குணச்சித்திர நடிகர் ரமேஷ் கண்ணா நக்கீரனில் எழுதி வரும்
பத்தியில் (“திரையிடாத நினைவுகள்”) சினிமா துறையில் பல பத்தாண்டுகளாய் போராடி காணாமல்
போகிறவர்களைப் பற்றியும், எதிர்நீச்சலிட்டு வென்று வருகிறவர்களைப் பற்றி எழுதி உள்ளார்.
தனுஷ், செல்வராகவன் ஆகியோரைக் குறிப்பிடும் அவர் சிலர் இவர்களைப் போல் உடனடியாய் வெற்றி
பெறாவிடினும் எப்படியாவது ஒரு சின்ன காலூன்றும் இடத்தைப் பெறும் பொருட்டு விடாப்பிடியாய்
முனைந்து வருகிறார்கள், இவர்களை இயக்கும் சக்தி என்ன என வினவுகிறார். சிலருக்குள் ஒரு
நெருப்புப் பொறி, எத்தனை ஆண்டுகளானாலும், தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நடுவிலும்,
அணையாமல் இருக்கும் என்கிறார் ரமேஷ் கண்ணா. இந்த அவதானிப்பு என்னை சிந்திக்க வைத்தது.
இலக்கியத்தில் இந்தளவு
காத்திருப்பும் ஏமாற்றங்கள் இல்லையெனிலும் அவமானங்களும் நிராகரிப்பும் அதிகம். ஒரு
புத்தகம் வெளியிடும் பொருட்டு வாழ்நாளெல்லாம் காத்திருப்போரை, நாவல் எழுதும் ஆசையில்
ஆயுள் முழுக்க கனவில் திரியும் கவிஞர்களை அறிவேன். ரமேஷ் கண்ணா தான் எப்படி இயக்குநராகவும்
ஹீரோவாகவும் ஆக ஆசைப்பட்டு இறுதியில் குணச்சித்திர நடிகனாக ஆனதைக் குறிப்பிட்டு, பாக்கியராஜ்
எப்படி ஒரு பூஜ்யத்தில் இருந்து புறப்பட்டு உச்சத்தை அடைந்தார் எனச் சொல்கிறார். இந்த
எதிர்பாராமைகள் சினிமாவில் ஒரு மின்சாரம் போல சினிமாவின் எல்லா மட்டங்களிலும் பாய்கிறது.
ராம் முன்பு பேட்டியொன்றில் சொன்னார், இயக்குநர் என்பவர் ஒரு வேட்டைக்காரர், இந்த வேட்டையாடும்
திகிலும் அதன் எதிர்பாராமைகளுமே தன்னை செலுத்துகிறது என்று.
நான் கவிஞனாகும் ஆசையில் தான் எழுத வந்தேன். கவிதைக்கு அடுத்தபடியாய்
எனக்குப் பிடித்தது சிறுகதை. சற்றும் எதிர்பாராமல் உரைநடை எழுத துவங்கினேன். எந்த கனவும்
திட்டமும் இன்றியே நான் நாவல் எழுதவும் துவங்கினேன். கட்டுரையும் நாவலும் எனக்கு கவிதை,
சிறுகதையை விட சுலபத்தில் வருகிறது என உணர்ந்தேன். என் நாவல்களும் கட்டுரைகளும் எனக்கு
கூடுதலான வரவேற்பை பெற்றுத் தர நான் இன்னொரு ஆளாக உருமாறினேன். ஆனால் பதின்வயதில் என்னிடம்
நாவல் எழுத விருப்பமுண்டா எனக் கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பேன். கிடைக்கும்
எந்த வாய்ப்பையும் விட்டு விடக் கூடாது எனும் முனைப்பே என்னை அப்போது செலுத்தியது.
என்ன செய்கிறோம் என்பதல்ல, நாம் இருக்கிறோம் என்பதே முக்கியம் என நம்பினேன். எல்லா
வகையான எழுத்து வடிவங்களிலும் கைநனைத்திருக்கிறேன். எல்லா அனுபவங்களும் இறுதியில் நான்
மேம்பட உதவின.
என்னை அப்போது செலுத்திய நெருப்பே அவ்வளவு ஆவேசத்துடன் துணிச்சலுடன்
எழுதச் செய்தது. ஆனால் இப்போது அந்த நெருப்பு மெல்ல மெல்ல குன்றி வருகிறதோ, பழைய வேகம்
எனக்கு இப்போது இல்லையோ என ஒரு கேள்வி இன்று காலையில் எழுந்தது. எனக்கு இது அறுபது
வயதுக்கு மேல் நிகழும் என்றே நினைத்தேன். ஆனால் முப்பதுகளின் இறுதியிலேயே எனக்குள்
அந்நெருப்பு உறங்கத் தொடங்கி விட்டது; அதன் பசி அடங்கி விட்டது.
நான் இப்போது எழுதும் பக்கங்கள் மிகுந்து விட்டன. தினமும்
எழுதுகிறேன். ஆனால் நான் உண்மையிலேயே எழுதுகிறேனா அல்லது பழக்கத்தின் பொருட்டு எழுதுகிறேனா?
எழுத்தில் நான் பிடிப்பை இழக்கிறேனா? பதில் “ஆம்” எனில்,
ஏன்?
என் வாழ்வில் நான் பிடிப்பு இழப்பதால் தான் எழுத்திலும் இழக்கிறேனா?
இது ஒரு தற்காலிக பின்னடைவா?
அல்லது என்னை துடிப்பாய்
செயல்பட வைத்த ஆற்றல் முழுக்க வற்றி விட்டதா?
நான் மீண்டு வருவேனா?
அல்லது இதுவே முற்றுப்புள்ளியா?
Comments
அதிகம் எழுதினால் இது போல தோன்றுவது இயற்கை. எழுத்தை குறைத்து தரத்தை அதிகப்படுத்தினால் உங்களால் சீராக எழுத முடியும். இது போல எண்ணங்கள் வராது.
நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால், இயல்பாக எழுத முடியும்.
இது தொடர்பான கட்டுரை நான் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் http://www.giriblog.com/2015/08/writers-block-imagination-passion.html