Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினி எனும் தொன்மமும் இந்திய குடும்பமும்




ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும் போது ரஜினி தான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்கள் மெல்ல மெல்ல கூடுதலாக பல வர்ணங்களை இந்த புனைவில் சேர்த்து விட்டு செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்து தான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. 

இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர் பரோபகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்மையானவராக தன்னைக் குறித்து ஒரு சித்திரத்தை உருவாக்கினார். ஆனால் அவர் ஒரு அரசியல் இயக்கத்தின் பகுதியாகவும் இருந்தார். திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை என்றால் எம்.ஜி.ஆர் இவ்வளவு காவியத் தன்மை பெற்ற நாயகனாகியிருக்க மாட்டார். ஆனாலும் ரஜினியின் தொன்மம் முற்றிலும் வேறானது. அவரிடம் உள்ள விளையாட்டுத் தனம் நாம் மலையாளத்தில் மோகன்லாலின் பாத்திரங்களிலும் காண்கிறோம். ஆனால் ரஜினியிடம் கூடுதலாக கள்ளங்கபடமின்மையும், அப்பாவித்தனமும் இருக்கும். தொண்ணூறுகளில் இருந்து ரஜினியின் படங்களில் ஒரு தத்துவார்த்த சரடை தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வந்துள்ளதை காணலாம். சமகாலத்தில் அவரை போல் வேறெந்த நாயகனுக்கும் இவ்வளவு தொடர்ச்சியுடன் ஒரு அடிப்படை தொன்மம் பல கதைகளிலும் மாறாமல் மீள மீள பேசப்பட்டு வந்ததில்லை. ரஜினிக்கு பிறகு வந்த பல நடிகர்களும் அவரைப் போல் ஒரு தொன்மத்தை உருவாக்க முயன்றனர். அவருடைய ஸ்டைலை பல்வேறு அளவுகளில் வரித்துக் கொள்ள பார்த்தனர். எதுவுமே வெற்றி பெறவில்லை.
ரஜினியின் தொன்மம் வெற்றி பெற்றதற்கும் நம் சமூக மனதுக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. நாம் பொதுவாக எப்படி யோசிக்கிறோம் என்பதை இத்தொன்மத்தை அறிவதன் வழி உணரலாம். தொன்மப்படி ரஜினி முதலில் ஒரு அதிமனிதன். ஆனால் இதன் இன்னொரு அடுக்கில் அவர் பிறரை விட மிக பலவீனமானவராகவும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படவும், துன்புறுத்தப்படவும், அழிக்கப்படவும் தன்னை அனுமதிக்கிறவரகவும் வருகிறார். இரண்டு அடுக்குகளும் படம் முழுக்க சேர்ந்தே அவர் பாத்திரத்தின் பண்புகளாக இருக்குகின்றன. தொடர்ந்து தோற்கடிக்கப்படும் போது தான் அவர் வெற்றி அடையும் போது கூடுதல் தாக்கம் இருக்கும் என நீங்கள் வாதிடலாம். கைத்தட்டும் ஆரவாரமும் பொங்கும் என கூறலாம். ஆனால் கிளைமேக்ஸில் ரஜினி ஒரு பிரம்மாண்டமான எதிரியை வீழ்த்திய பின், அல்லது மாய-எதார்த்த