முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள் வாழ்த்துகள்


 

பல்லவிக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி சில சிந்தனைகள்.

அவளுடைய வருகை என் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளதை உணர்கிறேன். இந்த ஆண்டும் அவள் அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
நானும் அவளும் இருவேறான மனநிலைகளும், ஆளுமைகளும் கொண்டவர்கள் -
எனக்கு என் நாவல் எழுத்து ஒழுங்காக நடந்தால் மட்டும் போதும். அவளுக்கு பல சின்ன விசயங்கள் ஒழுங்காக நிகழ வேண்டும்.
எனக்கு இத்தெளிவு உள்ளதால் வேறெதைக் குறித்தும் கவலையில்லை. வயதாகிறதா? நல்லது. இன்னும் சில பத்தாண்டுகள் கடுமையாக தினமும் எழுத்தில் உழைத்தால் போதும். எழுதும் திட்டங்களை நிறைவேற்றி விட்டுச் செத்தால் போதும். இதற்கு அப்பால் யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பொருட்டில்லை. என் பணம், வேலை, சூழல் குறித்து அக்கறையில்லை. சுவற்றில் ஒரு ஆணியை அடித்து ஒரு படத்தைத் தொங்க விடுவோமே அதுதான் நான். என் ஆணி என் நாவல் எழுத்து. பல்லவி ஒரு பட்டம். அவளுக்கு எப்போதும் பறக்கிற ஒரு குதூகலமும், விழுந்துவிடுவோமே எனும் பயமும் உண்டு.
அவளுடைய அணுகுமுறையில் ஒரு அனுகூலம் பல்வேறு சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் இருக்குமென்பது.
எனக்கு நேரடி உலகில் அனைவருடனும் இணங்கிச் செல்ல முடியும். அதுவும் ஓரளவுக்குத்தான். ஒரு புன்னகை, சில சொற்களுடன் விலகிவிடுவேன். யார் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சுத்தமாகக் கவலையில்லை. அவர்கள் என் உலகிலே இல்லை என நினைப்பேன். என் நாவலுடன், என் எழுத்துடன் சம்மந்தப்படாதவர்கள் என்னைப் பொறுத்தமட்டில் உயிருடனே இல்லாதவர்கள். அவர்கள் என் கண்ணிலே பட மாட்டார்கள். ஒன்று இலக்கியம் பேசு அல்லது நீ என் பார்வைப் புலத்திலேயேவில்லை எனச் சொல்வேன். அவள் அப்படி அல்லள். எல்லாருடனும் பேசுவாள். யாராவது கிடைத்தால் பேசியே கொன்று விடுவாள். யாராவது அவளைப் பேசிக் கொல்ல முன்வந்தால் ஆரத்தி எடுத்து வரவேற்பாள். இதனால் அவளது அக்கறை பெரிது. பெட்டிக்கடை வைத்திருக்கிறவர் யார், அவருடைய அக்காள் மகனுடைய சைக்கிளை வாங்கி ஓட்டிய சிறுமியின் தகப்பனார் பணிசெய்யும் இடத்தில் தினமும் முறைவாசல் செய்கிறவரின் குழந்தைதான் நம் வீட்டுக்கு முன்னால் விளையாடுகிறான் எனச் சொல்வாள்.
நான் சாலையில் பார்க்கும் மனிதரின் மனிதர் லேசாக விந்தி நடந்தார் பார்த்தாயா, மஞ்சள் வண்ணமடித்த வீட்டின் பால்கனியில் தொங்கும் ஊஞ்சலில் இருந்து ஒரு பூனை தாவி இறங்கியதும் அது தொடர்ந்து ஊடலாடியது பார்த்தாயா என்று பைக்கில் போகும்போது காணும் காட்சிகளைக் கவனித்துச் சொல்வேன். அவள் அந்த மனிதர் தன் கணக்கு வாத்தியாரை நினைவுபடுத்தியதாகச் சொல்வாள், எந்தப் பூனை நான் பார்க்கலியே, நாம் பூனை வளர்க்கலாமா எனக் கேட்பாள்.
நான் ஒரு பதிவையோ கட்டுரையையோ (ரெண்டுமே எனக்கு ஒன்றுதான் என்பது வேறு விசயம்) எழுதிவிட்டு படிப்பது உங்கள் பிரச்சினை எனப் போய் விடுவேன். அவள் ராணுவ தயாரிப்புடன் பதிவுகளைப் போட்டுவிட்டு ஏன் விருப்பக்குறி வரவில்லை, ஏன் ஜனங்கள் திரள்திரளாக பதாகைகளுடன் தன் வீட்டு முன்னால் வரவில்லை என யோசிப்பாள். கவலைப்படுவாள். என்னையும் கவலைப்படச் சொல்வாள். தன் பதிவுக்கு ஹா ஹா போட்டவர், இதயக்குறி இட்டவர் வேறு எப்போதெல்லாம் இத்தகைய மகத்தான செயல்களைப் புரிந்தார், தன்னை யாராவது கேலி செய்யும் பொருட்டு ஹாஹா என்கிறார்களா, இத்தகைய துரோகங்களை இதற்கு முன் எப்போதெல்லாம் செய்தார்கள் என பட்டியலை வைத்திருக்கிறாள். விருப்பக்குறிக்கெல்லாம் அர்த்தமில்லை என நம்புகிறவன் நான்.
