முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னைக் குறித்து மானசீகன்!



முகநூல் நல்ல படைப்பாளர்களை, சிந்தனையாளர்களைக் கூட தடம் மாற்றியிருக்கிறது. முகநூலின் அன்றைய பரபரப்புக்கு நம்மையறியாமல் நாமும் இரையாகி விடுகிறோம் . நமக்கே தெரியாமல் உள்ளுக்குள் ஒரு அன்னியனோ, ரெமோவோ குடியேறி விடுகிறான். (சில தருணங்களில் நானும் கூட)


ஆனால் இப்படிப்பட்ட சுழல்களில் மாட்டிக் கொள்ளாமல் ஒரு நதியுடனான பயணத்தைப் போல முகநூலிலும் தம் எழுத்துப் பயணத்தைத் தொடரும் வெகுசிலரில் முக்கியமானவர் அபிலாஷ்.

ஆழ்ந்த வாசிப்பும் , எதையும் சுவையாகச் சொல்லும் திறனும் வாய்க்கப் பெற்றவர். சினிமா, அரசியல், கிரிக்கெட் ,அன்றாடச் செய்திகள் என்று எதை எழுதினாலும் அந்தக் கட்டுரையில் இவருடைய தனித்துவமாக மனோவியல் பார்வை நம்மை எட்டிப் பார்த்துக் கண்ணடிக்கும் . ( எனக்கும் அதுவே உவப்பானது என்பதால் நான் அபிலாஷை பல தருணங்களில் சஹிருதயராகவே உணர்ந்திருக்கிறேன் )

திராவிடம், மார்க்சியம் , தலித்தியம் , பெண்ணியம் ஆகியவற்றின் மீது கனிவான பார்வை கொண்ட லிபரல் ஜனநாயகவாதியாகவே அபிலாஷை மதிப்பிட முடியும். மெய்ம்மை குறித்த அவருடைய தேடலை எல்லாவிதமான எழுத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன்.

எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத , தன்னைச் சுற்றியும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க விரும்பாத அபிலாஷின் குணச்சித்திரம் எப்போதும் எனக்கு ஆச்சர்யமளிக்கும் ஒன்று.

எல்லா உணர்வு மோதல்களையும் அதன் அடியாழம் வரை உணர்ந்தும் அதில் சிக்கிக் கொள்ளாமல் மெல்லிய குரலில் அதுகுறித்து பிறரோடு உரையாடுவதே அபிலாஷின் எழுத்தாக இருக்கிறது. அந்தவகையில் என் எழுத்துக்கு நேர் எதிர் என்றாலும் அபிலாஷ் என்னை அதிகமாகக் கவர்ந்திருக்கிறார் .

ரஜினியின் திரைப்பட பிம்பம் குறித்த அவருடைய அவதானங்கள் , கிரிக்கெட்டை முன் வைத்து மனித ஆளுமைகளை அலசுவது, ஸ்டாலின் குறித்த அவருடைய மதிப்பீடு, இந்துத்துவத்தின் தன்மை குறித்த புதுமையான விமர்சனங்கள், ஆண்களுக்கு இடையிலான மெல்லிய ஈர்ப்பை ( ஹோமோ செக்ஸ் அல்ல ) 2000 க்குப் பிந்தைய திரைப்படங்களை முன்வைத்து கவனப்படுத்தியது என்று பல்வேறு தனித்துவமான சிந்தனைகளை அபிலாஷ் இணையவெளியிலும் , உயிர்மை வழியாகவும் முன் வைத்திருக்கிறார் . அவருடைய 'கால்கள் ' நாவல் மிக முக்கியமான ஒன்று. ( அது குறித்து தனியாக ஒரு பதிவு எழுதுவேன் )

ஜெயமோகனை ஒரு கண்டிப்பான ஆசிரியராக மதிப்பிடும் அபிலாஷ் அவரிடம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு நல்ல எழுத்தாளன் விலகி விட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் . ஒருதரப்பினரால் மிகை மதிப்பீடுகளால் போற்றப்பட்டும், ,மறுதரப்பினரால் கடுமையான வசைகள் கொண்டு தூற்றப்பட்டும் தமிழ் இலக்கிய உலகின் புரியாத புதிராக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகனை எப்படி அணுகுவது என்பதை அபிலாஷ் பல இடங்களில் தெளிவாகச் சுட்டியிருக்கிறார். அந்த அணுகுமுறையே எனக்கும் பிடித்தமானது .

புதிதாக எழுதுகிற அல்லது தன்னோடு எழுதிக் கொண்டிருக்கிற பிறரின் படைப்புகளை பாராட்டுவதிலும் , கவனப்படுத்துவதிலும் எப்போதும் முந்தி நிற்பவர் அபிலாஷ். குறைவான ஈகோ கொண்ட இளம் தமிழ் எழுத்தாளர் அவர் மட்டும்தான் . இந்த ஆளுமையை அவர் வலிந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. அவரது இயல்பே அப்படித்தான். அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் இதே தன்மையோடு வாழ்ந்து பல தடவை டெபாசிட்டை இழந்திருப்பார் .

மனுஷ்யபுத்திரன் அழகான பல கவிதைகளை எழுதியிருக்கிறார் . அவர் கண்டறிந்த அழகான கவிதை அபிலாஷ். அவருடைய வாழ்விலும் கவிதைத் தருணங்கள் நீடித்திருக்க வேண்டும் என்று ஒரு நண்பனாக வேண்டிக் கொள்கிறேன். ஒரே ஒரு தடவை போனில் பேசியிருக்கிறேன். சில தடவை சாட்டிங் செய்திருக்கிறேன். வெறும் முகநூல் தொடர்பே அவரை என் மனதுக்கு நெருக்கமாக உணர வைத்திருக்கிறது . இத்தனைக்கும் அவரும், நானும் வெவ்வேறு தன்மை கொண்டவர்கள் .

அபிலாஷ்க்கு சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்திருந்தாலும் அவரது உயரத்திற்கான போதிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் அது அபிலாஷை வந்தடையும். அப்படி வரவில்லை என்றாலும் அது குறித்த சிறு முணுமுணுப்பைக் கூட அவர் வெளிப்படுத்த மாட்டார். அதனால்தான் அவர் அபிலாஷ் .

லவ் யூ நண்பரே!
இப்போதிருப்பது போலவே மொத்த வாழ்வையும் கடந்து விடுங்கள்.

Abilash Chandranபிறந்த நாள் வாழ்த்துகள்.
Mohammed Rafeek R

கருத்துகள்

சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்…
100% உண்மை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...