பழங்கதைகளின் வருவது போன்ற தடைகளை கடந்த பின்னரும் அவர் முழுமையான வெற்றி பெறுவதில்லை. தொடர்ந்து படம் முழுக்க சிறுக சிறுக அவர் அடைந்த தோல்விகளும், இழப்புகளும், பெற்ற காயங்களும் இந்த கடைசி வெற்றியை சமனப்படுத்துவதில்லை. நுணுக்கமாக கவனித்தால் அவரது பெரும் வெற்றி பெற்ற படங்களில் முடிவில் அவர் ஒரு கசப்புடனும், வெறுப்புடனும் தான் வெற்றியை பார்த்து புன்னகைப்பார். அல்லது குடும்பம், நட்பு போன்ற ஏதாவது உறவுகளின் நீரோட்டத்தில் ஒரு குருதி படிந்த வாளை கழுவுவது போல் தன்னை கரைத்துக் கொள்வார். கமல், விஜய், விக்ரம், விஜயகாந்த், சரத்குமார் என யாரிடமும் இந்த கசப்பான, கிட்டத்தட்ட தோல்விக்கு நிகரான வெற்றியை காண முடியாது. மேலும் ரஜினியின் படங்களில் வில்லன் விழும் போது அது ரஜினியின் சாகசமாக, சாமர்த்தியமாக நாம் காண்பதில்லை. தீமையின் அழிவாகவே தோன்றுகிறது. ஏனென்றால் தீமை ஒரு பிரம்மாண்ட மரத்தை போலத் தான் விழும். அப்போது அதன் அழிவுடன் சேர்த்து குருவிகளும், அதன் முட்டைகளும், சிறு சிறு உயிரனங்களும், மனிதர்களும் தான் சாக வேண்டும். மாபெரும் தீமைகள் முடிவுக்கு வரும் போது நன்மையையும் பெருமளவுக்கு காவு வாங்கியிருக்கும். மகாபாரதப் போர் முடியும் போது வரும் கசப்பு இது எனக் கூறுவது மிகையாக இருக்கும் என்பதால் அதில் ஒரு கால்வாசி எனலாம். ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள நாயக தொன்மங்களிடையே உள்ள முக்கிய வித்தியாசம் இது.
நமக்கு ஏன் கமலை விட ரஜினியை பிடித்திருக்கிறது? ஏனென்றால் இந்திய சமூகத்தில் தினம் தினம் தோல்விகளையும் அவமானங்களையும் பல்வேறு நிலைகளில் சந்திக்கிறவர்கள் தாம் அதிகம். சராசரி இந்தியனை ஒரு மிதியடி எனலாம். தினம் தினம் அவனை குடும்பத்தில், அண்டை வீடுகளில், சொந்தங்களில், வேலையிடத்தில், சமூகத்தில் யாராவது மிதித்து தேய்த்தபடியே இருக்கிறார்கள். மிதிக்கப்பட்டு மிதிக்கப்பட்டு அவன் தன் தனித்தன்மையை சுரணையை கிட்டத்தட்ட இழந்து விட்டான். அவன் எதிர்ப்பது எப்படி என யோசிக்க மாட்டான். கசப்புகளையும், அவமதிப்புகளையும், பிரச்சனைகளையும் சாலையில் கிடக்கும் ஒரு நாயின் பிணத்தை போல், ஈ மொய்க்கும் ஒரு பைத்தியக்காரனின் உடலைப் போல், தேங்கி நிற்கும் சாக்கடை வெள்ளத்தை போல் கடந்து போவதெப்படி எனத் தான் யோசிப்பான். இந்தியனுக்கு வாழ்க்கை ஒரு சவால் அல்ல. பனிமூட்டம். அதன் வழி அதைக் கடந்து போவது தான் அவன் உத்தேசம், விருப்பம், பாணி. கமல் வாழ்க்கையின் பிரச்சனைகளை கேள்வித்தாள் சவால்களாக பார்க்கும் ஒரு சமூகத் தட்டின் பிரதிநிதி. இந்த மேல்தட்டு நுண்ணுணர்வு என்றுமே இந்திய மனதுக்கு ஏற்பானது அல்ல.
