Skip to main content

"I Have the Streets" - ரவிச்சந்திரன் அஷ்வினின் (பாதி) சுயசரிதை




குழந்தைப் பருவத்தில் அஷ்வினுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள், அதனால் அவர் கிரிக்கெட் ஆடும்போதும், அன்றாட வாழ்க்கையை நடத்தும்போதும் ஏற்பட்ட தடைகளும், அவரது பெற்றோர் அவருக்கு அளித்த ஆதரவும்தாம் இப்புத்தகத்தின் துவக்கம். சொல்லப்போனால் அஷ்வின் தன் இளமையைப் பற்றி நேர்முகங்களில் பேசும்போதும் இதையேதான் சொல்லி ஆரம்பிக்கிறார். ஆனால் நேர்முகங்களில் பார்க்கையில் கிடைக்காத அனுகூலம் புத்தகமாக இதைப் படிக்கையில் உண்டு - அஷ்வினைக் குறித்து சிறிது வேறுவிதமாக யோசித்துப் பார்க்க இப்புத்தகம் அனுமதிக்கிறது. அஷ்வினுக்கு தனது பெற்றோரிடத்து மிகுந்த அன்பும் நன்றியுணர்வும் உள்ளதைப் போன்றே ஒருவித குற்றவுணர்வும் இருக்கிறது - தன் தகுதிக்கு மீறி தன் பெற்றோர் தன்னைப் போற்றி வளர்த்தார்கள், தன் வளர்ச்சிக்காக மிகுந்த தியாகங்கள் செய்தார்கள் எனும் எண்ணம் அவரைச் செலுத்துகிறது. இதை நான் ஒரு 'அனாதைக் குழந்தை மனநிலை' என்பேன். நான் இதை என் அப்பாவின் தலைமுறை ஆட்களிடம் அதிகம் கண்டிருக்கிறேன். பெற்றோர் ஒன்றுமே பெரிதாகச் செய்திருக்க மாட்டார்கள். சோறு போட்டிருப்பார்கள், கஞ்சி ஊற்றியிருப்பார்கள், வருடத்திற்கு ஒரு செட் துணி வாங்கிக் கொடுத்திருப்பார்கள். இதற்கே தம் தகுதிக்கு மீறி தாம் வளர்க்கப்பட்டதாக அக்குழந்தைகள் உணர்வார்கள். பெற்றோரிடம் மிகுந்த நன்றியுணர்வை இந்தக் குற்றவுணர்வு ஏற்படுத்தும். அப்பெற்றோர்கள் "அடேய் உன்னை வளர்த்ததெல்லாம் நான் செஞ்ச பாவம்டா" எனும் கணக்கில்தான் பிள்ளைகள் வளர்ந்து நரைத்த பின்னரும் நடந்துகொள்வார்கள். நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்ததும், நவீனம் வந்ததும் நம் குழந்தைகள் பெற்றோரை உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். "என்னைப் பெற்றதே பாவம், நான் கேட்டேனா, அதற்கு ஈடு செய்ய எனக்கு நான் கேட்பதையெல்லாம் கொடுங்கள், உங்களிடம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கிக் கொடுங்கள்" என்று கோரினார்கள். வியப்பாக, அஷ்வினிடம் என் தந்தை காலத்து மனிதர்களின் மனநிலையே உள்ளது, என் காலத்தினரிடம் மனநிலை கூட இல்லை.

