ஒரு பூங்கா ஊடுபாதை போல இருந்தது நகர மத்தியில் இருந்த அந்த
சாலை. தண்மையான காற்று. சாலையோரமாய் முன்னங்கைகளில் தலைசாய்த்து பகல் தூக்கம் போடும்
பெரிய நாய்களைப் போன்ற நிழல்கள். தூறல் ஆரம்பிக்க
ஒரு குல்மொஹர் மரத்தின் கீழ் ஒதுங்கினேன்.
காற்றில் சிதறி முகத்தில் அவ்வப்போதாய் தன் பார்வையை தெளித்து
என்னை கூசி முகம் தாழ்த்த செய்யும் ஒருவித தூறல். என் ஆடையை வன்மமாய் விலக்கி உடம்பில் பல்லால் தடம் பதிப்பது
போன்ற அதன் கூரான சிதறல்.
காற்று நின்றதும் தூறலும் மறைந்து காற்றில் தெளிவான ஒளி ஒன்று
பரவியது.
சைக்கிளை எடுக்க ஹேண்டில் பாரைப் பற்றினேன். சட்டென ஒரு அதிர்ச்சி. ஷாக் அடிக்கும் மெல்லிய சப்தம். எனக்கு மட்டும் கேட்கும் சப்தம். ஊசி குத்தியது போன்ற வலி. வெண்பொறி ஒன்றை பார்த்தது போன்ற உணர்வு. இல்லை பார்க்கவில்லை, உணர்ந்தேன். கடவுளே! என்ன இது? இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு மீண்டுமா? எல்லாம் முடிந்தது என்றல்லவா நினைத்தேன்?
செருப்பை உதறி விட்டு ஜில்லென்ற மண் தரையில் கால் பதித்து
சில நிமிடங்கள் நின்றேன். அடுத்து விரல் நுனியால் சைக்கிளின் உலோகப்பகுதியைத்
தொட்டேன். பொறி எழவில்லை. கைக்குட்டையால் ஹேண்டில் பாரை சுற்றி விட்டு அதன் மீது கைவைத்தேன். ஏறி அமர்ந்து மெல்ல மிதித்தேன். வியர்த்தது. வியர்ப்பது நல்லது. மூச்சை ஆசுவாசமாய் இழுத்து விட்டேன். உடம்பில் இருந்து இறுக்கம் மெல்ல மெல்ல வெளியாவதை உணர்ந்தேன்.
அவளது வீட்டுக்கு நான் போவது இது எத்தனையாவது முறை என எண்ணிப்
பார்த்தேன். மனதுக்குள் கணக்கிட்டேன். அது என்னை சுவஸ்தமாக்க உதவியது.
அப்பகுதியில் செம்பருத்திச் செடிகள் மதில் மேல்
கூட்டமாய் சாய்ந்து குழைவாய் வெளியே நோக்கும் ஒரே வீடு அது. நான் சென்ற போதெல்லாம் செம்பருத்தி வாடின மலர்கள் கன்றின
சிவப்பில் வாயில் கதவருகே கிடப்பதை கவனித்திருக்கிறேன். நீல பெயிண்ட் உரிந்து துருவேறி வந்த வாயிற்கதவை தள்ளித் திறந்து
உள்ளே சென்றால் கண்ணைப் பறிக்கும் புது மலர்கள். நெருப்பு நாவுகள் நான்காய் இணைந்து பேசுவது போல் அவை சிதறித்
தெரியும். மாலைக்குள் குப்பைக்கு செல்லப் போகிற நாவுகள். வீட்டு வாயிலில் என்னைக் கண்டதும் செம்பருத்திப் பூக்கள்
காற்றில் அலைகழிந்தபடி சிதறப் போவது போல ஆடின.
முகப்பில் வெள்ளை பிண வண்டி ஒன்று, சில பைக்குகள், மற்றும் ஒரு கார் நின்றன. புரிந்து கொள்ள
முடியாத ஒருவித முணுமுணுப்பு எங்கும் ஒலித்தது. ஒருவர் ஓட்டலில் இருந்து பெரிய பொட்டலங்களுடன் உள்ளே போனார். வாயிலில் கிடந்த சாய்வு நாற்காலியில் சடைசடையாய் நரைத்த ஒரு
கிழவர் தளர்ந்து படுத்திருந்தார்.