ரஜினியின் தொன்மத்தில் உள்ள இன்னொரு முரண்பாடு குடும்பம். அவரது வெற்றிப்படங்களில் குடும்பத்தோடு தீவிரமாக ஒட்டுறவாடுபவராகத் தான் வருகிறார். எல்லா பெரிய பிரச்சனைகளும் குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆனால் குடும்ப உறவுகளின் அநிச்சயம், வஞ்சகம், மேலோட்ட தன்மை ஆகியவை பற்றி சதா வருந்துகிறவராகவும் வருகிறார். வில்லனை விட ரஜினியை அதிகம் நோகடிப்பது, துன்புறுத்துவது, மார்க் ஆண்டனி பாணி கத்திகளை அவர் மீது சொருகுவது குடும்ப உறவுகளாகத் தான் இருக்கிறார்கள். வீட்டுக்குக் கோபத்தை வெளியே காட்டுபவர் போலத் தான் ரஜினியும் ஏதோ ஒரு வில்லனை இறுதியில் துவைத்தெடுக்கிறார். இதுவும் நம் கதை தான். உலகத்தை பற்றியும் சமூகத்தை பற்றியும் சதா கவலைப்படுகிறவர்கள் நாம். ஆனால் வாசற்படியை தாண்டிய எந்த பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு தேடுவதோ அக்கறை காட்டுவதில்லை. இந்த முரண்பாடு நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது. இவ்வளவு அரசியல் கட்டுரைகள், வாதங்கள், டி.வி விவாதங்கள், அலுவலக, டீக்கடை, இணைய அரட்டைகள். சினிமாவுக்கு அடுத்தபடியாய் நாம் அதிகம் ஈடுபடுவது அரசியல் அரட்டையில் தான். ஆனால் நம்மை விட படிப்பறிவும் முன்னேற்றமும் குறைந்த நாடுகளில் கூட அடிக்கடி சமூகப் போராட்டங்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தியர்கள் ஒரு பொதுப்பிரச்சனைக்காக துருக்கியர், வங்கதேசத்தினர் போல் போராடியதாய் வரலாறு இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் கூட சாமியார் என பொதுமக்களிடையே நம்பப்பட்ட ஒருவரால், சாதி அடுக்குநிலையை அசைக்க விரும்பாத ஒருவரால் பொது எதிரி ஒருவர் மீது எல்லா கோபங்களையும் குவித்து தான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வெளியே ஆயிரம் பேர் செத்தாலும் நாலு சுவர்களுக்கும் நாமும் குடும்பமும் நம் சாதியினரும் மட்டும் பத்திரமாக இருந்தால் போதும் என நினைப்பதே இந்திய மனநிலை. இந்திய என்பது தனிமனிதர்கள் வாழும் இடம் அல்ல. சிறுக சிறுக சிதறிய கோடி குடும்பங்கள் வாழும் இடம். இந்த குடும்பங்களை வேறு அரசியல் குடும்பங்கள் ஆட்சி புரிகின்றன. இந்த குடும்பங்கள் தம் அடுத்த நீட்சியான சாதியோடு மட்டும் தான் தம்மை பிணைத்துக் கொள்ளும், அடையாளப்படுத்தும். இந்தளவுக்கு குடும்பப்பாங்கான இந்தியர்களின் கணிசமான துன்பங்களும் இயல்பாக குடும்பங்களில் இருந்து தான் வருகின்றன. பரஸ்பரம் காயப்படுத்துவது நம் ஜனநாயகமற்ற இறுக்கமான உறவுகளிடையே மிக மிக சகஜம். வேறு எந்த சமூகத்தையும் விட நாம் அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளுக்கு அதிகமான் பாசத்தையும், மரியாதையும் அள்ளி வழங்குகிறோம். ஆனால் எந்த அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளிடம் பேசிப் பாருங்கள் – நம்மைப் பற்றிய ஆயிரம் புகார்களும், கோபங்களும் அவர்களிடம் இருக்கும். குடும்பத்தை கரையேற்ற நகரத்தில் தங்கி சொற்பமான வருமானத்தில் வாழ்ந்து காசு சேமிக்கிற எத்தனையே பேர்களை அறிவேன். அது போன்றே பிள்ளைகளுக்காக எல்லா சுகங்களையும் தியாகம் செய்ய முனைகிற பெற்றோர்களும். சிறுவயதில் அம்மா என்னை டியூசனுக்கும் பல இடங்களுக்கும் தூக்கி சுமந்து போவாள். என் பெற்றோர்கள் தம் ஆயுளின் கால்வாசியை என்னை குறித்த கண்ணீரிலேயே கரைத்திருப்பார்கள். குறிப்பாக தமிழர்களுக்கு இந்த குடும்ப செண்டிமெண்ட் மிக மிக அதிகம். ஆனால் எல்லா மிகையான அன்பும் ஆழத்தில் கசப்பைத் தான் சுரக்கும். அன்பை இவ்வளவு உக்கிரமாக கையாள்வது ஒரு கைப்பிடி இல்லாத கத்தியை கொண்டு வெட்டுவதை போன்றது. இதனால் தான் நம் வீடுகள் போர்க்களங்களை போல் இருக்கின்றன. கட்டில், சோபா, மேஜைகளிடையே சடலங்களை மறைத்தபடி வீட்டை அப்பழுக்கின்றி வைத்தபடி சகஜமாக வாழ்க்கையை தொடர்ந்த படி இருப்போம். ஆனால் அணுக்கமாக சென்று விசாரித்தால் உற்ற உறவுகள் தம்மை மிக மோசமாக காயப்படுத்திய ஆயிரம் கதைகள் அவர்களிடம் இருக்கும். ஆனால் இதே உறவுகளை விட்டு விட்டும் நம்மால் வாழ முடியாது. ரஜினியின் படங்களில் மிக நெருக்கமான குடும்ப உறவுகள் இருக்கும். பிறகு ஒரு கட்டத்தில் சுயநலம், அகம்பாவம், புரிந்துணர்வு இல்லாமை காரணமாய் அவரை “கைவிடுவார்கள்”. துன்புறுத்துவார்கள். கொட்டுகிற மழையில் ரஜினி ரத்தம் வழிய வீட்டில் இருந்து துரத்தப்படுகிற காட்சி நம் சமூக பிரக்ஞையில் உறைந்து விட்ட ஒரு தனி தொன்மம் எனலாம். இதன் பிறகு தான் ரஜினி சமூகத்துக்குள் செல்கிறார். தீமையும் சூதும் மிகுந்த இடங்களுக்கு சென்று வெற்றிகரமாக செயல்பட்டு இறுதியில் பெற்ற அனைத்தையும் கைவிட்டு மீண்டும் குடும்பத்துக்குள் திரும்புகிறார். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம்.
ஒன்று, நாம் விரும்பும் மிகப்பெரிய வசதி “குடும்பத்துக்குள்ளே” இருந்து விடுவது. கருவறை போல் குடும்பம் மிகவும் பாதுகாப்பு என நம்புகிறோம். குடும்பத்துக்குள் இருப்பது சாதிக்குள் இருப்பது தான். நம் முன்னோர்கள் “குடும்பத்தில்” இருந்து என்றுமே வெளியேறியவர்கள் இல்லை. ஒரு மாறாக சமூக அடுக்கில் ஒரு மூலையில் இருந்து சின்னஞ்சிறு கற்கள் உடைத்துக் கொண்டிருந்தார்கள் – பிறகு பிறந்த மண்ணிலேயே சாவதை விரும்பினார்கள். இந்த சமூக இறுக்கம் ஒரு நிலைப்பையும் தந்தது என்கிறார் எரிக் புரோம். அதாவது சமூகத்தில் கொந்தளிப்பு குறைவாக இருந்தது. பீ அள்ளுகிறவர் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றல்ல. ஆனால் படிநிலையை எதிர்ப்பது தவறு என்னும் எண்ணமும் வேறு வாய்ப்பு இல்லாமையும் அவர்களை மௌனமாக