2019 உலகக்கோப்பையில் இந்தியாவின் முதல் ஆட்டம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் அணித்தேர்வு எப்படி இருக்க வேண்டும்?
எப்படியும் கோலி இவ்விசயத்தில் சொதப்பி விடுவார்; பெரும்பாலும் என் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக, குழப்பமான அணியாகவே அவர் தேர்வார். இருந்தாலும் என் அணியை இங்கு தருகிறேன்:
இந்த அணியில் நான் செய்துள்ள ஒரு சமரசம் ஷாமிக்கு பதில் புவனேஷ்வரைக் கொண்டு வந்தது. புவனேஷ்வர் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர். ஹர்த்திக் விக்கெட்டை நாம் 40 ஓவருக்கு முன்பு இழக்க நேர்ந்தால் ஜடேஜாவும் புவனேஷ்வரும் இணைந்து பத்து ஓவர்கள் ஆடுவார்கள் எனும் நம்பிக்கையில் இதை செய்கிறேன். மேலும் புவனேஷ்வர் ஒரு நல்ல களத்தடுப்பாளரும் கூட. ஷாமியோ நல்ல ஆட்டநிலையில் இருக்கிறார். அவர் புவனேஷ்வரை விட அதிக விக்கெட்கள் எடுக்கக் கூடும்; ரன்களை கட்டுப்படுத்தக் கூடும். ஆனால் ஷாமியால் மட்டையாடவோ நன்றாக களத்தடுப்பு பண்ணவோ இயலாது. அவரை அணியில் கொண்டு வரும் பட்சத்தில் நமது மட்டையாட்டம் 7ஆம் எண்ணுடன் முடிந்து போகும். ஜடேஜாவை தனியாக நம்ப முடியாது என்பதால் 6ஆம் எண்ணுடன் முடிந்து போகும் என்பது இன்னும் சரியானது.
கோலி மட்டையாட்டத்தில் இந்த ரிஸ்கை விரும்பாமல் ஜாதவை 6ஆம் எண்ணில் ஆட வைக்கலாம். (இதுவே நடக்கப் போகிறது; கோலியின் அணித்தேர்வு குளறுபடிகள் உலக பிரசித்தமானவை.) ஆனால் இத்தேர்வின் பிரச்சனைகள் இரண்டு: 1) காயம் காரணமாய் ஜாதவ் சமீபமாய் அதிகம் ஆடவில்லை; ஐ.பி.எல்லில் ஆடிய போதும் அவர் மோசமான ஆட்டநிலையில் இருந்தார். 2) ஒருவர் காயத்தில் இருந்து வெளிவரும் போது அவர் எப்போது வேண்டுமெனிலும் திரும்ப காயப்படும் ஆபத்து உண்டு. அது ரன் எடுக்க ஓடும் போதோ களத்தடுப்பின் போதோ நடக்கலாம்.
ஆனால் ஜாதவை ஆட வைப்பதன் அனுகூலம் அவரது பந்து வீச்சு. ஒருவேளை நமது வேகவீச்சாளர்கள் தடுமாறினால், ஆடுதளம் சற்றே மெத்தனமானால் ஜாதவால் 25-35 ஓவர்களுக்குள் கட்டுப்பாடாய் off spin வீச முடியும். இதைக் கொண்டு கோலியால் தன் கால் சுழலர்களை 15-25 ஓவர்களுக்கு ஒருவரையும் 25-35க்குள் இன்னொருவரையும் 40-45 ஓவர்களில் இருவரைக் கொண்டு 4 ஓவர்களும் வீச வைக்க முடியும்.
ஆக ஒரு பவுலராக மட்டுமே ஜாதவ் பலன் தருவார்.
இதைக் கணக்கில் கொண்டு தான் நான் ஜாதவின் இடத்தில் ஜடேஜாவை கொண்டு வருவேன். அதாவது இந்த ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு தோதாக அதே நேரம் சற்று மெத்தனமாய் எதிர்வினையாற்றும் பட்சத்தில். ஜடேஜா ஜாதவுக்கு இணையாக பந்து வீசுவதுடன் மட்டையாடவும் நன்றாய் களத்தடுப்பு செய்து விக்கெட்டுகள் வீழ்த்தவும் செய்வார். முக்கியமாய் அவர் காயம்பட்டு பாதி ஆட்டத்தில் வெளியேற மாட்டார்.