அதனாலே அவர் தொடர்ந்து தன் பெற்றோர் பட்ட பாடுகளை விவரிக்கிறார். குறிப்பாக தன் தந்தை குறித்து அவர் பேசும் இடங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. அதேநேரம் இப்புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு சில நாட்கள் ஆறப்போட்டால் இக்கேள்வி எழும்: எந்த இடத்தில் தம் கனவை நிறைவேற்றத்தானே தன் அப்பா தன்னை அவ்விதம் வளர்த்தார் என்று அவர் யோசிப்பதில்லை? பெரும்பாலான ஒற்றைக் குழந்தை குடும்பங்களில் இப்படியான கேள்விகள் எழும்தானே. ஆனால் அஷ்வினின் குடும்பத்தில் அப்படி நிகழ்வதில்லை. இந்த சுயசரிதையில் அஷ்வினுக்கு ஈடான இடம் அவரது அப்பாவுக்கும் அவரது ஆளுமைக்கும் வழங்கப்படுவதாலே எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது. குழந்தைப் பருவத்தில் அவர் தன் அப்பாவைப் போலச் செய்யத் தொடங்குகிறார். அப்பாவாகவே யோசிக்கிறார். அப்பாவுக்குப் பிடித்த கிரிக்கெட் அவருக்கும் பிடிக்கிறது அப்பாவின் கிரிக்கெட் பைத்தியம் அவருக்கும் பிடிக்கிறது. அப்பாவாகவே மாற முயல்வதும், அவரையும் மீறிச் சென்று அப்பா 2.0 ஆவதும் அவருக்கு இந்த 'அனாதை மனநிலையைக்' கடந்து தன்னை ஒரு சிறந்த மகனாக, தகுதிபெற்ற மகனாக, பார்ப்பதற்கு உதவியிருக்க வேண்டும்.
ஒருநாள் அஷ்வின் வீட்டுக்குள் மட்டையாடிப் பயிற்சி செய்கிறார். பந்து குளிர்பதனப் பெட்டியில் திரும்பத் திரும்ப மோதுகிறது. அது அஷ்வினின் தாத்தாவை எரிச்சல்படுத்துகிறது (அது அவர் வாங்கியது). அவர் அஷ்வினின் அப்பாவிடம் கோபிக்கிறார். அப்பா சமாதானம் சொல்கிறார். ஆனால் அவரால் அஷ்வினையும் கட்டுப்படுத்த முடியவில்லை; வீட்டில் ஒரு மோதல் சூழல் உருவாக்கிறது. ஒரு கட்டத்தில் அஷ்வின் பந்தை அப்பகுதியில் அடித்து விடக் கூடாதே என்று அவர் குறுக்கே விழுந்து தடுக்க நேர்கிறது. அப்போது மட்டை அவரது முன்நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டுகிறது. அஷ்வின் பயந்து போகிறார். தான் ஏன் கவனித்து மட்டையை வீசவில்லை, தான் ஏன் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று வருந்துகிறார். ஆனால் அப்பாவோ கூலாகப் போய் ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக் கொண்டு வந்து அன்று பங்கேற்க வேண்டிய ஆட்டத்துக்காகத் தன் மகனை பைக்கில் அழைத்துச் செல்கிறார். அன்று மாலை வரை அமைதி காக்கிறார். அஷ்வின் பிரமாதமாக ஆடி அரைசதம் அடிக்கிறார். மாலையில் அவர் அஷ்வினை அழைத்துக் கொண்டு போய் தின்பண்டம் வாங்கிக் கொடுக்கிறார். "ஏன் சதம் அடிக்கவில்லை" என்று மட்டும் கேட்கிறார். இந்தக் காட்சி என் நெஞ்சைத் தொட்டது. என்னவொரு அற்புதமான மனிதர்! அதேநேரம் அஷ்வின் ஏன் அப்படி நடந்துகொண்டார், அவரை அக்கணம் செலுத்தியது என்ன எனும் கேள்வியும் எழுந்தது:

எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது Totem and Taboo (1913) நூலில் பிராயிட் சொல்கிற அப்பாக்களைக் கொல்வதற்கு மகன்கள் கொள்ளும் விருப்பம், அதை நவீன சமூகத்தில் நாம் மறைத்தும் புதைத்தும் அப்பாவைப் புனிதமாகவும் ஒப்பற்றவராகவும் மாற்றுவது ஆகிய சிக்கல். இது நம்மில் ஒவ்வொருவரிடமும் செயல்படுகிறது (ஆண் பெண் வேறுபாடில்லை). அப்பா ஒரு அதிகாரக் குறியீடு. அதிகாரம் நம்மை ஒரேயடியாக வெளியேற்றி விடுமோ, காணாமல் அடித்துவிடுமோ எனும் அச்சம் குழந்தைகளுக்குள் ஆரம்பம் முதலே இருக்கிறது. அவர்கள் அப்பாவின் அதிகாரத்தை உடல் ஆதிக்கமாக, அவர் கொணரும் பொம்மைகளாக, பின்னர் பணமாக, உணவாக, உதவிகளாகப் பார்க்கிறார்கள். இயல்பாகவே, அப்பாவாக மாற அப்பாவை ஒரு குறியீடாகவே அங்கிருந்து அகற்றியாக வேண்டும். ஆக, இங்கு 'கொலையை' நாம் கொலையாகப் பார்க்க அவசியமில்லை. அதைக் 'கவர்தலாகப்' பார்க்கலாம். பிள்ளைகள் அப்பாவை அபகரிப்பதே ஒருவிதத்தில் ஈடிபல் காம்பிளக்ஸின் மையம்.