வைத்திருந்தது. இந்த போலி மௌனம் சுதந்திர கிடைத்த பின்னான இந்த அரைநூற்றாண்டில் பெருமளவு கலைந்துள்ளது. நிறைய எதிர்குரல்கள் அமைதியை கலைத்துள்ளது. பலதரப்பட்ட நிலைகளில் இருந்து மக்கள் படித்து முன்னேற சமூக அடுக்கு மீண்டும் மீண்டும் சீட்டுக்கட்டு போல் கலைத்து கலைத்து அடுக்கப்பட்டது. எல்லோருக்குள்ளும் பாதுகாப்பு பற்றிய அநிச்சயம் குறித்த பயமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. மத்திய, மேல் சாதியினர் கொட்டுகிற மழையில் வழியும் ரத்தத்தோடு வீட்டை விட்டு வெளியேறத் துவங்கினர். பொருளாதார ஸிதிரமின்னை குடும்ப கலகங்களுக்கும் பந்தங்களிடையே துரோகங்களுக்கு பிரதான தூண்டுகோல். குடும்பத்தையும் சொத்தையும் பிரித்து, ஊரை சொந்தங்களை பிரிந்து, பிரிக்க ஒன்றுமே இல்லாதவர்கள் ஊரிலுள்ள் அந்தஸ்தை நகரங்களில் அடைய முடியாத துக்கத்துடன் பட்ட சான்றிதழுடன் பிழைப்புக்காக அலைவது இந்த காலகட்டத்தில் பரவலாக நடந்துள்ளது. “வீட்டை” விட்டு வெளியேறும் இந்த வலி நம் அனைவருக்குள்ளும் உள்ளது. நம்முடைய மிகப்பெரிய ஏக்கம் திரும்ப “வீட்டுக்கு” போவது தான். இந்த நகரத்து அவசரத்தில் இரைச்சலில் அடையாளக் குழப்பத்தில் “நாம்” யாரென யாருக்கும் தெரியவில்லை எனும் வருத்தம் கண்ணில் விழுந்த தூசி போல் தொடர்ந்து உறுத்துகிறது. ரஜினி பார்முலா என்பது ஒருவிதத்தில் தொடர்ந்து சொந்தபந்தங்களை இழப்பதும் மீட்பதும் அதன் மூலம் வீட்டுக்கு திரும்புவதும் தான். அவர் படங்களில் உள்ள மிகையான குடும்ப செண்டிமெண்ட் நம்மை எரிச்சலடைய வைக்காததன் காரணம் உறவுகளின் கசப்பான எதிர்மறையான பக்கத்தையும் அது காட்டுவது தான். விசு பாணி குடும்ப விமர்சனத்துக்கும் இதற்குமான வித்தியாசம் ரஜினியிடம் லட்சியமான நல்ல உறவுகளே இல்லை என்பது. எல்லாரும் நம்மை ஒரு கட்டத்தில் கைவிடுவது தான் எதார்த்தம் என அவர் படங்களில் ஒரு அழுத்தம் உள்ளது. இன்னொரு பக்கம் ஒரு எதிர்குடும்ப நாயகனாகவும் இருக்கிறார். “வேலைக்காரன்”, “தளபதி”, “முத்து” போன்ற படங்களில் அம்மா அல்லது அப்பாவால் கைவிடப்பட்ட ’அநாதையல்லாத அநாதையாக’ வருகிறார். கைவிடப்பட்ட குழந்தைகளிடம் ஒரு அவசர முதிர்ச்சியும் நீட்டிக்கப்பட்ட குழந்தைமையும் முரண்பாடாக சேர்ந்தே இருக்கும். “தளபதியில்” அம்மாவை முதன்முறை நேரில் சந்தித்து பேச முடியாது தேம்பும் இடத்திலும், “பாட்ஷாவில்” தன்னை வீட்டை விட்டு துரத்திய அப்பா வீட்டுக்கு வந்து பார்த்து திட்டும் போது தலையை குனித்து எதிர்க்காமல் கேட்கும் அந்த அழகான காட்சியில் அந்த அநாதைத்தனமும், கைவிடப்பட்டவனின் தீராத ஏக்கமும் உள்ளது. குடும்பத்தால் கைவிடப்பட்ட குடும்பத்துக்காக ஏங்கும் எதிர்பிம்பம் எண்பதுகளில் இருந்தே ரஜினி கட்டுவித்த எதிர்சமூக நாயக பிம்பத்தோடு பொருந்திப் போகிறது.
