Skip to main content

மீண்டும் ஒரு அட்டகாச ஐ.பி.எல் திரில்லர்




நேற்றைய மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் ஐ.பி.எல் வரலாற்றின் ஆக திரில்லிங்கான ஒன்று. ஐ.பி.எல்லில் சரவெடி போல் நான்கும் ஆறும் பறப்பதால் முன்பு போல் அது நம் இதயத்துடிப்பை எகிற வைப்பதில்லை. நேற்றைய ஆட்டத்தில் நெட் ரன்ரேட்டை உயர்த்துவதற்காக மும்பையினர் 190 இலக்கை 14.3 ஓவர்களில் அடிக்க வேண்டி வந்தது. அப்போது தான் அவர்கள் அரை இறுதிக்குள் போக முடியும். அசாத்தியம் என நாம் நினைத்த இலக்கை அடைய முயன்றதனால் தான் இதுவரை இல்லாத சாகச உணர்வை நேற்றைய ஆட்டம் அளித்தது. எனக்கு முன்னர் வங்கதேச டாக்காவில் இந்தியா பாக் இறுதிப் போட்டியில் இந்திய முண்ணூறுக்கு மேல் விரட்டி சென்று, இறுதி ஓவரில் ஸ்ரீனாத் கேட்சை எதிரணியினர் டென்ஷனில் தவறவிட்டு, இறுதி சக்லைன் பந்தில் கனிஷ்கர் நான்கு அடித்தது நினைவு வந்தது. அன்று நான் கொண்டாடியது போல் பின்னெப்போதும் செய்ததில்லை. பின்னர் 300 என்ன 400ஐ விரட்டுவது கூட கொசு அடிப்பது போல் ஆகி விட்டது. இது போன்ற அசாத்தியங்கள் தான் இப்போது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


மற்றொரு விசயம் 190ஐ பதினைந்து ஓவருக்குள் அடிக்க முடியுமென்றால் இதே அணி 160ஐ 20 ஓவருக்குள் அடிக்க ஏன் மூச்சு வாங்குகிறது என்ற கேள்வி. T20 ஆட்டத்தை திட்டமிடாமல் ஒரு வேகத்தில் ஆடினால் தான் எடுபடும். அப்படித் தன் முதல் ஐ.பி.எல் ஆட்டத்தில் பிரெண்டன் மக்கெல்லம் அடித்தார். ஆனால் பின்னர் இந்த ஆட்ட சுதந்திரம் காணாமல் போய் விட்டது. 20 ஓவர்களை 4ஆக பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்ற வீரர்களைக் கொண்டு தேவையான வேகத்தில் ஆடுவது இப்போதைய பாணி. அதாவது 5 முதல் 12வது ஓவர் வரை அடித்தாட பந்துகள் இருந்தாலும் அணிகள் ஒற்றை ஓட்டம் எடுக்கவே பார்க்கும். இதனால் தான் 160 வழக்கமான இலட்சிய ஸ்கோராய் மாறியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்த ஏழு ஓவர்களும் ரிஸ்க் எடுத்து அடித்தாடினார்கள். 7 ஓவர்களில் 40க்கு பதில் 70 அடித்தார்கள். கூடுதல் 30 ஓட்டங்கள் திட்டமிட்ட ஆட்டத்தினால் அணிகள் சராசரியாக எவ்வளவு இழக்கிறார்கள் என்பதை காட்டியது. இன்னும் சுதந்திரமாக ஆடினால் அணிகளால் எளிதில் 220-240 அடிக்க முடியும். நேற்றைய ஆட்டத்தை மும்பை முழு ஓவர்களும் ஆடியிருந்தால் 250 அடித்திருப்பார்களே. அப்படியே விக்கெட்டுக்ள் விழுந்தால் 200இல் முடியும். 160க்கு அது பரவாயில்லை தானே. மேலும் T20 ஆட்டத்தையும் நம்மாட்கள் ரிஸ்க் எடுக்காமல் ஆட நினைப்பதால் அது கூட வளவளவென ஆகி வருகிறது. நேற்றைய ஆட்டம் விதிவிலக்கு.

14.3 ஓவர்களில் ஒரு எண் குறைவாக மும்பை அணி எடுத்தது. தோற்று விட்டோமே என அம்பத்தி ராயுடு முட்டியிட்டு அழுதார். ராஜஸ்தான் அணியினர் கொண்டாடினர். ஆனால் அவர்கள் ஒரு நான்கோ ஆறோ அடித்தால் அரை இறுதிக்கு செல்லலாம் என நடுவர்கள் கூற குழப்பம் ஏற்பட்டது. என்னவாயிற்று என்றால் ஸ்கோர் டை ஆகி விட்டது. ஒருவேளை இறுதி பந்தில் ஒன்றுக்கு பதில் இரண்டு ரன்கள் ஓடி இருந்தால் நெட் ரன்ரேட் ராஜஸ்தானை விட குறைந்திருக்கும். ஆனால் டை ஆனதால் ஒரு நான்கு அல்லது ஆறு அடிக்கும் வாய்ப்பு மும்பைக்கு கிடைத்தது. அடுத்த வந்த தாரே புல் டாஸ் பந்தை ஆறுக்கு அடித்து சவாலில் வென்றார். இந்த எதிர்பாராத திருப்பம் ஒரு அபாரமான டிராமாவை தோற்றுவித்தது. இது போல் ஒருநாள் ஆட்டங்களிலும் பண்ணினால் எப்படி இருக்கும் என தோன்றியது.

