம். போலீஸ்காரர்கள் "நாம தூங்கப் போவோம்" என ஒன்பது மணிக்கே சரக்கடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். ஆகையால் இங்கு இலக்கியக் கூட்டம் நடத்துவது ஒரு சாகசம் அல்ல. யாருக்காவது கெத்திருந்தால் மெரீனா கடற்கரையை முயன்று பார்க்கலாம் - பிரான்ஸ், அமெரிக்கா போவதைவிட அங்கு சென்னைக்கு இரவு வேளையில் செல்வதும் அமர்ந்து இலக்கியம் பேசுவதும்தான் உண்மையான சாதனை. சென்னையில் இரவில் நடப்பவைதாம் உண்மையான 'அயல்நாட்டுக் கூட்டங்கள்'. அவற்றில் ஒரு மாவோயிஸ்ட் கூட்டத்தின் ஆபத்தும் ரகசிய தோரணையும் இருக்கும். சென்னை மட்டுமே எமெர்ஜென்ஸி போலீஸ் நகரம்.
இந்த சாகசங்களுக்கு அப்பால் எங்கு தமிழ்க் கூட்டம் நடந்தாலும் வித்தியாசம் இருக்காது. ஆங்கிலத்தில் செயல்படுவது மட்டுமே நம்மை இந்த எல்லைகளைக் கடந்து பரவலான வாசகர்களைச் சென்றடைய வைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...