வீட்டில் இருந்து வெளியேறுவதை நாம் ஒரு உலகப் பொதுவான தொன்மமாகவும் பார்க்கலாம் என்கிறார் உளவியலாளர் கார்ல் யுங். “துரத்தப்பட்ட இளவரசனின்” தொன்மம் பல சமூகங்களிலும் ஆதிகாலத்தில் இருந்த ஒன்று என்கிறார். ஒரு இளவரசன் தன் அரசியல் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு இன்னொரு ஊருக்கு தப்பி செல்வான். அங்கு பல அபாயங்களை சந்தித்து முறியடித்து வாழ்வான். பிறகு வளர்ந்த இழந்த தன் சமூக இடத்தை மீட்பான். யுங் இந்த தொன்மம் கர்த்தருக்கும் கண்ணனுக்கும் பொதுவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். இதை ஒத்த வேறு பல நாட்டு தொன்மங்களையும் பட்டியலிடுகிறார். ரஜினியின் “வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்” தொன்மம் இந்த கண்ணனின் “துரத்தப்பட்ட இளவரசனின்” தொன்மத்தின் இன்னொரு வடிவம் தான். குசேலனின் கதையை தலைகீழாக எடுக்கப்பட்ட “அண்ணாமலை” இந்த விதத்தில் வெகுசுவாரஸ்யமான படம். 80 லட்சம் சொத்துக்கு மதிப்புள்ள அண்ணாமலை அத்தனையும் வஞ்சகத்தால் இழக்கிறான். ஆனால் அவன் பிரச்சனை பணமல்ல. நண்பனுக்கு இணையாக மாறுவது. இருசமூகத் தட்டுகளில் இருப்பவர்கள் நண்பர்களாக இருக்கும் சிக்கலை பற்றிய படம். இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் இது சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை பற்றின படமும் தான். அதாவது இடதுசாரிகள் பேசும் சமத்துவம் அல்ல. நம்மளவுக்கு நுணுக்கமான பல சமநிலையின்மைகள் கொண்ட இன்னொரு சமூகம் கிடையாது. எல்லா நிலையினரோடும் உறவாடும் போது பல நெருக்கடிகள் வருகின்றன. கண்முன்னே தினம் தினம் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கிறோம். பிரச்சனை இத்தனை ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில் இது எதுவுமே இல்லாதது போல் நம்மை விட உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்களிடம் உறவாடுவது என்பது. அடுத்தவருக்கு இணையாக உயர வேண்டும் என்பது நம் அனைவருக்குள்ளும் உள்ள மற்றொரு தீராத ஏக்கம். அலுவலகத்தில் அண்டை வீட்டில் இன்னொருவர் சட்டென்று நம்மை விட பொருளாதார நிலையில் உயர்ந்து விடும் போது நமக்கேற்படும் பதற்றம் ரஜினியை போல் ஆகாயத்தை நோக்கி சவால் விட தூண்டுகிறது. ஆனால் இன்றுள்ள போட்டியில் இன்னொருவருக்கு இணையாக உயர்வதற்கு அவரை நாம் அழிக்கவும் வேண்டி இருக்கிறது. அண்ணாமலையும் மெல்ல மெல்ல தன் நண்பனை அழிக்கிறான். இறுதியில் தன் முன்னேற்றத்தின் வெறுமையை உணர்கிறான். இறுதியில் ரஜினி தொன்மத்தின் படி எல்லாவற்றையும் உதறி விட்டு மீண்டும் பால்காரன் ஆகிறார். உண்மையில் சமநிலை என்பது ஒரு கற்பிதம் தான். அண்ணாமலையால் தன் நண்பன் அசோக்குக்கு என்றுமே இணையாக முடியாது. இன்றைய சமூக நிலையில் யாராவது ஒருவர் விழ வேண்டும், இன்னொருவர் எழ வேண்டும். நகரமயமாக்கலில் உள்ள போட்டி என்பது தற்காலிகமான சமநிலைக்கான போட்டியும் தான். அதாவது நிறைய உருவக ரத்தம் சிந்தி ஏற்கனவே இருந்தவனை அழித்து விட்டு அவன் இடத்தை நாம் அடையும் போது தராசு ஒரு கணம் சீராகிறது. ஆனால் மீண்டும் சாயத் துவங்குகிறது. இன்னொருவன் நம் பதவிக்காக கால் பாதத்தை சுரண்டி தன் கூர் பற்களால் கடிக்க ஆரம்பிப்பான். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் மீதான ஏக்கம் கொண்டவர்கள் இன்றைய சமூக நகர்வில் உள்ள இந்த வன்முறையை, குரூரத்தை இப்படித் தான் பார்ப்பார்கள். சமூக மேல்நிலையாக்கம் (upward mobilization) குறித்த ஒரு ஆழமான் கசப்பு நம் தமிழ் சமூகத்தில் இருக்கிறது. ரஜினியின் தொன்மம் இந்த கசப்பான மனதிடம் தான் பேசுகிறது. பழைய நிலையான சமூகம் இனி கிடைக்காது. அதேவேளை சமத்துவத்துக்கான வன்முறையும் வெறுப்பும் நமக்கு வேண்டாம். அதனால் அனைத்தையும் துறந்து விடுவோம் என்கிற தற்காலிக தீர்வை அளிக்கிறது. சமூக முன்னேற்றத்தில் மேலேயும் போக முடியாமல் கீழேயும் செல்ல விரும்பாமல் இடையில் எந்திர சக்கரத்தினிடையே மாட்டிக் கொண்ட நிறைய பேர் இருக்கிறோம். நமக்கிந்த தற்காலிக “பற்றற்று இருப்போம்” தீர்ப்பு பிடித்து போகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தியா சிதறி விடும் என பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்படி நிகழாமல் இருந்தற்கு வேற்றுமையில் ஒற்றுமை எண்ணம் அல்ல காரணம். நம் பக்கத்தில் சுத்தமாய் பிடிக்காமல் இருவர் இருந்து சுத்தமாய் பிடிக்காத ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தால் கூட எளிதில் நம்மால் அதை தாங்கிக் கொள்ள முடியும். நம் நாடு கடந்த ஐநூறு வருடங்களில் பல பெரும் மாற்றங்களை ஆக்கிரமிப்புகளை கொந்தளிப்புகளை எளிதில் ஒன்றுமே நடக்காதது போல் கடந்து வந்தது இப்படித் தான். எதையும் செய்யாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று நடக்கும் என நம்பிக் கொண்டு இருக்கிறோம். உளவியல் ரீதியாக, உறவுகளை கையாள்வதை பொறுத்தவரையிலும், அக ஆரோக்கியத்துக்கும் இந்த பட்டும்படாத அணுகுமுறை மிக நல்லது தான். எல்லா ஆசியர்களுக்கும் இந்த ஒட்டாமை கருதுகோளின் மீது ஆகர்சம் உள்ளது. புரூஸ்லீயின் படங்களுக்கும் ரஜினியின் தொன்மத்துக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை இந்த ஒட்டாமை தான். கிளைமேக்ஸில் வில்லனை கொன்று விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அவனது கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு தனியான பாதையில் நடந்து செல்வார் (Return of the Dragon). ரஜினியின் பல படங்களில் வில்லன் ஏதோ திருஷ்டி பூசணிக்காய் போலத் தான் இருப்பான். ஒரு சடங்கு போல் ஈடுபாடில்லாமல் அவனை தூக்கிப் போட்டு உடைத்து விட்டு போவார். “சிவாஜி”, “பாட்ஷா” போன்ற படங்களை சொல்லலாம். “தளபதியில்” கிளைமேக்ஸில் ரஜினி அவ்வளவு ஆவேசமாக வில்லனை அடித்துக் கொல்லும் போது அவன் ஏற்கனவே