முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்!


 Image result for karunanidhi
கலைஞருக்காக இரங்கல் தெரிவித்தவர்களில் பலவகையினரும் இருந்தார்கள்; அவர்களுக்கும் கலைஞருக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா, உண்மையிலே மனதில் இருந்து தான் சொல்கிறார்களா எனும் குழப்பம் பலருக்கும் உண்டாகியிருக்கும்.

 நமது கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலைஞரைப் பற்றி சொல்லும் போது “தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நம் ஆளுநருக்கு தமிழ் படிக்கத் தெரியுமா? அவர் கலைஞரின் நாவல்களை, சுயசரிதையை படித்துள்ளாரா? நிச்சயமாய் இருக்காது. ஆனாலும் அவர் “தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கதாகும். சமூக நீதி தொடர்பாக பல திரைப்படங்களில் அவர் எழுதிய வசனங்கள் அதிக அளவிலான மக்களை ஈர்த்தது. குறளோவியம் உள்ளிட்ட பல முக்கியமான நூல் களை அவர் எழுதியுள்ளார்.” என்று சொல்வதை நாம் ஏற்றே ஆக வேண்டும். அவர் ஒருவேளை கேரளாவின் ஆளுநராக இருந்திருந்தால் இதையே சற்று மாற்றி “மொழியின் வளர்ச்சிக்கு வள்ளத்தோளின் பணி மறக்க முடியாதது” என ஏதாவது ஒரு கூட்ட்த்தில் உரையாற்றிக் கொண்டிருந்திருப்பார். இதெல்லாம் தவிர்க்க முடியாத்து. உண்மையிலே, நமது ஆளுநருக்கு எந்த விசயங்களெல்லாம் மறக்க முடியாதவை, தவிர்க்க முடியாதவை என நாம் அறிவோம். பொதுவாக ஆளுநரைப் போன்ற வேற்றுமொழி வி.ஐ.பிகள், மத்திய அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படிப் பேசுவதை நாம் ஆழ்ந்து கவனிப்பதில்லை; இது வெறும் சடங்கு என அறிவோம். சர்தார் உஜ்ஜல் சிங்கல் தமிழக ஆளுநராய் இருந்த காலத்திலும் தமிழ் மொழி பற்றி இவ்வாறே உணர்ந்தார். இனிவரும் காலங்களில் லாலா சிங் பஞ்சாரா என்று ஒருவர் வந்தாலே இவ்வாறே சொல் உதிர்த்து கண்ணீர் விடுவார். இதெல்லாம் எமக்கு புரிகிறது.
 ரஜினிகாந்த் “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கறுப்புநாள்” என்று சொன்னதைக் கூட புரிந்து கொள்ளலாம். (ரஜினி கலைஞர் மீது மதிப்பு கொண்ட, நெருக்கமாய் இருந்தவர்.) கலைஞருக்கு 94 அடி உயரத்துக்கு சிலை நிறுவ வேண்டும் என ரவிக்குமார் கோரியது எனக்கு சற்றே அதிர்ச்சி அளித்தது. பல முக்கிய பின்நவீனத்துவ கட்டுரைகளை எழுதிய ரவிக்குமார் ஒரு முக்கிய அரசியல் தலைவரின் சிலைகளை எழுப்புவதன் கலாச்சார குறியீட்டு முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இவ்வாறு சொல்கிறார் என்பதை நான் ஒருவகையாய் புரிந்து கொள்கிறேன். (உண்மையிலேயே சிலைகளை எழுப்புவதனால் தமிழ் பண்பாட்டுக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் என்னதான் பயன் என நான் ஆரம்பத்தில் சில நொடிகள் குழம்பினாலும், இன்று இந்துத்துவா எழுச்சி பெற்று வரும் சூழலில் தமிழ் அடையாள அரசியலை முன்னெடுப்பது அவசியம் என புரிந்து கொள்கிறேன். இன்னொரு பக்கம் முன்பு விசிகவுக்கும் திமுகவுக்கும் ஒரு முக்கிய பாலமாகவே ரவிக்குமார் திகழ்ந்த்தற்கு கலைஞருடனான அவரது நெருக்கம் முக்கிய காரணமாக இருந்தது.)
ஆனால் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்த வந்த போது “ஐயா உங்கள் கதிர்வீச்சுகள்…பிரகாசித்துக் கொண்டே இருக்கும்” என்று கூறியது வரை சரி தான், ஆனால் அவர் ஒரு நடிகராய் இடம்பெற்றதற்கே கலைஞர் தான் காரணம் என்கிற ரீதியில் பேசினது எனக்கு குழப்பம் அளித்தது.
இதுவரை எந்த அரசியல் மாற்றத்துக்கும் எதிர்வினையாற்றாத விஜய் டிவி, அரசியல் கருத்தாளர்கள் தம் நிகழ்ச்சிகளில் தோன்றினால் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என தயங்கும் விஜய் டிவி, தாமதமாய் இரங்கல் செய்தி வெளியிட்டு, பிக்பாஸில் யாஷிகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் போன்றவர்களை எல்லாம் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த செய்தது. இதை நான் பாராட்டுகிறேன். ஆனால் இதுவும் எந்தளவுக்கு உண்மையானது, இதயபூர்வமானது எனும் ஐயம் எனக்கு எழுகிறது.