அண்மையில் பல்லவி ஒரு புது கன்வெர்ட்டாகவும் மாறிவருகிறாள். எங்கள் ஊரில் புதிதாக கிறித்துவத்துக்கு மதம் மாறினவர்கள் நெருப்பாக இருப்பார்கள். வழக்கமான கிறித்துவர்கள் அவர்கள் பாட்டுக்கு இருப்பார்கள் என்பதால் வார்த்தைக்கு ஒரு தரம் விவிலியச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்துவோரை, ஏசுவுக்கு நெருக்கமாகத் தாம் மட்டும் உள்ளதைக் காட்டுவோரை அப்படி கேலி செய்வோம். மதமாற்றத்துக்கு அடுத்தபடியாக டயட்டிலும் இத்தகையோரைக் காண முடியும். பல்லவி ஒரு பேலியோ புது கன்வர்ட். வரும் ஆண்டு அவள் பேலியோ ஆண்டவரை தனியே விட்டுவிட்டு கூலாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த ஆண்டு நடந்த ஒரு படுபயங்கர சம்பவம் அவள் ஒரு நாளைக்கு நூறு முறைகள் பேஸ்புக் செயலியை நிறுவல் நீக்கம் செய்வதும் நிறுவுவதுமாக இருந்ததைக் கண்ட நான் "உன் பேஸ்புக் போதைப் பழக்கத்தைக் குறைக்க நீ போனை குறிப்பிட்ட சில மணிநேரக்கள் பீரோவில் வைத்துப் பூட்டலாமே?" என்று கேட்டதில் துவங்கியது. நானே சாவியை எடுத்துத் திறந்து பார்த்து மீண்டும் மீண்டும் அதைச் செய்வேனே என்றாள். குடி போதையடிமைகளை விட மோசமாக இருக்கிறதே என்று நினைத்து "சரி சாவியை என்னிடம் கொடுத்து வை" என்றேன். அப்படியே செய்தாள். ஒருமணிநேரம் கழித்து அவள் என்னிடம் சாவியை வாங்கித் திறக்க முயன்றால் சாவி வேலை செய்யவில்லை. பலவிதமான சாவிகளை முயன்றாள். எதுவும் வேலை செய்யவில்லை. கடைசியில் யுடியூப் வீடியோ ஒன்றைப் பார்த்து முயன்று (உள்ளே ஒரு கம்பியை நுழைத்து கடுமையாக உங்கள் வலுவைக் காட்டித் திருப்புங்கள், உடையும் சத்தம் கடாமுடாவென வரும் வரைக்கும் திருகுங்கள் வகை வீடியோ) பூட்டுக்குள் சாவி உடைந்து சிக்கிக் கொண்டது. அடுத்து ஒரு வாரம் பூட்டு சரிசெய்பவரை அழைத்து மர மறுத்து விட்டாள். "இது என் மனவுறுதிக்கான பயிற்சி பார்". கடைசியாக ஒருநாள் பூட்டு சரிசெய்பவரை அழைத்து வந்து திறந்தேன். போனை எடுத்து சார்ஜ் போட்டேன். அவள் வந்ததும் அதைப் பிடுங்கி தனக்கு யாரெல்லாம் மிஸ்கால் கொடுத்துள்ளார்கள் எனப் பார்த்தாள். ஒன்றிண்டு பேர்தாம். அவர்களை அழைத்து அவள் பரவசமாகத் தனக்கு நடந்ததைச் சொல்வதைப் பார்க்க டிவியில் தேவ சாட்சியம் சொல்கிறவர்களைப் போலவே இருந்தது. கடைசியில் நடந்ததுதான் வேடிக்கை - அவள் ஆரம்பத்தில் திறக்க முயன்ற சாவியை வீட்டிலுள்ள வெவ்வேறு அலமாரிகளில் முயன்று பார்த்தேன். மற்றொரு அறையில் உள்ள அலமாரியில் அச்சாவி சரியாகப் பொருந்தியது. அதை அவள் எப்படி இந்த அலமாரியில் பொருத்தினாள், அதை வைத்து எப்படிப் பூட்டினாள் என்று புரியவில்லை. ஆனால் எப்படியோ இதெல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்படி வாழ்க்கையில் எதுவுமே நடக்காமல் போராடிக்கிறது என நினைக்கிறவர்கள் பல்லவியை அழைத்துச் சென்று வைத்துப் பார்க்கலாம். தினமும் எதாவது ஒரு சாகசம், திகைப்பு, பரபரப்பு நிச்சயம்.
ஒட்டுமொத்தமாக வரும் ஆண்டு பல்லவிக்கு மிகச்சிறப்பாக அமையட்டும். மேலும் பல பூட்டுக்கள் உடையட்டும், பலரை பேலியோ பக்கம் திருப்ப முயன்று அது தோல்வியாகட்டும், புதுப்புது இலக்குகளும் இலக்குகளை எட்டாத பல்லாயிரம் பயணங்களும் அமையட்டும் (எட்டிவிட்டால் அதிலென்ன ஜாலி)!

கருத்துகள்

తిరుపతి మహేష్ இவ்வாறு கூறியுள்ளார்…
Belated happy birthday to Madam.
---
Tirupati Mahesh

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...