அடுத்து, ஜடேஜாவை நான் ஒரு ஸ்பின்னரின் இடத்தில் கொண்டு வர மாட்டேன். ஒரு மட்டையாளரின் இடத்தில் கொண்டு வருவேன். இது நம் பந்து வீச்சை வலுவாக்கும். ஹர்த்திக் இப்போது பந்துவீச்சில் நல்ல நிலையில் இல்லை. அவரால் விக்கெட் விழாது. ஆக, அவரை ஆல்ரவுண்டராக ஆட வைப்பது ரிஸ்கான முடிவு. அவர் 5 ஓவர்கள் தரும் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் மட்டுமே. விக்கெட்டுகளை மத்திய ஓவர்களில் வீழ்த்த் இரண்டு கால் சுழலர்களும் ஆடுவது அவசியம். இதுவே நேர்மறையான அணித்தேர்வாக இருக்கும். இதனாலே நான் ஒரு பேட்ஸ்மேனின் இடத்தில் ஜடேஜாவை கொண்டு வருகிறேன்.
1-6 வரையிலான நமது மட்டையாட்டம் குறித்து எனக்கு கவலைகள் இல்லை. இந்த ஆடுதளம் அதிக ஸ்விங் இல்லாமல் ஒருவித மென்மையான துள்ளல் பவுன்சுடன் (spongy) இருக்கும் என் கணிக்கிறேன். இதுவரையில் நடந்துள்ள உலககோப்பை ஆட்டங்களை கணக்கில் கொள்ளுகையில் இதில் வெல்வதற்கான வியூகம் இது: முதலில் மட்டையாடி 300க்கு மேல் அடிக்க வேண்டும். அடுத்து, பந்து வீசும் போது முதல் 15 ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்துவது சிரமமாக இருக்கும். ஆகையால் 15-35 ஓவர்கள் வரை பந்து வீசுபவர்களே (சுழலர்கள் மற்றும் மிதவேக வீச்சாளர்கள்) சிக்கனமாகவும் ஆதிக்க நோக்கிலும் வீசி விக்கெட்டுகளை கொத்து கொத்தாய் பறிக்க வேண்டும். 40வது ஓவரை எதிரணி அடையும் போது குறைந்தது 4-5 விக்கெட்டுகளாவது வீழ்ந்திருக்க வேண்டும். அதாவது, வங்கதேசம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராகவும் வெற்றிகரமாய் பயன்படுத்திய வியூகம் இது.
ஒருவேளை தொடர்ந்து இன்று மழை பெய்தால் மிதவேக வீச்சு முன்னுக்கு வரும். அப்போது முதல் 30-35 ஓவர்களில் மிதவேக வீச்சாளர்களை பயன்படுத்த தேவை இருக்கும். (இது தென்னாப்பிரிக்காவுக்கு உதவும்.) இந்தியாவும் சாஹலின் இடத்தில் ஷாமியையும், ஜடேஜாவின் இடத்தில் ஜாதவையும் கொண்டு வர முடியும். அப்போது இந்தியாவிடம் மூன்று வேக / மிதவேக பவுலர்களும், இரண்டு பகுதிநேர பவுலர்களும் (பாண்டியா + ஜாதவ் ) ஒரு முழுநேர சுழலரும் இருப்பார்கள். ஆனால் இச்சூழல் உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்த வேகப்பந்து சூழலுக்கான அணி இது:
- ரோஹித் ஷர்மா
- ஷிக்கர் தவன்
- விராத் கோலி
- ராகுல்
- தோனி
- ஹர்த்திக்
- ஜாதவ்
- புவனேஷ்வர்
- குல்தீப்
- ஷாமி
- பும்ரா
கோலி தன் அணித்தலைமையிலோ 1-4 வரையிலான நமது மட்டையாளர்கள் தம் ஆட்டத்திலோ எதிர்மறையாய் ஆச்சரியப்படுத்தாத பட்சத்தில் இந்த ஆட்டத்தை நாம் வெல்வோம். வாழ்த்துக்கள்!
கருத்துகள்