தன் நண்பனை இழந்து வில்லனிடம் தோற்றுப் போயிருக்கிறான். அது “ஆரண்யகாண்டத்தில்” பிணத்தை நோக்கி “நீ மட்டும் உயிரோட உயிரோடு இருந்திருந்தால் உன்னை கொன்னிருப்பேன்” என்று கூறுவது போலத் தான். வில்லனை ஒரு பொருட்டாகவே கருதாமல் “கடந்து” செல்வதை பின்னர் மிஸ்னும் தன் “அஞ்சாதே”, “முகமூடி”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியிலும்” சித்தரித்தார். “அஞ்சாதேவில்” சுவாரஸ்யமாக பிரச்சனா கொல்லப்படும் போது தன் நின்று போன கைக்கடிகாரத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொள்வான். அவனை ஹீரோ கொல்லவில்லை. அவன் காலம் நின்று விட்டது, கூட அவனும் நின்று விட்டான். “முகமூடியிலும்” வில்லன் தன் சாவை இதே கனிவுடன் தான் ஏற்கிறான். கதம் ததம்.
இதே போன்றது தான் பெண்கள் மீதான கடும் வெறுப்பு. ரஜினியின் படங்களில் தான் நாயகி ஒரு கட்டத்துக்கு மேல் கதையில் பயணிக்க மாட்டாள். அல்லது அவள் ரஜினியை தன் அப்பாவித்தனத்தால் காட்டிக் கொடுப்பாள் (”சிவாஜி”) அல்லது அவனை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் (”பாபா”). கல்லூரியில் படிக்கையில் “கதம் ததம்” என்கிற வசனம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்கள் மீதான வெறுப்பும் கோபமும் இன்று பல படங்களில் வெளிப்படுகிறது. இது பெண் மீதான பயத்தில் இருந்து வருவது தான். ஜெயலலிதாவிடம் மோதல் ஏற்பட்ட பின் பெண்களை பழிக்கும் வசனங்களும் பாத்திர, கதை அமைப்புகளும் ரஜினி படங்களில் வந்ததை பார்த்தோம். ஆனால் அதற்கு முன்பிருந்தே பெண்களுக்கும் சமூக மாற்றத்துக்கும் எதிரான நிலப்பிரபுத்துவ கருத்துக்கள் தான் ரஜினி தொன்மத்தின் வேராக இருந்து உள்ளன. பெண்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் எனும், ஆண்களால் மட்டும் நிரம்பிய வைதிக மரபின் தாக்கம் அவரது ஆரம்ப படங்களில் இருந்தே உள்ளது. பெண்களின் முன்னேற்றம், அவர்கள் முன்பை விட அதிக வன்முறையுடன் ஆண்களிடம் இன்று நடந்து கொள்வதும், வீட்டுக்குள்ளும் வெளியேயும் நம் முதுகில் ஒரு துப்பாக்கியை சதா அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதும் சமூக மாற்றத்தின் அசலான பிரதிபலிப்பு எனலாம். ரஜினியை நமக்கு பிடிப்பதற்கு இன்னொரு காரணம் இந்த சமூக மாற்றம் நமக்கு பிடிக்கவில்லை என்பதும் தான்.

Comments

Savitha Rajesh said…
Very comprehensive. . Rajani is looked upon as a legend and every upcoming actor with a boy next door image is compared to him...

Here you are not carried away by the carisma... that counts..

Can u pls include the transliteration gadget too.. ld be of great help

Nagasubramanian said…
ரஜினியின் படங்களைப் பற்றிய மிக ஆழமான பார்வை. அதை நம் சமூக அமைப்புடன் இணைத்து சொல்லிய விதம் அபாரம்.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...