ஒரு பெண் தன்னை, தன் உடலை, அழகாய், கவர்ச்சியாய், மனதை கொக்கி போட்டு இழுக்கும்படியாய், காட்டும் போது அதன் நோக்கம் என்ன? ஆணை கவர்வது என இன்று சுலபமாய் நாம் சொல்லி விட முடியாது. கணிசமான பெண்கள் அதை ஏற்க மாட்டார்கள். தம்மை வெளிப்படுத்துவது, தன்னம்பிக்கையுடன் தன்னை கட்டமைப்பது, தனக்காகவே தன்னை அலங்கரிப்பது, சுதந்திரமாய் இருப்பது என பல கோணங்களில் பெண்கள் தமது உடல் வசீகரத்தை அர்த்தப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு முரண் உள்ளது: தன்னை அலங்கரித்து அழகாய் காட்டிக் கொள்வதோ தனது உடல் வடிவை, நெளிவை, நளினத்தை, தோலின் மிளிர்வை புலப்படுத்தி தன்னை கவர்ச்சியாய் காட்டுவதோ ஒருவித காட்சிப்படுத்தல் தானே? அதாவது இன்னொருவர் காண அன்றி நாம் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட விதமாய் காட்டிக் கொள்கிறோம்? இது சரி என்றால் ஆண் பார்ப்பதற்கு அன்றி (லெஸ்பியன் எனில் மற்றொரு பெண் கவனிப்பதற்கு அன்றி) வேறு எதற்காய் பெண்ணுடல் காட்டப்படுகிறது? இதையும் ஏற்றுக் கொண்டோம் என்றால் “அழகாய் தெரியும்” ஒரு பெண்ணை ஒரு ஆண் இச்சையுடன் ”பார்க்கலாமா”? “ரசிக்கலாமா?” பெரும்பாலான பெண்கள் ஆண்கள் தம்மை உற்றுப் பார்த்தால் எரிச்சலும் அருவருப்பும் ...