நான் அஷ்வினின் அப்போதைய மனநிலையைக் கற்பனைச் செய்துப் பார்க்கிறேன். தாத்தா ஒரு பக்கம் கத்த, இவர் அதனால் எரிச்சலாகிறார். ஏன் அப்பா தாத்தாவுக்குப் பணிந்து போக வேண்டும் எனத் தோன்றுகிறது. குளிர்பதனப்பெட்டியில் தான் வேண்டுமென்றே அடிக்கவில்லையே என்று தோன்றுகிறது. ஒரு பக்கம் அவருக்கு ஆட்டத்தையும் படிப்பையும் சமாளிக்கும் அழுத்தம், உடல் சோர்வு, எதற்கு இவ்வளவு அழுத்தம் எனும் எண்ணம். இன்னொரு பக்கம் அப்பா ஏன் இப்படி இருக்கிறார் எனும் சிறு வருத்தம். அவருக்கு தன் திசையில் தன் தந்தையைச் செலுத்த வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் அப்பா தன் அப்பாவின் மகனாகவே நடந்துகொள்கிறார். இந்த அக-மோதலின்போது அஷ்வினின் மட்டை தானாகவே அப்பாவின் மண்டையில் போய் மோதுகிறது. அல்லது அவரது உபமனம் அதை அவ்வாறு செலுத்துகிறது. அப்பாவுக்கு தலையில் இருந்து ரத்தம் கொட்டியதும் அதனாலே அவர் துடிதுடித்துப் போகிறார். அப்பா மீதான ரகசிய வன்மம் சட்டென வெளிப்பட்டு விட்டதோ எனும் எண்ணமே அவரை அச்சுறுத்துகிறது. ரத்தம் அதன் குறியீடு. அதன் மீதான பயமும் குற்றவுணர்வும் அவரை ஆட்கொள்ள அதிலிருந்து மீற கிரிக்கெட்டில் நன்றாகச் செயல்பட முயல்கிறார்.

அடுத்த நாள் கிரிக்கெட் போட்டியில் சோபித்து அப்பாவும் சமாதானம் ஆனதும் இந்த சிறுபிசகு அவர் மனத்தில் இருந்து காணாமல் போகிறது. மெல்லமெல்ல அதிகார மீறலை அவர் குடும்பத்துக்கு வெளியே கிரிக்கெட்டிலும், அமைப்புகளிலும் வெளிப்படுத்தக் கற்கிறார். அவரது அசலான வளர்ச்சி அங்கேதான் ஆரம்பிக்கிறது.

நசீர் ஹுசைனின் Playing with Fire எனக்குப் பிடித்த மற்றொரு சுயசரிதை. அதில் அப்பா தன் கனவை ஒரு மகனான தன் மீது திணித்ததை தான் குழந்தைப்பருவத்தின் போது வெறுத்ததை, எதிர்த்ததை, பின்னர் அது இயலாமல் போக மெல்ல மெல்ல தன்னிச்சையாக அதையே ரசிக்கத் தொடங்கியதைப் பற்றி நசீர் ஹுசைன் பேசுகிறார். அவர் பின்னர் ஒரு சிறந்த கிரிக்கெட் அணித்தலைவர் ஆகிறார். ஆனாலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் 'நிம்மதியாக' உணர்கிறார். இது அஷ்வினின் ஆளுமையில் இருந்து நேரெதிரான ஒரு திசை. இந்த இரண்டு நூல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது.