அங்கங்கே சிறு சிறு தீவுகளாய் குழுமியிருந்த மனிதர்களை எனக்குத்
தெரியவில்லை. அங்கு வந்த பின் துவக்கத்தில் இது திகைப்பை தந்தது. ஓரிரு அலுவலக நண்பர்கள் என்னை கவனித்து அருகே வந்து தோளை
அணைத்துக் கொண்ட போது தான் நிம்மதியானேன்.
ஓரமாய் இருந்த மாடிப்படிக்கட்டில் சில பெண்கள்
குனிந்து தம் கைகளை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டி உள்ளே போன போது தூறல் வலுத்து மழையும் காற்றுமாய்
வீசியது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு முதன்முதலாய் அந்த வீட்டுக்கு
நான் போன போது இதே போல மழைக்காலம். என் சட்டை பாதி
நனைந்து போயிருந்தது. குடை எடுத்து
வரவில்லையே என கவலைப்பட்டேன்.
“செருப்பை எல்லாம் கழற்ற வேணாம். அப்படியே வாங்க” என்றார் அவர், “எங்க வீட்டில் அதெல்லாம் பார்க்கிறதில்ல. அதோட தரை ரொம்ப ஜில்லிண்ணு இருக்கும். குளிர் தலைக்கு ஜிவ்வுன்னு பிடிக்கும்.பரவாயில்ல வாங்க.”
ப்ரியா இதனிடையே வந்து கணவன் பின்னிருந்து கழுத்தை நீட்டி“ஹய்” சொன்னாள். “இது … தெரியுமில்ல? சொல்லி இருக்கேனே? என் டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கிறார். ஜூனியர் எக்ஸிகியூட்டிவ். அக்ஷய்க்கு கிடார்
சொல்லித் தர வரார்னு சொல்லி இருந்தேனே?”
”ஆமாம். அவரே சொன்னார். பார்த்த உடனே புரிஞ்சு போச்சு. வாரணம் ஆயிரம் சூர்யா போல கிட்டார் சுமந்துட்டே வந்திட்டார்.”
”ஏன் அவரை வெளியே நிக்க வச்சு பேசுறீங்க?”
“நானா? அவரை உள்ளே வர விடாம நீ தான் பேசிக்கிட்டு இருக்கே”
“சாரிங்க. பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டார். உள்ளே வாங்க.”
“செருப்பெல்லாம் கழற்ற வேணாமுன்னு சொல்லிக்கிட்டு வந்தேன்.”
செருப்புடன் வீட்டுக்குள் நடந்தால் எனக்கு ஷாக் அடிக்கும்
என அவள் விளக்க ஆரம்பித்தாள்.
அவர் ஆர்வமாய் முன்னே வந்து நாயின் மூக்கைத் தொடும் குழந்தையை
போல் தொட்டார்.
“எங்கே அடிக்கலியே?”
“அது அப்படி அடிக்காது. ஆனால் எப்போ அடிக்குமுன்னு சொல்ல முடியாது.”
“கரெண்ட் இல்லாத சமயம் நீங்க பல்பில் கை வச்சா எரியுமா?”
“இல்லீங்க”
“ஹெ ஹெ இண்டிரஸ்டிங்”
எனக்கு அவரை பார்த்ததுமே பிடித்து விட்டது. உயரமான கம்பீரமான தோற்றம். எப்போதும் ஈரமாக மினுங்கும் கண்கள். தூங்கி வழியும் புத்திசாலி களை கொண்ட முகம்.
வரவேற்பறையில் அங்கங்கே பூஜாடிகள். சுவரில் நவீன ஓவியங்கள். யாரும் பார்க்காத டிவியில் கார்ட்டூன் ஓடியது. சமையலறையில் பால் பொங்கும் ஓசையும் காப்பி டம்பளர்களின் ஒலியும். சோபாவில் குவிக்கப்பட்ட கசங்கின காய்ந்த ஆடைகள். வலது பக்கம் ஒரு சின்ன அறை. அங்கே அரை இருளில் அக்ஷய் ஒரு பெரிய மரநாற்காலியில் சப்பணம் கோட்டி இருந்து கணினியுடன்
சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தான். ஹாலில் மேஜையில்
இருந்த சதுரங்க பலகையை அப்போது கவனித்தேன்.
