முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (5)

Image result for endhiran black sheep scene
Who is the black sheep?

என் மொழி எப்படி முழுக்க முழுக்க வாசகருடனான உரையாடலால், மோதலால், அவர்களை சென்று சேரும் எனது முனைப்பால் மாறியது, மாறுகிறது, எப்படி எனது எழுத்து முற்றிலும் நான் எதிர்பாராத விதங்களில் வாசகர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது, உணரப் படுகிறது என நான் எழுத்தாளனாய் மலர்ந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.
 எழுத்து என்னையே மீறிச் செல்லும் இடங்களை உணர்ந்தேன். எத்தனையோ பேர்களின் கருத்துக்கள் என் சிந்தனைக்கு செறிவூட்டுகின்றன. நான் யோசிப்பதும், எழுதுவதும் எந்தளவுக்கு என்னுடையவை எனும் ஐயம் இப்போது எனக்கு வலுவாக எழுகிறது. என் எழுத்தில் நான் மிக மிகக் குறைவாகவே “நானாக” இருக்கிறேன்.
 என் தரப்புகள், நம்பிக்கைகள், பிடிவாதமான அபிப்ராயங்கள், பிடிப்புகள் நிலைப்பதில்லை. நான் ஓடும் நதி போல் மாறிக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்றால் இந்நதியின் பரப்பில் தோன்றும் ஆயிரமாயிரம் அலைகளில் எந்த அலை நான்?

 மேலும் வாசகன் என்று ஒரு புள்ளியை கற்பனை செய்யாமல் ஒரு வார்த்தையை கூட என்னால் எழுத இயலாதே? நான் மற்றும் வாசகன் எனும் இரு எல்லைகள் நடுவே ஒரு சிலந்தி பின்னும் வலை தான் என் எழுத்து. இந்த எண்ணங்கள் தாம் எனது ஆரம்ப கட்ட தனிமனிதவாதத்தை உடைத்து நொறுக்கின.
நான் ஆதர்ஷிடம் கேட்டேன்: “தனிமனிதன், சுயம் என்பவையெல்லாம் கற்பிதங்கள் இல்லையா?” இக்கேள்வி அவனை அதிர வைத்தது. அது எப்படி முடியும் என்றான். தனிமனிதன் என்றால் யார்? தனித்தவன். தன்னில் இருந்து பிறப்பவன். இது சரி என்றால் தனிமனிதனால் தன்னை மட்டும் கொண்டு தன்னை விளக்க இயல வேண்டும்.
 “உன்னால் தனியாக நீ யார் என கூற இயலுமா? இன்னொருவருடன் தொடர்புறுத்தாமல் இதை செய்ய வேண்டும். முயன்று பார்” என்றேன். அதாவது “நான் இப்படியானவன்” என இன்னொருவரிடம் சொல்லாமலேயே அல்லது அப்படி சொல்வதாய் பாவனை செய்யாமலே விளக்க வேண்டும். அதாவது சூனியத்தில் நின்று அவன் தன்னையே விளக்க வேண்டும்.
 சற்று நேரம் யோசித்து விட்டு முடியாது என்றான்.
 தனிமனிதன் எனும் உணர்வே மொழியில் தான் அமைந்துள்ளது. மொழி என்பது ஒன்றுக்கு மேற்பட்டோரின் கருத்துக்களும் எண்ணங்களும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் ஊடுபாவும் ஊடகம். எத்தனையோ பேர் பரஸ்பரம் உரையாடும் வெளி. மொழிக்குள் நீங்கள் “தனித்து” செயல்படவே இயலாது. மொழிக்குள் ஒருவர் “கூட்டாய்” மட்டுமே யோசிக்கவும் பேசவும் எழுதவும் இயலும். கூட்டாய் செய்யும் எதுவுமே உங்களை “தனித்திருக்க” அனுமதிக்காது.
அடுத்து, ஒருவர் தான் இப்படியானவர் என விளக்கவே ”தான் இப்படியெல்லாம் இல்லை” என கூற வேண்டும். மற்றமையுடன் தொடர்ந்து முரண்பட்டுத் தான் தனிமனிதன் உருவாகிறான். மற்றமை இல்லை என்றால் தனிமனிதனும் காணாமல் போய் விடுவான்.
தனிமனிதனே இல்லை என நான் கூறவில்லை. ஆனால் தனிமனிதன் என்பது தொடர்ந்து மாறும், உறுதியற்ற ஒரு நிலை. இந்த நிலையின் துவக்கப் புள்ளி தான் “நான் வித்தியாசமானவன்” எனும் பிரமை என்கிறேன்.
 இந்த பிரமையில் காலூன்றி நின்று தான் நாம் நம் சுயத்தை உருவாக்குகிறோம். ஆனால் இந்த துவக்கப் புள்ளி நம் ஆதார நிலை அல்ல. ஒரு விமானம் ரன்வேயில் ஓடி டேக் ஆப் ஆகிறது. இந்த ரன் வே தான் “நான் தனியானவன்” எனும் எண்ணம். விமானம் தான் நமது “சுயம்”. நாம் பல சமயங்களில் ரன் வே தான் விமானம் என குழப்பிக் கொள்கிறோம். பறக்கும் விமானம் தனித்தில்லை. அது பல்வேறு இயல்பியல் விதிகளுக்கு உடன்பட்டு தன்னை காற்றில் தக்க வைக்கும் உறுதியற்ற, நிலையற்ற ஒன்று. நம் சுயமும் அப்படியே.
சரி, நம் உடல் நம் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது? இது நம்மை “தனிமனிதனாக” ஆக்கவில்லையா? இக்கேள்வியை எப்படி விவாதித்தோம் என இறுதிப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.