முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (1)

Image result for crowd tamil theatre
இது ஒரு கோழியா முட்டையா என்பது போன்ற சிக்கல் என உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும் இக்கேள்விக்கு என்னிடம் தெளிவான விடை ஒன்று உள்ளது. மேலும் இக்கேள்வி வெகுசுவாரஸ்யமானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.
மனிதனின் தேவைகள் ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணத் தூண்டுகிறதா அல்லது நேர்மாறா? சமீபத்தில் ஒரு சமூகவியல் வகுப்பில் ஒரு மாணவி மார்க்ஸிய கோட்பாடு பற்றி பேசும் போது இவ்விசயத்தை குறிப்பிட்டாள். தேவையே பொருட்களின் உற்பத்தியை நேரடியாய் தீர்மானிக்கிறது என்றாள். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு அழகிய சுரிதார் பார்த்ததும், ஒரு புது போன் சந்தையில் வந்ததும் உங்களுக்கு அதை வாங்கத் தோன்றுகிறது. அங்கே தேவையா அல்லது அப்பொருள் நமக்குள் தூண்டும் ஆசையா நம்மை வாங்க வைக்கிறது? அதே போல ஒரு புதுப்படம் வெளியாகி அதைப் பற்றி மீடியாவில் பரபரப்பாய் பேசினால் போய் பார்க்கத் தோன்றுகிறது. நாம் பார்க்க ஆசைப்பட்டதனால் அப்படம் வெளியானதா அல்லது அப்படம் வெளியானதால் நமக்கு பார்க்க ஆசை தோன்றியதா?

 அத்தியாவசிய பொருளான மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப் படும் ஒவ்வொரு மின்சாதனப் பொருளும் நமது மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கின்றன. இப்பொருட்களை கொடு என நான் சந்தையிடம் கேட்கவில்லை. ஆனால் சந்தை இப்பொருட்களை தட்டில் வைத்து என்னிடம் நீட்ட நீட்ட எனக்கு கூடுதல் மின்சாரம் தேவையாகிறது. எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பிக்சர் டியூப் டிவி போதும். நூறு ரூபாய்க்கு கேபிள் கனெக்‌ஷன் போதும். ஆனால் இரண்டுமே இனி கிடைக்காது என ஆகும் போது நான் பத்தாயிரம் ரூபாய்க்கு எல்.சி.டியும் மூவாயிரத்துக்கு செட் ஆப் பாக்ஸும் வாங்க நேர்கிறது. சில வேளைகளில் நமது ஆசை தூண்டப்பட்டு தேவையை சந்தையே உருவாக்கிறது.
 சில சந்தர்பங்களில் ஒரு தேவை நம் மீது திணிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபட்ட சூழல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான சந்தையை உருவாக்குகிறது. கார்ப்பரேட்மயமாக்கல் ஒரு நகரப்பகுதியின் நில மதிப்பை பல மடங்கு செயற்கையாக ஏற்றி விடுகிறது. அங்கு வசிப்பவர்கள் மிகையான வாடகைக்கும் சேர்த்து சம்பாதிக்க நேர்கிறது. அதற்காக கூடுதல் உழைக்கிறார்கள். வீடு வாங்க வேண்டும் என்பதையே ஒரு கனவாக வளர்க்கிறார்கள். அதற்காக இருபது வருடங்கள் உழைத்து வங்கிக் கடன் செலுத்தி போராடி இறுதியில் வீடு எனும் லட்சியத்தை அடைகிறார்கள். ஆனால் வீட்டின் விலையை சந்தை செயற்கையாய் ஏற்றவில்லை என்றால் (அல்லது ஒரு நகரத்தில் இருந்து மென்பொருள் நிறுவனங்கள் வெளியேறினால்) நீங்கள் அதே வீட்டை பத்து வருடங்களில் வாங்கி இருக்க முடியும். வீட்டின் மதிப்பு மேலும் குறைந்தால் உங்களுக்கு வீடு வாங்கும் ஆசையே ஏற்படாது.
 ஆக செயற்கையான பரபரப்பு, போட்டி மனப்பான்மை, பொருள் மீதான இச்சையை கார்ப்பரேட் சந்தை உண்டு பண்ணுகிறது.”
இதை ஒட்டி ஒரு சுவாரஸ்யமான விவாதம் வகுப்பில் நடைபெற்றது. எனக்கு Fast Food Nation எனும் புத்தகத்தில் Eric Schlosser துரித உணவு பண்பாடு எப்படி அமெரிக்காவில் திணிக்கப்பட்டது என விளக்கியிருந்தது நினைவு வந்தது. அறுபதுகளில் ரயில் பாதைகள் அகற்றப்பட்ட தேசத்தை முழுக்க இணைக்கும் சாலைகள் அமெரிக்கா எங்கும் அமைக்கப்பட்டன. ரயில் பாதைகளே அதுவரையிலும் அமெரிக்காவின் ரத்த தமனிகளாய் இருந்தன. குறைவான கட்டணத்தில் மக்கள் இந்த பொதுபோக்குவரத்தை பயன்படுத்தி சௌகர்யமாய் இருந்தனர். அப்போது அறிமுகமாகத் துவங்கின கார்களை விற்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரயில் சேவை முக்கிய தடையாக இருந்தன. அதனால் அவை அரசை லாபி செய்து ரயில் பாதைகளை அகற்றினர். பதிலுக்கு சாலைகளை (மக்கள் செலவில்) பரவலாய் அமைத்தனர். அடுத்து கார்களின் தேவையை, வசதியை மக்களுக்கு இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினர். மக்களுக்கு இப்போது கார்கள் அவசியமாய் போயின. ரயிலை விட இதுவே சௌகர்யம், இதுவே முன்னேற்றத்தின் அறிகுறி என நம்பத் தலைப்பட்டனர். ஆனால் சந்தை இத்துடன் நிற்கவில்லை. சாலையில் பயணிப்போருக்கு அவசரமாய் வண்டியை நிறுத்தி வாங்கி கொறிக்க துரித உணவு தேவைப்பட்டது. அப்படி சாலை ஓரங்களில் பர்க்கர் கடைகள் அறிமுகமாகி மெக்டொனால்ட்ஸ், கெ.எப்.ஸி போன்றவை பெரும் வணிக வெற்றி பெற்று அமெரிக்க உணவில் இருந்து பிரிக்க முடியாத வஸ்துக்களாகின. ஆனால் ரயில் பாதைகள் அகற்றப்படாவிட்டால் மெக்டவல்ஸ், கெ.எப்.ஸி எல்லாம் முளைத்திருக்காது.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...