தட்டில் காப்பி டம்பளர்களுடன் வந்த ப்ரியா சொன்னாள்: “ஒண்ணு அப்பா கூட செஸ் ஆடணும், இல்ல கம்பியூட்டர்ல. காலையில் முழிக்கிறதில இருந்து தூங்குற வரைக்கும் அவனுக்கு
வேறெந்த சிந்தனையும் இல்லை. அதனால் தான் கிட்டார்
கத்துக்கிட்டால் கொஞ்சம் மனசு இதில் இருந்து விடுபடுமுன்னேன்னு நினைச்சேன். என்ன சொல்றீங்க?”
அவர் காபியை ஒரு மிடறு முழுங்கியபடி ஏதோ சிந்தனையில் இருந்து
மீண்டவர் போல தலையசைத்தார். நான் புன்னகைத்தேன். அந்த பையனைப் பார்த்தால் கிட்டார் கற்றுக் கொள்பவனாய் தெரியவில்லை.
நான் கிட்டாரின் தந்திகளை ஏதோ நினைவில் வருடிக்
கொடுத்தேன். சட்டென ஷாக் அடித்தது. கையை உதறிய போது ப்ரியாவின் முகம் ஒரு நொடி மாறி விட்டு இயல்பாவதை கவனித்தேன்.
காப்பி
நல்ல கசப்பு. அவளுக்கு அப்படித் தான் பிடிக்கும்.
இந்த கசப்புடன் டார்க் சாக்லேட் துண்டொன்றை கடித்தால் கண்ணிமைகளை பாதி
தாழ்த்தி லயிப்பாள்.
இரண்டாவது
முறை நான் சென்றது கோடைப் பருவத்தில். சட்டைக்குள் வெயில் அமிலத் துளிகளாய் சொட்டும் கோடை. ஒரு சாலை விபத்தில் அடிபட்டு அவர் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்தார்.
நான் செல்லும் போது ஈஸி செயரில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவர் முன்னால் மரமேஜையில் செஸ் பலகை. அதை முறைத்தபடி இருந்தவர் முகம் என்னைக் கண்டதும் உற்சாகத்தில் சட்டென வெளிச்சமாகியது.
“நான் உங்க ஷாக் பற்றி கொஞ்சம் ஆய்வு
செய்தேன். இப்போல்லாம் படிக்க நிறைய டைம் கிடைக்குது.
It is called static electricity.
அதாவது நிலை மின்சாரம். நம்ம உடம்புக்குள்ளாடி நியூட்ரான், புரோட்டான், எலக்டிரான் ஆகிய அணுத்துகள்கள் உள்ளன. இவற்றின் இடையே சமநிலை இல்லாமல் ஆகும் போது எலக்டிரான்கள்
முன்னும் பின்னுமாய் பட்டுத்தெறிக்கின்றன. அவற்றுக்குள் மிதமிஞ்சிய மின்சாரம் சேர்கிறது. அதை வெளியேற்றியே ஆக வேண்டும். மின் அலையாய் மாறி இன்னொரு மின் கடத்தி வழி வெளியாவது தான்
அதற்கு ஒரே தீர்வு. அந்த கடத்தி ஒரு
மின்சார உபகரணமாகவோ உலோகப் பொருளாகவோ மற்றொரு மனித உடலாகவோ இருக்கலாம். உங்களைப் போன்றே உடம்பில் நிலை மின்புலம் கொண்ட ஒருவரை நீங்கள்
தொட நேரும் போது மின்சார அலை அவர் உடம்புக்குள் கடந்து போய் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது. ஆமாம் இதையெல்லாம் நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. இந்த பிரச்சனை எத்தனையோ ஆயிரம் பேர்களுக்கு இருக்கிறது என்பதை
அறிந்து வியப்படைந்தேன். ஆனால் நான் இதுவரை
அப்படி ஒருவரைக் கூட கண்டதில்லை.” அவர் தன் அருகே சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த மடிக்கணியை
சுட்டினார்: “இதைத் தொடுங்களேன்”
“வேண்டாங்க
ரிஸ்க்”
“ஒண்ணும்
ஆகாது. தொடுங்க”
“இல்லைங்க,
எங்க அலுவலகத்தில நான் இது போல ஒரு லேப்டேப்பில் கைவச்சு அது பாழாயிடுச்சு”
(தொடரும்)
கருத்துகள்