அஷ்வினுக்குப் பொதுவாகவே எந்த அமைப்புக்குள்ளும் கலகம் பண்ணுவது, புதிதாக ஒன்றை முயல்வது, முறைமையைவிட இலக்கே முக்கியம் எனக் கருதுவது, விமர்சன-ரீதியாக அணுகுவது, சிந்திப்பது, அலசுவது பிடித்திருக்கிறது. இது ஒருவிதத்தில் தன் அப்பா வளர்ந்த சூழல் - திறமையை வெளிப்படுத்த அனுமதிக்காத ஒரு பாரம்பரியமான, ரிஸ்க் எடுப்பதை விரும்பாத நடைமுறை, கட்டமைப்பு - மீதான அவரது கோபமே என்று தோன்றுகிறது. தன் அப்பா அமைதியாகச் சென்றிருக்கக் கூடிய இடங்களில் எல்லாம் அஷ்வின் துணிந்து பேசுகிறார், செயல்படுகிறார். அவர் தன் அப்பாவின் ஆளுமையை மீறிச் செல்கிறார். இதற்காக (அதிகாரத்தை எதிர்ப்பது, தன் விருப்பங்களின் படி முடிவெடுத்து கிரிக்கெட் கிளப்புகளை மாற்றுவது) சில நேரங்களில் அவர் அப்பா அவரைக் கண்டித்தாலும் மெல்ல மெல்ல தன் மகன் தான் வரைந்த கோட்டைத் தாண்டிச் செல்வதை உணர்ந்து அதை அமைதியாக அனுமதிக்கிறார். இப்பகுதியை நான் வெகுவாக ரசித்தேன்.

மற்றொரு காட்சி - தன் மகனுக்கு விஜய் படங்கள் பிடிக்குமென்று அதற்காக அவர் அழைத்துச் செல்கிறார். டிக்கெட் வாங்கப் போராடுகிறார். தன் மகன் தன்னைப் போல மாற முயலும்போது இவர் அவனைப் போல தானும் மாறிப் பார்க்க முயல்கிறார். எனக்கு அஷ்வினின் அப்பா மீது மிகுந்த அபிமானம் ஏற்பட்டது. தன்னைப் போலச் செய்யும் மகன் வளர்ந்து தன்னைக் கடந்து செல்லவிருக்கிறான் என அவர் உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடே அவனுடன் ஈடாக தன்னை மாற்ற அவர் முயன்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அஷ்வின் அப்பா 2.0 ஆகி அப்பாவையும் தாண்டிச் சென்றுவிடுகிறார். இன்றும் அவர் காணொளிகளில் பேசும்போதும் இந்த "அப்பாதான்" தென்படுகிறார். அவர் கிரிக்கெட் ஆடும்போது கூட அதில் ஒரு குழந்தைமையோ முதிர்ச்சியின்மையோ இருக்காது. அவர் கிரிக்கெட்டிலும் ஒரு "அப்பாதான்". அவரது உடல்மொழியிலும், தொனியிலும் அது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எனக்கு இந்த சுயசரிதையில் மிகவும் பிடித்தது பாத்திர வர்ணனைகள். அவை அவ்வளவு துல்லியமாக காட்சிபூர்வமாக உள்ளன. ஒவ்வொருவரும் நுணுக்கமாக விவரிக்கப்பட்டு நம் கண்முன் எழுந்து வருகிறார்கள். அவரது தாத்தா, அப்பா, அம்மா, தெருக் கிரிக்கெட் ஆடும் நண்பர்கள் என. அஷ்வினின் தாத்தா சுவாரஸ்யமான மனிதர். அவர் இளமையில் குஸ்தி பயில்வான் என்று ஒரு குறிப்பு வருகிறது. அஷ்வினும் குழந்தையாக இருக்கையில் குஸ்தி பயின்றதாகவும் சொல்கிறார். பிராமணர்களில் குஸ்தி பயில்வான்களா என்று துணுக்குற்று நான் கூகிள் செய்து பார்த்தேன். வட-இந்தியாவில் குறிப்பாக சில பிராமணர்கள் பிரசித்தி பெற்ற குஸ்தி பயில்வான்களாக இருந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு இட்லி தின்னுகிற குஸ்தி பயில்வான் என்று பட்டப்பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். நாம் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். மத்திய சமூகத்தினரும் பிராமணர்களாக உருமாறிய வரலாறு உண்டு (சாதி என்பதே பல்வேறு குழுக்கள் ஒரு சமூகமாகத் திரண்டு ஒற்றை அடையாளத்தின் கீழ்வந்து படிநிலையில் இடம்பெறுவதுதானே. அதை மறைக்கவும் அதிகாரத்தை அடையவுமே நாம் பூர்வ வரலாற்றுத் தொன்மங்களை உருவாக்குகிறோம்.) பிராமணர்கள் என்போர் நாம் காண்கிற மூளையுழைப்பில் ஈடுபட்டிருக்கக் கூட நடுவாந்திரமான உடற்தகுதியும் உயரமும் கொண்ட, உடலுழைப்பை அஞ்சுகிற மக்கள் மட்டுமே அல்லர். பல்வேறு தொழில்களிலும் பின்னணியிலும் இருந்து வருவதால் அவர்களுடைய மரபணுவிலும் விளையாட்டை, அதுவும் தொடுவிளையாட்டை (contact sport) நேசிக்கிற, யாருக்கும் அடங்காத திடகாத்திரமான மனிதருக்கான தடயங்களும் உண்டு. அஷ்வினும் அத்தகைய மரபணு கொண்டவரே என நினைக்கிறேன். அதேநேரம் நவீன உணவுப் பழக்கத்தினாலோ ஏதோ அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. மூச்சிரைப்பு அடிக்கடி வருகிறது. அவரது இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மேற்பகுதி அளவுக்கு வலுவாக இருப்பதில்லை. அதனாலே அவரால் பின்னால் கிரிக்கெட்டுக்கான உடற்தகுதியைக் கொண்டிருக்க முடிவதில்லை. எவ்வளவு முயற்சி எடுத்தாலும் உடல் எடை குறைவதோ வேகமாக ஓட முடிவதோ இல்லை என வருந்துகிறார்.

