“கபாலி” குறித்த கட்டுரைகளில் சிறந்தது என டி.தருமராஜுடைய மூன்று பகுதி கட்டுரை தான். மூன்று விசயங்களை ரசித்தேன். 1) ரஜினி எனும் தொன்மம் எப்படி “கபாலியில்” புது நிறம் பெறுகிறது. ஆண்டைகளில் தொன்மமாக இருந்தவர் எப்படி சரேலென தலித் தொன்மமாக மாற எத்தனித்தார், அதன் வியாபார சாத்தியங்கள் என்ன என்பது குறித்து டி. தருமராஜ் எழுதியிருக்கிறார். அவர் ”தொன்மம்” என்பதற்கு பதில் “திரைக்கதைக்கு வெளியே இருக்கும் திரைக்கதை” என கூறுகிறார். ரஜினியை பற்றி பேசும் போது இந்த தொன்ம ஆய்வு முக்கியமானது. அவரது வெற்றிக்கும் சரி எம்.ஜி.ஆரின் முந்தைய வெற்றிக்கும் சரி அவர்களை ஒட்டி உருவாக்கப்பட்ட தொன்மங்கள் தாம் உதவின. டி.தருமராஜ் தான் அருந்ததிய மக்கள் குடியிருப்பில் தான் கண்ட நாட்டுப்புற கூத்து ஒன்றை விவரிக்கிறார். அதில் தலித் ஒருவர் ஆக்ரோசமாய் தனக்கு மேல்சாதியாய் உள்ளவனை திரும்ப தாக்கும் இடத்தை தலித் மக்கள் எவ்வாறு திரும்ப திரும்ப நிகழ்த்துப்படி நிர்பந்தித்து பார்த்து ரசித்தார்கள் என சொல்கிறார். இந்த கூத்து நிகழ்வதற்கு சற்று முன் நாயக்கர் சாதியினர் சில அருந்ததிய இளைஞர்களை கூத்து நடக்கும் இடத்தில் இ...