அதாவது ஒரு நாள் ஆட்டங்களில் முக்கிய சிக்கல் என்ன நடக்க போகிறது என நம்மால் ஊகிக்க முடியும் என்பது. ஒரு அணி ஆட ஆரம்பித்த 20 ஓவர்களுக்குள் அதன் தலைவிதி நமக்கு தெரியும். ஒரு 250 இலக்கை விரட்டுகிறார்கள் என்றால அதிக ஆபத்தின்றி ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் ஓடி ஆட்டத்தை சோர்வடைய வைப்பார்கள். 300ஐ கூட இன்று விரட்ட முடியும் என்பதால் நமக்கு அலுப்பேற்படுகிறது. இதை சரி செய்ய ஒரு வழி ஆட்டத்தில் யார் வெல்ல போகிறார்கள் என்பது இறுதி வரை நமக்கோ வீரர்களுக்கோ தெரியக் கூடாது. அதற்கு இலக்கை வெளிப்படையாக வைக்காமல் சிக்கலாக ஆக்க வேண்டும். நேற்றைய ஆட்டத்தில் போல இறுதி ஓவரில் இவ்வளவு எடுத்தால் வெற்றி என கணக்கிட்டு பிரம்மாண்ட திரையில் காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கும் வீரர்களுக்கும் இது தெரிய வேண்டும். இதற்கு ஒரு வழி ஆட்டத்தை பகுதிகளாய் பிரித்து அவ்வப்போது ஒரு அணி எடுக்கும் ரன்ரேட்டை அடுத்த அணி அதே கட்டத்தில் எடுக்கிறதா என பார்த்து அதற்கு ஏற்றாற் போல் பாயிண்ட்ஸ் கொடுப்பது. உதாரணமாய் ஒரு அணி 280 அடிக்கிறது. இதற்கு முதல் 10 ஓவர்களில் 80 ஓட்டங்கள் எடுக்கிறது. அதையே அடுத்து வரும் அணியும் அதே ஓவர்களில் அடிக்க வேண்டும். அல்லாவிட்டால் பாயிண்ட்ஸ் கிடைக்காது. அது போல் ஒவ்வொரு பத்து ஓவர்களுக்கும் ஒரு தனி இலக்கு . 50வது ஓவரில் இதுவரையில் உள்ள பாயிண்ட்களை கணக்கிலெடுத்தும், இறுதி ஓவரில் முந்தைய அணி அடித்த ஓட்டங்களைக் கொண்டும் ஒரு இலக்கை துரத்தும் அணிக்கும் கொடுக்க வேண்டும். இம்முறையில் 50 ஓவர்களும் பார்க்க ஐந்து T20 போல் படுவேக திரில்லராக இருக்கும். முதலில் ஆடுகிற அணிக்கு அனுகூலம் கிடைக்காமல் இருக்க 50 ஓவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு அணி 25 ஓவர்களை பாதி பாதியாய் ஆடலாம். முதலில் மட்டையாடிய அணி இரண்டாவது முறை இரண்டாவது ஆக தான் மட்டையாட முடியும். இதன் மூலம் டாஸின் குழப்படிகளையும் இல்லாமல் ஆக்கலாம்.
இப்போதுள்ள சர்வதேச ஆட்டங்கள் பள்ளி ஆசிரியர் கரும்பலகையில் படம் வரைந்து பாலியல் பற்றி விளக்குவது போல் பயங்கர கொட்டாவித்தனமாக உள்ளது. இதை மாற்ற நேற்றைய ஆட்டம் ஒரு நல்ல பாடம்.

Comments

//இதுவரை இல்லாத சாகச உணர்வை நேற்றைய ஆட்டம் அளித்தது//
அந்த ஆட்டத்தில் ஏதோ உள்குத்து இருக்கிறதாகவே தோன்றுகிறது.இறுதி ஆட்டம் பஞ்சாப் - சென்னை காரணம் நடக்குமிடம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு.
ஃபாக்னர் கடைசிப் பந்தை ஏன் "வைடாக" போடவில்லை.வைட் போட்டு தன் அணியை எளிதாக ப்ளேஆப்ஸ்க்கு கொண்டு போயிருக்கலாம்.இந்த ஆட்டத்திலே உச்சகட்ட சாத்தியமான "வைட்" ஏன் போடப்படவில்லை.
அடுத்தப் பந்த்தை MI 4 அல்லது 6 அடித்தால்தான் ப்ளேஆப்ஸ்க்கு செல்லமுடியுமென்ற நிலை.ஒரு ரன் எடுத்தால் வீட்டுக்கு என்கிற நிலையில் ஃபாக்னர் ஒரு "வைடை" போட்டு எளிதாக தன் அணியை கொண்டு சென்றிருக்கலாம் ஏன் செய்யவில்லை.நாட்டுக்காக விளையாடும்போது இப்படி செய்வார்களா? இதில் வியாபாரம்தான் ஓங்கியிருக்கிறது.பார்வையாலனை உற்சாகப் படித்துவதற்காகத்தான் ஆடுகிறார்கள்.இதை ஆஹாவென்று கொண்டாடுவது என்னமோ நெருடலாயிருக்கிறது.
நினைத்தது போல் நடக்கவில்லை என்பதால் ஏமாற்றம்.வருத்தமில்லை.அடுத்த ஐபிஎல் லை சந்தேகிக்காமல் காணும் மனநிலை வந்திருக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...