பொதுவாக கிரிக்கெட் சுயசரிதைகள் சம்மந்தப்பட்டவரின் அகத்தினுள் செல்லாது. புறவுலகம், தான் பார்த்த, கண்ட விசயங்கள் தணிக்கை செய்யப்பட்டு தரப்பட்டிருக்கும். நசீர் ஹுசைன், ஷேன் வார்ன் ஆகியோரின் சுயசரிதைகளே விதிவிலக்கு. அஷ்வினின் சுயசரிதையில் வினோதமாக ப்ரீத்தியைத் தவிர வேறு பெண்களே வருவதில்லை. அவரது மனப்போக்கின் விசித்திரங்கள், முரண்பாடுகள், குழப்பங்கள் பேசப்படுவதில்லை. தனிப்பட்ட விசயங்களைச் சொல்வதும் விடுவதும் அவரவர் விருப்பம். ஆனால் சுயசரிதையின் தரம் அது எந்தளவுக்கு அந்தரங்கமாக, சிக்கலாக எழுதப்படுகிறது என்பதைப் பொறுத்ததே. இந்த சுயசரிதையும் அவ்விதத்தில் கோட்டை விடுகிறது. மற்றொரு குறை அஷ்வின் 2011 உலகக்கோப்பையில் பங்கேற்பதுடன் சுயசரிதை முடிந்துவிடுகிறது. அஷ்வினின் வாழ்க்கையின் மிகச்சிறந்த பகுதிகள் அவர் டெஸ்ட் ஆட்டத்தில் செய்த சாதனைகளும், அவரது சுழல் பந்து மெல்லமெல்ல பரிணமித்து அவர் தலைசிறந்த ஆப் ஸ்பின்னரானதும், அவர் பயன்படுத்திய உத்திகளும், எதிர்கொண்ட சவால்களும்தாம். அவை இந்நூலில் இல்லை. அவரது சமகால வீரர்கள் குறித்த அவரது கருத்துக்களும், மனப்பதிவுகளும் கூட இல்லை. ஒருவேளை இவை பின்னர் ஒரு தனி நூலாக வெளிவரக் கூடும். இப்போதைக்கு இது ஒரு ‘பாதி’ சுயசரிதை. மிகவும் ரசித்துப் படிக்கத்தக்க, பல இடங்களில் நம்மை மறந்து சிரிக்கவும் மனமுடையவும் வைக்கிற ஒரு சுயசரிதை. நிறைய கனவுகளுடன் வாழும் அப்பா தன் மகனை கிட்டத்தட்ட தன் நகலாகவே வளர்த்தெடுக்க முயல்வதை, பல்வேறு தடைகளுக்கு எதிராக அவர் இடையறாத போராடுவதை, அதன் விளைவாக மகனின் ஆளுமை சிக்கலாகவும் படைப்பூக்கமாகவும் மாறுவதை, அவர் இறுதியில் சாதித்துக் காட்டுவதைச் சித்தரிக்கும் ஒரு சுவாரஸ்யமான சுயசரிதை. இது பெருநகர்வாழ் மத்திய வர்க்க குடும்பங்கள் எப்போதுமே எதிர்கொள்ளும் நெருக்கடியின் (குழந்தையைச் சுதந்திரமாக வளர்ப்பதா, குழந்தைகள் வென்றுதான் ஆக வேண்டுமா எனும் கேள்விகள் மிகுந்த) கதையும்தான்.

