முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளே எரியும் நெருப்பு


Image result for ramesh kanna

குணச்சித்திர நடிகர் ரமேஷ் கண்ணா நக்கீரனில் எழுதி வரும் பத்தியில் (“திரையிடாத நினைவுகள்”) சினிமா துறையில் பல பத்தாண்டுகளாய் போராடி காணாமல் போகிறவர்களைப் பற்றியும், எதிர்நீச்சலிட்டு வென்று வருகிறவர்களைப் பற்றி எழுதி உள்ளார். தனுஷ், செல்வராகவன் ஆகியோரைக் குறிப்பிடும் அவர் சிலர் இவர்களைப் போல் உடனடியாய் வெற்றி பெறாவிடினும் எப்படியாவது ஒரு சின்ன காலூன்றும் இடத்தைப் பெறும் பொருட்டு விடாப்பிடியாய் முனைந்து வருகிறார்கள், இவர்களை இயக்கும் சக்தி என்ன என வினவுகிறார். சிலருக்குள் ஒரு நெருப்புப் பொறி, எத்தனை ஆண்டுகளானாலும், தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நடுவிலும், அணையாமல் இருக்கும் என்கிறார் ரமேஷ் கண்ணா. இந்த அவதானிப்பு என்னை சிந்திக்க வைத்தது.

 இலக்கியத்தில் இந்தளவு காத்திருப்பும் ஏமாற்றங்கள் இல்லையெனிலும் அவமானங்களும் நிராகரிப்பும் அதிகம். ஒரு புத்தகம் வெளியிடும் பொருட்டு வாழ்நாளெல்லாம் காத்திருப்போரை, நாவல் எழுதும் ஆசையில் ஆயுள் முழுக்க கனவில் திரியும் கவிஞர்களை அறிவேன். ரமேஷ் கண்ணா தான் எப்படி இயக்குநராகவும் ஹீரோவாகவும் ஆக ஆசைப்பட்டு இறுதியில் குணச்சித்திர நடிகனாக ஆனதைக் குறிப்பிட்டு, பாக்கியராஜ் எப்படி ஒரு பூஜ்யத்தில் இருந்து புறப்பட்டு உச்சத்தை அடைந்தார் எனச் சொல்கிறார். இந்த எதிர்பாராமைகள் சினிமாவில் ஒரு மின்சாரம் போல சினிமாவின் எல்லா மட்டங்களிலும் பாய்கிறது. ராம் முன்பு பேட்டியொன்றில் சொன்னார், இயக்குநர் என்பவர் ஒரு வேட்டைக்காரர், இந்த வேட்டையாடும் திகிலும் அதன் எதிர்பாராமைகளுமே தன்னை செலுத்துகிறது என்று.
நான் கவிஞனாகும் ஆசையில் தான் எழுத வந்தேன். கவிதைக்கு அடுத்தபடியாய் எனக்குப் பிடித்தது சிறுகதை. சற்றும் எதிர்பாராமல் உரைநடை எழுத துவங்கினேன். எந்த கனவும் திட்டமும் இன்றியே நான் நாவல் எழுதவும் துவங்கினேன். கட்டுரையும் நாவலும் எனக்கு கவிதை, சிறுகதையை விட சுலபத்தில் வருகிறது என உணர்ந்தேன். என் நாவல்களும் கட்டுரைகளும் எனக்கு கூடுதலான வரவேற்பை பெற்றுத் தர நான் இன்னொரு ஆளாக உருமாறினேன். ஆனால் பதின்வயதில் என்னிடம் நாவல் எழுத விருப்பமுண்டா எனக் கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பேன். கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டு விடக் கூடாது எனும் முனைப்பே என்னை அப்போது செலுத்தியது. என்ன செய்கிறோம் என்பதல்ல, நாம் இருக்கிறோம் என்பதே முக்கியம் என நம்பினேன். எல்லா வகையான எழுத்து வடிவங்களிலும் கைநனைத்திருக்கிறேன். எல்லா அனுபவங்களும் இறுதியில் நான் மேம்பட உதவின.
என்னை அப்போது செலுத்திய நெருப்பே அவ்வளவு ஆவேசத்துடன் துணிச்சலுடன் எழுதச் செய்தது. ஆனால் இப்போது அந்த நெருப்பு மெல்ல மெல்ல குன்றி வருகிறதோ, பழைய வேகம் எனக்கு இப்போது இல்லையோ என ஒரு கேள்வி இன்று காலையில் எழுந்தது. எனக்கு இது அறுபது வயதுக்கு மேல் நிகழும் என்றே நினைத்தேன். ஆனால் முப்பதுகளின் இறுதியிலேயே எனக்குள் அந்நெருப்பு உறங்கத் தொடங்கி விட்டது; அதன் பசி அடங்கி விட்டது.
நான் இப்போது எழுதும் பக்கங்கள் மிகுந்து விட்டன. தினமும் எழுதுகிறேன். ஆனால் நான் உண்மையிலேயே எழுதுகிறேனா அல்லது பழக்கத்தின் பொருட்டு எழுதுகிறேனா?
எழுத்தில் நான் பிடிப்பை இழக்கிறேனா? பதில் “ஆம்” எனில், ஏன்?
என் வாழ்வில் நான் பிடிப்பு இழப்பதால் தான் எழுத்திலும் இழக்கிறேனா?
இது ஒரு தற்காலிக பின்னடைவா?
 அல்லது என்னை துடிப்பாய் செயல்பட வைத்த ஆற்றல் முழுக்க வற்றி விட்டதா?
நான் மீண்டு வருவேனா?
அல்லது இதுவே முற்றுப்புள்ளியா?




கருத்துகள்

கிரி இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ் இதற்கான பதில் "Writer's Block" . இது பெரும்பாலனவர்களுக்கு ஒரு கட்டத்தில் வரும்.

அதிகம் எழுதினால் இது போல தோன்றுவது இயற்கை. எழுத்தை குறைத்து தரத்தை அதிகப்படுத்தினால் உங்களால் சீராக எழுத முடியும். இது போல எண்ணங்கள் வராது.

நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால், இயல்பாக எழுத முடியும்.

இது தொடர்பான கட்டுரை நான் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் http://www.giriblog.com/2015/08/writers-block-imagination-passion.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...