முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுகமாயினி சித்தன்- அஞ்சலி


sithan

நான் என் இருபதாவது வயதில் கலை இலக்கிய பெருமன்ற கருத்திரங்கு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சென்னைக்கு வந்தேன். அப்போது சந்தித்தவர்களில் ஒருவர் யுகமாயினி சித்தன். தொண்ணூறுகளில் நான் எதிர்கொண்ட டிப்பிக்கல் சிறுபத்திரிகையாளர்களின் வேகம், பித்து, உக்கிரம், மும்முரம் அனைத்துமே வடிவான மனிதர். நான் அவரிடம் சென்று யுகமாயினி குறித்து சில சொற்கள் பகிர அவர் உற்சாகமானார்.

 சென்னையில் அன்றாட செலவுக்கு அம்மா தந்த பணத்தை கண்ணில் பார்க்கும் புத்தகங்கள், இதழ்களுக்கே செலவழித்து கரைத்துக் கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு என்றால் கடைசி நாள் ஊருக்கு திரும்பி செல்ல பேருந்துக்கே என்னிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அதைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாத வயது அப்போது. சித்தனிடம் சில நிமிடங்கள் பேசினதுமே “யுகமாயினி”க்கு சந்தா தொகையையையும் என் முகவரியையும் அளித்தேன். அவர் மகிழ்ந்து  என்னிடம் தன் பத்திரிகையின் சில இதழ்களை கையில் அளித்தார். சுமார் ஒரு இரண்டு வருடங்களின் இதழ்கள். அப்படித் தான் அவரைப் போன்ற மனிதர்கள் இருந்தார்கள். கராறான வணிக நோக்கோ, கையில் காசு வாயில் தோசை மனப்போக்கோ இல்லை. உங்களுக்கு இலக்கிய விருப்பம் உண்டென அறிந்தால் மறுநொடி உங்களை ஒரு சகோதரராய் ஏற்றுக் கொண்டு மணிக்கணக்காய், நாட்கணக்காய், வாரக்கணக்காய் பேசிக் கொண்டு போவார்கள். உங்கள் ஊர், பின்னணி, சாதி, மதம் பற்றியேதும் விசாரிக்கக் கூட மாட்டார்கள். சித்தனும் அப்படியான ஒரு மனிதர்.
நான் விடுதிக்கு திரும்பிய போது நட.சிவகுமார் அண்ணன் “என்னடா சித்தனைப் பார்த்தியோ?” என்றார். “ஏண்ணே கேட்குறீங்க?”
“கையில் இவ்வளவு பழைய இதழ்கள் வச்சிருக்கியே?”, என்றார் ஒரு எல்லாம்-அறிந்த நமுட்டுப் புன்னகையுடன்
அன்றைக்கு தொலை தொடர்பு வசதிகள் குறைவு. ஆகையால் நான் அவருடன் தொடர்பில் இருக்க இயலவில்லை. ஆனால் இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தேன். “யுகமாயினி” இன்றைய இடைநிலை இதழ்களின் வடிவில் இருக்காது. பள்ளி மாணவர்களின் குறிப்புகளை தைத்து தொகுத்தது போல அடுக்கடுக்காய் நெருக்கமாய் திணித்ததாய் படைப்புகள் வரும். தாள் ரொம்ப மலிவானதாய் அச்சு மை கொஞ்சம் கலங்கலாய் இருக்கும். எனக்கு இந்த தொழில் நேர்த்தியின்மை மிக கவர்ச்சியாய் இருந்தது. ஒரு பத்திரிகை நடத்த, படைப்பாளியாக பெரிய வசதியோ பின்னணியோ தேவையில்லை, கனவு காணும் மனம் மட்டுமே போதும் எனும் ஒரு நம்பிக்கையை விதைத்தவர் சித்தனைப் போன்றவர்கள்.
அது ஒரு காலம். அவர் அந்த காலத்தின் மனிதர். அந்த காலமே நான் காலுதைத்து பழகிக் கொண்ட கருவறை. அதனாலே எனக்கு அந்த காலத்து ஆளுமைகள் மீது பெரிய பிரியமும் மரியாதையும் உண்டு. சித்தனுக்கு அஞ்சலி!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...