முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர் எச்.பீர் முஹம்மது



நண்பர் எச்.பீர் முஹம்மதை முதலில் நான் 15 வயதில் தக்கலையில் நண்பர் முஸ்தபாவின் புத்தகக் கடையில் வைத்து சந்தித்தேன். அவரைப் பற்றின முதல் நினைவே கையில் ஒரு ஆயிரம் பக்க ஆங்கில கட்டுரை நூலோடு அவர் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது தான். வெட்டி அரட்டையில் நேரம் வீணடிக்காமல் வாசிப்பில் தன்னை தொலைத்து விடுபவராக இருந்தார். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தில் பலருக்கும் அவர் மீது மிகுந்த வியப்பு இருந்தது. நிறைய படிப்பதானாலோ என்னவோ அன்று அவர் பேசும் போது புரிந்து கொள்ள சற்று குழப்பமாக இருக்கும் (ஆனால் இன்று அப்படி இல்லை). எங்கள் மன்றத்தில் அப்போது தமிழில் வெளிவருகிற கோட்பாட்டு நூல்களை, நவீன இலக்கியத்தை படிப்பவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் கணிசமாய் ஆங்கிலம் வழி மேற்குலக அறிவியக்கங்களை அறிய முயல்பவராக பீர் மட்டுமே இருந்தார்.

 பீருக்கு அறிவு தான் முக்கியம். எங்கு கிடைத்தாலும் நாடி செல்வார். எப்போதும் போல் ஜெயமோகன் எங்கள் அமைப்புக்கு எதிர்முகாம் தான். ஜெயமோகனின் அரசியலுடன் முரண்பட்டாலும் பீர் ஜெயமோகனை சந்தித்து தத்துவம் பற்றி பேசுவார். புத்தகங்கள் வாங்கி வருவார். ஒருமுறை நண்பர் முஸ்தபாவுடன் அவர் பாலியல் ரகசியங்கள் பற்றி அறிவார்ந்த விவாதம் ஒன்று செய்து கொண்டிருப்பதை கவனித்தேன். எதையும் அனுபவ ரீதியாய் அல்லாமல் அறிவு மூலம் கண்டுபிடிக்கலாம் எனும் அபார தன்னம்பிக்கை அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் அண்ணன் வெளிநாட்டில் இருந்து அவர் படிப்புக்கு அனுப்பின பணத்தை பூராவும் ஆங்கில கோட்பாட்டு நூல்கள் வாங்க செலவழித்து விட்டார். ஊருக்கு வந்து மூட்டை மூட்டையாய் தம்பி வாங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்ததும் அவருக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. புத்தகங்களை காப்பாற்றுவதற்காய் அவர் மூட்டை கட்டி நண்பர் என்.டி. ராஜ்குமாரின் வீட்டை கொண்டு வைத்ததாய் அறிந்து கொண்டேன். (இது பற்றின குறிப்பு ஒன்று என் “ரசிகன்” நாவலில் வருகிறது) பிறகு அவருக்கு உடனடியாய் வேலையை அடைந்து தன்னை ஸ்திரப்படுத்தும் நெருக்கடி ஏற்பட்டது. நான் அப்போது ஒரு சின்ன நிறுவனத்தில் கணினி படித்து வந்தேன். பீர் என்னை அழைத்து அங்கே வேலை கிடைக்குமா என கேட்க சொல்வார். தினமும் போன் செய்வார். அவருக்கு என்னால் உதவ இயலவில்லை. எனக்கு அது குறித்து மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. பிறகு அவர் வெளிநாட்டிற்கு வேலை சென்றார். பொருளாதார ரீதியாய் நிலைப்பெற்றார். அதேவேளை தொடர்ந்து நிறைய எழுதவும் செய்தார். அவரது கட்டுரைகளை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் ஜெயமோகனிடம் பேசும் போது அவர் ஒன்று சொன்னார் “பீரின் மொழி சற்று சிக்கலாய் உள்ளது. அதன் காரணம் அவர் தத்துவம் பற்றி எழுத முயல்பதே. தத்துவம் பற்றி எழுதுபவர்கள் அனைவருக்கும் ஆரம்பத்தில் நிறைய மொழிச்சிக்கல்கள் ஏற்படும். விரைவில் தெளிவான மொழியை பெற்று விடுவார்”. இன்று பீரின் மொழி வெகுவாய் மாறி விட்டது. ஊரில் கூச்ச சுபாவமான அறிவுஜீவியாய் இருந்தவர் இன்று சமூக வலைதளஙளில், மீடியாவில் எழுதுகிறவராய், டிவி விவாதங்களில் கலந்து கொள்கிறவராய் மாறி இருக்கிறார். தமிழகத்தில் அறிவுஜீவியாய் இருப்பது மரணக்கிணற்றில் பைக் ஓட்டுவது போன்ற காரியம். பீர் என்றுமே எனக்கு ஒரு ஊக்கமாய் இருந்திருக்கிறார். அவரது கட்டுரைத் தொகுப்பான ”நீண்ட சுவர்களின் வெளியே” வெளியாகும் இந்த வேளைகளை இந்நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது அந்த ஊக்கத்தை பலமடங்காக்கத் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.