நான் மாணவர்களுடன் இணைந்து சமீபத்தில் கொண்டு வந்த ஆங்கில மொழியாக்க தொகுப்பில் தமிழில் இருந்த இடம்பெற்றிருந்த மூன்று சிறுகதையாளர்களில் சு.ராவும் ஒருவர். விற்பனைக்கு இல்லை, உள்சுற்றுக்கு மட்டுமே இல்லை என்பதால் நாங்கள் அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. முடிந்த அளவுக்கு படைப்பாளிகளை அணுகி தகவல் சொன்னோம். தமிழில் பு.பியின், ஜி.நாகராஜனின் பதிப்புரிமை யாரிடம் எனத் தெரியவில்லை. ஆனால் சு.ராவின் பதிப்புரிமை காலச்சுவடிடம் – கண்ணனிடம் – என அறிவேன். அவரை என் பதின்வயதில் இருந்தே அறிவேன். ஆனால் நான் எழுத்தாளனாய் அறிமுகமாகி வளர்ந்து வந்தது காலச்சுவடின் போட்டிப் பதிப்பகமான உயிர்மையில். இலக்கிய குழுக்களில் காலச்சுவடும் உயிர்மையும் இன்றும் பேசிக் கொள்ளாத முரண் குழுக்களே. ஆகையால் கண்ணனை எப்படி அணுகி இதைப் பற்றி சொல்வது, அவர் அனுமதி மறுப்பாரா என்றெல்லாம் குழப்பங்கள், தயக்கம், ஒரு விள்ளல் பயம்.