முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலமும் பொழுதுபோக்கும் - ஒரு படைப்பாளியின் நெருக்கடி

 "If today it is rare to see literary adventures as daring as those of Joyce, Woolf, Rilke or Borges, it is not just down to the writers. For the culture in which we live does not favour, but rather discourages, the indefatigable efforts that produce works that require of the readers an intellectual concentration almost as great as that of their writers. Today’s readers require easy books that entertain them and this demand creates a pressure that becomes a powerful incentive to writers.”


Excerpt From
Notes on the Death of Culture,
Mario Vargas Llosa
- லோசா "பண்பாட்டின் மரணம்" குறித்த தன் கட்டுரையில் சொல்லக் கூடிய இவ்விசயம் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது - நான் இந்த அழுத்தத்தை கடந்த சில ஆண்டுகளாக மிக வெளிப்படையாகவே உணர்ந்து வருகிறேன்: எதையும் சுவாரஸ்யமாக, எளிமையாக, பரபரப்பாகவே எழுத வேண்டும் எனும் பதற்றம் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகப் புதிதாக எழுத வருவோரின் லட்சியம் வணிக எழுத்தாளர்களாகவோ நடுநிலை எழுத்தாளர்களாகவோ இருக்கிறார்கள். அதாவது அவர்கள் படிப்பது தீவிர இலக்கியமாக இருக்கும், ஆனால் எழுத உத்தேசிப்பது அதுவாக இருக்காது. அதிலும் யாரெல்லாம் தம் எழுத்தின் நுகர்வு மதிப்பை உணராதவராக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சுலபத்தில் மொழிக்குள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள். யாரெல்லாம் சமூக கவனத்திற்கு (அதாவது வாசகர்களின் மதிப்புக்கு) உள்ளாகிறார்களோ அவர்கள் எல்லாமே தம் கைகள் கட்டப்படுவதாக உணர்கிறார்கள். என்னதான் எழுத்துக்கு தமிழில் பண மதிப்பு இல்லையென்றாலும் இந்த நூதனமான பிரச்சினை மட்டுமே இருக்கிறது.
இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ள நாம் லோசா சொல்வதைப் போல இன்று பண்பாடு எப்படி புரிந்துகொள்ளப் படுகிறது என்று சிந்திக்க வேண்டும். பண்பாட்டை நாம் இன்று எளிய பொழுதுபோக்காக எல்லா தளங்களிலும் மாற்றிவிட்டோம். இந்தியச் சூழலை எடுத்துக் கொண்டால் ஒரு விளம்பரப் படம், ரீல்ஸ், குறும்படம், திரைப்படம், அரசியல்வாதியின் புரொமோஷன் வீடியோ (பொதுமக்களுடன் டீ குடிப்பது, ஜல்மூரி வாங்கித் தின்பது), மனிதர்கள் இடையிலான சம்பாஷணை, மேடையில் ஆற்றப்படும் உரைகள், பாராளுமன்ற விவாதங்கள், வகுப்பறைகள் எல்லாமே இன்று பொழுதுபோக்கையே இலக்காக்குகின்றன. பொழுதுபோக்காமல் தீவிரமானால் அது உடனடியாக அகற்றப்படுகிறது. நாம் ஏன் பொழுதுபோக்குக்காக இவ்வளவு தவிக்கிறோம் என்று மேற்கத்திய சூழலை வைத்து லோசா வினவுகிறார்.
எனக்கு இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் இன்று காலத்தை ரொம்பவே பயன்பாட்டு ரீதியாக (instrumental) காணத் தொடங்கியதுதான் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது காலத்தை நாம் முன்பு நம் வாழ்வின் காரணிகளில் ஒன்றாகக் கண்டோம். காலம் இருப்பதாலே நம்மால் நகர முடிகிறது, வாழ முடிகிறது, மரிக்க முடிகிறது. ஆகையாலே நாம் ஒருவர் காலமாகி விட்டதாக மரணத்தை உருவகப்படுத்தினோம். இங்கிருந்து நாம் இன்று காலமே ஒரு நுகர்வுப் பொருள்தான் எனும் இடத்துக்கு வந்துவிட்டோம். ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என நாம் நினைக்கத் தொடங்கியபோதே இது துவங்கிவிட்டது. காலத்தின் இடத்தில்தான் நாம் ஒவ்வொன்றையும் வைத்துப் பார்க்கிறோம் - ஒரு நட்பை, ஒரு காதலை, உணவை, வேலையை, அரசியலை, ஆன்மீகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என யோசிக்கிறோம். இயல்பாகவே நமக்கு காலத்திற்கு ஈடாகப் பணத்தை வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டு மட்டுமே காலத்துக்கு (உழைப்பு) ஈடாக இன்பத்தைத் தருவதாகக் கோருகிறது. ரூபாய் நோட்டு வாழும் அடிப்படைத் தகுதியைத் தருவதாகக் கோரிய போது அது காலத்தை ஈடுசெய்ய வில்லை. ஏனென்றால் வாழும் நிலைக்கான நிபந்தனைகள் காலத்தைப் போன்ற ஒரு காரணி மட்டும்தான். காலத்தை ஈடற்ற இன்பமாக நாம் கருதும்போது அது காரணியாக அல்லாமல் நுகர்வுப் பொருளாகிறது. இப்போது நாம் வாழ்க்கையையே நுகர்வாகப் பார்க்கிறோம். ஒருவர் கருத்தரிக்கிறார், ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. அதுவும் ஒரு பொழுதுபோக்குதான். அதனால் வாழ்கைக் கடினமாகிறதா, இன்பமாகிறதா என்பது இன்று மணமான இளைஞர்களிடையே ஒரு விவாதமாகிறது. வாழ்க்கையின் தீவிரம் இப்படி எல்லா நிலைகளிலும் மறுக்கப்பட்டு மேலோட்டமான போக்கு ஓங்குகிறது.
இந்த மாற்றத்தின் விளைவாகவே நாம் இலக்கியம் படைப்பதிலும் ஒருவித கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். ஒரு சமூகமாக, காலத்தை நாம் பார்க்கும் விதம் மாறாமல் இப்பிரச்சினைகள் சரியாகப் போவதில்லை. அதாவது காலத்தின் விசயத்தில் நாம் கொஞ்சம் பின்னுக்குப் போய் நவீனத்திற்கு முன்பு காலம் எப்படி இருந்தது, காலம் எப்படிப் பார்க்கப்பட்டது என்று வினவ வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...