எல்லா பக்கங்களில் இருந்தும் உணர்வு அலைகள் கிளம்பும் போது, எல்லா ஊடகங்களும் உணர்ச்சிகரமாய் எதிர்வினையாற்றும் போது, சமூக வலைதளங்களில் அனைவருமே கண்ணீர்க் கடலில் ஓடமாய் தத்தளிக்கும் போது (ஏன் நானும் கூட்டத்தோடு கூட்டமாய் கோவிந்தா என இருக்க வேண்டும் என எண்ணி நான் முகநூலிலும் பிளாகிலும் சற்று தள்ளியே இருந்து விட்டேன் என்றாலும் என் மனம் மிகவும் கலங்கி போயிருந்தது) விஜய் டிவி தான் மற்றும் எவ்வளவு நேரம் தான் இமயமலையில் தியானம் இருக்கும் ரஜினி போல இருப்பது? ஆக, அதுவும் கலைஞர் மறைவுடன் களம் இறங்கியது.
ஒரு நண்பர் என்னிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிப் பங்கேற்பாளரான மஹத்தின் இரங்கலைப் பற்றி விசாரித்தார்: “மஹத் மிகவும் கலங்கிப் போய் தோன்றினார். கலைஞர் குடும்பத்தில் உள்ள சினிமா பிரபலங்கள் தனக்கு நெருக்கமானவர்கள்; தான் கலைஞரை நேரில் சந்தித்த போது அவர் ‘உன் சினிமா வாழ்க்கை எப்படி போகுதுப்பா?’ என அவர் விசாரித்ததாகவும் சொல்லி மஹத் கண்ணீர் விட்டார். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையானது? இன்று நாம் மீடியா ஏற்படுத்தும் தற்காலிக கண்ணீர் சுனாமியில் அடித்து செல்லப் படுகிறோமா? சில நிமிடங்கள் கலங்கித் தெளியும் துக்கமா இது?” என நண்பர் கேட்டார்.
மஹத் மட்டுமல்ல, இதுவரை திமுக மற்றும் கலைஞர் பற்றி எந்த அக்கறையும் காட்டாத, ஒருமுறை கூட கலைஞரை பாராட்டியிராத என் இலக்கிய நண்பர்கள் கூட, கலைஞரின் மறைவை ஒட்டி, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். போன மாதம் என்ன, போன வாரத்தில் கூட ஒருமுறையாவது இப்படி இவர்கள் கலைஞரை வெளிப்படையாய் “தலைவா” என விளித்திருப்பார்களா என்பது ஐயமே. திமுகவினரே சங்கோஜப்படும் அளவு இந்த பாச வெளிப்பாடு இருக்கிறதே?
இந்திய அளவில் ஒரு மூத்த தலைவரின் மறைவு இது என்பதாலா? தமிழகத்தின் தலைவிதியை மாற்றி எழுதிய ஒரு மாமனிதரின் மறைவு இது என்பதாலா?
இருக்கலாம்.
இன்னொரு விசயமும் இன்று நிகழ்ந்து வருகிறது.
இன்றைய ஊடக பிரளயத்தில் நாம் அனைவருமே இன்று மனம் கனிந்து நெகிழ்ந்து வருகிறோம். எல்லாருமே ஒரே உணர்வலையில் மிதந்து சஞ்சலப்படுகிறோம். இந்த உணர்ச்சி உண்மையானதே; ஆனால் இது  “அந்தரங்கமானதா” என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன்.
உண்மைக்கும் அந்தரங்கத்துக்கும் இடையிலான கோடு இன்று அழிந்து விட்டது. (அதனால் தான் அந்தரங்கம் என்பதை நான் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் வைத்தேன்.)
இது போன்ற ஒரு வரலாற்று தருணத்தில் எந்த ஒரு பெரும் ஆளுமைக்காகவும் சில நொடிகள் மனம் கசிந்து கண்ணீர் விடுவோம் நாம்; அந்த ஆளுமையுடன் நாம் உடன்படாவிட்டாலும், அவர் மீது விமர்சனம் இருந்தாலும், கோட்பாட்டு ரீதியாய் அவரிடம் வெறுப்பாய் இருந்தாலும் கூட சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போய் திகைத்துக் கலங்குவோம். முன்பும் அப்படியே இருந்தோம். ஆனால் அதை ஒரு அந்தரங்கமான சந்தர்ப்பமாய் வைத்திருந்தோம். யாரும் காணாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டு, யாரும் பார்க்கிறார்களா என பார்த்து விட்டு சகஜ நிலைக்கு மீண்டு விடுவோம். முன்பு, பொதுவெளியில் நிதானமாய் கௌரவமாய் நமது துக்கத்தை வெளிப்படுத்துவோம். துக்கம் அனுசரிக்கையிலும் விமர்சனத்தையும் முன்வைப்போம். நாம் ஒரு மாற்றுத் தரப்பு என்பதில் தெளிவாக இருப்போம். அவருக்காக கூவி மாரிலடித்து அழ வேண்டியது அவரது தொண்டர்களும் கட்சியினருமே என தெளிவாய் இருப்போம். ஆனால் இன்று அப்படி அல்ல. ஒரு தலைவருக்காக கட்சிக்காரர்கள், தொண்டர்களை விட நாமே அதிகமாய் அழுகிறோம். யார் பார்த்தால் தான் என்ன என நாம் வெளிப்படையாய் கண்ணீர் சிந்துகிறோம்; அதை ஒரு performanceஆக மாற்றுகிறோம்.