கடைசியாக, தலைப்புக்கு வருகிறேன்: தெருக்கிரிக்கெட்டை அஷ்வின் மிகவும் நேசிப்பவர். இப்போதும் கூட தன் நண்பர்களுடன் ஒரு அணி அமைத்து ஆடிவருவதாகக் கூறுகிறார். அங்குதான் அவர் பந்து வீசும் உத்திகள், கள அமைப்பு வியூகங்கள், தலைமைப் பண்பு ஆகியவற்றை முயன்று பார்க்கிறார். முக்கியமாக அங்குதான் அவர் சுதந்திரமாக இருக்கிறார். ஏன் ஒரு மைதானத்தில் கிடைக்காத சுதந்திரம் அவருக்கு ஒரு சிறிய சந்தில் உள்ளதாகத் தோன்றுகிறது? இப்போதும் கூட பெருநகரங்களின் தெருக்களில் பல்வேறு (30-40 வயதான) நபர்கள் இப்படி கிரிக்கெட் ஆடி ரசிப்பதைக் காண்கிறோம். எங்கு போய் எதைச் சாதித்தாலும் நாம் அங்கெல்லாம் முழுமையாக இருப்பதாகவோ உரிமை பாராட்ட முடிவதாகவோ நமக்குத் தோன்றுவதில்லை. இது பெருநகரங்களின் ஒரு பிரச்சினை. கிராமத்தில் ஒட்டுமொத்த ஊருமே நமதென்று தோன்றும் (அதாவது நம் நண்பர்களும் உறவினர்களும் இருக்கும் ஊர்ப்பகுதியைச் சொல்கிறேன்). ஆனால் பெருநகரத்தில் இந்த உணர்வு வர முடியாதபடி அது இடையறாது மாறிக்கொண்டிருக்கும். மனிதர்களுக்கு நிலைத்த இடமோ வேலையோ அங்கு இராது. பெருநகரம் இந்தப் பதற்றத்தை உள்ளூர தக்க வைத்திருக்கிறது. அது இதை சுதந்திரமென்றும் வாய்ப்புகள் என்று பார்ப்பதற்குக் கற்றுத் தருகிறது. நம்மை இவ்வாறு சமாதானப்படுத்துகிறது. அச்சமாதானத்தை ஏற்காதவர்கள் தமக்கான ரகசிய வெளியை உற்பத்தி பண்ணிக் கொள்கிறார்கள். பெருநகரத்தை ஒரு விரைவு ரயில் வண்டியுடன் ஒப்பிடலாம். அது ஓடிக்கொண்டே வரையில் மட்டுமே அதற்கான வெளி தோன்றுகிறது. அங்கு வளரும் ஒருவர் வெளியை இப்படி நிலையற்ற புறவெளி - நிலையான அகவெளி எனக் கற்பனைச் செய்து பகுத்துக் கொள்கிறார். தன் தெரு, அங்கு தன் நண்பர்கள் என ஒரு வெளி தோன்றினால் அது அவரது அகவெளியின் குறியீடாகிறது. நிலையற்ற வெளிக்கு எதிராக நம்மை நிலைநிறுத்த அது அவசியமாகிறது. கிரிக்கெட்டிலும் கூட அஷ்வின் நிரந்தமாகத் தன்னை அறிய தெருக்கிரிக்கெட்டே உதவுகிறது. புறவெளி அவருக்கு வீடாகவும் பெருநகரமாகவும் அப்பாவாகவும் இருக்கிறது. அகவெளி அவருக்குத் தெரு. அங்கு அப்பாக்கள் இல்லை. அதனால்தான் அவர் "என்னிடம் தெருக்களும், அங்கு நடக்கும் கிரிக்கெட்டும் உள்ளது, நான் அங்கிருந்தே வருகிறேன்" என அவர் அறிவிக்கிறார் எனத் தோன்றுகிறது. தன் பூர்வத்தை, தன் நிலைத்த ஒரு பகுதியை, வளர்ந்த பின்னர் தோன்றுகிற 'அப்பாத்தனங்களை' உதறிவிட்டு குழந்தையாகவே அவர் இருக்க முடிகிற வெளியை அவர் தெருவாகப் பார்க்கிறார். அங்கு தன் தன்னிலையை 'நிகழ்த்துவதே' அவருக்கு தெரு கிரிக்கெட்டாக உள்ளது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...