Skip to main content

சொற்சிலம்ப ஆசான்

 





நான் ஒருநாள் ஆசானை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். வீட்டில் யாரும் இல்லை. அவர் தனியாக அமர்ந்து ஒரு தண்ணீர்க் குழாயைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அதிர்ச்சியுடன் கேட்டேன், "ஆசானே என்னாயிற்று?" நான் அவரை அப்படி கன்னத்தில் கைவைத்த நிலையில் சோர்ந்து போய் பார்த்ததில்லை. எப்போதுமே போர்முனையில் நின்று கொண்டிருக்கும் மாவீரர் அவர். அவர் அந்தக் குழாய் இறந்து விட்டது என்றார். என்னது இறந்துவிட்டதா? என்னால் நம்ப முடியவில்லை. ஆசான் எதைச் சொன்னாலும் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும், அதன் உள்ளூர தரிசனம் உறைந்திருக்கும். ஆகையால் பணிவன்புடன் விசாரித்தேன்.
அவர் அந்தக் குழாய்க்காக எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பை எனக்காக வாசித்தார்:
"இந்த இரும்புக் குழாய் பல வருடங்களுக்கு முன்பு ஒரு சாக்கடைக் குழாயாக இருந்தது. அப்போது இப்போது போலில்லை. இப்படியான வார்ப்பிரும்புக் குழாய்களையே பயன்படுத்துவார்கள். அவை விரைவில் துருபிடித்து அரிக்கப்பட்டு கசியத் தொடங்கும். இந்தக் குழாயும் அப்படியான நிலையிலே இருந்தது. அதை அகற்றி பழைய இரும்புக் கடைக்கு விற்றார்கள். அங்கிருந்து ஒரு தொழிற்சாலைக்குச் சென்ற அது உருக்கப்பட்டு ஒரு நீர்க்குழாயாகத் தயாரிக்கப்பட்டது. நான் அதை வாங்கி வந்து பொருத்தினேன். அதை முதலில் திறந்தபோது அது ஓலமிட்டு அழுதது. அப்போதும் இப்போதைப் போல என் வீட்டில் யாருமில்லை. என் மனைவி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் போயிருந்தாள். நான் என் நாவலைப் பல மணிநேரங்களாக எழுதிக் களைத்துப் போய் அலுவலகத்துக்கு விடுப்புச் சொல்லி விட்டு என் எதிரிகளைத் திட்டியும் ஆதரவாளர்களைப் பாராட்டியும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதிவிட்டு மேலும் களைத்துப் போய் தண்ணீர் பிடித்துக் குடிப்பதற்காக சமையலறைக்கு வந்தேன். திறந்தால் குழாய் மெல்ல குழறி அழ ஆரம்பித்தது. நான் அதைத் தடவிக் கொடுத்து விசாரிக்க அது கண்ணீரைத் தாரைத்தாரையாக கொட்டி அழுது புலம்பியது. அதற்குத் தான் ஒரு சாக்கடைக் குழாயாக இருந்து இப்போது ஒரு மதிப்பு மிக்கக் குழாயாக ஒரு மகத்தான எழுத்தாளரின் வீட்டில் இருக்கிறோமே எனும் தாழ்வுணர்வு அதிகமாக இருந்தது. ஆனாலும் அது கடுமையாக உழைத்தது. என்னுடைய நல்லெண்ணெத்தைப் பெற வேண்டும் என்றும், அதன் வழியாக இலக்கியத்தில் நீடித்த இடத்தைப் பெற வேண்டும் என்றும் தீவிரமாக முயன்றது. ஆனால் அதற்கு ஒரு ஊனம் இருந்தது."

"அதற்குமா?"

தன் வாசிப்புத் தடைபெற்றதில் தடுமாறிய அவர் என்னைக் கோபமாக முறைத்துவிட்டு வெளியே போ என்றார். நான் போகாதபட்சத்தில் அவர் தொடர்ந்து படித்தார், "பல்வேறு வியாதிகள், உடற்போதாமைகள் அதைத் தன் முழுமையான திறனை வெளிப்படுத்த விடாமல் தடுத்தன. மற்ற குழாய்களைப் போல அதைத் திறந்து விட்டதும் தபதபவெனத் தண்ணீர் வராது."

"எதாவது அடைப்பு இருந்திருக்கும்."

"வெளியே போ."