என்னுடன் பணி செய்கிற வடக்கிந்தியர் அவர். கவிஞர். அவர் நேற்று என் கைகளைப் பற்றிக் கொண்டுமிகவும் வருந்துகிறேன்என்றார். அவர் கண்கள் சிவந்து, கண்ணீர் தளும்பி நின்றது. “என்னாச்சு?” எனக் கேட்டேன். “உங்கள் ஊரில் மிஸ்டர் கருணாநிதி இறந்து விட்டாராமே! அதைப் பற்றி முகநூலில் படித்தேன். டிவியில் செய்திலும் பார்த்தேன். அப்போதில் இருந்தே மனசு சரியில்லை. அவர் ஒரு நல்ல கவிஞராமே. நானும் கவிஞர் தானே. அதனால் தான் என்னால் தாங்க இயலவில்லை.”
அவர் கவிதைகளை விட நாவல், கட்டுரைகள் தாம் அதிகம் எழுதியவர். பத்திரிகையாளர். நல்ல பேச்சாளர்.”
ஆம், அவரது நாவல்கள், கட்டுரைகள் சிறப்பாய் இருக்குமா?”
அப்படி சொல்ல முடியாது. மேம்போக்கான மிகையான எழுத்து அவருடையது.”
அப்படியா?” அவர் உடனே கண்களை துடைத்துக் கொண்டார். இயல்பாகி விட்டார்.
ஒரு தலைவரை அவர் நமக்கான தலைவரா என வினவிய காலம் முடிந்து விட்டது. யோசிக்காமலே “தலைவா” என மனம் விட்டு கூவுகிறோம். தலைக்கு மேலாய் கைகளை குவித்து வணங்குகுறோம். டிவி திரையின் முன் கண்ணீர் மல்க அமர்ந்திருக்கிறோம். அடுத்து சமூக வலைதளங்களில் கூட்டுமனத்துடன் ஒன்றாகிறோம்.
ஈழத்தமிழரும் ஈழத்தமிழருடன் மிக நெருக்கமாய் உணர்ந்த எழுத்தாளர்களும் கலைஞரை மிகக் கடுமையாய் வெறுத்த சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் மட்டுமே, இம்முறை, இந்த உணர்வுப் பேரலையில் ஏறிப் பயணிக்காமல் விலகி நின்றனர். எப்போதுமே இந்த ஈழத்தமிழ் பெரும்பான்மை மனநிலைக்கு மாற்றுநிலைப்பாடு எடுக்கும் ஷோபா சக்தி கலைஞருக்காக எழுதிய இரங்கலின் ஒரு பாதி “உனக்கு அவரைப் பிடிக்காது என்பதுக்காகவே எனக்கு அவரைப் பிடிக்கும் பார்” எனும் வகையில் இருந்தது.
இது சரியா தவறா எனக் கேட்டால் என்னிடம் விடை இல்லை.
ஆனால் காலம் வெகுவிரைவாய் நம் முன் மாறி வருகிறது என்பதை மட்டும் அறிகிறேன்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சரியாய் சொன்னீங்க. என் நண்பர்கள், சினிமாக்காரர்கள் மற்றும் ஊடகங்கள் நடித்த நடிப்பு இருக்கே... முடியல...
எனக்கு அவர் இறந்ததுக்கு கவலையே வரல...

ஆனா...இந்த அசிங்கத்தை பார்க்காம இருக்கறதுக்காவது அவர் கொஞ்ச நாள் வாழ்ந்து இருக்கலாம்னு தோணுது...

ஆனா (இது வேற ஆனா), கருணாநிதி நடித்த நடிப்புக்கு இது எல்லாம் தூசி. எதை கொடுத்தாரோ, அவர் அதையே பெறுகிறார்...
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆனால் (இது வேற ஆனால்) இரங்கல் தெரிவித்தவர்கள் நடித்ததாய் நான் நினைக்கவில்லை - இன்று வாழ்க்கையே ஒரு performance. மொத்த வாழ்வுமே நடிப்பு என்றாகி விட்டபின் தனியாக நடிப்பு என்று ஒன்று இல்லை. ஓட்டலில் தோசை ஆர்டர் பண்ணி விட்டு குடும்பமாய் சேர்ந்து செல்பி கிளிக்குவது போலத் தான் இரங்கல் தெரிவிப்பதும் இன்று இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் இன்று ஒரு செவாலியே சிவாஜி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...