நான் போகாததால் அவர் தொடர்ந்து வாசித்தார்,

"தான் குறைவான நீரை வெளிப்படுத்துவது குறித்து அதற்கு மிகுந்த கழிவிரக்கம் இருந்ததால் பிறரை அவமதிப்பதன் வழியாக அதைக் கடக்க முயன்றது. நான் இந்தப் பழக்கத்தைக் கண்டித்தேன். நாம் என்றுமே மகத்தானவற்றையே கனவு காண வேண்டும் என்று போதித்தேன். அது தன் தவறைப் புரிந்து கொண்டது. அது தன் கடந்த காலத்தைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டது. அது ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தது. மேலும் அதன் அப்பா அம்மா கேவலமானவர்களாக இருந்தார்கள்."

"என்ன மாதிரி கேவலமானவர்கள்?"

"அதன் அம்மாவுக்கு கையில் ஆறு விரல்கள் இருந்தன. அப்பாவுக்கு மலேரியாவால் வீங்கின கால். அதன் சகோதர சகோதரிகள் எப்போதுமே குப்பையில் விழும் உணவைப் பொறுக்கிச் சாப்பிட்டார்கள். அது கழிவறைக் குழாயாக இருந்தபோது அது கழிவுகளையே உணவாக உண்டது. இதைக் குறித்த குற்றவுணர்வில் அது தவித்தது. நான் அதை ஆற்றுப்படுத்தினேன். இலக்கியம், பண்பாடு, வரலாறு எல்லாம் கற்றுக் கொடுத்து அதை எழுத்தாளராக்கினேன். அதற்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் சென்ற இடங்களில் அது சரியாக வேலை பார்க்கவில்லை. விட்டு விட்டுத் தண்ணீரைத் துப்பும்."

"எதாவது அடைப்பாக இருக்கும்."

"வெளியே போ. நீ போனால் தான் நான் வாசிப்பேன்."

நான் போகாததால் அவர் தொடர்ந்து வாசித்தார், "நான் திரும்ப அதை அழைத்துக் கொண்டேன். என் வீட்டிலேயே பொருத்தினேன். சில நாட்களில் அதன் பெற்றோர் பிச்சை எடுப்பதற்காக என் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்."

"தண்ணீர்க் குழாய்கள் பிச்சை எடுக்குமா?"

"வெளியே போ."

நான் போகாததால் அவர் தொடர்ந்து வாசித்தார், "தன் மகன் ஒரு உயர்ந்த நிலையில் இருக்க தாம் மட்டும் பிச்சையெடுப்பதை எண்ணி அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெருமிதத்திலும் நன்றி உணர்விலும் என்னை வாழ்த்தி வாசலெங்கும் தண்ணீர் பாய்ச்சினர். இதனால் தெருவில் வெள்ளப்பெருக்க வர நான் போய் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பினேன். அவர்கள் போன பின்னர் இந்தக் குழாய் அவர்களை நினைத்து தன் கடந்த கால குறித்து தாழ்வுணர்ச்சி கொண்டு மிக மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டு அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தது. அதன் ஒழுங்கீனங்களை நான் கண்டித்ததால் அது எந்த வேலையும் செய்யாமல் பொறுக்கித்தனமாக நடந்து கொண்டது. நான் அதைக் கழற்றி வீசினேன். அது துள்ளித்துள்ளி என் வீட்டில் இருந்து வெளியேறியது. சில நாட்கள் கழித்து அது மீண்டும் என் வீட்டின் புழக்கடையில் கிடக்கும் குப்பையைப் பொறுக்கி உண்டது. நான் அதை எடுத்து அறிவுரைத்தேன். கழுவி வீட்டில் வைத்து உணவளித்தேன். இப்போது அதற்கு பக்கவாதமும் மாரடைப்பு நோயும் வேறு வந்திருந்தது."

"எப்பவும் ஒரு டாக்டர் மாதிரியே பேசுறீங்க...."
"வெளியே போ" என்றுவிட்டு அவர் தொடர்ந்து வாசித்தார்,
"அதன் ஒரு கை நடுங்கிக் கொண்டே இருந்தது. நான் அதைப் பராமரித்தேன். ஆனாலும் அதற்கு என் மீது வஞ்சம் தீரவில்லை. ஒருநாள் நான் அதைத் திறந்தபோது அது வாயைத் திறந்து என்னிடம் சீறியது. எனக்குத் தண்ணீரே தரவில்லை. பாம்பைப் போல சீறியது. அவ்வளவு குரோதம் என் மீது."

"தொட்டியில் தண்ணீர் தீர்ந்திருக்கும். அல்லாவிட்டால் குழாய்களில் காற்று நிரம்பி இருக்கும்."

"வெளியே போ. உனக்கு இலக்கியத்தின் அரிச்சுவடி கூட தெரியாது. நீயும் எதிரி முகாம்தானே. உன் புத்தகத்தை நான் படித்தேன். அது முழுக்க என்னைப் பற்றிய வசைகள். வெளியே போ. வெளியே போ."

"இல்லை ஆசானே. புத்தகத்தின் 299 பக்கங்களிலும் உங்கள் மீதான வசைகளைத் தொகுத்து விட்டு கடைசிப் பக்கத்தில் அதற்கெல்லாம் பதிலளித்திருக்கிறேன்."

"சரி இரு. இந்த அஞ்சலிக் கட்டுரை உன்னைப் போன்றவர்களுக்கு எச்சரிக்கைத்தான்." அவர் தொடர்ந்து வாசித்தார்,

"அது எதிரிகளின் பக்கம் சாய்ந்து விட்டதை உணர்ந்தேன். அதன் மின்னஞ்சல் தொடர்புகள், போலிக் கணக்குகளில் அது யாரிடமெல்லாம் அரட்டையடிக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். எனக்கு எதிராக பெரும் சதித்திட்டம் ஒன்றையே அது தீட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் அதற்குத் தொடர்ந்து உணவளித்தேன். ஆதரவளித்தேன். அது சில கதைகளையும் கவிதைகளையும் எழுத நான் அவற்றைத் திருத்தி பிரசுரித்தேன். அதற்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வழிவகை செய்தேன். நான் அதைப் பத்தாண்டுகளுக்கு மேலாக இப்படிப் பராமரித்தேன். தமிழில் ஒரு பய இதைச் செய்வானா? ஒருநாள் நான் அதற்கு மரியாதை செய்யும் பொருட்டு சாக்கடைக் குழாய்களுக்கு அதன் பெயரை இடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். அது பிடிக்க்காமல் எனக்கு எதிராக ஒரு பெருங்கூட்டமே செயல்பட்டது. நான் இதுதான் அவர்களைத் தூண்டி விடுகிறது எனத் தெரிந்து மனம் துவண்டு போனேன். நான் அதை மீண்டும் பறித்து வீசப் போனேன். அது மிகுந்த குற்றவுணர்வில் என்னிடம் அழுதது. மறுநாளே அது இறந்து போனது. இவ்வளவு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்த தண்ணீர் குழாய்க்கு என் கண்ணீர் ததும்பும் அஞ்சலி. எப்படொ கட்டுரை?"

"இவ்வளவு பாராட்டுகள் நிரம்பிய அஞ்சலியை நான் படித்ததில்லை. வரலாற்றில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும்."

அவர் குறுகுறுவென என்னைப் பார்த்துவிட்டு "உன் பேச்சில் எடக்குமடக்காக ஏதோ இருக்கிறதே. உன்னைப் பற்றியும் ஒன்று எழுதி இருக்கிறேன். அதன் துவக்கம் இப்படிப் போகும். உனக்கு அப்பா பெயர் தெரியாது."
"ஐயோ நான் போறேன்"
"தொழிநோயாளியான உன் அம்மா ஒரு உயர்வர்க்க வேசி."
"நான் போய்ட்டேன்"
"நீ பிறந்ததும் உன்னை தெருவில் விட்டு விடுகிறாள். நீ புழுதியில் வளர்கிறாய்."
"இதெல்லாம் சுத்தப் பொய். உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?"
"மறுத்துப் பேசுகிறாயா? வெளியே போ."
"வாசலுக்கு வெளியே தானே நிற்கிறேன்."
"இந்த உலகில் என்னைத் தவிர எல்லாருமே கேவலமாகத்தான் பிறந்து வளர்ந்தார்கள். நான் மட்டுமே உயர்குடியில் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தேன். உன் மிச்சக்கதையையும் கேள். ஒருநாள் உன் அம்மா தன் செல்வத்தை இழந்து பிச்சையெடுத்துக் கொண்டு உதவி கேட்டு என்னைத் தேடி வருகிறாள். அப்போது கைக்குழந்தையான நீ ...."

"ஆசானே நான் உங்கள் தாசன். என்னைப் பற்றி இப்படி எழுதலாமா?"

"சரி தொழுநோயாளி வேண்டாம். காச நோயாளி ஆக்கி விடுகிறேன். புதுமைப்பித்தனுக்கே நான் அந்த பட்டப்பெயரைத்தான் கொடுத்திருக்கிறேன்...."

"உங்களைத் தான் என் தாயாகவும் தந்தையாகவும் நினைக்கேன்."

"அப்படீன்னா கதையை மாத்தீருவோம்."

"உன் அப்பாவிம் அம்மாவும் மகத்தானவர்கள். நீ பிறவியிலேயே தெய்வக் குழந்தை. உனக்கு இரண்டு வயது இருக்கும்போதே "போரும் வாழ்வும்" நாவலைப் படித்து முடித்து விட்டாய். ...."

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...